என் தோழி ஒருவர் தன் கணவரிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டார். எங்கு சென்றாலும் அவரது அனுமதி பெற்றே செல்வார். அப்படி அவர் கணவர் பழக்கி வைத்திருக்கிறார். ஒருநாள் கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவர் தன் மகளுடன் உள்ளாடை எடுக்க கடைக்குச் சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து கணவர் போன் செய்து விசாரிக்க, இவர் பதறிவிட்டார். ஏதோ செய்யக் கூடாத செயலைச் செய்தது போல ஒரு குற்ற உணர்ச்சி உள்ளுக்குள் குடைந்திருக்கிறது. என்னிடம், “அவர்கிட்ட சொல்லாம போனது தப்போன்னு இருக்குடி… ஒரு வார்த்தைச் சொல்லிட்டுப் போயிருந்தா ஃப்ரீயா இருந்திருப்பேன்… அவர் என்கிட்ட சொல்லவேயில்லை பாத்தியான்னு கேட்டப்ப… ஏதோ பெரிய தப்பு பண்ண மாதிரி ஒரு ஃபீலிங்” என்றார்.

“ஏன் உன் வீட்டுக்காரர் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்வாரா? அவர் இன்னர் எடுக்க உன் பர்மிஷன் வாங்கிட்டுதான் கடைக்குப் போவாரா?” என்றதற்கு அவளிடம் பதில் இல்லை.

இன்னொரு தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவள் பிழியப் பிழிய அழுது கொண்டிருந்தாள். கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியிருந்தன. காரணம் கேட்டபோது அவள் கணவர் குளிக்கச் சென்றபோது காலி ஷாம்பூ பாட்டில் இருந்ததால் வேறு எடுத்து வைக்காததற்கு அவளைப் பொறுப்பில்லாதவள் என்று திட்டியிருக்கிறார். “எத்தனை வேலை செய்யறேன்… ஏதோ எடுத்து வைக்க மறந்துட்டேன்… உடனே ஷாம்பூ பாட்டில் கொடுத்தாச்சு… இருந்தாலும் கவனமில்லைன்னு கண்டபடி பேசுறார்” என்றாள்.

அவள் பக்கத்து வீட்டுப் பெண்ணோ, “அக்கா, நேத்து நைட்டு இட்லி வேணும்னு கேட்டாரு. மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைக்கிறதா நினைச்சு தயிர் கிண்ணத்தை எடுத்து வெளியே வச்சிட்டேன். ரெண்டு மணி நேரம் கழிச்சு இட்லி ஊத்தப் போனா அது தயிர்னு தெரிஞ்சுச்சு… சரி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… தோசை ஊத்தி தரேன்னதுக்கு ரொம்ப பேசிட்டாருக்கா… மனசு கஷ்டமாயிருச்சு” என்று கண்ணைத் துடைத்தாள்.

நம் இந்திய சமூகம்தான் பெண்களை இப்படித் தேவையற்ற குற்ற உணர்ச்சியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. பெண்களின் சிறு சிறு தேவைகளை நிறைவு செய்யக்கூட கணவரின் அல்லது வீட்டு ஆண்களின் அனுமதியை வேண்டி நிற்க வைத்திருக்கிறது. அதே ஆண் தனது விருப்பப்படிதானே நடந்து கொள்கிறான்? எதற்கும் பர்மிஷன் கேட்பது இல்லை. இன்ஃபர்மேஷன் மட்டும்தானே தருகிறான்? அதற்காக அவன் ஒன்றும் குற்ற உணர்வில் உழல்வதில்லை. இயல்பாகத் தனது வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறான். உள்ளாடை எடுக்கக்கூட கணவனின் அனுமதியை எதிர்பார்க்கும் அளவுக்குப் பெண்களை இந்தச் சமுதாயம் எப்படி மழுங்க வைத்திருக்கிறது?

