“இன்னும் எங்கே இருக்கிறேடி?”
“உனக்கு கொஞ்சம்கூட பொறுப்பே இல்ல.”
“இன்னைக்காவது டைமுக்கு சரியா வாடி மகராசி…”
அம்மா தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும் வாட்ஸப் மெசேஜ் வெள்ளத்தில் நீந்திக்கொண்டே, ‘ஊபர்’ புக் செய்தபடி, எம்ஜி ரோடு ஓபராய் லாஞ்சில் இருந்த சோபாவில் உட்கார்ந்திருந்த மாயா செங்கப்பாவினுடைய எண்ணத்தில், இன்றைக்காவது தோல்வியை ஒத்துக் கொள்ளலாம் என்னும் எண்ணம் வந்தது.
27 வயதாகும் மாடர்ன் யுவதி மாயா. இன்றைய உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்த விளம்பர அலுவலகங்களில் ஒன்றான, ஒகில்வி அண்ட் மாத்தரில் ஆர்ட் டைரக்டராக இருப்பவள். கர்நாடகத்தைச் சேர்ந்த இவள், இப்போது மும்பையில் வசித்து வருகிறாள். கூர்க்கில் இருநூறு ஏக்கர் காபி எஸ்டேட் இருந்தாலும், இப்போது அப்பாவும், அம்மாவும் துபாயில் வசிக்கிறார்கள். துபாயில், அப்பா என்.எஸ். செங்கப்பா பெரிய ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தி செய்யும் தொழிலதிபர். அம்மா நந்திதா செங்கப்பா பேஷன் டிசைனர். ஹை என்ட் பொடிக் முதலாளி. மாயா பிறந்தது, வளர்ந்தது, படித்தது… மடிகேரி, பெங்களூரு, மும்பை, லண்டன்… இப்போது வேலைநிமித்தமாக மும்பையில் இருக்கிறாள்.
வளர்ந்து, பருவத்தில் இருக்கும் ஒரே மகளுக்கு கல்யாணம் செய்துவைத்துவிட்டு, தங்களுடைய பொறுப்பிலிருந்து விடைபெறும் அவசரத்தில் செங்கப்பாவும் நந்திதாவும் இருந்தார்கள். இந்த முயற்சியில் கடந்த ஒன்பது மாதத்தில் நடந்த ஒன்பது மீட்டிங்குகளில் ஒன்பது வரன்களை நிராகரித்திருந்த மாயா, அப்பா அம்மாவிடம், “ தயவுசெஞ்சு உங்களுடைய வரன் தேடும் வேட்டையை நிறுத்திடுங்க. எனக்கு யாராவது சரியான பையன் கிடைத்தால், தாலி கட்டிக்கொண்டு வீட்டுக்கே அழைச்சுக்கிட்டு வரேன்”, என்று எத்தனையோ முறை சொல்லி இருந்தாள். ஆனால், அப்பா, அம்மா என்றால், என்றைக்கிருந்தாலும் அப்பா, அம்மாதானே!
செங்கப்பாவோ பாசம் மிகுந்த மகளிடம், ” நீ யாரையாவது விரும்பினால், இல்லைன்னா ரகசியமா லவ் பண்ணிட்டிருந்தால் வாயைத் திறந்து சொல்லிடும்மா. அவன் யாராக இருந்தாலும், எந்த ஸ்டேடஸில் இருந்தாலும், பரம ஏழையாக இருந்தாலும்… பரவாயில்ல”, என்று சொல்லிக்கொண்டே ‘மிண்ட்’ பத்திரிகையில் வரும் ஹை எண்ட் மேட்ரிமோனியலில் வரன்களைத் தேடித்தேடி அழைத்துக்கொண்டு வந்து, எதிரில் உட்கார வைப்பார்.
மிகப் பெரிய இடத்துக் குடும்பங்கள், மில்லியன் டாலர் சம்பந்தங்கள்… முதல் தவணை பேச்சு வார்த்தைக்கு யாரும், யாரையும் வீட்டுக்கு அழைப்பதுமில்லை; வீட்டுக்கு வருவதுமில்லை.
