“இங்கே எனக்கான கழிப்பிடம் இல்லை. இந்தக் கட்டிடத்திலேயே வேற்று நிறத்தவருக்கான கழிப்பிடங்கள் இல்லை. சற்றுத் தூரத்தில் மேற்கு வளாகத்தில் எங்களுக்கான கழிப்பிடங்கள் இருக்கின்றன, அது அரை மைல் தள்ளி இருக்கிறது. உங்களுக்கு இது தெரியுமா? கழிப்பிடத்தைப் பயன்படுத்த வேண்டுமானால் நான் அரை மைல் நடக்க வேண்டும். இங்கு இருக்கும் சைக்கிள்களைப் பயன்படுத்தி அங்கு செல்லவும் எனக்கு அனுமதி இல்லை. யோசித்துப் பாருங்கள் ஹேரிசன். அலுவலகத்தில் ஓர் உடைக்கட்டுப்பாடு இருக்கிறது. முட்டிக்குக் கீழே பாவாடை, ஹை ஹீல்ஸ், முத்து மாலை… என்னிடம் முத்துமாலை கிடையாது. கறுப்பினத்தவருக்கு நீங்கள் கொடுக்கும் சம்பளத்தில் முத்துகள் வாங்க முடியாது என்று கடவுளுக்குக்கூடத் தெரியும். நாயைப் போல இரவும் பகலும் உழைக்கிறேன். காபி குடித்தபடி உழைக்கிறேன். அந்த காபி ஜாடியை நீங்கள் யாரும் தொடக்கூட விரும்புவதில்லை. ஒரு நாளைக்குச் சிலமுறை நான் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது, எனக்கு அனுமதி கொடுங்கள்.”

ஹிட்டன் ஃபிகர்ஸ் (Hidden figures) திரைப்படத்தில் வரும் அற்புதமான காட்சி இது. நாசாவின் முக்கியமான ஒரு விண்வெளித் திட்டத்துக்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட கணித வல்லுநரான கேத்தரின் ஹாபிள் இந்த வசனத்தைப் பேசுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். குழுத் தலைவரான ஹேரிசன், “ஒவ்வொரு நாளும் இருபது நிமிடங்களுக்கு மேலே இடைவெளி எடுத்துக்கொண்டு எங்கே போகிறீர்கள்?” என்று கேட்பார். அதற்குப் பதில் சொல்லும்போது, கறுப்பினத்தவராகத் தன்மீது காட்டப்படும் பாரபட்சத்தை, அதன் அவலத்தை வெளிப்படுத்துவார் கேத்தரின். வெடித்துக் கிளம்பும் அழுகையைத் தொண்டையிலேயே அடக்கிக்கொண்டு ஆத்திரமும் ஆதங்கமும் இழையோடும் உரத்த குரலில் தனது பிரச்சனைகளை விளக்குவார்.

‘கறுப்பினத்தவர்களுக்கானது’ என்று எழுதப்பட்டிருக்கும் காபி ஜாடியைச் சுட்டிக் காட்டுவார். அடுத்த காட்சியில் வெள்ளை இனத்தவருக்கும் கறுப்பினத்தவருக்கும் தனித்தனி கழிப்பிடங்கள் என்று சொல்லும் பலகைகளை ஹேரிசன் உடைப்பதைக் காட்டுவார்கள்.

கேத்தரின் ஜான்சனின் நிஜ வாழ்க்கையை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இந்தக் காட்சி மனதை என்னவோ செய்யும், ஹேரிசன் பலகையை உடைக்கும்போது கேத்தரினைப் போலவே நமக்குள்ளும் ஒரு விடுதலை உணர்வு ஏற்படும். ஆனால், பெண் விஞ்ஞானிகள் சந்திக்கும் இன மற்றும் சாதி வேறுபாடுகள் எல்லாமே இத்தனை எளிதாகத் தீர்ந்துவிடாது, இல்லையா?

