அழகு என்பது ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் வேறுபடும். ஒருவருக்கு மிக அழகாகத் தெரியும் ஒன்று, மற்றவருக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும். லைலாவின் அழகை மஜ்னுவின் கண்ணால்தானே காணமுடியும்?

ஆனால் நமது இந்தியச் சமூகத்தில் அழகு என்பதன் வரையறையே வேறு. சிவந்த தோல் என்பதுதான் இங்கு அழகு. கறுப்பு நிறத்தை அபசகுனம் என்று ஒதுக்கித்தானே வைத்திருக்கிறோம்? இந்த வெள்ளை மனப்பான்மையுடன் இருக்கும் நாம்தான், ஆப்பிரிக்க-அமெரிக்க நிறவெறிக் கொள்கையை நரம்பு புடைக்க விமர்சிக்கிறோம். விளம்பரங்கள் கூட சிவப்பு நிறமுடைய பெண்கள் தான் தன்னம்பிக்கையுடன் திகழ்வார்கள் என்று கூவுகின்றன. அதை நம்பி சிவப்பழகு க்ரீம்களைத் தேய்த்து ஐந்து நிமிடங்களில் தன் நிறம் மாறி விட்டதா என்று இன்னும் கண்ணாடி பார்க்கும் பெண்கள் இருக்கிறார்கள்.

நம் நாட்டில் கறுப்பு நிறமுடைய பெண்கள் எத்தகைய சாதனைகள் செய்தாலும், அவை அவ்வளவு கொண்டாடப்படுவது இல்லை என்பதே கசப்பான உண்மை. கறுப்புப் பெண்கள் எதற்கும் ஆசைப்பட்டுவிடக் கூடாது. “இந்த மூஞ்சிக்கு எதுக்கு இது?..”, “இந்த கலரு உனக்கு செட் ஆகாது..”, “இந்த கலரா இருந்துட்டு.. இந்த ட்ரஸ் போட ஆசைப்படலாமா?..” இதுபோன்ற நெகட்டிவ் கமெண்ட்களைத் தான் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

திருமணத்திற்குப் பெண் பார்க்கும் நிகழ்வுகளில் கூட, பெண் நல்ல நிறமாக இருக்க வேண்டும் என்பதே முதல் காரணியாக வைக்கப்படுகிறது. கறுப்பே அழகு.. காந்தலே ருசி.. என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறது. தனித்திறமைகள் ஏதுமில்லாமல் வெறும் சிவப்பு நிறத்தை மட்டும் வைத்து வாய்ப்பு கொடுக்கப்படும் பெண்கள், தங்களது நேரத்தை வீணடிப்பதோடு, திறமையுள்ள இன்னொருவரின் இடத்தையும் பறித்து அவர்களது முன்னேற்றத்தையும் தடுக்கிறார்கள்.

ஆனால் பெண்களுக்கு என்றிருக்கும் சிவப்பு நிற அளவுகோல் எதுவும் ஆண்களுக்கு இல்லை. “ஆம்பளை எப்படியிருந்தா என்ன?..”, “ஆம்பளைக்கு எதுக்கு அழகு?..” என்று சாதாரணமாகக் கடந்து போய்விடுகிறார்கள். நிறம் குறைவாக(?) இருக்கும் காரணத்தாலேயே நிறையப் பெண்கள் முதிர்கன்னிகளாக ஜன்னல் கம்பிகளோடு குடித்தனம் நடத்துகிறார்கள். இல்லையென்று சண்டைக்கு வராதீர்கள். குறைந்த சதவீதத்திலாவது இத்தகைய பெண்கள் இருக்கிறார்கள்.

