‘ஏழு சுவரங்களுக்குள் அலையாடிய
குரலின்று அடங்கிப் போனது…
மன்னன் மயங்கிய மல்லிகை
வாடிப் போனது வாசமிழந்து…
கேள்வியின் நாயகனே என உருகிய
மொழியின்று கரைந்து போனது…
என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம்
இடைவிடாமல் ஒலிக்கிறது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது
வாணியா?
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்த ராகம்
தூரத்தே புள்ளியாய்த் தொலைந்து போனது…
காற்றில் கலந்த இசைக்குயில்…
– தேஜஸ்
மிகச் சமீபத்தில் பத்மபூஷண் விருது வாணி அம்மாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, மிகத் தாமதமாக கிடைத்த அங்கீகாரம் என நினைத்து, செய்தியைக் கடந்து சென்றவர்களில் நானும் உண்டு. ஆனால், இவ்வளவு விரைவில் நெஞ்சள்ளிப் போவார் என அன்று நினைக்கவே இல்லை.
வாணி ஜெயராம் எனும் கலைவாணி, 30 நவம்பர் 1945 வேலூரில் பிறந்தார். சிறு வயது முதல், அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர், சென்னையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிந்தார். 1969 திருமணத்திற்குப் பிறகு, மும்பை கிளைக்கு மாற்றல் வாங்கி, அங்கேயே வாழ்ந்துவந்தார்.
கணவர் ஜெயராம், வாணி அம்மாவை ஹிந்துஸ்தானி இசை பயில வற்புறுத்தியதால், அப்துல் ரெஹ்மான் கானிடம் பயிற்சி பெற்றிருக்கிறார். அவரின் அறிவுரையின் பேரில், வங்கி வேலையை விட்டுவிலகி முழு நேரமும் இசைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கான், தனது நண்பரான இசையமைப்பாளர் வசந்த் தேசாயிடம் வாணியம்மா பற்றிக் கூற, அவர் முதலில் மராத்தி ஆல்பம் ஒன்றில் பாட வைத்திருக்கிறார். பிறகு திரைப்படத்தில் பாட வைத்திருக்கிறார். பாடல்கள் மிகவும் பிரபலமானதால், பல இந்தி இசை அமைப்பாளர்களும் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
1973, இந்தி இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது சென்னையில் இவரது குரலைக் கேட்ட எஸ்.எம். சுப்பையா நாயுடு, இவரது முதல் தமிழ்ப் பாடலைப் பதிவுசெய்தார். ஆனால், அந்தத் திரைப்படம் வெளிவரவில்லை.
ஓரிரு நாட்களுக்குள் ஸ்வப்னம் திரைப்படத்திற்காக சலில் சௌத்ரி இசையில் மலையாளத்தில் பாடினார்.
வாணியின் முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையை, ‘வீட்டிற்கு வந்த மருமகள்’ (1973) திரைப்படத்திற்காக டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடிய, ‘ஓர் இடம் உன்னிடம்’ என்ற பாடல் பெறுகிறது. பாடலை இசையமைத்தவர்கள் ஷங்கர்-கணேஷ் இரட்டையர்.
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ திரைப்படத்திற்காக ‘மலர்போல் சிரிப்பது பதினாறு’ பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடியிருந்தாலும், ‘தீர்க்க சுமங்கலி’ (1974) திரைப்படத்தின் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல் அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. பலருக்கும் மிகவும் பிடித்த பாடலாக இது இன்றும் இருக்கிறது. பாடல் முடிந்த உடனேயே மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டும் என்ற ஆவலை சில பாடல்கள் தூண்டும். அந்த வரிசையில் எனது முதல் பாடல் இதுதான். பாடலின் தொடக்க இசையிலேயே பரவசப்படுத்தும்.