நேரம் கிடைத்தால், பைவ் ஸ்டார் ஹோட்டலில் லஞ்ச், டின்னர் மீட்… குறைவான நேரம் கிடைத்தால், ஸ்டார்பக்ஸ், காபி டே ஸ்கொயரில் இரண்டு குடும்பங்களின் இன்பார்மல் மீட் இருக்கும்…
டைம் டேபிள் பிக்ஸ் செய்துகொண்டாற்போல், முதல் அரை மணிநேரம் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் குசலம் விசாரிப்பது நடக்கும்; அதற்குப்பிறகு பையன், பெண் இருவருக்கும் தொலைவில் ஒரு மூலையில் இருக்கும் டேபிளில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பேசிப் புரிந்துகொள்ள ஒருமணி நேரம்; பிறகு க்ளைமாக்சுக்கு அரைமணி நேரம்.
ஹை எண்ட் ஸ்டேடஸ்க்கான பிரச்சினை, யாரும் யாருக்கும் முகத்தில் அடித்தாற்போலோ, சம்பந்தம் விருப்பமில்லை என்றோ ஒரே வார்த்தையில் கூறி, எழுந்து போக இயலாது. விருப்பம் இல்லை எனினும், எல்லோரும் எழுந்து போகும்போது ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்டு, விஷ் செய்து கன்னத்தில் முத்தமிட்டுதான், ‘பை பை’ சொல்ல வேண்டும். அதற்குப்பிறகு அப்பாக்கள் தங்களுக்குள் பைனல் டெசிஷன்ஸ் பரிமாறிக்கொள்வார்கள்.
ஒன்பது மாதங்களில், ஒன்பது முறை, ஒன்பது நகரங்களில் நடந்த இந்த நாடகங்களில் மாயா வெறுத்துப் போயிருந்தாள்.
இன்றைக்கு பெங்களூரில் விட்டல்மல்யா ரோடின் கடைசியில் இருக்கும் காபிடே ஸ்கொயரில் பத்தாவது குடும்பத்தோடு லஞ்ச் மீட்டிங் பிக்ஸ் ஆனது. வரனின் குடும்பத்தினரின் பூர்வீகம் கூட மடிகேரிதான். ஆனால், இப்போது அனைவரும் அமெரிக்காவின் சான்ஹோஸில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். வரன் கார்த்திக்கின் அப்பா பூனச்சா, ‘ஆப்பிளி’ன் ஹெட் குவார்டர்சில் உயர்ந்த பதவியில் இருந்து ரிடையர்ட் ஆனவர். இரண்டு அக்காக்களும் பே ஏரியாவிலேயே செட்டில் ஆகியிருந்தார்கள். அம்மாவும் அந்த காலத்திலேயே சாப்ட்வேர் எஞ்சீனியர் ஆக இருந்தவர், இப்போது ஹோம்மேக்கராகவும் சமூக சேவகியாகவும் இருப்பவர். “ நல்ல ரிலீஜியஸ், எதிக்கல் குடும்பம்டி. கார்த்திக்கின் அப்பா பூனச்சா ஸ்டீவ் ஜாப்ஸ்சுடன் கூட வேலை செய்திட்டிருந்தாங்களாம். ஆப்பிள் கம்பெனி ஆரம்ப நாட்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் இவங்க வீட்டுக்கு வந்து, பன்றிக்கறி சாப்பிட்டுப் போவாராம். ஒபாமா அரசாங்க இன்னோவேஷன் செல்லில் பூனச்சா கூட ஒரு அட்வைசராக இருந்தாராம்…”
செங்கப்பா இந்த சம்பந்தத்தைத் தேடிய பிறகு , நந்திதா நிறைய பேக் எண்ட் ரிசர்ச் செய்து, தான் அறிந்ததை, மகளிடம் அதிகமாகவே மகுடி ஊதினாள்.
உருவத்தில் ஹ்ரித்திக் ரோஷன் வெட்கப்படும் அளவுக்கு இருக்கும் கார்த்திக், எஞ்சீனியரிங் முடித்து, ஹார்வர்டில் எம்பிஏ முடித்து, இப்போது அவனுடைய சொந்த ஸ்டார்ட் அப் ஆரம்பித்திருக்கிறான்.