குளிக்கும் போது தனக்குத் தேவையான சோப்பு, ஷாம்பூ, டவல் இத்யாதிகளை ஓர் ஆண் எடுத்துக் கொண்டு போவதில் என்ன குறைந்துவிடப் போகிறது?. ஆனால், அந்தச் சிறிய வேலைகூடப் பெண்ணின் வேலை என்று பிரித்துதானே அதட்டுகிறான்? எந்நேரமும் பணிவிடை செய்யும் பெண் ஒருநாள் செய்யத் தவறும்போது அது ஆணுக்குப் பூதாகரமாகத் தெரிகிறது. இவர்கள் இப்படி நடந்துகொள்ள யார் காரணம்? அவர்களை இப்படிப் பழக்கிய அந்தப் பெண்கள்தாம் முழுக் காரணம். எல்லா வேலைகளையும் பெண்கள் தங்கள் தலையில் சுமத்திக் கொண்டு அவஸ்தைப்படக் கூடாது. எல்லா விஷயங்களுக்கும் அனுமதி வாங்கத் தேவையில்லை. சிலவற்றுக்குத் தகவலாக மட்டுமே தெரிவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஷாம்பூ எடுத்து வைக்கவில்லை என்று திட்டினால், “நான் எடுத்து வைக்க மறந்துவிட்டேன். இனி நீ குளிக்கப் போகும் போது இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போ” என்று சொல்லுங்கள். இவையெல்லாம் அவ்வளவு பெரிய குற்றங்கள் இல்லை என்று பெண்கள் முதலில் உணருங்கள். சமையல் பிடிக்கவில்லை என்று சொன்னால் அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவர்களையே சமைக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடச் சொல்லுங்கள். எல்லாரையும் எப்போதும் திருப்திப்படுத்திவிட இயலாது. யாரிடமும் முழு மனதோடு பாராட்டுச் சான்றிதழ் வாங்க முடியாது. அது தேவையும் இல்லை என்கிற மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அதனால் முதலில் குற்ற உணர்ச்சியில் இருந்து நீங்கள் வெளியே வாருங்கள். உங்கள் கடமைகளாகச் சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கும் பொறுப்புகளை ஒற்றை ஆளாகச் செய்ய இயலாததற்கு குமுறி அழத் தேவையில்லை. இயன்றதைச் செய்யுங்கள். முடியாததை இயலாது என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் ஒன்றும் சூப்பர் வுமன் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

தவறு செய்திருந்தால்தானே குற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும்? ஒரு வேலையை நாம் செய்ய முடியவில்லை என்றாலோ அல்லது தாமதமாகச் செய்தாலோ அதனால் ஏதேனும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது குறித்து தேவையற்ற குற்ற உணர்வை மனதில் பாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஓர் ஆண் தன் மனைவி, குழந்தைகள், பெற்றோருடன் நேரம் செலவிட முடியாததற்கு வருந்துவதில்லை. அது இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பணியிடங்களில்கூட ஆண் சரியாகப் பணியைச் செய்யவில்லை என்றால், அது குறித்துச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். அப்போது பெண் மட்டும் ஏன் கிடந்து உழல வேண்டும்?

தான் செய்வது தவறு என்று நினைக்காதபடி இயல்பாகக் கடக்க ஆண் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறான். அதேபோல் கடந்து செல்ல பெண்ணால் மட்டும் ஏன் இயல்வதில்லை? காலங்காலமாகப் பெண்கள் பணிந்து போக வேண்டுமென்றுதானே இங்கு கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் பெயரிட்டுக் கூவுகிறார்கள். அந்தப் பண்பாட்டை வளர்ப்பதையும் பெண்கள் கையில் கொடுத்துவிட்டு, அவர்கள் தங்களுக்குள் துவேஷம் வளர்ப்பதையும் ஆண் இனம் சாவகாசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாத பெண்கள்தாம் ஆணின் கண்ணோட்டத்திலேயே பிற பெண்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் தங்கள் வீட்டுவேலை, குழந்தை பராமரிப்பு போன்ற எல்லாவற்றையும் தாமே சுமக்கிறார்கள். தங்கள் கணவருக்கு அந்த வேலையைப் பகிர்ந்தளிக்கத் தயங்குகிறார்கள். இதுதான் அவர்கள் செய்யும் தவறு. வாழ்க்கையில் இணையும் இருவர் பணிகளையும் இணைந்து செய்வது தானே முறை?

மயிலிறகு எவ்வளவுதான் மென்மையாக இருந்தாலும் ஒரு வண்டி கொள்ளாத அளவு ஏற்றும்போது அந்த வண்டியின் அச்சாணியை அது முறித்து வண்டியைக் கவிழ்த்துவிடுகிறது. அது போல்தான் தேவையற்ற குற்ற உணர்ச்சியை ஒவ்வொன்றாக மனதில் ஏற்றுக்கொண்டு, தேவையில்லாத சிந்தனைகளில் சிக்கிக்கொண்டு, இருக்கின்ற ஒரு வாழ்வை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம். இது நம் மனோநிலையைப் பாதிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் கபளீகரம் செய்துவிடும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு மனதை அமைதிப்படுத்தக் கற்றுக்கொள்வோம். வாழ்க்கை வாழ்வதற்கே… கவலைப்பட அல்ல… என்று தினமும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்லிக்கொள்ளுங்கள்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.