வாணியம்மா கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, ஹரியான்வி, அசாமிஸ், துளு மற்றும் பெங்காலி போன்ற பல இந்திய மொழிகளில் (19 மொழிகள்) பாடியுள்ளார். மூன்று முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவர் பாடகியாக அறிமுகமாகிய காலகட்டம் எனது குழந்தைப் பருவம். அப்போதைய இரு பெரும் நட்சத்திரங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி. அப்போது, எம்ஜிஆர் வாக்கு அரசியலுக்குள் நுழைய ஆயத்தமான காலம். அதனால் பல இடங்களிலும் அவர் பாடல்களைக் கேட்கலாம். அவை (1979 வரை) குறித்து மட்டும் இப்போது பார்க்கலாம்.
‘பொன்மனச் செம்மலை புண்பட செய்தது
யாரோ அது யாரோ
உன்மனம் என்பதும் என் மனம் என்பதும்
வேறோ அறிவாரோ’
என்று ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் – வாணியம்மா பாடிய பாடலைப் பல இடங்களிலும் கேட்கலாம். அம்மா தொடங்கும் அழகே மிகவும் இனிமையாக இருக்கும்.
இதே போல ‘புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.’
என்ற பாரதிதாசன் எழுதி, டி.எம்.சௌந்தரராஜனுடன் வாணியம்மா (சந்திரோதயம் பாடல் அல்ல) பாடிய ‘பல்லாண்டு வாழ்க’ பாடல்
‘மங்கலம் பொங்கும் மணித்தமிழ் நாடு
புகழ் மணத்தோடு கதிர்போலே வாழிய நீடு’
என்ற மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் வாணியம்மா பாடிய பாடல் போன்றவை அவர் பரப்புரைக்குப் பயன்பட்டவை.
‘செல்ல பாப்பா
உன்னை ஒன்று கேட்பேன் சொல்லு பாப்பா
நீ பிறந்த நாட்டை அன்னையாய் நினைத்து
எந்நாளும் மதித்து நல்ல பெயர் எடுப்பாயா?’ என்ற ‘பல்லாண்டு வாழ்க’ பாடல்.
‘புதுமைப் பெண்கள் அறிவுக்கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழுவோம்’
என்ற ‘இன்று போல் என்றும் வாழ்க’ திரைப்படத்தில், வாணியம்மா பாடிய பாடல் போன்றவை பெண்கள் பள்ளியின் நடனப் பாடல்களாக இருந்தன.
இவற்றுள் ‘பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களைத் தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை’ என்ற வரிகளின் ஏற்ற இறக்கங்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
நடிகர் திலகம் பாடல்கள் என எடுத்துக்கொண்டால்,
தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு (தங்கப்பதக்கம்)
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது (அவன்தான் மனிதன்),
மல்லிகை முல்லை பூப்பந்தல் (அன்பே ஆருயிரே),
நீராடும் நேரம் நல்ல நேரம் (வைர நெஞ்சம்)
மழைக்காலம் வருகின்றது (பாட்டும் பரதமும்)
அம்மானை அழகு மிகு, மாலையிட்டான் ஒரு மன்னன் (அவன் ஒரு சரித்திரம்),
குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட, நாலுபக்கம் வேடருண்டு (அண்ணன் ஒரு கோவில்),
நினைவாலே சிலை செய்து, அந்தமானைப் பாருங்கள் அழகு (அந்தமான் காதலி),
அழகிய கிளிகளின் ஊர்வலம் (ஜெனரல் சக்கரவர்த்தி),
இலங்கையின் இளம் குயில் (பைலட் பிரேம்நாத்)
போன்றவை அக்காலகட்டத்தில் வாணியம்மா பாடிய பாடல்களில் புகழ்பெற்றவை.
‘இலங்கையின் இளம் குயில்’ பாடலை இலங்கை வானொலியில் போடாத நாளே இல்லை எனலாம்.
‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது, அந்தத் தேவதையின் குரல் மறைந்து விட்டதே… அது ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’விற்குச் சென்ற குரலோ! இல்லை இல்லை… மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என நாள்தோறும் நம்மை மயக்கும் குரல்!
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.