“ ரொம்ப நல்ல பையன்டி. அமெரிக்காவிலயே பிறந்து அங்கேயே படிச்சு வளர்ந்தாலும், இதுவரை ஒரு கேர்ள் ப்ரெண்ட் கூட அவனுக்கு இல்லை. படிப்பு, ஜிம், கேரியர், ப்யூச்சர் அவ்வளவுதானாம். கார்த்திக் போல ஒரு பையன் கிடைக்கணும்னா புண்ணியம் செய்திருக்கணும். அந்தப் பையன் மனசு வைத்திருந்தால் அங்கேயே ஏதாவது ஒரு பெண்ணை கல்யாணம் செய்திருந்திருக்கலாம். சம்பிரதாயம் மிகுந்த குடும்பத்தில் இருந்து வந்ததால, இந்தியப்பெண் தான் வேணும்னு வந்திருக்கிறார். ஏற்கனவே அவர்களுக்கெல்லாம் உன்னைப் பிடிச்சிப் போச்சு. குறும்புத்தனம் ஏதாவது செஞ்சு, இந்த சம்பந்தத்தைக் கெடுத்துக்க வேண்டாம்”, என்று நந்திதா மகளை எச்சரித்தாள்.
மகனுக்கு பெண் பார்ப்பதற்காகவே பூனச்சா குடும்பத்தினர் ஒரு மாதமாகவே இந்தியாவில் இருந்தனர். செங்கப்பா குடும்பத்தோடு அவர்களின் மீட்டிங் மதியம் பதினொன்னரை மணிக்கு காபிடே ஸ்கொயரில் பிக்ஸ் ஆனது.
இரண்டு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அங்கு வந்து சேர்ந்திருந்தாலும், மாயா மட்டும் அங்கே இன்னும் வந்திருக்கவில்லை.
“சாரி. மாயா இங்கேயே எம்ஜி ரோடில்தான் இருக்கிறாள். இன்னும் பத்து, பதினைந்து நிமிஷத்துக்குள்ளே வந்துடுவாள்”, செங்கப்பா மன்னிப்பு கேட்டபோது, பூனச்சா, “பரவால்ல விடுங்க. பெங்களூரு டிராபிக் பற்றி எங்களுக்கும் புரியும். உங்க பொண்ணுக்காக எங்க பையன் வாழ்க்கை பூரா காத்திருக்க தயாராக இருக்கிறான்”, என்று வேடிக்கையாகப் பேசினார்.
இரண்டு குடும்பங்களின் பன்னிரெண்டு உறுப்பினர்கள் மூலையில் அரேஞ்ச் செய்யப்பட்டிருந்த சிறப்புப் பகுதியில் உட்கார்ந்து நலம் விசாரித்துக்கொண்டனர். பதிமூன்றம் நாற்காலி காலியாக இருந்தது. கார்த்திக்கின் கண் அதன் மீது போனது.
“வந்தேன் மேடம். வந்துட்டேன் மேடம்…”, என்று கூறியவாறே பதினைந்து நிமிடம் தாமதமாக, ஊபர் ஓட்டி வந்த மஞ்சுநாதாவைப் பார்த்தபிறகு, மாயாவுக்கு திட்டவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. ஓபராய் வளாகத்தில் காரை நிறுத்தி கதவைத் திறந்த உடனே, மிகவும் பணிவுடன், “தயவுசெஞ்சு மன்னிச்சுக்கோங்க மேடம். டிராபிக்கில் மாட்டிக்கிட்டேன். முடிந்த அளவுக்கு வேகமாக காபி டே ஸ்கொயரில் இறக்கி விட்டுடறேன். கோபிச்சுக்க வேண்டாம்”, அந்தக் குரலில் நேர்மை குடிகொண்டிருந்தது.
