கப்பிக்குளம் லிங்கம்மாள்  கிராமிய பாடலாக அன்று நடந்தவற்றைக் கண் முன் கொண்டு வருகிறார்.

கனவான்களே சீமான்களே தாய்குலத்து உடன்பிறப்பே 

தூத்துக்குடி லட்சுமி தியேட்டர் பட்டப்பகல் தீவிபத்தை 

பாடுவதைக் கேளும் அதன் பாதாரவைப் பாரும் 

சென்னை மாநகரத்திலே திருநெல்வேலி ஜில்லாவிலே 

தூத்துக்குடி துறைமுகமாம் லூர்து அம்மாள் புரத்தினிலே 

மட்டக்கட தெருவில் ஜனம் 

மாண்டதையா உயிர்கள் 

ஆயிரம் ஜனத்துக்குமேல் ஆணும் பெண்ணும் அவதிப்பட்டு 

ஐயோ பரிதாபம் இது யாரு போட்ட சாபம் 

1979யிலே எட்டாவது மாதத்திலே ஆடி பதிமூன்றாம் தேதியிலே 

அழிந்த பெரும் ஜனத்தொகையும் யாரால் சொல்ல முடியும்?

அந்த அழிந்த பெரும் குடியும் 

பின்னல் ஜடை முடித்து மின்னல் போல் உடையணிந்து 

அன்னம் போல் நடைநடந்து 

ஆணழகனும் தேவியுமாய் 

அவசரமாய் தான் நடக்க தன் ஆவியைப் பறி கொடுக்க 

கண்ணுக்கு மை தீட்டி கைக்குழந்தையை இடுப்பில் வைத்து 

கணவனுக்கும் வணக்கம் சொல்லி 

கடைத்தெருவில் தாந்நடக்க 

தன் ஆவியைப் பலி கொடுக்க-2

மட்டக்கட ஓரத்திலே பட்டப்பகல் நேரத்திலே 

டூரிங்கிலே நஷ்டமாகிப் போச்சி 

தமிழ் நாடெங்கிலும் பேச்சி 

அக்காளென்றும் தங்கையென்றும் அன்புள்ள அண்ணனென்றும் 

அடையாளம் தெரிவதற்கு அறிகுறிகள் ஏதுமில்ல

அழிய காலமாச்சு நம்ப அநேக உயிர்கள் போச்சி 

தீயணைக்கும் படையினரும் காவல் துறை அதிகாரியும் 

தீவிரமாய் தண்ணி கொண்டு செல்லதெங்கும் செத்த தங்கம் 

உடல் தெரிய செத்த சனம் குடல் சரிய

வாலிபப் பெண்டுகளும் வயிற்றுப் பிள்ள சூலைகளும் 

மாத நிறை கர்ப்பிணிகளும் மாண்டனரே நெருப்பினிலே 

வெந்து மக்கள் துடிக்க துளிர் உயிர் பிள்ளைகள் வெடிக்க 

தல வாழ இலை விரித்து ஜனங்களைத்தான் கிடத்தி வைத்து 

சர்க்காரு வேனிலேறி டாக்டருங்க 

ஆஸ்பத்திரிக்கு போக அவ ஆயுள் என்ன ஆச்சோ 

மெட்றாசு நகரத்திலே சட்ட சப கூட்டத்தில

மந்திரிங்க மத்தியிலே மாலை முரசு பேப்பரிலே 

மரண செய்தி படித்தார்  

உலகையே உலுக்கிய இந்தத் தீவிபத்து எங்கள் வாழ்வின் அழியாத அடையாளம். தமிழ்நாடு அரசின் செய்தி ஆவணம் போன்று இப்பகுதி இருக்கலாம். வலியின் வடு இது.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி தூத்துக்குடி பனியன்னை  கோவிலில்  கொடியேறும். தூத்துக்குடி பனியன்னை கோவிலின் திருவிழா என்பதால், இடையில் வரும் ஞாயிற்றுக் கிழமை எங்களைக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக விடுதியில் கூறியிருந்தார்கள்.

29 .7 .1979 ஞாயிற்றுக்கிழமை மாலை அது. நாங்கள் ஆவலாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். நடந்தே செல்ல வேண்டியிருந்ததால் சீக்கிரமாகக் கிளம்ப வேண்டியிருந்தது. ஒரு நான்கு மணி இருக்கும் நாங்கள் மாடி வராண்டாவில் நின்று பார்க்கும்போது பெரிதாக வானத்தைத் தொடுவது போல தீ எரிந்தது. நாங்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்தோம். கீழ்த்தளத்திலிருந்தவர்கள் எல்லாம்கூட மேலே வந்து வேடிக்கை பார்த்தார்கள். அப்படி ஒரு தீ ! அதைப்பற்றி எந்த உணர்வும் இன்றி நாங்கள் பனிமாதா கோயில் சென்று விட்டு வந்தோம். வரும்போதுதான் தெரியும் எரிந்தது ஓலைத் திரையரங்கம் ஒன்று என்று.

லூர்தம்மாள் புரத்தில் மிகப்பெரிய தீ விபத்து நடந்துள்ளது. நிறையப் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘லூர்தம்மாள்’, காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த காலகட்டத்தில் கடற்கரை மக்களுக்கு அரசு வழங்கிய இடம் என்பதால் அவரது பெயரைத் தாங்கி இருக்கும் ஊர்தான் லூர்தம்மாள் புரம். எளிய மீனவ கிராமம்.

