மூன்றாம் நாள்.
கேரளா வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. இன்று புறப்பட வேண்டும் என்ற நினைப்பே லேசான வருத்தம் தந்தது. இந்த இரண்டு நாட்களும் மிக மெதுவாக நகர்ந்த உணர்வையே தந்தன. காரணம் பரபரப்பாக நிறைய இடங்களுக்குச் சென்று அரைகுறையாக இடங்களைப் பார்த்தும் பாராமலும் பெயர் பண்ணிக் கொண்டு வந்த எங்களுக்கு ஒவ்வோர் இடத்திலும் பொறுமையாக நிறைய நேரத்தைக் கழித்து ஆற அமர சுற்றிப் பார்த்து வந்ததால்தான் என்று உணர முடிந்தது. எனக்கு மட்டும் இந்த உணர்வு இல்லை என்பது மற்றவர்களும் இதே எண்ணத்தை வெளியிட்ட போது ஆச்சரியத்தை அளித்தது. தங்குமிடத்திலேயே நீச்சல் குளம் இருந்தது. காலையில் எழுந்து எல்லோரும் நீச்சல் குளத்தில் இறங்கி ஆனந்தமாகக் களித்தோம். வெகுநேரம் நீராடிவிட்டு, குளித்து தயாராகி ஓர் அறையைக் காலி செய்துவிட்டு இன்னோர் அறையில் எல்லாப் பெட்டிகளையும் வைத்துவிட்டுப் புறப்பட்டோம்.
நேப்பியர் ஹெரிடேஜிலிருந்து பத்து நிமிட நடையில் ஆனந்த பவன் ஹோட்டல் இருந்தது. அங்கே இடியாப்பம், கடலைக் கறி, இட்லி, சாம்பார், கடுங்காப்பி சாப்பிட்டுவிட்டு மட்டஞ்சேரி அரண்மனைக்குச் செல்ல இரண்டு ஆட்டோக்களில் ஏறினோம். அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கிருக்கும் ஓர் ஆடைக் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர். நாங்கள் மறுத்ததும் அவர்கள் தங்களுக்கு அதனால் ஒரு கூப்பன் கிடைக்குமென்றும், நீங்கள் எடுக்க வேண்டாம்.. சும்மா பார்த்து விட்டு வந்தாலே போதும் என்றும் கூறினர். வேறுவழியின்றி சென்றோம். உள்ளே நுழைந்ததும் புடவைகளைப் பார்த்ததும் மனம் சலனப்பட்டது. உறவுக் குழந்தைக்கு ஆடையும் சேர்ந்து கொண்டது. ஆளாளுக்கு எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அவர்கள் மீண்டும் இன்னொரு கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியதும் பிடிவாதமாக மறுத்து விட்டோம். அவர்கள் மட்டஞ்சேரி அரண்மனையில் இறக்கிவிட்டுச் சென்றனர்.
இந்த அரண்மனை போர்த்துக்கீசிய கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. மட்டஞ்சேரி அரண்மனைக்கு அருகில் இருந்த கோயிலொன்றைச் சேதப்படுத்தியதற்கான இழப்பீடாகவும், அரசரைச் அமைதிப்படுத்துவதற்குமாக இந்த அரண்மனை 1545 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசியரால் கட்டப்பட்டு கொச்சி அரசரான வீர கேரள வர்மருக்கு அளிக்கப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட, சதுரவடிவிலான இந்தக் கட்டிடத்தில் நீளமானதும், இடவசதி கொண்டதுமான விஸ்தாரமான அறைகள் உள்ளன. நடு முற்றத்தில் அரச குடும்பத்தின் குலதெய்வமான பழையனூர் பகவதியின் கோயில் உள்ளது. நாலு கெட்டு பாணியும், போர்த்துக்கீசிய பாணியும் இணைந்த இந்த அரண்மனையின் அருங்காட்சியகம் இந்தக் கட்டிடத்தின் மேல் மாடியில் மே 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இங்கே கொச்சி அரசர்களின் உருவப்படங்கள், அரச குலப் பெண்கள் பயணம் செய்த மூடுபல்லக்கு, அரசர் பயணித்த ஓவியங்கள் நிறைந்த தந்தப் பல்லக்கு, அரச உடைகள், ஆயுதங்கள், குடைகள், வாள்கள், தபால்தலைகள், அம்பாரி, நாணயங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்ற பலவிதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1864 லிருந்து ஆட்சி செய்த அரசர்களின் ஆளுயரப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச குடும்பத்தின் பெண்களும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் உடலின் மேல் பகுதியை மூடாமல்தான் இருந்திருக்கிறார்கள். மன்னர் ராமவர்மாவின் தாயாரும், இளைய சகோதரியும் அவ்வாறுதான் ஒளிப்படத்தில் இருக்கின்றனர். உடன் வந்தவர்களிடம் தோள்சீலைப் போராட்டம் குறித்தும், நங்கேலி குறித்தும், முலை வரி குறித்தும் நான் விவரித்தேன்.