காரில் முன் சீட்டில் உட்கார்ந்த மாயா, சீட் பெல்ட்டைப் போடாமல் இருந்தைப் பார்த்த மஞ்சுநாதன், “தயவுசெய்து சீட்பெல்ட் போட்டுக்கோங்க மேடம்”, என்று அவ்வளவு மென்மையாகச் சொன்னான். மாயா மறுமொழி பேசாமல் சீட்பெல்ட்டை மாட்டிக்கொண்டாள். எம்ஜி ரோடு முழுக்க நிறைந்திருந்த டிராபிக்குக்கு நடுவில், ‘கேப்’பை நாசுக்காக ஓட்டி, காரை காபி டே ஸ்கொயர் எதிரில் நிறுத்திய மஞ்சுநாதனிடம், மாயா, “பேடிஎம் செய்திருக்கிறேன்.” என்ற போது, மெல்ல சிரித்த அவன் சுத்தமான ஆங்கிலத்தில், “தேங்க்யூ அண்ட் குட்லக்” என்றான். குதூகலத்தைத் தடுக்க முடியாமலேயே, “என்ன படிச்சிருக்கிறீங்க?” என்று மாயா கேட்டபோது, “எஞ்சீனியரிங் முடிச்சு, எம்பிஏ முடிச்சிருக்கிறேன், ரைஜு கம்பெனியில் ஒர்க் செய்து கொண்டிருந்தேன். ஏனோ இன்னொருத்தருக்குக் கீழே வேலை செய்யறது பிடிக்காமல் ஊபர் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ‘கேப்’பை முன்னால் ஓட்டிச் சென்றான்.
பன்னிரெண்டு மணிக்கு மாயா, ‘காபி டே’ க்குள் நுழைந்தாள். அதற்குள் செங்கப்பா, பூனச்சா குடும்பங்கள் லஞ்ச் ஆர்டர் செய்திருந்தனர். செங்கப்பா, மகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
பூனச்சா தானாகவே, “மாயா. உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் செய்மா”, என்றார். “இப்போ எதுவும் வேணாம் அங்கிள். லேட்டாக ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் ஆன பிறகு ஏதாவது ஆர்டர் பண்ணறேன்” “ஓஹோஹோ… என்னம்மா. கார்த்திக்கைப் பார்த்த உடனேயே வயிறு நிறைஞ்சு போயிடுச்சா? எதுவும் வேணான்னு தோணிடுச்சா?”, செங்கப்பா மகளை பேச்சுக்குள் இழுத்தார்.
கார்த்திக்குக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்த மாயா, அனைவருக்கும், ‘ஹாய்’ சொன்னாள். அவளுக்கு இடது பக்கத்தில் அம்மா நந்திதாவும், வலது பக்கத்தில் கார்த்திக்கின் அம்மா டீனா பூனச்சாவும் அமர்ந்திருந்தனர். டேபிளின் மற்றொரு ஓரத்தில் செங்கப்பாவும், பூனச்சாவும் உட்கார்ந்திருந்தனர். இடையில் இரண்டு குடும்பங்களின் மீதி உறுப்பினர்கள் உட்கார்ந்திருந்தனர். பக்கத்திலே அமர்ந்திருந்த டீனா நிதானமாக மாயாவிடம் பேசத் தொடங்கினார். அவருடைய பேச்சு நடவடிக்கை அனைத்தும் அந்த குறுகிய நேரத்துக்குள்ளேயே மாயாவுக்குப் பிடித்துப் போயிருந்தது. பத்து நிமிடங்களுக்குள், ‘இந்த பேமிலி பரவாயில்லை’ என்று மாயாவுக்குத் தோன்றியது. மேலோட்டமாக கார்த்திக்கூட அவளுக்குப் பிடிக்க ஆரம்பித்தான். பதின்மூன்று ஆட்கள் இருந்த கூட்டம் இப்போது நான்கு, ஐந்து குழுக்களாகப் பிரிந்து அவரவர்களுடைய பேச்சில் ஆழ்ந்து போனார்கள்.
இடையில் மாயாவும் கார்த்திக்கும் பேசாமல் அமைதியாக இருந்தனர். அதை கவனித்த பூனச்சா, “மாயா. உனக்கு கார்த்திக்கிடம் பேசணும்னு தோன்றினால், நீங்க ரெண்டு பெரும், அங்கே தூரத்தில் இருக்கிற டேபிளுக்குப் போய் உட்கார்ந்துக்கோங்க” என்றார். கார்த்திக் மாயாவைப் பார்த்தான். இருவரும் எழுந்து தொலைவில் மூலையில் இருந்த அந்த டேபிளை நோக்கி நடந்தார்கள்.
