சமீபத்தில் ஞாயிறன்று காலை ஆறு மணிக்குப் பயணிக்க நேர்ந்தது. ஆங்காங்கே மைதானங்களில் இளைஞர்கள் கிரிக்கெட், கால்பந்து என்று விளையாடிக்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரப் பயணத்தில் ஒரு பெண் குழந்தைகூட வெளியில் விளையாடிப் பார்க்கவில்லை. ஏன் பெண்களுக்கு விளையாடத் தெரியாதா? அல்லது நேரமில்லையா?

ஆண்களுக்குப் பொதுவெளியில் விளையாடக் கிடைக்கும் சுதந்திரம் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மற்ற பெண்கள் வெளியில் அல்ல வீட்டிலேயே விளையாடுவது அருகிக் கிடக்கிறது. உடற்பயிற்சிக்காவது விளையாடுவோம் என்ற எண்ணம் வருவதேயில்லை. அவர்கள் வளர்ந்த சூழலின் இறுக்கமே அவர்களை இப்படி வைத்திருக்கிறது. விளையாடும் பெண்களை வெறித்து நோக்கும் ஆண்களின் பார்வையும் அவர்களுக்கு ஒரு தடைதான்.

அப்படியே விளையாடினாலும் பெண்கள் அதிகம் உள்ளரங்க விளையாட்டுகளையே தேர்ந்தெடுக்கின்றனர். பெரும்பான்மையான பெற்றோர் பெண் குழந்தைகளை விளையாட விடுவதில்லை. அவர்களுக்கு ஏதாவது அடிபட்டுவிட்டால் அல்லது உடல் ஊனமாகி விட்டால் என்ன செய்வது என்ற தேவையற்ற பயமே இதற்கு முக்கியமான காரணம். மேலும் வெயிலில் விளையாடினால் உடல் கறுத்து திருமணத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்பதும் காரணமாகச் சொல்லப்படுகிறது. விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு வரன்‌ கிடைக்காது என்பதும் இன்னொரு காரணமாக இருக்கிறது. பெண்களும் இதை ஏற்றுக்கொள்ளப் பழகித்தான்விட்டார்கள்.         

இப்போதைய பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் நடப்பதில்லை. அந்த நேரத்தைக் கணிதமும் அறிவியலும் விழுங்கிவிட்டன. அப்படியே இருந்தாலும் அத்தனை பெண்களும் விளையாடப் போவதில்லை. இரண்டொருவரைத் தவிர மற்ற பெண்கள் மரத்தடியில் அமர்ந்துகொண்டு சினிமா கதைகளையும் சீரியல் கதைகளையும் பேசிக்கொண்டு வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வின்மையும் முறையான பயிற்சி இல்லாத தகுதியற்ற விளையாட்டு ஆசிரியர்கள் இருப்பதும்தாம். இவை தவிர நிறையப் பள்ளிகளில் மைதானங்களே இருப்பதில்லை. இதெல்லாம் அரசின் கவனத்துக்கு வருவதும் இல்லை.

படிக்கும்போது விளையாட்டில் ஈடுபட்டால் கவனம் சிதறும் என்று‌ தவறாகப் புரிந்துகொள்கின்றனர். அப்படியே விளையாடினாலும் பொதுத்தேர்வு நேரத்தில் விளையாட்டு நிறுத்தப்படுகிறது. உண்மையில் உடற்பயிற்சி, விளையாட்டின் மூலம் நினைவாற்றல் தூண்டப்படுகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. நோய்கள் வரும் வாய்ப்பு குறைந்து உடல் வலிமையடைகிறது.    

இந்தியர்களில் மூன்றில் ஒருவர்தான் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. படிப்பும் மதிப்பெண்களுமே முக்கியம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான இடமே வழங்கப்படுகிறது என்று பிபிசி நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்களின் விளையாட்டுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண்கள் விளையாட்டுக்குத் தரப்படுவதில்லை என்பது வருத்தமான விஷயம் தான்.

