ஒரு பார்வையுள்ளவருக்குப் பயணம் என்பது புதிய இடங்களைக் காண்பது, புதிய அனுபவங்களைப் பெறுவது. ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எங்களுக்காக ஒரு சவால் காத்திருக்கும். அதையெல்லாம் மீறி எவ்வாறு பயணம் செய்கிறோம், நாங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன, என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாகத் தமிழ்நாட்டில், பார்வையற்றவர்களுக்குப் பயணம் செய்வது என்பது பெரும் சவால்களுடன் கூடியது. எங்கள் பயணங்கள் சுமார் 70 சதவீதம் வரை பொதுமக்களைச் சார்ந்தே இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். இங்குள்ள சாலைகளின் நிலை அனைவருக்கும் தெரிந்ததே.

ஒழுங்கற்ற பாதைகள், ஆங்காங்கே இருக்கும் குழிகள், கற்கள் போன்றவை நடப்பதற்கே பெரும் சிரமத்தைத் தரும். கையில் வெண்கோல் (White Cane) இருந்தாலும், குழிகளையோ, கற்களையோ ஒரு அளவுக்குத்தான் கண்டறிய முடியும். சாலையைக் கடக்கும்போதுதான் உண்மையான சவால் தொடங்குகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில், பொதுமக்களின் உதவி இல்லாமல் சாலையைக் கடக்கவே முடியாது. சிக்னல்களில் எந்த ஒரு ஒலி அறிவிப்பும் இல்லாததால், இங்கு சிக்னல் இருக்கிறதா இல்லையா என்பதுகூட எங்களுக்குத் தெரிவதில்லை.

பேருந்து நிலையங்களில், எந்த ஊருக்குச் செல்லும் பேருந்து எந்தப் பிளாட்பார்மில் நிற்கும் என்பது போன்ற தகவல்களையும் நாங்கள் பொதுமக்களுடைய உதவியுடன்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பெரிய பேருந்து நிலையங்களிலேயே இத்தகைய சூழல் என்றால், பேருந்து நிறுத்தங்களில் நிலைமை இன்னும் சிக்கலானது. எந்த நம்பர் பேருந்து வருகிறது என்பதைக் கண்டறியவும், சரியான பேருந்தில் ஏறவும் மற்றவர்களின் உதவிதான் தேவைப்படுகிறது. இதற்கென எந்தவொரு பிரத்யேக செயலியோ ஒலி அறிவிப்பு வசதியோ இல்லை.

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென முன் வரிசையில் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் அந்த இருக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களே அமர்ந்திருப்பர்.

நாங்கள் பேருந்தில் உட்கார வசதியாகவும் இறங்குவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த இருக்கைகள் முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், பலருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதே தெரியாது. சிலருக்கு அது தெரிந்தாலும், அவர்களுக்கு எழுந்து வழிவிட மனம் வராது. வேறு யாரோ ஒருவர் தான் எங்களுக்கு எழுந்து இடம்கொடுப்பார்கள்.

பேருந்துகளில் ‘அடுத்த நிறுத்தம்’ குறித்த ஒலி அறிவிப்பு வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான ஓட்டுநர்கள் அதை அணைத்துவிடுவதால், நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டதா இல்லையா என்பதையும் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பயணங்களின்போது நடத்துநர்களால் நாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பேருந்து நிறுத்தங்களில் பார்வையற்றவர்கள் யாராவது நின்று கொண்டிருந்தால், சில நேரங்களில் நடத்துநர்கள் பேருந்தை நிறுத்தாமலேயே சென்றுவிடுவார்கள்.

ஒருவேளை நாங்கள் பேருந்தில் ஏறினால், ‘நீங்க போற ஊர்ல இந்த பஸ் நிக்காது’ என்று சொல்லி, பாதி வழியில் இறக்கிவிடுவார்கள். இதற்குக் காரணம், அரசு எங்களுக்கு வழங்கியிருக்கும் இலவசப் பஸ் பாஸ்.