2022ஆம் ஆண்டில் ஆனந்த் குமார், சோஹம் சாஹு ஆகிய இருவரும் இந்தியாவின் மேல்நிலைக் கல்வி குறித்து ஒரு முக்கியமான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். பெண்ணாகவும் ஒடுக்கப்பட்ட சாதியாகவும் இருக்கும்போது, அறிவியல் சார்ந்த கல்வியில் ஒருவர் நுழைவது குறைகிறது என்றும், சாதி, பாலினம் ஆகிய இரண்டும் சேர்ந்து இரட்டை ஆபத்துகளாக (Double jeopardy) மாணவர்களை அச்சுறுத்துகிறது என்றும் அவர்கள் கண்டறிந்தனர். பெண் ஆசிரியர், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆசிரியர் ஆகியவர்களின் மேற்பார்வையில் படிக்கும்போது பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கொஞ்சம் ஊக்கம் பெற்று அறிவியல் கல்விக்குள் சேர்கிறார்கள் என்று அவர்கள் கண்டறிந்தனர். இதற்கு ’முன்னுதாரண விளைவு’ (Rolemodel effect) என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.

“சாதி என்பது பல தளங்கள்/அடுக்குகள் கொண்ட ஒரு மாளிகை, அதில் வாயிலும் கிடையாது மாடிப்படியும் கிடையாது, நாம் எந்தத் தளத்தில் பிறந்தோமோ அந்தத் தளத்திலேயே வாழ்ந்து மடியவேண்டியதுதான்” என்கிறார் அம்பேத்கர். இந்த அவலம் இன்றும் பல விதங்களில் தொடர்கிறது என்பதும், அறிவியல் துறையிலும் இது இருக்கிறது என்பதும் கவலைக்குரியது.

2023ஆம் ஆண்டில் அங்குர் பலிவால் ஒரு முக்கியமான கட்டுரையை வெளியிட்டார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் இந்திய அறிவியல் துறையில் இருக்கும் பாரபட்சத்தை விளக்குவதாக அந்தக் கட்டுரை அமைந்திருந்தது. இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) இருக்கும் மொத்த பேராசிரியர்களில் பட்டியலினச் சமூகத்தினர் 1 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த வேறுபாடு கல்லூரிப் படிப்பிலேயே தொடங்குகிறது என்றும் அவர் சொல்கிறார். இளநிலை பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரை அறிவியல் கல்வியில் ஒடுக்கப்பட்டவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர் என்றும், இவர்களுக்குப் பள்ளிக்காலத்தில் அறிவியலை நோக்கி வழிகாட்டக்கூடிய ஆசிரியர்கள் குறைவாகக் கிடைக்கிறார்கள் என்றும் அவர் விளக்குகிறார்.

பல சமூகங்களில் அறிவியல் முனைவர் பட்டப்படிப்பு என்பது மேட்டுக்குடி மக்களுக்கான ஒரு செயல்பாடாக இருக்கிறது என்று அங்குர் குறிப்பிடுகிறார். முனைவர் பட்ட ஆய்வில் சேர்வதற்கான சமூக மூலதனம் மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குறைவாகக் கிடைப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். சில பல்கலைக்கழகங்களில், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மேற்பார்வையாளர்களாக இருக்க ஆதிக்கசாதிப் பேராசிரியர்கள் விரும்புவதில்லை என்றும் அவரது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. தொல்குடியைச் சேர்ந்த முனைவர் பட்ட மாணவி ஒருவர் தன்னிடம் பேசியவற்றை அப்படியே பதிவு செய்திருக்கிறார். “நீ கோட்டாவில் உள்ளே வந்தவள், உன்னை ஆய்வுக்குழுவில் சேர்த்துக்கொள்ள மாட்டேன். வேறு யாரையாவது கேள்” என்று ஆதிக்க சாதிப் பேராசிரியர் ஒருவர் சொன்னதாக அந்த மாணவி தெரிவித்தாராம். படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.

