நெகேவ் பெடோயின்கள் பாரம்பரியமாக மேய்ச்சல் நாடோடி அரபு பழங்குடியினர் . 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை சவூதி அரேபியாவில் அலைந்து திரிந்தனர். இன்று அவர்கள் இஸ்ரேலின் நெகேவ் பகுதியில் வாழ்கின்றனர். பெடோயின் பழங்குடியினர் இஸ்லாமியத்தைக் கடைபிடிக்கின்றனர். விவசாயம், மீன்பிடித்தல் தொழில்களிலும் ஈடுபட்டனர் . பாலைவனம் வழியாகப் பொருட்களையும் மக்களையும் கொண்டு செல்வதன் மூலமும் அவர்கள் வருமானம் ஈட்டினார்கள். தண்ணீர் பற்றாக்குறை, நிரந்தர மேய்ச்சல் நிலத்தைத் தேடி அவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது.
நெகேவ் பெடோயின் பெண்கள், சிறுபான்மையினராக இருப்பதற்கு முதல் முறை ஒடுக்கப்படுகிறார்கள். இரண்டாவது முறை பெண்ணாகப் பிறந்ததற்காக ஒடுக்கப்படுகிறார்கள். இந்த ஒடுக்குமுறை அவர்களின் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் வெளிப்படுகிறது. பெடோயின் பெண்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள மர்மங்கள் கொடூரமானவை . அவர்கள் பொதுவெளியில் அரிதாகவே காணப்படுகின்றனர். மரியாதை, பாரம்பரியத்தின் ஆழமான வேரூன்றிய வரலாற்றுடன், பெரும்பாலானவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும், வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும், தங்கள் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும். அவளுடைய வாழ்க்கை, அவளுடைய குடும்பம், அவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாள் என்பதைப் பொறுத்தது. பெண்கள் ‘மத்ரகா’ என்ற நீண்ட கறுப்பு ஆடையை அணிகிறார்கள். பெடோயின் பெண்கள் தங்கள் தலையை மறைக்க வேண்டும், அதற்காக அவர்கள் ‘உசாபா’ என்கிற தலை பட்டையை அணிகிறார்கள் .பெடோயின் பெண்ணின் தளர்வான, கட்டுப்பாடற்ற, நீளமான ஆடைக்கு காரணம், அவரது நாடோடி வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது என்றும் சிறிய பராமரிப்பு மட்டுமே தேவைப்பட்டது என்றும் கூறுகிறார்கள். கறுப்பு ஆடையே ஆதிக்கம் செலுத்துகிறது என்றாலும், சில பழங்குடியினப் பெண்கள் நீல ஆடை அணிகிறார்கள் .
பெடோயின் உடைகள் சிறந்த பூத்தையல் மூலம் அழகாக அலங்கரிக்கப்படுகின்றன. செவ்வக வடிவில் கறுப்புப் பட்டுத் துணியைத் தலையிலும் கன்னத்தின் கீழும் சுற்றி, அவளது தொண்டைப் பகுதி மூடப்பட்டிருக்கும். மடிந்த பட்டை தலையில் சதுரமாகக் கட்டப்பட்டு, அது நெற்றியின் பெரும்பகுதியை மறைக்கிறது. பெரும்பாலும் அவர்கள் தங்கள் தலைமுடிக்கு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். தலைக்கவசத்தில் தங்கம், வெள்ளி வரதட்சணை நாணயங்களைத் தைத்துக் கொள்கிறார்கள். மேலும் தங்கம், வெள்ளி வளையல்களை விரும்பி அணிகிறார்கள்.
இஸ்ரேலில் பெடோயின் பெண் சமூகத்தின் வரலாற்றில் மூன்று முக்கியக் காலகட்டங்கள் உள்ளன.
பெடோயின் பெண்களின் முதல் தலைமுறை நாடோடி காலத்தில் வளர்ந்து 1948 இல் இஸ்ரேல் அரசு நிறுவப்படுவதற்கு முன்பாகவே பிறந்தது. இது சமூக அடையாளத்தால் ஒன்றுபட்ட பழங்குடியினரின் தொகுப்பு. சமூக, பொருளாதார நலன்களைக் கொண்ட ஒரே பழங்குடியில் உள்ள பல குடும்பங்கள் மற்றும் குழந்தைகள், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை உள்ளடக்கிய ஒரு தனிக் குடும்பம் என்ற படிநிலையில் அமைந்திருந்தது. அவர்கள் தங்கள் சமூக, குடும்பம், தனிப்பட்ட நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வலுவான தன்னம்பிக்கையுடன் இருந்தவர்கள். இந்தக் காலகட்டத்தில், பெடோயின் சமூகம் ஒரு சுதந்திரமான சுயாட்சியாகச் செயல்பட்டது, பெண்கள் அதிக அளவு கட்டுப்பாடற்ற இயக்கம், ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திரத்தை அனுபவித்தனர். இது வர்த்தகத்தில் ஈடுபடும் திறனில் வெளிப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பிரிவினை கடுமையாக இல்லாவிட்டாலும், பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்தத் தலைமுறையினர் நிலத்துடனும் பழக்கவழக்கங்களுடனும் தங்கள் பாரம்பரியத்துடனும் வலுவான பிணைப்பை உணர்ந்தனர். அவர்களின் பாரம்பரிய வேர்கள் மற்றும் பழக்கவழக்கங்களுடனான தொடர்பு இந்தத் தலைமுறையைப் பலப்படுத்தியது. ஒருவருடைய வேர்களுடனான இறுக்கமான தொடர்பு பெடோயின் பெண்களின் தனிப்பட்ட அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் அந்தஸ்தில், தங்கள் உறவுகளில், தங்கள் வீடுகளில் முதன்மையாக, அவர்களின் வாழ்க்கை முறையில் பாதுகாப்பாக உணர்ந்தனர்.
