கோயில்கள் நம் பண்பாட்டின் அடையாளம். பழமையான நம் கட்டிடக் கலையின் அரிய நினைவுச் சின்னம். வரலாற்றை அரிய உதவும் திறந்தநிலை பல்கலைக் கழகம். பொய் சொல்லாது மெய் பேசி நிற்கும் காலத்தின் மௌன சாட்சி. கடவுளுக்காக கட்டப்பட்ட கட்டடம் என்றாலும் அது மனிதர்களின் கதையைப் பேசும் காலப் பெட்டகம்.
உலகின் பாரம்பர்யச் சின்னங்களாக கட்டடங்களைத் தேர்வு செய்வதற்குக் காரணமே அவற்றின் கலை அழகும் வரலாற்று முக்கியத்துவமும்தான். நம்முடைய பாரம்பர்ய கட்டடங்களுக்கும், கோயில்களுக்கும் ஒரு பொருளாதார மதிப்புக் கொடுத்தால் நாம்தான் உலகின் வல்லரசு நாடு. ஆனால் நம் கலைச் செல்வங்கள் அந்நியர் படையெடுப்பில் அழிந்தது பாதியும், நம் அறியாமையில் அழிந்தது மீதியும் போக மிஞ்சி நிற்பவை காலம் விஞ்சியவையே.
கோயிலில்லா ஊரில் குடியிருப்பது பாழ் என்ற பழமொழி நிச்சயம் ஆன்மீகம் சார்ந்ததில்லை. கோயில்தான் தமிழர் வாழ்வின் மையமாக இருந்திருக்கிறது. ஓர் ஊரில் ஒரு கோயிலும், அக்கோயிலைச் சுற்றி நான்கைந்து தெருக்களும்தான் நம் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படை.
விடியற்காலை 4.30 மணிக்குத் தொடங்கும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பள்ளியறையில் தூங்குவதாக நம்பப்பட்ட கடவுள்களுக்கு மட்டும் பாடப்பட்டதல்ல… அது ஊரையும் விழிக்கச் செய்யும் உபாயம். ஊர் மக்கள் சந்திக்கவும், உட்கார்ந்து பேசவும், கடவுளைத் தொழவும், பண்டிகைத் திருவிழாக்களில் உறவினர்களோடு ஒன்றுகூடவும், விருந்துண்ணவும், தன் நிலத்து உற்பத்திப் பொருளைக் காணிக்கையாக்கி கடவுளுக்கு நன்றி சொல்லவும் எல்லாருக்கும் கோயிலே மையமாக இருந்தது.
ஊரில் வெள்ளம் வந்தாலும், பஞ்சம் வந்தாலும், கொள்ளையர்கள் வந்தாலும், கொடுவேல் கொண்டு எதிரிகள் தாக்கினாலும் அரவணைத்துப் பாதுகாக்கும் இடமாக கோயிலே இருந்திருக்கிறது. ஏறக்குறைய வரலாற்றுக் காலம் முழுக்க மனிதர்களின் வாழ்வோடு கோயில்கள் பிரிக்க முடியாத அம்சமாக இணைந்தே வந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆதியும் அந்தமும் இல்லாதவன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், உருவமும், அருவமும், அருவுருவமும் ஆனவன் என்றெல்லாம் நம் மதங்கள் கடவுளைப் பற்றிச் சொன்னாலும் நடைமுறையில் கோயில் என்பது உருவம் கொண்ட கடவுள் வாழுமிடமாகத் தீவிரமாக நம்பப்படுகிறது.
சங்க காலத்தில் அரசனுக்கும், கடவுளுக்கும் கோ என்ற பொதுச்சொல்லே புழக்கத்தில் இருந்திருக்கிறது. அரசனின் இருப்பிடம் அரண்மனையாகவும், கடவுளின் இருப்பிடம் கோயிலாகவும் இருந்தது. அரசனின் இருப்பிடம் எவ்வளவு அலங்காரங்கள், கலையழகுக் கொண்டு கட்டப்பட்டதோ அதைவிட அதிகமாக கடவுளின் இல்லங்கள் கட்டப்பட்டன. மனிதனுக்குக் கூறப்பட்ட வாழ்க்கை நியமங்கள் அத்தனையும் கடவுளுக்கும் பின்பற்றப்பட்டன. சங்க காலத்தில் ஏறக்குறைய 300 கோயில்கள் இருந்ததாக பெரிய புராணம் சொல்கிறது.