இன்றைய சூழலில் விளையாட்டின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும் சமுதாயத்தில் பெருமளவு மாற்றம் நிகழவில்லை. விளையாட்டுகளின் போது பெண்கள் அணியும் ஆடைகள் கலாச்சார ரீதியான விமர்சனங்களைப் பெறுவதால் பெரும்பாலான பெற்றோர் பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதில்லை. சில பயிற்சியாளர்கள் பெண்களிடம் நடந்துகொள்ளும் முறைகளும் அவர்களை மனக்கிலேசத்துக்கு உள்ளாக்குகிறது. எல்லாரும் அப்படி நடந்துகொள்வதில்லை என்றாலும் சிலரால் நிறையப் பேரின் கனவுகள் கருகிவிடுகின்றன.         

சங்க காலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்களது பொழுதைப் போக்க பலவிதமான விளையாட்டுகளை விளையாடினர் என்று இலக்கியங்கள் செப்புகின்றன. அன்றைய வாழ்வியல் சூழல் ஆடவர், மகளிர் என்று இருபாலருக்கும் விளையாட்டுகளை வகை பிரித்து வைத்திருந்தது. ஆனால், அதன்பின் வந்த காலங்களில் பெண்களுக்கு விளையாடும் உரிமை மெல்ல மெல்ல மறுக்கப்பட்டது.          

பெண்கள் வளர்ந்ததும் திருமணம் செய்து கொடுப்பதையே தங்கள் லட்சியமாகக் கொண்ட பெற்றோர், திறமையிருந்தும் பெண்ணின் கனவை உடைத்துப் போடுகின்றனர். விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஆகும் செலவும் அதில் உள்ள அரசியலுமே அவர்களின் தயக்கத்துக்குக் காரணம். அதிக செலவு செய்ய இயலாத பெற்றோர் பெண்ணின் சிறகுகளை ஒடித்து முடக்கிவிடுகின்றனர். ஆண் பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் விளையாட்டில் பெண்ணுக்கு இல்லை.

சிறுவயதில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே குடியிருந்த பெண்களுடன் இரண்டு குழுவாகப் பிரிந்து டென்னிஸ், ரிங், வாலிபால் என்று விளையாடிக்கொண்டிருந்தோம். விளையாட்டு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருந்தபோது ஓர் அக்கா சட்டென்று விளையாட்டை முடித்துக்கொண்டார். ஏனென்று கேட்டேன். இரவு டிபன் வேலை இருக்கிறதென்று சொன்னார். அவர்கள் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள். அவரை வெகுநேரமாக அவரது மாமியார் முறைத்துக்கொண்டு இருந்தார். அதனால் அவரால் இயல்பாக விளையாட முடியவில்லை என்று புரிந்துகொண்டேன். அந்தப் பெண் உள்ளே போனதும் பின்னாலேயே சென்ற மாமியார், “உனக்கென்ன மனசுல சின்னப் பொண்ணுன்னு நினைப்பா? வீட்ல இவ்வளவு வேலை கிடக்கு. நீ வெளில ஆடிட்டு இருக்க?” என்று சுருக்கென்று பேசினார். அந்தப் பெண் கண்ணீரோடு தனது விளையாட்டு ஆசையையும் விழுங்கிவிட்டார். இப்படிப் பெண்கள் விளையாடுவதை பெண்களே நிறைய இடங்களில் ஊக்குவிக்க மறுக்கிறார்கள். இந்த மனப்பான்மையை முதலில் பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இன்றைய பெண்கள் விளையாட்டுகளில் கலந்துகொள்வதில்லை. ஊடகங்களிலும் திரைப்படங்கள் பார்ப்பதிலும் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகிறார்கள். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை ரசிப்பதோடு முடித்துக்கொள்கிறார்கள். இந்த மனப்பான்மையை மாற்றுவதோடு அவர்கள் முன்னேற குடும்பத்தாரும் துணை நிற்க வேண்டும். அப்போதுதான் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை உயரும்.           

பெண்களுக்கென்று தனியான விளையாட்டு மைதானங்களாவது அந்தந்த மாநகராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட வேண்டும். அதேபோல் நேரமின்மையைக் காரணம் காட்டாது பெண்கள் தினமும் ஒருமணி நேரமாவது  விளையாடி உடலை உறுதிசெய்ய முன்வர வேண்டும். கூச்சத்தை உதறி வயதைக் காரணம் காட்டாமல் விளையாடி உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியம் என்பது நமது வாழ்வில் அத்தியாவசியம் என்பதை யாரும் மறக்கக் கூடாது. வாங்க தோழிகளே ஓடோடி விளையாடலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.