Florence Bescam (1862-1945)

அமெரிக்காவின் முதல் பெண் நிலவியலாளராகப் போற்றப்படுபவர் ஃப்ளாரன்ஸ் பெஸ்காம். அறிவியலிலும் கலையிலும் இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்ற பிறகு, விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தின் முதுநிலை நிலவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அந்தப் பல்கலைக்கழக விதிகளின்படி நேரடியான வகுப்புகளைத் தவிர நூலகம், உடற்பயிற்சிக் கூடம், பிற வகுப்புகள் போன்ற சேவைகள் மாணவியருக்கு முழுவதுமாக வழங்கப்படவில்லை. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள மாணவியருக்குக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு முதுநிலைப் படிப்பை முடித்தார்.

அடுத்த கட்டமாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நிலவியலுக்கான முனைவர் பட்ட ஆய்வுக்கு விண்ணப்பித்தார். பெண்களை அனுமதிக்க முடியாது என்று பல்கலைக்கழகத் தலைவர் திட்டவட்டமாக மறுக்கவே, பல முக்கியப் புள்ளிகளின் சிபாரிசு மூலம் போராடி முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தார். ஆய்வுப் படிப்பில் சேர்ந்தாலும் பல்கலைக்கழகம் ஃப்ளாரன்ஸிடம் கல்விக்கட்டணம் வாங்கவில்லை, ஆய்வகத்துக்கான குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் மறைமுகமாகப் பெற்றுக்கொண்டது. நேரடியாகப் பணம் பெற்றுக்கொண்டால் ஒரு பெண்ணை அனுமதித்திருப்பதாக அதிகாரபூர்வமாகப் பதிவாகிவிடும் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகிகள் செய்த ஏற்பாடு இது.

ஆய்வுப் படிப்பில் சேர்ந்த பிறகும் ஃப்ளாரன்ஸுக்கு சிக்கல்கள் தொடர்ந்தன. ஆண் மாணவர்கள் பலர் இருக்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து வகுப்புகளைக் கவனித்தால் ஃப்ளாரன்ஸின் இருப்பு அவர்களைத் திசைதிருப்பும் என்பதால், ஃப்ளாரன்ஸை வகுப்பறையின் கடைசியில் உட்கார வைத்தார்கள். அவருக்கும் பிற மாணவர்களுக்கும் இடையில் ஒரு திரையும் போடப்பட்டது. இது மாணவர்களிடமிருந்து மட்டுமன்றி, ஆசிரியர்களின் பார்வையிலிருந்தும் ஃப்ளாரன்ஸை மறைத்தது. நேரடியாக ஆசிரியர்களைப் பார்க்காமலேயே ஃப்ளாரன்ஸ் பாடம் கற்றார்.

அடுத்த கட்டமாக, களப்பணி ஆய்வுகளுக்குப் பெண்கள் செல்லக் கூடாது என்று நிர்வாகம் தடை விதித்தது. நிலவியலில் நேரடி களப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த ஃப்ளாரன்ஸ் இந்த உத்தரவைக் கேட்டு உடைந்துபோனார். ஆனால், அவரது முனைவர் பட்ட ஆய்வாளரான ஜார்ஜ் வில்லியம்ஸ், ஃப்ளாரன்ஸை தைரியமாகக் களப்பணிக்கு அழைத்துப் போனார். சுற்றியிருப்பவர்களின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து ஃப்ளாரன்ஸ் முனைவர் பட்டம் பெற்றார்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறுதான். அமெரிக்க நிலவியல் துறையின் (US Geological Society) முதல் பெண் உறுப்பினர், வாஷிங்டன் நிலவியல் துறையில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்த முதல் பெண், அமெரிக்காவின் நூறு முக்கிய நிலவியல் வல்லுநர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பெண் என்று அவர் தொடர் சாதனைகள் நிகழ்த்தினார். ஒரு கட்டத்தில் நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், அறிவியல் துறையில் பெண்கள் வரவும் பல பாதைகளைத் திறந்துவைத்தார். அனைத்து மகளிர் கல்லூரி ஒன்றில் நிலவியல் துறையை நிறுவி மாணவிகளுக்குக் கற்பித்தார். அந்தக் காலகட்டத்தில் இருந்த எல்லா அமெரிக்கப் பெண் நிலவியலாளர்களும் இவரது நேரடியான மேற்பார்வையில் பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருந்தார்கள்.பாறைகளை ஆராய நுண்ணோக்கியைப் பயன்படுத்தும் வழக்கத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி இவர்தான். அப்பலாச்சியன் மலைத்தொடரின் உருவாக்கத்தையும் இவரது ஆராய்ச்சியின் மூலம்தான் உலகம் தெரிந்துகொண்டது. நிலவியல் துறையை மாற்றியமைத்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அமெரிக்க நிலவியல் முன்னோடிகளில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். அந்தச் சிகரத்தை அடைய ஃப்ளாரன்ஸ் பல தடைக்கற்களை உடைத்து முன்னேறவேண்டியிருந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!