“நீங்க உட்காருங்க”, என்று கார்த்திக் கூறியபோது மாயா பதில் ஏதும் பேசாமல் உட்கார்ந்தாள். எதிரில் உட்கார்ந்த கார்த்திக், “சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்ங்க”, என்றான். “எனக்கு நிஜமாவே பசிக்கல. என்ன சாப்பிடணும்னும் தோணல. வேணும்னா பிறகு ஆர்டர் பண்ணிக்கிறேன்”, என்றாள் மாயா. “ உங்களுக்கு ஏதாவது என் கிட்ட கேட்கணும்னு தோணினால் சங்கோஜமில்லாம கேளுங்க. ஐ லைக் ஓபன்நெஸ். எனக்கும் கூட எந்த சங்கோஜமும் இல்லாமல் உங்களிடம் கேள்விகளைக் கேட்க வாய்ப்பு குடுங்க”. “எனக்கு கேட்பதற்கு அதிகமா எதுவும் இல்ல. யாருடன் கல்யாணம் ஆனாலும் என்னுடைய கேரியர் கன்டினியூ செய்யணுங்கிற ஆசை இருக்கு. ஆர் யூ ஓகே வித் தேட்?” “டோண்ட் ஒரி அபவுட் தேட். நான் அப்பாவுடைய ஆஸ்தியை வைத்து வாழ்க்கை நடத்தல. இல்லைன்னா அப்பா, அம்மாட்ட கூட சேர்ந்திருந்து வாழ்க்கை நடத்தல. ஐ லிவ் செப்பரேட்லி. கடந்த மூன்று வருஷங்களா எனக்கு சொந்தமான ஸ்டார்ட் அப் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கிறேன்.”
“ஹவ் பிக் இஸ் யுவர் கம்பெனி?” “இப்ப நம்ம கிட்ட, முப்பத்தாறு பேர் வேலை செய்யறாங்க. வீ ஆர் இன் டூ ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் அண்ட் நேச்சரல் லேங்குவேஜ் ப்ராஸசிங் வர்டிகல்”. “வாட்ஸ் தெ டர்ன் ஓவர் நவ்?” “போன வருஷம் 12 மில்லியன் டாலர் இருந்தது. இப்ப நம்ம ஆபரேஷன் யூரோப்புக்குக் கூட எக்ஸ்பேண்ட் பண்ணிகிட்டிருக்கிறோம். அடுத்த மூணு வருஷங்கள்ல 100 மில்லியன் டாலர் ரெவின்யூ வருவது நிச்சயம். என்னுடைய கம்பெனி எவ்வளவு பெரியதானாலும், பில்லியன் டாலர் கம்பெனி ஆனாலும், நான் வேலையை விடுங்க என்று, உங்களை கட்டாயப் படுத்த மாட்டேன்.”
“நான் வேலை செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் உரிமை இந்த உலகத்தில் ஒருவருக்கு தான் இருக்கிறது.” “அது உங்களை கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு மட்டும்தானே. அப்படித்தானே?” “கண்டிப்பாக இல்லை. எனக்கு மட்டும்தான் இருக்கு. ஜஸ்ட் பார் யுவர் இன்பர்மேஷன். வெறும் ஐந்து வருடங்களில் நான் ஆர்ட் டைரக்டர் பதவிக்கு வந்திருக்கிறேன். அதுவும் வெறும் என்னுடைய பெர்பார்மென்ஸ் மூலமாக. இன்னும் பத்து வருடங்களில் அட்லீஸ்ட் ஏசியா, பசிபிக், ரீஜன் ஹெட் ஆகி, ஒகில்வி அண்ட் மாத்தரிலிருந்து வெளியில் வந்து என்னுடைய சொந்த அட்வர்டைஸ்மெண்ட் கம்பெனி தொடங்கப் போறேன்.” “அதற்கு கட்டாயம் என்னுடைய சப்போர்ட் இருக்கும். கல்யாணம் ஆன பிறகு, சான்ஹோஸில் வந்து செட்டில் ஆகிறீங்களா? இல்லைன்னா இந்தியாவிலேயே இருந்து மேனேஜ் பண்ணுவீங்களா?”