ஜோதி வடிவான இறைவன் காலையில் திருப்பள்ளியில் இருந்து எழுந்து, தயாராகி, தனக்குக் கொடுக்கப்படும் பூஜை புனஸ்காரங்கள், அபிஷேகங்களை ஏற்றுக் கொண்டு, உச்சிகால பூஜைக்குப் பின், நண்பகல் நடை சாத்தப்பட்டு சிறிது ஓய்வு கொண்டு, மீண்டும் சாயுங்கால பூஜையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு, இரவு பள்ளியறைக்குத் திரும்பி, தூங்க வைக்கும் பாடல்களை கேட்டுக் கொண்டே தூங்கச் செல்லுதல் என்று மனிதர்களின் நாளின் நியமங்கள் கடவுளுக்கும் கோயில்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. கடவுள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி உலகைக் காக்கிறார், மனிதர்கள் அவரை தொழுது அருளாசி பெறுகின்றனர் என்ற கேட்போன், ஈவோன் வேறுபாட்டைத் தவிர மற்ற நடைமுறைகள் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானது.
கடவுளுக்கும் கோபம் வரும், மனைவியுடன் சண்டையிடுவார், தூது போவார்கள், சமாதானப் பேச்சு நடக்கும், திருவிழாக் காலங்களில் துணைவியாருடன் உற்சாகமாக சர்வ அலங்காரபூஷனாக ஊரை வலம் வருவது எல்லாம் நடக்கும். கடவுளுக்குக் கல்யாணம்கூட நாம் செய்துவைக்கிறோம் அல்லவா?
பொதுவாக மதங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, இல்லற வாழ்வின் சுகங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதையே ஆன்மீக நெறியாகவும், துறவறமாகவும், வாழ்வின் அத்தியந்தக் கடனாகவும் தத்துவங்களைப் பரப்பி வந்துள்ளன. ஆசையை அறவே ஒழித்தலே துன்பத்திலிருந்து விடுபட வழி என பௌத்தம் தன் நெறியாக போதிக்கிறது. நிலையற்ற இந்த வாழ்விலிருந்து விடுபட ஒவ்வொரு மனிதனையும் பார்த்து, நீயே உனக்குத் துணை, உன் அறிவே உனக்கு வழிகாட்டி, நீயே முயன்றுதான் உன் அறிவெனும் விளக்கின் துணைகொண்டு இவ்வுலகத் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என பௌத்தம் வழிகாட்டுகிறது.
பிறவாமையை வேண்டிய சமணம் கடுமையான வாழ்வியல் கோட்பாடுகளை முன்னிறுத்தியது. உணவில் கூட ஆடம்பரத்தை அனுமதிக்காத, தனிமனிதக் கட்டுப்பாடுகள் நிரம்பிய சமணம் நுண்கலைகளில் ஈடுபடுவதை அறவே ஏற்கவில்லை. இந்தப் பிறவியே, முந்தைய பிறவியில் செய்த பாவத்தின் பலன், இப்பிறவியில் மீண்டும் பாவ நடவடிக்கையில் ஈடுபடாமல், மறுபிறவியில் இருந்து முக்திபெற ஐம்புலன்களையும் அடக்கி ஆன்மீகப் பெரு வாழ்வு வாழ்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது.
சமணம், பௌத்தம் தவிர்த்து தமிழகத்தில் செல்வாக்கு பெற்று இன்றுவரை செழித்தோங்கி நிற்கும் சமயம் இந்து மதம். இந்து மதத்தின் இருபெறும் கண்களாக தமிழகத்தில் தழைத்தோங்கிய சைவமும், வைணவமும் மிகப் பெரிய உணர்ச்சிப் பெருக்கால், பக்திப் பரவசத்தால் தங்களை நிறைத்துக் கொண்டன. பக்தி இயக்கக் காலம் சைவத்திற்கும், வைணவத்திற்கும் பொற்காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சைவமும், வைணவமும் தங்களின் ஆன்மீக செயல்பாட்டிற்கு முழுக்க முழுக்கக் கோயில்களையே களமாகக் கொண்டன.