பருமனான பெண்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஜோக்ஸ் (?), மீம்ஸ் என்று படுத்தி எடுக்கிறார்கள். ஒல்லியாக இருந்தால் தான் அழகு என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் நமது மூளையின் ஒரு மூலையில் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கு அழகுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆரோக்கியத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. திரைப்படங்களில் கூட குண்டான பெண்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவமானப்படுத்தப்படுகிறார்கள். உடல் பருமனைக் காட்டி அவர்களுக்கு நல்ல உடைகள் மறுக்கப்படுகிறது. விரும்பிய உணவு விலக்கப்படுகிறது. கேலிப் பொருளாகவே அவர்கள் சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் நல்ல எழுத்துத் திறமை, பேச்சாற்றல், ஓவியம் வரையும் திறன் போன்ற எண்ணற்ற விஷயங்கள், கவனிப்பாரின்றி முடக்கப்படுகின்றன.

என்னவோ குண்டானவர்கள் எல்லாம் தின்றே தீர்ப்பவர்கள் என்று ஒரு எண்ணம் பரவிக் கிடக்கிறது. அவர்களுக்கு உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் இருக்கலாம் என்ற எண்ணம் ஏனோ யாருக்கும் வருவதில்லை. “வீட்ல எந்நேரமும் தின்னுட்டு தூங்குவா போல..” என்று எளிதாகக் கணித்து விடுகிறார்கள். “ஒரு வேலையும் பார்க்க மாட்டா போல..” என்று சுலபமாகச் சொல்லி விடுவார்கள். நிறைய பெண்கள் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும், உணவைக் குறைத்தாலும், உடல்வாகால் எடைகுறையாமல் இருக்கிறார்கள்.

size zero, PC: Times Now

‘ஒல்லியானவர்களுக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கும். அவர்களுக்கு அழகான பாய்ஃப்ரெண்ட் கிடைப்பான். அவர்கள் உடனே வேலை கிடைத்து ஸ்லோமோஷனில் ஒரு ஃபைலோடு நடந்து வருவார்கள்’- இப்படித்தான் ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் நமது மூளையைச் சலவை செய்து வைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் பெண்கள் கொஞ்சம் ‘பூசினாற்போல’ இருப்பது அழகென்று சொன்னார்கள். இன்றோ ‘சைஸ் ஜீரோ’ தான் அழகென்று சொல்லுகிறார்கள். எப்படி இருந்தாலும் ஆண்களுக்குப் ‘பிடித்த’ மாதிரித்தான் பெண்கள் தன்னை மாற்றிக் கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள்.

பொதுவெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் கூடப் பருமனான பெண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். மாற்றி மாற்றி எந்நேரமும் தனது உடலைப் பற்றிய சிந்தனையிலேயே ஒரு பெண் ஆழ்த்தப்படுகிறாள். ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் உடம்பு போட, குண்டாக இருந்தால் இளைக்க என்று அடுத்தவர்களின் இலவச அறிவுரைகள் ஏராளமாகக் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி உடம்பைக் குறைக்க வைக்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. மூலிகைப் பவுடரை அருந்தி உடலைக் குறைக்கும் முயற்சியில் பக்கவிளைவுகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்ட நிறைய பேரை நான் அறிவேன்.

ஆண் உடலைப் போன்றதல்ல பெண்ணின் உடல். அதை நமது விருப்பப்படி ஏற்றி இறக்க முடியாது. பிரசவம், மாதவிடாய் உள்ளிட்ட காரணங்களாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்ணின் உடல் மாற்றங்களுக்கு உட்பட்டே தீரும்.

MedicalNewsToday

ஆனால் பிரசவத்தினால் வயிறு பெரிதான பெண்கள் இங்கு கொண்டாடப்படுவதில்லை. வெளிநாட்டுப் பெண்களோடு உடல்ரீதியாக ஒப்பிடப்பட்டு கிண்டலடிக்கப்படுகிறார்கள். அவர்களது உணவுப் பழக்கம் வேறு. நம்முடையது வேறு என்ற சின்ன விஷயம் கூட ஆண்களின் மூளையில் உறைப்பது இல்லை. அவர்களின் பார்வையில் ஒல்லியாக இருப்பவர்கள் தான் ‘அழகிகள்’ என்றால், அவர்களது பார்வையின் கோணம் எவ்வளவு தவறானது?