17 முதல் 19 ஆம் நூற்றாண்டுகள் வரையிலான ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண லீலை, காளிதாசனின் குமார சம்பவம் மற்றும் புராணக் கதைகளின் காட்சிகளை நுணுக்கமான, வண்ணமயமான விவரங்களுடன் சித்தரிக்கும், வியக்கத்தக்க வகையில் மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்து சுவர் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. மண்டபத்தின் கூரை மரவேலைப்பாடுகளில் மலர் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப் ஒளிப்படம் எடுக்கலாம், ஆனால் கேரள சுவரோவிய அறைகளை ஒளிப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு அரண்மனையும் மையத்தில் உள்ள ஒரு மூடப்பட்ட முற்றத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. கதவுகள் மற்றும் ஜன்னல்கள், நீளமான அறைகள் மற்றும் வெளிப்புறக் கட்டுமான வேலைப்பாடுகள் ஐரோப்பிய பாணியில் அமைந்துள்ளன. சுட்ட தேங்காய் ஓடுகள், சுண்ணாம்பு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கரி ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட அரண்மனைத் தரைகள், கேரளாவின் வெப்பமண்டல காலநிலையிலும் குளிர்ச்சியாக இருந்தது. ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க மரத் திண்டுகளும் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு.
அங்கிருந்து ஆட்டோவில் பயணித்து யூதர் நகரம் (Jew Town) சென்றோம். இது பழமைக்கும் கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்றது. கி.பி. 1568இல் கொச்சி மன்னர் யூதர்களுக்குத் (Jews) தங்குவதற்கு வழங்கிய நிலமே இந்த ஜ்யூ டவுன். போர்த்துகீசியர்களால் யூதர்கள் துன்புறுத்தப்பட்டபோது, கொச்சி மன்னர் அவர்களுக்குப் புகலிடம் அளித்தார். பல நூற்றாண்டுகளாக இது யூதர்களின் வணிக மையமாக விளங்கியது. யூதர் நகரின் மிக முக்கியமான அடையாளம் பரதேசி யூதக் கோவில் (Paradesi Synagogue). இது கி.பி. 1568இல் கட்டப்பட்டது. அதன் உள்ளே சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கைவினைப் பீங்கான் தரை ஓடுகள் மற்றும் பெல்ஜியம் படிக விளக்குகளின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தோம். 4ஆம் நூற்றாண்டு செப்புத் தகடுகள்,தோரா (Torah) சுருள்கள், மற்றும் கொச்சி/திருவிதாங்கூர் மன்னர்கள் வழங்கிய தங்கக் கிரீடங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இதன் சிறப்பைக் கேள்விப்பட்டுப் பார்க்கச் சென்றபோது அன்று விடுமுறை என்கிற அறிவிப்பு பலகை தொங்கியதில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

யூதர் நகரம் ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக இருக்கிறது. இங்குள்ள தெருக்களில் பழங்கால மரச்சாமான்கள், சிலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கொச்சியின் பாரம்பரியமான மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களின் வாசனையை இந்தத் தெருக்களில் நுகர்ந்து கொண்டே நகர்ந்தோம். உலகின் மிகப்பெரிய உருளி இங்குள்ள ஒரு கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைக் கண்டு அதிசயித்த வண்ணம் சென்றோம்.
