கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத்திடு வான்; – எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; – என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?- ‘கண்ணன் என் தோழன்’, பாரதியார்

கோடியர் முழவின் முன்னர் ஆடல்வல்லான் அல்லன் வாழ்கஅவன் கண்ணி வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன் மடம் பெருமையின் உடன்றுமேல் வந்த வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத்து ஆடும் கோவே.- பதிற்றுப்பத்து, 56.

விளக்கம்: தெருவில் நடக்கும் ஊர் விழாவில் யாழிசைக்கும் கோடியரோடு கூடி முழவிசைக்கு எற்ப ஆடவும் வல்லவன்; வேந்தர் தம் மெய்யை மறந்துபோன (மாண்ட) போர்க்களத்தில் ஆடவும் வல்லவன்.

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!! – கிருஷ்ணகானம், கண்ணதாசன்

மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்- மனதில் உறுதி வேண்டும், பாரதியார்.

ஒளி ஓவியர்:

காயத்ரி சுந்தர்

9 ஆண்டுகளுக்கு முன் புகைப்படத்துறையில் நுழைந்தார் காயத்ரி சுந்தர். கல்லூரி நாள்களிலேயே புகைப்படத்துறை மேல் ஆசை இருந்தாலும், திருமணத்துக்கு பின்னரே அதில் முழு மூச்சாக நுழைய முடிந்தது கணவரும் மனைவியுமாக தம்பதி நெடும் பயணங்களில் இணைந்து பயணித்து புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஃபோட்டோகிராஃபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் அமைப்பில் நுணுக்கங்கள் கற்றுக் கொள்ளவும், பிறரது அனுபவங்களில் இருந்து கற்கவும் சேர்ந்தார். Behance போர்ட்ஃபோலியோ இவரது புகைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. இவரது புகைப்படங்கள் கண்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்து, டெக்கான் கிரானிக்கில், தினகரன் , தினமலர், கல்கி தீபாவளி மலர் போன்ற இதழ்களில் இவர் குறித்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன. காயத்ரியின் ஸ்பெஷல் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் இவரது டிராவல் மற்றும் நடன நிகழ்ச்சி புகைப்படங்கள் தான்!