எங்களுக்கான அந்தப் பஸ் பாஸ், அவர்களுக்கு ஏதோ வருமான இழப்பை ஏற்படுத்துவது போல, எங்களைப் பேருந்தில் ஏற்றாமலேயே சென்றுவிடுகிறார்கள். இது உள்ளூர் பேருந்துகளில் அதிகம் நடக்கிறது. வெளியூர்ப் பயணங்களைப் பொறுத்தவரை, அரசு எங்களுக்கு வழங்கியிருக்கும் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, டிக்கெட் கட்டணத்தில் கால்பாகம் (25%) செலுத்தினால் போதும்.

உதாரணமாக, டிக்கெட் நூறு ரூபாய் என்றால், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையின் ஒரு ஜெராக்ஸ் பிரதியைக் கொடுத்துவிட்டு, நாங்கள் இருபத்தைந்து ரூபாய் கட்டினால் போதும். எங்களுக்கான மீதி டிக்கெட் தொகையை, மாற்றுத்திறனாளிகள் துறை போக்குவரத்துத் துறைக்குச் செலுத்திவிடுகிறது. ஆனால், ஏதோ எங்களுக்கு அளித்திருக்கும் சலுகைகளினால்தான் போக்குவரத்து துறைக்கே இழப்பு என்பதுபோல் எங்களை நடத்துவார்கள். நாங்கள் பேருந்தில் ஏறச் சென்றாலே, ‘இந்தப் பேருந்தில் உங்கள் பாஸ் செல்லாது’ என்று சொல்லி இறக்கிவிடுகிறார்கள்.

காலியாக இருக்கும் பேருந்தில் பார்வையற்றவர்கள் ஏறச் சென்றால், ‘இந்தப் பேருந்து நிரம்பிவிட்டது’ என்று பொய் சொல்வார்கள். மற்ற பயணிகளிடம் “எங்கம்மா போறீங்க?” என்று மிகவும் மரியாதையாகக் கேட்கும் நடத்துநர்கள், எங்களிடம், “எங்க போகணும்?” என்று ஏளனமாகக் கேட்பார்கள்.

அரசு எங்களுக்கு வழங்கியிருக்கும் சலுகையைத்தானே நாங்கள் பயன்படுத்துகிறோம்? இதில் நடத்துநர்களுக்கு என்ன பிரச்சனை?

இந்தியன் ரயில்வே, பார்வையற்றவர்களுக்காகச் சில வசதிகளைச் செய்து கொடுத்திருப்பதால், ரயில் பயணம் பேருந்து பயணத்தை விடச் சற்று எளிதாக இருக்கிறது. ரயில் நிலையங்களில் வரும் ஒலி அறிவிப்புகள், சில ரயில் நிலையங்களில் உள்ள டாக்டைல் மேப் வசதிகள் எங்களுக்கு பெரிதும் உதவுகின்றன.

Tactile Map

டாக்டைல் மேப் (Tactile Map) என்பது தொட்டு உணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வழிகாட்டி வரைபடம் ஆகும். இதில் பிரெய்ல் எழுத்துக்களால் இடங்களின் பெயர்கள், வழித்தடங்கள், முக்கிய அம்சங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இது போன்ற பிரெய்ல் எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் போர்டுகள் சில இடங்களில் எந்தப் பிளாட்பார்ம் என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி கம்பார்ட்மென்ட் வசதியும், பேருந்தில் உள்ளது போலவே, டிக்கெட் கட்டணத்தில் 25% மட்டும் செலுத்தினால் போதும் என்ற சலுகையும் உண்டு. இவ்வளவு வசதிகள் இருந்தாலும், இதிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கம்பார்ட்மென்ட் பெரும்பாலும் ரயிலின் முதல் கம்பார்ட்மென்ட்டாகவோ அல்லது கடைசி கம்பார்ட்மென்ட்டாகவோதான் இருக்கும். ஆனால், எந்த ரயிலில் எந்த இடத்தில் இந்த கம்பார்ட்மென்ட் இருக்கும் என்று உறுதியாக எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. ஒருவேளை முதல் கம்பார்ட்மென்டாக இருக்கும் என்று நினைத்து நாங்கள் நின்று கொண்டிருந்தால், அது கடைசியில் வைக்கப்பட்டிருக்கும். அதைத் தேடி நாங்கள் கடைசிக்குச் சென்று ஏறுவதற்குள், ரயில் கிளம்பிவிடும் அபாயமும் உண்டு.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் கம்பார்ட்மென்ட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கே பெரும்பாலும் இடம் இருப்பதில்லை. மற்ற கம்பார்ட்மென்டைவிட இதில் கூடுதல் வசதிகள் இருப்பதால், ரயில்வே துறையில் வேலை பார்ப்பவர்கள்கூட இதில்தான் ஏறிக்கொள்கிறார்கள்.