இங்குள்ள வீடுகள் மற்றும் கடைகள் ஐரோப்பிய மற்றும் கேரளக் கட்டிடக்கலை பாணிகளின் கலவையாகக் காணப்படும். குறுகிய தெருக்களும், வண்ணமயமான சுவர்களும் ஒளிப்படக் கலைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். மூன்று தெருக்கள் கூடும் ஓர் இடத்தில் அழகான ஓவியத்துடன் ஒரு சுவர் இருந்தது. நாங்கள் அதற்கு முன்னால் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டோம். ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் வாழ்ந்த இந்த இடத்தில், தற்போது மிகக் குறைவான யூதர்களே வசிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். இருப்பினும், அந்தத் தெருக்களில் இன்றும் அந்தப் பழங்காலத்து அமைதியையும் வரலாற்றையும் உணர முடியும். அந்தக் குறுகிய நீளமான தெருவில் நடக்கும் போது கேரளாவில் இருப்பதாகவே தோன்றவில்லை. ஏதோ அயல்நாட்டுத் தெருவில் சுற்றித் திரிவது போலவே உணர முடிந்தது. அந்தத் தெருவில் உள்ள மற்ற கடைகளில் நகைகள், கைவினைப் பொருட்கள், பழங்காலப் புகைப்படங்கள், சீனக் கலசங்கள் மற்றும் சிற்பங்கள், சரவிளக்குகள், எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. வாசனைத் திரவியங்கள் விற்கும் கடைகளும் ஏராளமாக உள்ளன. ஓல்டு டவுன் போட்டோ பிரஸ் என்று ஓர் இடத்தில் நம்மை ஒளிப்படம் எடுத்து அதைப் பழமையான நியூஸ் பேப்பர் போன்றதில் பதித்துத் தருகிறார்கள். வித்தியாசமாக இருந்ததால் நானும் மகளும் அங்கு ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம்.
பசி வயிற்றைக் கிள்ளியதால் அதே தெருவில் இருக்கும் ஜிஞ்சர் ஹோட்டலில் சாப்பிடச் சென்றோம். அங்கே கடல் பார்த்துக் கொண்டே சாப்பிடும் வகையில் மேஜைகளை அமைத்திருந்தார்கள். பொறுமையாக ஆர்டர் செய்து நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் யூத நகரத் தெருவில் புகுந்தோம். மாலை வரை சுற்றிவிட்டு மனமில்லாமல் கிளம்பினோம். ஐந்தரை மணிக்கு நேப்பியர் ஹெரிடேஜ் வந்து அறையைக் காலி செய்து விட்டு ஆட்டோ பிடித்து எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம்.
எங்களுடன் வந்த சென்னை தோழியர் இருவருக்கு மட்டும் பயணச்சீட்டு உறுதியாக நிலையில் டிக்கெட் எடுத்துக்கொண்டு, நடைமேடையைத் தேடிப்பிடித்து, அங்கும் இங்கும் அலைந்து பெட்டி நிற்கும் இடத்தைக் குத்துமதிப்பாக ஊகித்து நின்று கொண்டோம். சில நிமிட தாமதத்துக்குப் பிறகு வந்த ரயிலில் ஏறிக் கொண்டோம். கேரளாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு ரயில் நகரத் தொடங்கியது. இரவு உணவை ப்ரியாவும், மகளும் முன்பே திட்டமிட்டு ரயில் நிலையத்தில் வாங்கி விட்டதால் ஓய்வாக அமர்ந்து பேசத் தொடங்கினோம்.