அறிவியல் மேற்படிப்புகளில், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அறிவியலாளரான ஆகாஷ் கௌதம், ஒரு தலித் மாணவரான தானும் இந்தப் பிரச்னையைச் சந்தித்தாகக் கூறுகிறார். “பெரும்பாலான தலித் மாணவர்கள் அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரிகளாக இருப்பார்கள். அவர்களுக்குக் கல்வி நிறுவனங்கள் கூடுதலான ஆதரவையும் நேரத்தையும் தரவேண்டும், ஆனால் அது நடப்பதில்லை” என்று அவர் கூறுகிறார். ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த இந்தத் தகவல்களோடு, அறிவியல் கல்வியில் பெண்களின் விழுக்காடு எவ்வளவு என்பதையும் சேர்த்துப் பார்க்கும்போது, ’இரட்டை ஆபத்து’ என்கிற பதம் தெளிவாகப் புரிகிறது. இந்த அச்சுறுத்தல்களுடன் வர்க்கமும் சேர்ந்துகொள்ளும்போது நிலைமை இன்னும் மோசமானதாக மாறக்கூடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சாதி ஒரு முக்கியத் தடை என்றால், மேலை நாடுகளில் இனம் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. மேலை நாடுகளில் இருக்கும் கறுப்பின, ஆசிய, லத்தீன் அமெரிக்கப் பெண்கள், இனம் மற்றும் பாலினம் ஆகிய இரண்டு தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும்.  இந்தியாவைப் போலவே மேலை நாடுகளிலும் இனம் என்பது பல்வேறு தடைகளைத் தோற்றுவிக்கிறது. சமூகரீதியான ஒடுக்குமுறை, நடைமுறை சிக்கல்கள், பொருளாதாரப் பிரச்னைகள் போன்ற பல பின்னடைவுகளை இனம் உருவாக்குகிறது. அதையும் மீறி முன்னேறினால் பெண் விஞ்ஞானிகளுக்குப் போதுமான அங்கீகாரமும் கிடைப்பதில்லை.

ஒரு சிறு உதாரணத்தைப் பார்க்கலாம். 1957ஆம் ஆண்டு சென் நிங் யாங் மற்றும் சங் டௌ லீ ஆகிய இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது. ஆனால் இவர்களது தர்க்கரீதியான கணிப்பைச் சோதனை மூலமாக நிரூபித்த சீனத்துப் பெண் விஞ்ஞானி சியென் சியூங் வூவுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ’இயற்பியலின் தலைவி’, ’சீன மேரி க்யூரி’ என்பதுபோல பல பெயர்களால் புகழப்படும் வூ, உலகின் தலைசிறந்த சோதனை இயற்பியலாளர்களில் ஒருவர். இயற்பியலுக்கான அமெரிக்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி, ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் ஆசிரியர், இயற்பியலுக்கான வுஃல்ப் பரிசு பெற்ற முதல் நபர், அமெரிக்க இயற்பியல் கழகத்தின் முதல் பெண் தலைவர் போன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். ஆனால், அவரது நேரடி ஆராய்ச்சிக்குத் தொடர்பான இருவருக்குப் பரிசு வழங்கும்போது அவர் கண்டுகொள்ளப்படவில்லை. நோபல் பரிசை மூன்று பேருக்குக் கொடுக்கலாம் என்கிற விதி இருந்தும் வூவுக்கு அங்கீகாரம் தரப்படவில்லை. இதற்கு அவரது பாலினம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலர் தெரிவிக்கின்றனர்.