Tactile paving

மெட்ரோ ரயில் நிலையங்களைப் பொறுத்தவரை, அங்குள்ள டாக்டைல் பேவிங் வசதிகள் எங்களுக்கு நடந்து செல்வதை மிகவும் எளிதாக்குகின்றன. டேக்டைல் பேவிங் (Tactile paving) என்பது, பார்வை குறைபாடு உள்ளவர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் நடமாட உதவும் வகையில், நடைபாதை அல்லது தரையில் பதிக்கப்படும் ஒரு விதமான மேடு பள்ளங்கள் கொண்ட அமைப்பு.

எங்கள் கால்களாலோ, ஊன்றுகோலாலோ இந்த மேடுபள்ளங்களை உணர்ந்து, வழியைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இது மட்டுமின்றி, நாங்கள் மெட்ரோ ரயிலில் ஏற டிக்கெட் வாங்கியதும், ஒரு தன்னார்வலர் (volunteer) எங்களுக்கு ஒதுக்கப்படுவார். அவர் எங்களை மெட்ரோ ரயிலில் ஏற்றிவிடுவார்.

நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு, “இந்த ஸ்டேஷனுக்கு ஒரு பார்வையற்றவர் வருகிறார்” என்ற தகவல் சென்றுவிடும். இதனால், அந்த ஸ்டேஷனில் இருந்து வெளியே வர உதவுவதற்கு ஒரு தன்னார்வலர் தயாராக இருப்பார். மற்ற பொதுப் போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது, மெட்ரோ ரயில் பயணம் எங்களுக்குச் சற்று எளிதாகவே இருக்கிறது.

on board சாதனம் பொருத்தப்பட்ட பேருந்து

அதேபோல பெங்களூருவில், BMTC (பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம்), பார்வையற்றவர்கள் பேருந்துப் பயணத்தை எளிதாக்க ‘On Board’ எனும் புதிய ரிமோட் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சாதனம், பார்வையற்றோர் தங்கள் கையில் வைத்துக்கொள்ளும் ஒரு ரிமோட் மற்றும் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கம்யூனிகேஷன் யூனிட் என இரண்டு பகுதிகளைக் கொண்டது.

இதன் மூலம், பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் போது, ரிமோட்டில் உள்ள ‘Find’ பொத்தானை அழுத்தி, வரும் பேருந்தின் எண்ணை பேருந்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் அறிந்துகொள்ள முடியும். மேலும், விரும்பிய பேருந்து வந்ததும் ‘Select’ பொத்தானை அழுத்துவதன் மூலம், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உதவி பெறலாம்.

இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டால், எங்கள் அன்றாடப் பயணத்தை மிகவும் எளிமையாக்கும். ஆனால் இத்தகைய சேவைகள் அறிமுகமாகும் வரை நாங்கள் மனிதர்களைத்தான் நம்ப வேண்டியுள்ளது.

சிலர் வழி கேட்டால் கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவார்கள். இன்னும் சிலர் பேருந்தில் ஏற்றிவிட்டு, அதற்கான டிக்கெட் காசையும் கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.