அப்போது பெண் பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். உறுதியாகாத பயணச்சீட்டுக் குறித்துக் கேட்கும் போது அவர் சொன்ன தகவல் உறுதி செய்யப்பட்ட நபருடன் உறுதி செய்யப்படாத பயணச் சீட்டு வைத்திருக்கும் ஒருவர் பயணிக்கலாம் என்பதுதான். இரண்டு பயணச் சீட்டுகள் வாங்கவே தேவையில்லை என்று கூறினார். நன்கு சிரித்த முகத்துடன் எங்களுடன் பேசிவிட்டு அங்கிருந்து மற்ற பெட்டிகளுக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அவர் எங்களுடனே சீட்டில் அமர்ந்து கொண்டு உரையாடலைத் தொடர்ந்தார். நாங்கள் பெண்கள் மட்டும் தனிப்பயணமாகச் சென்று வருவது குறித்துச் சொன்ன போஒது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். வெகு நேரம் எங்களுடன் பேசிவிட்டு, அலைபேசி எண்ணையும் பரிமாறி விட்டுஅங்கிருந்து எழுந்து சென்றார். அதன்பின் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அவர் தேநீர் வேண்டுமா, தண்ணீர் வேண்டுமா என்று உபசரித்தார். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் இந்தக் கேரளப் பயணத்தில் நாங்கள் சந்தித்த அத்தனை பேரும் மிக நட்புடனே எங்களுடன் பழகினார்கள் என்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது.
அதன் பின் ஒவ்வொருவரும் மூன்று நாள் பயண அனுபவங்களை அசைபோட்டோம். பெரும்பாலானவர்களின் கருத்து இந்த மூன்று நாட்களும் மனம்விட்டுப் பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது என்பதுதான். புதிய இடங்கள், புதிய அனுபவங்கள், மற்றவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டவை என்னென்ன என்பது பற்றி எல்லாம் மகள் கூறினாள். ஒவ்வொருவரும் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். பயணத்தில் வயிற்றுக்கு கெடுதல் செய்யாத உணவு வகைகளையே உண்டோம். முக்கியமாக உணவுகளை வீணடிக்கவேயில்லை.
பெண்கள் மட்டுமே இணைந்த இந்தப் பயணம் வெறும் பொழுதுபோக்காக ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. அது ஒரு சுய தேடல். எங்களை நாங்களே கண்டறிவதற்கும் மீட்டெடுப்பதற்குமான ஒரு முயற்சியாகவே கருதுகிறோம். பயணங்கள் மனிதர்களைப் பக்குவப்படுத்தும் என்பார்கள். அதுபோல பெண்கள் மட்டுமே சென்ற இந்தத் தனிப் பயணம் எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
வாழ்க்கையில் எதிர்வரும் சவால்களையும் பிரச்னைகளையும் எப்படிச் சமாளிப்பது என்பதற்கான அடிப்படைப் பயிற்சியாகவே இந்தப் பயணத்தை நாங்கள் கருதுகிறோம்.
தனிப் பயணம் அல்லது பெண்கள் மட்டுமே செல்லும் பயணம் ஒரு பெண்ணுக்கு அசாத்தியமான தன்னம்பிக்கையை அளிக்கிறது என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். முன்பதிவு செய்வது முதல், புதிய இடங்களைக் கண்டறிவது வரை அனைத்தையும் தாங்களே முன்னின்று நடத்தும்போது, அவர்களுக்குள் இருக்கும் தலைமைப் பண்பு வெளிப்படுகிறது. ’நம்மால் எதையும் கையாள முடியும்’ என்கிற மனோதிடம் உருவாகிறது. வீட்டுச் சூழலில் பேச முடியாத பல விஷயங்களை, தங்களது மன உணர்வுகளை, பயணங்களின் போது பெண்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணியாக (Stress Buster) செயல்படுகிறது. புதிய மனிதர்களுடனான சந்திப்பு மற்றும் வெவ்வேறு கலாச்சாரப் புரிதல் ஆகியவை உலகத்தைப் பார்க்கும் பார்வையை மாற்றுகின்றன.
கும்பலாங்கியின் அமைதியும், காயல் காற்றின் ஈரப்பதமும், தென்னை மரங்களின் சலசலப்பும் எங்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தின் முடிவில் அடுத்த பயணம் எப்போது என்பதே எங்களின் ஆவலான கேள்வியாக இருந்தது. வருடத்திற்கு ஓரிரண்டு முறை இதுபோன்ற தனிப் பயணங்கள் செல்வது மனதுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதோடு வருடம் முழுவதும் நாம் சிறப்பாகச் செயல்பட சிறந்த உந்து சக்தியாகவும் இருக்கின்றன.
பயணங்கள் முடிவதில்லை; அவை நம்மை நாமே கண்டறியும் புதிய தொடக்கங்கள்.
*
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.