 வூ தன்னுடைய வாழ்வில் பால்சார்ந்த பல பாரபட்சங்களை எதிர்கொண்டார். அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். வாழ்நாள் முழுவதும் பெண்கள் அறிவியல் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலுயுறுத்தினார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவருக்கான அங்கீகாரத்துக்குப் பாலினம் ஒரு தடையாக இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

வூவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அந்தக் காலகட்டத்தில் பல முன்னணி விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அது மட்டுமல்ல, அடுத்தடுத்த ஏழு ஆண்டுகளில் அவரது பெயர் நோபல் பரிசுக்காகத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டது! இது 1966 வரை தொடர்ந்தது. ஆனால் கடைசிவரை அவருக்குப் பரிசு வழங்கப்படவில்லை. ’வூவுக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது இயற்பியல் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய அநீதிகளில் ஒன்று’ என்கிறார் சாரா ஜாய்ஸ்.

கேத்தரீன் ஜான்சன், சியூங் வூ ஆகியோரின் காலகட்டம் முதல் இன்றுவரை இந்த இனப் பாகுபாடு தொடர்கிறது. 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், அறிவியல்சார் பணிகளில் இருக்கும் பெண்களைக் கணக்கெடுத்தனர். அதில், அறிவியல் துறையில் 2% பணியாளர்கள் மட்டுமே கறுப்பினப் பெண்கள் என்றும், வெள்ளையினப் பெண்களோடு ஒப்பிடும்போது இது 18% குறைவு என்பதும் தெரிய வந்தது.

ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே அறிவியல் துறையில் ஆதிக்கம் செலுத்துவதால் அறிவியல் துறையும் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரனுடன் விவாதித்துகொண்டிருந்தேன். அறிவியல் துறையில் போதுமான பன்முகத்தன்மை இல்லாதபோது பல அடுக்குகளில் பிரச்னை ஏற்படலாம் என்று அவர் தெரிவிக்கிறார். எந்த விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும், அதற்கு எப்படிப்பட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்துத் தரவுகளைச் சேகரிக்க வேண்டும், முடிவுகளை எப்படி அணுக வேண்டும், முடிவுகளுக்கான விளக்கங்களை எப்படித் தேட வேண்டும் என்று எல்லா நிலைகளிலும் பாதிப்புகள் வரலாம் என்று கூறுகிறார்.

சில உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட நோயானது கறுப்பினத்தவருக்கு மட்டும் அதிகமாக வருகிறது என்றால், கறுப்பினத்தவர்கள் அறிவியலாளர்களாக இருக்கும்போதுதான் அதைப் பற்றிய அதிகமான ஆராய்ச்சிகள் நடக்கும். இல்லாவிட்டால் அது அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை, இது நிதர்சனமான உண்மை. எல்லாருக்குமான பொதுவான ஒரு மருந்துக்கான ஆராய்ச்சியில், மருந்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்க்கும்போது எல்லாவிதமான மக்களும் சோதனைப் பட்டியலில் இருந்தால்தான் மிகத் துல்லியமான முடிவுகளை எட்ட முடியும்.

அட, இவ்வளவு ஏன்? மிகவும் சிக்கலான அறிவியல் ஆராய்ச்சிகளை விட்டுவிடுவோம். அழகு சாதனப் பொருட்களை ஆராயும்போதுகூட பெரும்பாலும் வெள்ளைநிறத் தோல்தான் அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது.  

ஒருவரை வெள்ளைத் தோல் கொண்டவராகக் காட்டுவது என்கிற அழகு சாதனங்களின் அடிப்படையே தவறுதான். அதைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆராய்ச்சியில் இருக்கும் சிக்கல்களைப் பார்க்கலாம். வெள்ளை நிறத் தோலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தப்படும்போது அவர்களுக்குப் பொருத்தமான அழகுசாதனப் பொருட்களைத்தான் உருவாக்க முடியும். இது மாநிறமான அல்லது கறுப்பான தோல் கொண்டவர்களுக்குப் பொருந்தாது. 2016இல் ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. பிரபலமான நிறுவனங்களைச் சேர்ந்த 30 வகை முகப்பூச்சுக் கலவைகள் ஆராயப்பட்டன, அதில் 6 கலவைகள் மட்டுமே மாநிறத்துக்குப் பொருத்தமானவை என்று தெரிய வந்தது. இதே போன்ற விகிதங்களைப் பல ஆய்வுக் கட்டுரைகளில் பார்க்க முடிகிறது. அழகுசாதனப் பொருட்களுக்கான அடிப்படை ஆராய்ச்சியில் கறுப்பினத்தவரின் நிறங்களும் சேர்க்கப்பட்டிருந்தால் இந்தப் பாரபட்சம் இருக்காது. கறுப்பினப் பெண்கள் தலைவர்களாக இருக்கும் அழகுசாதன நிறுவனங்களில் இந்தப் பாரபட்சம் குறைவாக இருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. பிரதிநிதித்துவம் என்ன செய்யும் என்பதற்கும் இது ஒரு நல்ல உதாரணம்.

