இந்தத் தலைப்பில் எழுத வேண்டும் என்றதும் முதலில் தோன்றிய கேள்வி – ‘அரசியலைப் பற்றி எனக்கென்ன தெரியும்?’

அரசியல் அதிகாரம் கையிலிருக்கும் காரணத்தால் குழந்தைப்பேறு, கருக்கலைப்பு, சானிடர் நாப்கின்கள் மீதான வரி என்று பெண்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில்கூட சம்பந்தமில்லாமல் ஆண்கள் கருத்துகளை அள்ளித் தெளிக்கிறார்கள், விபரீத முடிவுகளையும் எடுக்கிறார்கள்.

அடிப்படைப் பொது அறிவுகூட இல்லாமல், எதைப் பற்றியும் மிதமிஞ்சிய செருக்குடன் உளறிக்கொட்டுகிறவர்களுக்கு அரசியலில் நுழைய இல்லாத தயக்கம் பெண்களுக்கு மட்டும் ஏனோ சாபம் போல் கவிந்து கிடக்கிறது. ஆனால், சரியோ தவறோ, மனதில் பட்டதைப் பேசும் பெண்களைச் குடும்பமும் சமூகமும் அவ்வளவு தூரம் விரும்புவதில்லை என்பதால்தான் பெண்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் முன் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டி இருக்கிறது; தயக்கமும் தோன்றுகிறது.

அதையும் மீறித் துணிச்சலோடு பொதுவாழ்வில் ஈடுபடும் எந்தப் பெண்ணுமே தன் தகுதியை எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. வெற்றி பெற ஓர் ஆண் போராடுவதைவிடவும் போட்டியில் இடம் பெறுவதற்கே பெண் அதிகமாகப் போராட வேண்டி இருக்கிறது..
புறவெளி முழுதும் ‘ஆண்மய’மாகவும் சமூகம் மொத்தமும் ‘ஆண்மைய’மாகவும் இருப்பதனால், பெண் ஆளுமைகளின் முழுவீச்சினை இந்தப் பிரபஞ்சம் இன்னும் முழுமையாக உணராமலே கிடக்கிறது. ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் பல்சுவைப் பாத்திரங்களில் நடித்த மனோரமாவைப் பாராட்டும்போதும் ‘பொம்பள சிவாஜி’ என்று குறிப்பிடும் அவலம்தானே நீடிக்கிறது?

இந்தியாவில் மொத்தம் 550 லட்சம் பெண்கள் ஆண் துணையின்றி பிள்ளைகளை வளர்ப்பதாக ஐ.நா கணக்கெடுப்பு அறிவிக்கிறது. இவை தவிர கணவன் உடன் இருந்தாலுமே பிள்ளை வளர்ப்பு, குடும்பப் பொறுப்பு + பொருளாதாரப் பொறுப்பு என்று இரட்டைச் சுமைகளைச் சுமக்கும் பெண்களுக்கு இல்லாத அப்படி என்ன தகுதி ஆணுக்கு இருப்பதால் வீரம், துணிச்சல், முடிவுகள் எடுக்கும் திறன் இவையெல்லாம் ’ஆண்மை’ என்று சமூகம் நம்புகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். உலகெங்கிலும் அரசியலில் காலங்காலமாகப் பெண்கள் இயங்கி வந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக பெரும் புரட்சிகளுக்குப் பெண்களின் அரசியல் தலையீடும் போராட்டங்களும் வித்திட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது.

சோவியத் ரஷ்யாவில் 1917-ல் வாக்குரிமை கோரி பெண்கள் நடத்திய பெரும் போராட்டத்தின் விளைவாக மார்ச் 8 விடுமுறை நாளாகப் பல நாடுகளில் அறிவிக்கப்பட்டது. பின்பு அமெரிக்காவில் தொழிற்சாலைகளில் பெண்கள் எட்டு மணிநேரம் வேலை, நியாயமான ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பெண்களைக் கௌரவப்படுத்தும் முயற்சியாகவே பெண்கள் தினம் வழக்கத்துக்கு வந்தது.

இந்த உண்மை பொதுக்கவனத்துக்கு வந்தால் நம் பெண்கள் ’தாயாக, சகோதரியாக மகளாக’ என்று பெண்ணடிமைத்தனத்தை நயவஞ்சகமாகத் திணிக்கும் புகழுரைகளில் மயங்குவார்களா? கார்ப்பொரெட் சந்தையின் வியாபாரம்தான் ஜரூராக நடக்குமா? ஆகவேதான் ஆண் மைய, ஏகாதிபத்திய அதிகாரம் திட்டமிட்டும், கைவந்த கலையாகவும் பெண்களுக்கான இடத்தை எப்போதும் அரசியலில் வழங்க மறுக்கிறது; ஒடுக்குகிறது.

அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் என்று எந்த வகைமையிலும் குழந்தைகளின் பாடப்புத்தகங்கள்கூட முழுக்க முழுக்க ஆண்கள் படங்களையே காண்பிக்கின்றன. ‘பெண் தலைவர்கள்’ என்று ஒதுக்கப்பட்ட தலைப்பில் மட்டும்தான் நாம் சரோஜினி நாயுடு, ஜான்சி ராணி என்று நான்கு பேரைப் பார்க்க முடிகிறது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டுக்கு இன்னும் போராடிக் கொண்டு இருக்கும் நிலையில் அரசியலில் பெண்கள் என்றால் பொது மனசாட்சிக்கு உடனே நினைவுக்கு வருவது யார்?

விடுதலைப் போராட்டத்தில் கணவனுடன் தோளோடு தோளாக நின்ற கஸ்தூரிபாயா? ஆயுதமேந்திப் போரிட்ட கல்பனா தத்தாவா? பஞ்சாயத்துத் தலைவரானதால் துள்ளத் துடிக்க காதும் கைவிரல்களும் வெட்டப்பட்ட கிருஷ்ணவேணியா? தலித் என்பதால் கொடியேற்ற உரிமை மறுக்கப்பட்டு அதைப் போராடிப் பெற்றாரே திருமதி அமிர்தம் அவர்களா?

குடிநீர் விநியோகத்திலும் நியாய விலைக்கடைகளிலும் ஊழலை ஒழித்த சிபிஎம் கவுன்சிலர் தோழர் லீலாவதி பச்சைப் படுகொலை செய்யப்பட்டது அரசியல் அறத்துடன் செயல்படும் பெண்களை அச்சமூட்டி அடக்கி வைக்கும் செயல் மட்டுமல்ல; அது மக்கள்விரோத அரசியல் சக்திகளைத் தட்டிக்கேட்ட போராளியின்மீது நடத்தப்பட்ட மூர்க்கமான தாக்குதல். வில்லாபுரத்தில் குடிநீர்க்குழாய்கள் வந்த போது அப்பகுதிப் பெண்கள் குடங்குடமாகக் குடிநீரைக் கொண்டு போய் தோழர் லீலாவதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது நினைவிருக்கலாம். இன்றளவும் பெண்கள் தலைவர்களாக இருக்கும் நாடுகளில்தான் கொரோனா அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்கால அரசியலில் எத்தனையோ வீரியமான பெண்கள் இருந்தாலும்கூட, பொதுப்புத்தியில் யார் லட்சியப் பெண்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதில் எப்போதும் சிக்கல் இருக்கிறது. ஊழலில் ஏ1 குற்றவாளியான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வரலாற்று நாயகியாகச் சித்தரித்து திரைப்படம் வருகிறது. பெண் என்பதாலேயே அவரது அரசியல் நிலைப்பாடும் செயல்பாடுகளும் பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்ததா என்ற கேள்வி நம் முன் நிற்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் விலை விஷம் போல ஏறுகிறதே என்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு, ”எங்கள் வீட்டில் வெங்காயம் பயன்படுத்திச் சமைப்பதில்லை அதனால் அதைப்பற்றிக் கேட்காதீர்கள்” என்று பதிலளித்தாரே. அவரை எப்படி அனைத்துப் பெண்களுக்கும் பிரதிநிதியாகக் கொள்ள முடியும்? மதப்பற்றின் கைப்பாவையாக, சூரியனுக்குப் பல் இல்லாததால் பதமாக உளுந்து வடை சுட்டாரே ஒழிய ஒக்கிப் புயலில் சிக்கிய மீனவர்கள் மீதும் கண்ணீரில் மிதந்த பெண்கள் மீதும் எவ்வளவு கரிசனம் காட்டினார் என்பதை நாடறியும்.

ஆகவே, ஆதிக்க சக்திகளைத் துணையாகக் கொண்டு அவை கட்டமைக்கும் பிம்பத்துக்குச் சரியாகப் பொருந்திப் போகிறவர்களும் ஆண்வழியிலேயே (சாதி மற்றும் பொருளாதார ஆதிக்கம்) கைப்பற்றும் பெண்களும் மட்டுமே விதந்தோதப்படுகிறார்கள். அரசியல் குடும்பங்களிலும்கூட ஆண் வாரிசுகளை விடத்திறமையும் தகுதியும் இருந்தாலும் பெண்களுக்கு இரண்டாம் இடம் தான் கொடுக்கப்படுகிறது என்பது வேதனை.

சித்தாந்த ரீதியாகப் பெண் உரிமைகளும் சமத்துவமும் சமூகத்தில் வேரூன்றாத காரணத்தால்தான் இன்றளவும் அரசியல் மேடைகளில் பெண்களையும், பெண் என்பதாலேயே எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் இழிவுபடுத்திப் பேசும் இழிநிலையும் தொடர்கிறது.
ஊடகங்களும் கவன ஈர்ப்புக்காக ‘டோக்கனிசம்’ முறையில் பெண் அரசியல்வாதிகள் மீது வெளிச்சம் குவிக்கின்றனவே ஒழிய. பொதுவான ஆணாதிக்கப் போக்குதான் அங்கும் நிலவுகிறது. தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்குகொள்ளும் பெண்களை ஆண் பங்கேற்பாளர்கள் தகாத முறையில் பேசுவதும், நெறியாளர்கள் டி.ஆர்.பிக்காக அவர்களைப் பேச விட்டுப் பின்பு சப்பைக்கட்டாக மன்னிப்பு கேட்பதும் சகிக்க முடியாத நாடகங்களாக அரங்கேறுவதைக் காண முடிகிறது.