“உடனே சான்ஹோஸுக்கு ஷிப்ட் ஆறது கொஞ்சம் கஷ்டம். ஏன்னா இப்போ இருக்கும் வேலையை விட்டுவிட்டு, எனக்கு வேண்டிய வேலை அங்கே கிடைத்து செட்டில் ஆவது ரொம்ப கஷ்டம். ஆனால், முடிந்த அளவுக்கு வேகமாக, சான்பிரான்சிஸ்கோவுக்கு டிரான்ஸ்பர் எடுத்துட்டு வருகிறேன்.” “வாட் டூ யூ ஸே அபௌட் ப்யூச்சர் பேமிலி?”
“லெட் மீ பீ வெரி ப்ராங்க். அப்பா, அம்மாவுக்கு என்னை விட்டால் யாருமில்லை. வருஷத்துக்கு ஒருமுறை குறைஞ்சது, தீபாவளி சமயத்தில் மட்டுமாவது, ஒரு மாசமாவது நான் துபாயில் இருக்கணும். குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகளாவது வேணும்”, என்று மாயா கூறியபோது, கார்த்திக்கின் முகத்தில் ஆச்சர்யம் தோன்றியது.
“என்னைப் பொறுத்த அளவில் அது சரியான முடிவு இல்ல. நாம ரெண்டுபேரும் கேரியரில் இத்தனை ஆம்பிஷன் வெச்சுக்கிட்டு, இரண்டு குழந்தைகளை வளர்க்கிறது கஷ்டமாகிடும். ஐ சஜஸ்ட் ஒன்லி ஒன் கிட்” என்று கார்த்திக் கராறாகவே சொன்னான். அவர்களின் பேச்சு, கேரியர், குடும்பம், என வருங்காலத்தைச் சுற்றியே போனது. இடைஇடையில் பேச்சு வழி மாறிப்போனாலும், மாயா தன்னுடைய கம்யூனிகேஷன் ஸ்கில் மூலமாக அதை சரியான பாதைக்குக் கொண்டு வந்தாள். ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு, சூழல் இன்னும் தெளிந்து, இருவரும் சிரித்துக்கொண்டே உரிமையோடு அவர்கள் இருவரின் எண்ணங்களை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்தனர்.
“ஸோ… என்னைப் பார்த்தபிறகு உங்களுக்கு பிடிச்சிருக்குதா? கல்யாணத்தைப் பற்றி நாம ரெண்டுபேரும் யோசனை செய்யலாமா? வரும் நாட்களுக்கான கனவைக் காணலாமா?”, கார்த்திக் சட்டென்று இப்படி மாயாவிடம் கேட்டுவிட்டான்.
“கார்த்திக். உடனே உங்களுடைய இந்த கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. எனக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேண்டும்”, என்றாள் மாயா. ஒரு கணம் கண்களை இடுக்கிக்கொண்ட கார்த்திக், பேச்சை வேறு பக்கம் திருப்பினான். இனி என்ன? எல்லாம் முடிந்தது என்று நினைத்த கணத்தில், “மாயா. இட்ஸ் ஓகே. நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவு நேரம் எடுத்துக்கோங்க. நான் காத்துக்கொண்டிருப்பேன்”, என்றான்.
“கட்டாயம்”, என்று மாயா நாற்காலியிலிருந்து எழுந்திருந்தாள். “ஒரு நிமிஷம். நீங்க தப்பா நினைக்கலைன்னா என்னுடைய ஒரு கடைசிக் கேள்வி இருக்கு.”
“கேளுங்க”
“எந்த காரணத்துக்காகவும் நீங்கள் தப்பா நினைக்கமாட்டீங்கன்னு எனக்கு பிராமிஸ் பண்ணுங்க. பிறகு கேள்வி கேட்கிறேன்.” “எனக்கு வெறுமனே பிராமிஸ் செய்கிற பழக்கம் இல்லை. உங்க கேள்வி தப்பாக எண்ணக்கூடியதாக இல்லைன்னா, அப்படியே பதில் சொல்லிடறேன். தப்பாக நினைச்சாலும் பதில் சொல்லறேன்”. “ கல்யாணம் ஆனால், நாம ரெண்டுபேரும் வாழ்க்கை முழுக்க ஒன்றாக இருக்கப்போறவங்க. அதனாலதான் இந்தக் கேள்வியைக் கேட்க நினைச்சேன்.”