சிவந்த நிறம், வெளுத்த தோல், ஒல்லி உடம்பு.. இவையல்ல அழகு. இன்று நிறைய பேருக்கு கீழே உட்கார்ந்து சாப்பிட முடிவதில்லை. நாற்காலியில் உட்கார்ந்தே பழகிவிட்டதால், சிறிது நேரம் கீழே அமர முடிவதில்லை. கீழே அமர்ந்து, எழும்போது யார் துணையும் இன்றித் தானாகவே எழுவதுதான் ஆரோக்கியம். உடல் பருத்திருந்தாலும் நன்றாகக் குனிந்து நிமிர முடிந்தால், அதை விட அழகு எதுவுமில்லை. நோய்நொடி எதுவுமின்றி துறுதுறுவென்று இருப்பதுதான் பேரழகு.

popsugar

நான் சிறுவயதில் ரொம்ப ஒல்லியாக இருப்பேன். பார்ப்பவர்கள் எல்லாம் பரிதாபப்படும் அளவு ஒல்லி. அப்போது உடலைக் குண்டாக்க நிறைய முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் உடம்பு என் பேச்சைக் கேட்கவில்லை. திருமணத்திற்குப் பின்னர் நான் கேட்காமலே, உடம்பு குண்டானது. ஆறு அறுவைசிகிச்சைகள். எல்லோரும் கிண்டல் செய்தார்கள். உடனே உடலைக் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டேன். இப்போதும் உடம்பு என் பேச்சைக் கேட்கவில்லை. எந்நேரமும் உடம்பைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க நேரிட்டது. பிடித்த ஆடைகளை அணிய யோசித்தேன். பிடித்த உணவுகளைச் சாப்பிட மறுத்தேன். என்னென்னவோ முயற்சிகள் செய்தும், உடம்பு கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

ஒருநாள் உட்கார்ந்து யோசித்து, மொத்தமாக எல்லாவற்றையும் தலைமுழுகினேன். உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதும் என்று சத்தான உணவுகளை மட்டும் சாப்பிடத் தொடங்கினேன். நமக்கு நாம்தான் உலக அழகி என்ற நேர்மையான எண்ணத்தை வளர்த்துக் கொண்டேன். பிடித்த ஆடைகளை அணியத் தொடங்கினேன்.

எனது எண்ணத்திற்கு ஏற்றாற்போல நடிகைகள் நித்யா மேனன், வித்யா பாலன் போன்றோர், ” குண்டான உடல் கேவலம் இல்லை. எண்ணங்களில் வேண்டும் அழகு. அழகுக்காக இல்லாமல் நமது நடவடிக்கைகளுக்காக, சிந்தனைகளுக்காக நம்மை விரும்புபவர்களுடன் நமது நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்”, என்று கூறியது எனது கருத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள உதவியது.

இப்போதும் நான் காலையில் உடற்பயிற்சி செய்கிறேன். சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடல் நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது. கால்கள் வலிமை பெற்றிருக்கின்றன. நீண்ட தூரம் நடக்கலாம். சோர்வின்றி மலை ஏறலாம். உடல் இளைத்த மாதிரியே இல்லை. ஆனால் இலேசானது போல் இருக்கிறது.

இப்போது நான் அழகைப் பற்றிக் கவலைப்படாமல், ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமே எண்ணுகிறேன். மனம் சற்றே அமைதியாகியிருக்கிறது. உடல் பருமனைக் குறித்து யாரும் கிண்டல் செய்தால் சிறு புன்னகையுடன் அதை புறந்தள்ளக் கற்றிருக்கிறேன். அடுத்தவர் கண்களுக்கு அழகாகத் தெரிய வேண்டும் என்று மெனக்கெடுவதை விடுத்து, நமக்கான தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துவோம்!

கட்டுரையாளரின் பிற படைப்பு:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.