இவை எல்லாம் ஒருபக்கமிருக்க, இன்னும் குடும்ப அரசியலிலேயே அடிமைப்பட்டு தன் சொந்த வாழ்விலேயே எந்த முடிவுகளையும் சுயமாகச் சிந்தித்து எடுக்க முடியாத பெண்கள், அரசியலே பேசக் கூடாது என்பதுதான் அவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் ஆகப் பெரும் அரசியல். அது மிகவும் நுட்பமான பெண் வெறுப்பு.

சமூக வலைதளங்களில் பெண்கள் பெருவாரியாகப் பேசவும் விவாதிக்கவும் தொடங்கிவிட்ட பிறகு இந்தப் போக்கு குறைந்திருக்கிறது என்றாலும், இன்றும் உறவுகளை ப்ளாக் செய்து விட்டுத்தான் பெண்கள் சமூக வலைதளங்களில் பண்பாட்டு சமூக அரசியலைக்கூடப் பேச முடிகிறது (பகுத்தறிவு, பெண்ணியம்). பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப வாட்ஸப் குழுமங்களோ கேடுகெட்ட ஆணாதிக்க மனப்பான்மைக்கும் கெட்டிதட்டிப் போன சாதியத்துக்கும் கட்டியம் கூறி நிற்கின்றன. புடவை கட்டிப் பூவைத்து ஒரு படம் பகிர்ந்தால் ஹார்ட்டின்கள் பறக்கும். ஆனால், ஏதேனும் காட்டமான அரசியல் விமர்சனத்தையோ கருத்தையோ ஒரு பெண் முன்வைத்தால் ஆண்கள் கூடிப் பகடி செய்வதும் மற்ற பெண்கள் தனிப்பட்ட முறையில் ஆமோதித்தாலும்கூட பொதுவில் கள்ள மௌனம் சாதிப்பதும் வாடிக்கையாகவே தொடர்கிறது.

பெண்கள் அச்சமின்றி ஒன்று கூடி அரசியல் பேசும் களங்களை உருவாக்கும் முனைப்புடன் பல தோழர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் ஆவணப்பட இயக்குனர் கீதா இளங்கோவன் தலைமையில் தொடங்கப்பட்ட ‘சாவித்ரிபாய் பூலே’ பெண்கள் பயணக் குழுவும், எழுத்தாளர் சாலை செல்வம் தலைமையிலான ‘கூடு’ பெண்கள் குழுவும் ‘சமத்துவப்பறவைகள்’ பெண்கள் குழுவும் இணைந்து பெரியார், அம்பேத்கர் பிறந்த நாட்களுக்கு ஏற்பாடு செய்த கலந்துரையாடல்களில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத பெண்களும் குழந்தைகளும் பெரியாரையும் அம்பேத்கரையும் வாசித்து உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சமூகநீதிக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் போராடிய அம்பேத்கர் பெரியார் வழியில் பெண்கள் அரசியல்படுவது ஒன்றுதான் பெண்கள் அரசியலில் வலிமையான இடங்களுக்கு முன்னேறுவதற்கும், ஒட்டுமொத்த பெண்களுக்கான விடிவு ஏற்படுவதற்கும் ஒரே வழி.

நிற்க;
’ஆசையாத் தாங்க இருக்கு, புத்தகம் வாசிக்க, கூட்டத்தில் கலந்து கொள்ள… எங்கேங்க? வீட்ல வேலையே சரியா இருக்கு’ என்று குரல்கள் கேட்கின்றன அல்லவா?

”நச்சரிக்கும் வீட்டுவேலைகளில் இருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனித குலத்துக்கு விடுதலை இல்லை” என்று பெருந்தலைவர் லெனினின் குரலும் உடனே கேட்க வேண்டும்!

முதலில் வீடும் சமையலறையும் நாம் இல்லாவிட்டால் இடிந்து வீழ்ந்து விடும் என்ற நினைப்பைப் புறந்தள்ளி ஒரு டீக்கடைக்கு நான்கு பெண்கள் சேர்ந்து போய் தயக்கமின்றி டீ குடிக்கத் தொடங்குவோம்!

காட்டு விலங்குகளுக்கு அஞ்சியதைவிடவும் அதிகமாக சகமனிதர்களான ஆண்களுக்கு அஞ்சுவதை விடுத்து, ‘இதுவும் எங்க ஏரியாதான், கொஞ்சம் தள்ளிக்கோ!’ என்று ஆண்களே வியாபித்திருக்கும் புறவெளிகளில் பெண்கள் தயக்கமின்றிப் புழங்கத் தொடங்கி விட்டாலே போதும்; அரசியலையும் அராத்தாய்ப் பழக ஆரம்பித்து விடுவோம்.

கட்டுரையாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.