மிகவும் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால், சிலர் எங்களை கூட்டிச் செல்லும்போதே, ‘இந்த கடவுளை நம்பினால் உனக்கு கண்ணு தெரிஞ்சிடும்’ என்று மத பிரச்சாரத்தை தொடங்கிவிடுவார்கள்.

மேலும், பார்வையற்ற ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, பயணங்களில் உதவி செய்வதாகச் சொல்லிக்கொண்டு சில மிருகங்கள் பாலியல் தொல்லைகள் (Sexual Abuse) கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனால், இவை மிகவும் அரிதான சம்பவங்கள்தான். பெரும்பாலான நேரங்களில், பொதுமக்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப உதவ முடியும் என்றால், நிச்சயம் உதவுகிறார்கள். தேவையில்லாத அனுதாபங்களைத் தவிர்த்தால் போதும்.

இவ்வளவு தடைகளையும் தாண்டித்தான் எங்களுக்கான பயணம் என்பது சாத்தியமாகிறது. ஆனால், இந்தச் சவால்களுக்கு அஞ்சி வீட்டிலேயே முடங்கிவிட்டால், எங்கள் வாழ்க்கை என்னாவது? எங்கள் கனவுகள் என்னாகும்?

சமூகத்தின் தவறான புரிதல்களுக்காகவோ, அலட்சியமான அணுகுமுறைகளுக்காகவோ எங்கள் வாழ்வை நாங்கள் ஏன் தியாகம் செய்ய வேண்டும்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய சவால்தான். இருப்பினும் நாங்கள் தினமும் தனியாகவே பயணம் செய்கிறோம்.

நாங்கள் பயணங்களில் எதிர்கொள்ளும் சவால்கள், எங்கள் குறைபாட்டால் வந்தவை அல்ல என்பதை இவ்வளவு நேரம் பார்த்தீர்கள். சாலைகளின் சீரற்ற தன்மை, சிக்னல்களில் ஒலி அறிவிப்பு இல்லாமை, பொதுப் போக்குவரத்து வாகனங்களில் கிடைக்கும் வசதிகள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் போவது, மற்றும் சமூகத்தின் புரிதல் இன்மை ஆகியவைதான் இதற்குக் காரணங்கள்.

இது எங்கள் மீதான பாகுபாடு அல்லவா? அடிப்படை வசதிகளைக்கூட முழுமையாக வழங்காத ஒரு சமூக அமைப்பில், எங்களால் எப்படிச் சுதந்திரமாகப் பயணிக்க முடியும்?

நாங்கள் எங்களுக்கான சிறப்பு வசதிகளை கேட்கவில்லை. இருக்கும் வசதிகளை, அனைவரும், குறிப்பாக எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அணுகல்தன்மையை (Accessibility) மேம்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறோம்.

 இது வெறும் சலுகை அல்ல; எங்கள் அடிப்படை உரிமை. அதேசமயம், பொதுமக்களும் எங்களை புரிந்துகொண்டு, உதவத் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சரியான உதவியை, தேவையற்ற அனுதாபம் இல்லாமல் செய்தால் போதும்.

இந்த மாற்றங்கள் நிகழும் பட்சத்தில், பார்வையற்றவர்களாகிய நாங்களும் பார்வை உள்ளவர்களைப் போலவே, எந்தவிதச் சிரமமுமின்றி, சந்தோஷமாகப் பயணிக்க முடியும்.

எங்கள் அன்றாட வாழ்க்கை குறித்து வேறு ஏதேனும் கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா? தயங்காமல் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள் – strong@herstories.xyz என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, ‘உணர்வுகளின் உலகம்’ என தலைப்பிட்டு எழுதுங்கள்!

தொடரும்…

படைப்பாளர்

பிருந்தா கதிர்

தீவிர வாசிப்பாளர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுதுவது மிகவும் பிடிக்கும்.