“கேளுங்க. பரவாயில்ல’
“ப்ளீஸ். டோண்ட் மைண்ட்”
“டோண்ட் ஒரி. அமைதியாக கேள்வியைக் கேளுங்க”
பேசும்போதே இரண்டாவது முறையாக கார்த்திக் குளறினான்.
உடனே மீண்டும், “ஸீ. ஐ அம் எ வெர்ஜின். அதேபோல வெர்ஜின் ஆக இருக்கிற பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசை எனக்கு. அதனால்தான் நேரடியா உங்க கிட்ட கேட்டுட்டேன்.”
ஒரு கணம் மௌனமாக இருந்த மாயா புன்னகைத்தபடியே, “வாட் டூ யூ மீன் பை வெர்ஜினிட்டி?” என்று கேட்டபோது, கார்த்திக் பேச்சிழந்து போனான்.
“கார்த்திக் ப்ளீஸ் டோண்ட் மைண்ட். ஒருவேளை நான் வெர்ஜினாக இல்லாமல் இருந்தும், உங்க கிட்ட பொய் சொன்னால்…? அப்ப நீங்க என்ன செய்வீங்க…? ஆனா எனக்கு பொய் சொல்லும் பழக்கமே இல்ல. என்னதான் இருந்தாலும் நேருக்கு நேரா ஒரு பேச்சுக்கு சொல்லறேன். கேட்டுக்கோங்க. வெர்ஜின் ஆக இருக்க வேண்டியது நம்முடைய மனசுதான். என்னுடைய யோனி மட்டுமில்ல; என்னுடைய யோனிக்கு உள்ளிருக்கும் ஹைமன் கிழிந்து போயிருந்தால் வெர்ஜின் இல்லைன்னு உன்னுடைய கருத்தாக இருந்தால், நாம ரெண்டு பேரும் சரியான ஜோடி இல்ல.”
” ஏன்னா நான் வெர்ஜின் இல்ல. அது கிழிந்து போயிருக்கு. அது எப்படி கிழிஞ்சுபோச்சுன்னுகூட உன் மனதில் ஏற்கனவே கேள்வி எழுந்திருக்கும். அதற்கும் பதில் சொல்லறேன் கேட்டுக்க. இப்பவும் நான் தினமும் காலையில் இல்லைன்னா இரவு பத்து கிலோமீட்டர் சைக்கிளிங் போறேன். சீ மை மிடில் பிங்கர். இடது கை இல்லைன்னா வலது கை நடுவிரலால வாரத்துக்கு ஒருமுறை, ’பெட்’டில் படுத்து மாஸ்டர்பேட் செய்துக்குவேன். எனக்கும் எந்த பாய் ப்ரெண்டும் இல்லை. எந்த ஆணுடைய உடலையும் நான் தொட்டதில்ல. ஆனாலும் ஐ லவ் செக்ஸ். ஸோ ஐ ஹேவ் எ லிட்டில் லூசண்ட் புஸ்ஸி. ஈவன் ஐ நோ ஹவ் டு டைட்டன் இட் வித் எ சர்ஜரி. ஆனா செய்துக்க மாட்டேன். வாட்ஸ் தெ ப்ராப்ளம்!? இல்ல, பெண்ணொருத்தி வெர்ஜின் ஆக இருக்கணும்னு சொல்கிற ஆண், நான் வெர்ஜின் அப்படின்னு சொன்ன உடனே, நான் ஏன் நம்பணும். ஆர் யூ ரியலி வெர்ஜின்? அப்படின்னா அதை எப்படி ப்ரூவ் செய்வே…?”
சிரித்த முகத்துடனேயே மாயா வெடித்தெழுந்தாள். “ மாயா நீங்க என்னை தப்பா புரிஞ்சுகிட்டிருக்கிறீங்க. தயவு செஞ்சு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…”
கார்த்திக் படபடப்புடன் பேசினான்.