இவ்விரு தத்துவங்களும் மற்ற மதங்களின் தத்துவங்களில் இருந்து வேறுபட்டிருந்தன. இல்லறத்திற்குள் இருந்துகொண்டே, இல்லறத்தின் சகல சுகங்களுடன் இறைவனை பூஜிக்க முடியும். இறைவனடி அடைய முடியும். ஆன்மீக பயணத்திற்கு துறவறம் முக்கியம் என்றாலும், இல்லறம் தடையல்ல என்ற சுதந்திரத்தைக் கொடுத்தன. இவ்விரு தத்துவங்களும் தன்னுடைய ஆன்மீகப் பயணத்திற்குக் கடவுளையும் கூட்டுப்பங்காளியாக்கின.
கடவுளுடன் தன்னுடைய பக்தியின் மூலமாக பேச முடியும், இறைவனின் திரு உருவை தரிசிக்க முடியும் என அடியார்கள் பலர் நம்பியதால், இறைவனுக்கு என்று நிரந்தரமான இருப்பிடத்தை நிர்ணயித்தார்கள். நிற்குமிடமெல்லாம் இறைவனின் இருப்பிடமே என்றாலும் ஒவ்வொரு கடவுளுக்கும் சக்தி பெற்ற தலமாக, அருள்பாலிக்கும் இடமாக ஒவ்வொரு இடங்களை தீர்மானித்தார்கள். அவை குறித்துப் பதிகங்களும் பாசுரங்களும் பாடி,மக்களின் ஆன்மாக்களில் நிறைத்தார்கள்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம். நினைத்தால், பிறந்தால், இறந்தால் முக்தி தரும் இடங்களாகவும், பாடல் பெற்றத் தலங்களாகவும், படைவீடுகளாகவும், திவ்ய தேசங்களாகவும் கடவுளின் இருப்பிடங்களை உருவாக்கினார்கள். கடவுளுடன் இவர்களால் சண்டை போட முடிந்தது, கோபிக்க முடிந்தது, அவருக்குக் கண்ணைத் தர முடிந்தது, சிவனடியார்களாகவும், ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் கடவுளின் அனுக்கிரகங்களை மனமுருகி செல்லுமிடமெல்லாம் பரவச் செய்ய முடிந்தது.
பதிலுக்கு கடவுளும் தன் திருவிளையாடல்களை இவர்களுடன் நடத்தி இருக்கிறார். தன்மேல் அன்பு கொண்டு தலையால் நடந்து தன் இருப்பிடம் நோக்கி வந்தப் பெண்ணை அம்மையே என்று மனமுருகி அழைத்திருக்கிறார். நடுத்தெருவில் பசித்து அழுது நின்ற மூன்று வயது பாலகனுக்கு கடவுளே வந்து ஞானப்பாலூட்டி, அவனைத் தன் புகழைப் பாடச் செய்து, பக்தியை பரப்ப ஊர்தோறும் அனுப்புகிறார். நம் கடவுள்களின் திருவிளையாடல்கள் முடிவற்றவையல்லவா?
பிற தேசங்களைப் போல் அவை ஒருபோதும் தனித்து வளர்ந்ததில்லை. நம் கலைகள் மதஞ்சார்ந்த கலைகள். கடவுளின் குரலாக, நடன முத்திரையாக, கை வண்ணமாக, அவரின் தோற்றமாகவே வந்திருக்கின்றன. இசைக்கு வடிவம் கொடுத்தால் அவன் ஓங்கார நாதமாக விரிந்து நிற்பான். நாட்டியத்திற்கு இலக்கணம் வகுத்தால் அது நடராஜனின் இலக்கணமாக விரியும்.