இரண்டாம் தலைமுறைப் பெண்கள் வாழ்ந்த கட்டுப்பாடுகளின் காலம் 1949-1966. நகரமயமாக்கல் காலத்தில் இரண்டாம் தலைமுறைப் பெண்கள் வளர்ந்தார்கள். இது ராணுவ அரசாங்கத்தின் காலம். இந்தக் காலகட்டத்தை இரண்டு முக்கியச் செயல்முறைகளால் வகைப்படுத்தலாம்: பெடோயின்கள் தங்கள் தாயகத்தில் அகதிகளாக மாறுதல், அவர்களின் பாரம்பரியக் கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல். இந்தக் காலகட்டத்தில் பெண்களின் கட்டுப்பாடு, தனிமை அதிகரித்தது. மேலும் அவர்களின் இயக்கம் மிகக் குறைந்த அளவில் இருந்தது. பழங்குடியினரின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பு மறைமுகமாகவும் திரைக்குப் பின்னால் மட்டுமே வெளிப்பட்டது. அவர்கள் நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து நிரந்தரக் குடியேற்றத்திற்கு மாறுவதில் சிரமங்களை அனுபவித்தனர். இந்த மாற்றம் அவர்களை ஒருவகை குழப்பத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாகியது. ஒரு குழப்பமான, கோபமான, மறக்கப்பட்ட தலைமுறையாக இருந்த போதிலும் அது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில், வயதானவர்களுக்கும் இளையவர்களுக்கும் குழந்தைகள், பெற்றோருக்கும் இடையில் பாலமாக இருக்கும் தலைமுறையாக, இளைய தலைமுறையினருக்கு முன்னேற்றத்திற்கான திறவுகோலாக இந்தத் தலைமுறை விளங்குகிறது. இந்தத் தலைமுறையானது அவர்கள் நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பாரம்பரிய தொழில்களை இழந்தது அவர்கள் மீது புதிய யதார்த்தத்தைத் திணித்து அச்சுறுத்தும் சவால்களை முன்வைத்தது.
மீள்குடியேற்ற காலம் 1960களின் பிற்பகுதியிலிருந்து இன்று வரை பெடோயின் தொழிலாளர் சந்தையில் நுழைந்ததிலிருந்து பெடோயின் சமூகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பாலினங்களுக்கிடையேயான இடைவெளி, பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான மோதல்களின் தோற்றம் இதில் அடங்கும். நாடோடி காலத்தில் வளர்ந்த மூத்த பெண்கள் தங்கள் பாரம்பரியப் பாத்திரங்களை இழந்தனர். இரண்டாம் தலைமுறை பெண்கள் முதன்மையாகத் திரைக்குப் பின்னால் செயல்பட முயன்றனர்; மூன்றாம் தலைமுறை பெண்கள் தங்கள் உள் குரல்களுக்கும் கூட்டுச் சமூக விருப்பத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றனர். உயர்கல்வி மற்றும் தொழிலாளர் சந்தையில் பெடோயின் சமூகம் செழித்து வளர்ந்துவருகிறது. மாறாக, பெண்களின் முன்னேற்றம் பாரம்பரிய ஆண் ஆதிக்கத்தின் தடையை எதிர்கொள்கிறது. மாற்றம் மற்றும் பாலின சமத்துவத்திற்காகப் போராடும் பெடோயின் சமூகத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையிலேயே ஆண்கள் இருக்கின்றனர். எல்லாத் தடைகளையும் மீறி மூன்றாம் தலைமுறை இளம் பெண்கள் பழங்குடியினருக்கு வெளியே உள்ள உலகில் விரைவாகத் தங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளனர். மூன்றாம் தலைமுறையினர் தனிப்பட்ட லட்சியம், சமூக லட்சியம், தனித்துவம் மற்றும் கூட்டுவாதத்திற்கு இடையே பிளவுபட்டிருந்தாலும் தங்கள் ஞானத்தையும் சக்தியையும் பயன்படுத்தி நிச்சயமாக முன்னேறும் ஒரு செயல்முறையை உருவாக்கியுள்ளனர்.
இவர்களின் நம்பிக்கையின் தீப்பொறி
அணைந்துவிடக் கூடாது!
கனவுகள் சிதைந்துவிடக் கூடாது!
லட்சியங்கள் தடுக்கப்படக் கூடாது!
(தொடரும்)
படைப்பாளர்:
சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.