“ஜஸ்ட் லிசன் டு மி. இப்ப நாம ரெண்டுபேரும் சிரிச்சுக்கிட்டே அந்த டேபிள் கிட்ட போறோம். ‘ உடனே எந்த முடிவுக்கும் வரமுடியல. இன்னும் ரெண்டு நாட்கள் அவகாசம் குடுங்க’ன்னு நீ உங்க அப்பாகிட்ட சொல்லு. வீட்டுக்குப் போனபிறகு மாயாவை எனக்குப் பிடிக்கலன்னு சொல்லு. இந்த உலகத்தில் உனக்கு யாராவது ஒருத்தி ’வெர்ஜின்’ பொண்ணு கிடைக்கலாம். எனக்கு உன்னைப்போல ஒரு ‘வெர்ஜின்’ பையன் அவசியம் இல்லை. இதுக்கு நடுவுல ஏதாவது தகராறு செய்தால், உன்னோட வெர்ஜின் ஆட்டத்தை, எல்லோருக்கும் சொல்ல வேண்டியதாகிடும்”, என்று எழுந்தாள். இருவரும் எழுந்துபோய் உறவுக் கூட்டத்தினருடன் சேர்ந்தனர்.
பூனச்சா, ” ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தீங்களே. என்ன முடிவு பண்ணி இருக்கிறீங்க?”, என்றார்.
கார்த்திக் வறண்ட சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.
மாயா மனதார சிரித்தாள்.
பூனச்சா, ” ஸோ. பேச்சுவார்த்தை முடிஞ்சதுல்ல. நாம இப்போ லஞ்ச் சாப்பிடலாம். மாயா, ப்ளீஸ் ஏதாவது ஆர்டர் செய்மா”, என்றார்.
வெயிட்டர் எதிரில் வந்து நின்றபோது மாயா, “ஒன் வெர்ஜின் மொஹிதொ ப்ளீஸ்!” என்றபோது, கார்த்திக் தலைகுனிந்தான்.
வர்ஜின் மொஹிதொ – Virgin Mojito எலுமிச்சை சாறு, புதினா இலை, தேன், உப்பு , ஐஸ் சேர்த்து செய்யப்படும் குளிர்பானம். விருந்துகளில் ஸ்டார்டராகவும், உணவுக்கு நடுவிலும்கூட புத்துணர்வுக்காக உபயோகப்படுத்துவார்கள்.
கதை: சதீஷ் சப்பரிகெ
கன்னட பத்திரிகைத்துறை வரலாற்றிலேயே பிரிட்டிஷ் ஷிவினிங் ஸ்காலர்ஷிப் பெற்ற ஒரே பத்திரிகை நிருபர் என்ற பாராட்டுக்கு உரியவர். ’புக் பிரம்மா’ பத்திரிகை ஆசிரியர். லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஜி கோர்ஸ் படித்தவர். உடுப்பி மாவட்டத்தில் சப்பரிகெ என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருடைய அப்பாவின் ஹோட்டல் தொழில் பின்னணியில் வளர்ந்து, பிறகு பெங்களூருவில் வந்து வசித்துக்கொண்டிருப்பவர். எழுத்தாளர், பத்தி எழுத்தாளர். முப்பது வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார். ‘தேம்ஸ் தடத தவக தல்லண’ பயண நூலுக்கு, கர்நாடக சாகித்திய அகாதெமி புத்தக விருது பெற்றவர். ’பேரு’ (வேர்) என்ற கதைத்தொகுப்புக்குப் பிறகு, 18 வருடங்களுக்குப்பிறகு இந்த, ‘வர்ஜின் மொஹிதொ’ சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டுவந்துள்ளார்.
கன்னடத்திலிருந்து தமிழாக்கம்: டாக்டர் மலர்விழி, மதுமிதா
மதுமிதா ராஜபாளையத்தில் வசிக்கும் எழுத்தாளர், கவிஞர். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி. 25-க்கும் அதிக நூல்களை உருவாக்கியுள்ளார். 12-க்கும் அதிக விருதுகளை வென்றிருக்கிறார்.
முனைவர் கே.மலர்விழி, பிரெசிடென்சி பல்கலைக்கழகத்தில் கன்னட மொழித்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த
30 ஆண்டுகளாகக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் அளப்பரிய பணிகள் செய்துள்ளார். மொழியாக்க நூல்கள் உள்ளிட்ட ஏழு நூல்களைப் படைத்திருக்கிறார். பல விருதுகள் வென்றுள்ளார்.
அருமையான கட்டுரை. கற்பிதத்தைக் கட்டுடைத்திருக்கிறது. . .
Nice presentation.