நடத்தப்படும் ஓர் ஆராய்ச்சியில் பங்குபெறுபவதற்குக் கறுப்பினத்தவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது என்பதும் உண்மை. அதற்கு வரலாற்றுரீதியாக ஒரு காரணமும் இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் என்ன நடக்கிறது என்று சொல்லாமல் பல ஆராய்ச்சியாளர்கள் கறுப்பினத்தவர்களைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதனால் பலர் நிரந்தரமாகப் பாதிப்படைந்திருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரை கறுப்பினத்தைச் சேர்ந்த, அடிமைகள்மீது மருத்துவ சோதனைகள் நிகழ்த்துவது ஒரு வழக்கமாகவே இருந்திருக்கிறது. ’கறுப்பினத்தவர்களுக்கு வலி தெரியாது என்று அந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள் நம்பினார்கள், அதனால் அவர்கள்மீது ஆராய்ச்சி நடத்தினார்கள்’ என்று விளக்குகிறார் வரலாற்று ஆசிரியர் டைட்ரே கூப்பர்.

சொந்த இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் ஒருவரது பிரச்னையைப் பற்றி ஆராய்ச்சியே நடத்தாமல் இருப்பது, அல்லது வேற்று இனத்தவர் என்பதாலேயே அவரிடம் தகவல் சொல்லாமல் சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்வது, இரண்டுமே வரலாற்றில் நடந்திருக்கின்றன. இந்த இரண்டு போக்குகளுமே அறிவியல் துறையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால் ஏற்படுகின்றன.

அறிவியலில் இன்றும் பால் மற்றும் இனம் சார்ந்த வேற்றுமைகள் நிலவுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இதனால் அறிவியலே மோசமானது என்று சொல்லிவிடமுடியாது. ’அணுக்களோ கணிதக் குறியீடுகளோ டி.என்.ஏ மூலக்கூறுகளோ, தங்களை ஆராய்வது ஆணா பெண்ணா என்று தேடுவதில்லை. தன்னை ஓர் ஆண் விஞ்ஞானிதான் ஆராய வேண்டும் என்று அவை விரும்புவதுமில்லை’ என்கிறார் விஞ்ஞானி சியூங் வூ. அறிவியல் தேடலில் ஆண்/பெண் வேறுபாடு ஏதுமில்லை. ஆனால் அது அமைப்புரீதியான ஒரு கட்டமைப்புக்குள் வரும்போது, சமூகத்தில் இருக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் அதற்குள் வந்துவிடுகின்றன. சில நேரம் அறிவியல் துறை அந்த ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தவும் உதவியிருக்கிறது. ஆனால் அதே அறிவியல் துறை மாறிவருகிறது என்பதையும் பார்க்கிறோம். சாதி மற்றும் பால் அடையாளம் ஆகியவற்றின் மீதான சமூகப் புரிதல் மாறும்போது அது அறிவியல் துறைக்குள்ளும் பிரதிபலிக்கத் தொடங்கும்.

பல பணியிடங்களில். அவதூறுப் பேச்சுகள் பெண்களின் முக்கியப் பிரச்னைகளாக இருக்கின்றன, இது அறிவியல் துறையிலும் இருக்கிறதா?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!