கடவுளும் மனிதனும் சேர்ந்து வாழ்ந்து, தங்களின் நிறைகுறைகளை பகிர்ந்து வாழ்ந்த கோயில் என்ற அமைப்பிலிருந்தே இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இசை வளர்ந்து வந்திருக்கிறது. நாட்டியம் ஒலித்து வந்திருக்கிறது. பக்தி இலக்கியங்கள் பெருகி இருக்கின்றன. தமிழ்க் கடவுள்களின் வாழ்விடம் கூட்டுக் குடும்பம் போல பெரும் சபையாக நிறைந்திருந்தது. கடவுளின் பெருமைகளை பன்னிரு திருமுறைகளாகவும், திவ்ய பிரபந்தங்களாகவும் இசை மணக்கப் பாடியபடி ஓதுவார்கள் கோயிலில் இருந்தார்கள்.
பாடல்களுக்கு ஏற்ற நடனத்தையும், கடவுள்களின் திருவிளையாடல்களை விதந்தோதும் நாட்டியத்தையும் கடவுளுக்கும் மக்களுக்கும் ஆடிக் காட்டவும், கடவுளுக்குத் தேவையான சேவைகளை செய்ய எல்லா நேரமும் தயாராக கடவுளின் அடியார் என்ற பெயரோடு, கடவுளின் நாமத்தைச் சொல்லி கடவுளுக்கு மனைவியாகத் தன்னை நேர்ந்து கொண்ட தேவரடியார்களின் சேவையில் கடவுள் எல்லா நேரமும் அக மகிழ்ந்திருந்தார். கடவுளின் உருவ அழகை எக்காலத்திலும் பார்த்து ரசிக்கும் நேர்த்தியோடும் கலை அழகோடும் வடித்த சிற்பிகள் இருந்தார்கள்.
இன்றும் கோயில்கள் இருக்கின்றன. ஆனால் கோயில்களில் இருந்த இசை கருநாடக இசையாகி, சாதாரண மக்களின் காதுகளுக்கு எட்ட முடியாத சபாக்களுக்குள் நுழைந்து விட்டது. கோயில்களில் இருந்த நாட்டியம் தூய்மைபடுத்தப்பட்டு, பரதநாட்டியமாக்கப்பட்டு ஓர் இனத்தாருக்கு உரியதாக உரிமை கொண்டாடப்பட்டு விலை மதிப்புமிக்க கலையாகிவிட்டது. இனிக்க இனிக்க தேவாரத்தையும் திவ்ய பிரபந்தத்தையும் கடவுளின் காது குளிர பாடிக்கொண்டிருந்த ஓதுவார்கள் வெளியேற்றப்பட்டு, கடவுளுக்குப் புரியாத சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லும் பார்ப்பனர்கள் கடவுளுக்குப் பக்கத்தில் போய் விட்டார்கள்.
கோயிலில் நாகசுரமும் மிருதங்கமும் மத்தளமும் வாசித்துக் கொண்டிருந்தவர்கள் கல்யாண வீடுகளுக்கும், விசேஷ வீடுகளுக்கும் வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டார்கள்.
கடவுளை மகிழ்வித்துக் கொண்டிருந்த இசையும் நடனமும் இலக்கியமும் வேறு உருக்கொண்டாவது, தங்களின் அடையாளம் இழந்தாவது வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் கடவுளின் அடியார்களாக கோயில்கள் கட்டப்பட்ட காலத்தில் இருந்து சேவை செய்து, இசையையும் நடனத்தையும் காத்து,வளர்த்து வந்த தேவரடியார்கள் கோயில்களில் இருந்து முற்றிலும் காணாமல் போனார்கள். அறுபத்தைந்தாண்டுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்த சேவை முழுமையாக நம் நினைவுகளில் இருந்து மறக்கடிக்கப்பட்டது.
தமிழில் இசைக்கப்படும் ஒவ்வொரு வாத்தியத்திலிருந்து எழும் இசையிலும், நடன முத்திரைகளிலும், கோயிலில் நிரந்தரமாக உள்ள சிற்பங்களில் வழிந்தோடி நிற்கும் கலை அழகிலிருந்தும் இன்னும் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் தேவரடியார்களின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?
கட்டுரையாளர்
அ வெண்ணிலா
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், தொகுப்பாக்கம் எனப் பரந்துவிரிந்த இலக்கியப் பயணம் இவருடையது. ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.