விருப்பமுள்ளவர்கள் சேவை செய்யச் செல்லலாம் என்று கூறினார்கள். இரவோடு இரவாக ஒரு குழு புறப்பட்டுச் சென்றது. என்னைப் போன்ற துயரங்களைக் காணச் சகிக்காத பலர் செல்லவில்லை. சென்றவர்கள் அனைவரையும் இன்றும் நன்றியுடன், வியப்புடன் எண்ணிப் பார்க்கிறேன்.

அன்று யாரும் சாப்பிடவில்லை; தூங்கவும் நேரம் ஆகிவிட்டது. இரவு உதவிக்குச் சென்றவர்கள் காலையில் திரும்பி வந்ததும் கதை கதையாய்ச் சொன்னார்கள். மனதை உருக்கும் கதைகள்; உடல் முழுவதும் வெந்த புண்களோடு வாழை மட்டைகளில் கிடத்தப்பட்ட பெண்கள், கைக்குழந்தைகள்; அவர்களின் வேதனைகள்; ஒரு படுக்கையில் இருவரைப் படுக்க வைக்க  வேண்டிய அவலம்; நடக்கக்கூட இடமில்லாமல் தரையில் கிடத்தப்பட்ட நோயாளிகள் என்று அவர்கள் சொன்னவை கல்நெஞ்சையும் கரைக்கும். அன்றும் மாணவிகள் சேவை செய்ய மருத்துவமனை புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற கல்லூரிகளிலிருந்தும் சேவை செய்ய மாணவர்கள் வந்திருந்ததாகக் கூறினார்கள்.

எங்கள் விடுதியில் ஒரு தமிழ், ஒரு ஆங்கில செய்தித்தாள்கள் வரும். செய்தித்தாள்களைப் பார்த்த பின்பு தான் நடந்த கோரம் முழுவதும் தெரிந்தது. லூர்தம்மாள்புரத்தில் இயங்கிய லட்சுமி டூரிங் டாக்கீஸில் பாவமன்னிப்பு திரைப்படம் பகல் காட்சி நடந்து கொண்டிருந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரையரங்கத்தில் கூட்டம். நான்கு மணிக்குப் போல தீ பிடித்திருக்கிறது.  

‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை’ பாடல் முடியும் போது ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்ய முயலும் சாவித்திரியைக் காப்பாற்றி மீண்டும்  சிவாஜி, குழந்தையைச் சாவித்திரியிடம் கொடுக்கும் காட்சி; திரையில் சிறு நெருப்பு. படத்தில்தான் இப்படிக் காட்சி வருகிறது என நினைத்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. தீ மளமளவெனப் பிடித்திருக்கிறது. சிலர் எம் ஆர் ராதா, சிவாஜி மீது தீ வைக்கும் காட்சி என்கிறார்கள். எது எப்படியோ தீ பிடித்து விட்டது.

மாட்னி ஷோ என்பதால் வெளியிலிருந்து வெளிச்சம் வரக்கூடாதென கொட்டகையில் அனைத்து பகுதிகளும் தார்ப்பாய் கொண்டு மூடியதோடு மட்டுமல்லாமல், அதன் மீது மணல் மூடை வேறு வைத்து மூடியிருக்கிறார்கள். கம்பை  மக்கள் பிடிக்க, அது அசைந்ததில் கூரை முழுவதுமாக கீழே விழுந்து விட்டது. கூரையின் ஓலைகளும் கயிறு போட்டுத்தான் கட்டப்பட்டிருந்தன. காற்றும் வேகமாக அடித்ததால், ஐந்து நிமிடங்களில் தீ எல்லோரையும் சூழ்ந்து கொண்டது. 

115 பேருக்கு மேல் தீயில் கருகி இறந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இறந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள். வெளியே நின்ற ஆண்கள் தங்கள் ஆடைகளைக் கொடுத்து பலரை மீட்டு உள்ளனர். ஆடை எரிந்து போன நிலையில் வெளியே வந்த சில பெண்கள், மறுபடியும் தீக்குள் சென்றிருக்கிறார்கள். தீயணைப்புப் படை வருவதற்குள் திரையரங்கம் முழுவதும் எரிந்து சாம்பலானது. இறந்த உடல்கள் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. கைக்குழந்தைகளைக் கட்டிப்பிடித்தபடி நிறையச் சடலங்கள். 

இந்த தீ விபத்து தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே ஏன் உலகத்தில் பல இடங்களையும் உலுக்கி விட்டது. தொலைக்காட்சியில் இன்றுகூட பாவ மன்னிப்பு திரைப்படம் போட்டிருந்தால் சேனலை மாற்றி விடுவேன். தூத்துக்குடி மக்கள் பலரும் இன்றும் பாவமன்னிப்பு பார்ப்பதில்லை. இவ்வளவு ஏன் தூத்துக்குடி மாவட்டத்திலேயே இப்படம் அதன்பிறகு திரையிடப்படவில்லை என்கிறார்கள். 

ஜூலை 31-ம் நாள், தீ விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் எம்ஜிஆர் பார்வையிட்டார். மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார். பெண்களின் சோகத்தைக் கேட்டுக் கண்கலங்கினார். இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க உத்தரவிட்டார். (தங்க விலை 24 கேரட்- ஒரு கிராம் 93ரூ). சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. தீ விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணை தனது உயிரைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று, காயமடைந்த பெண்ணை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தவருக்கு (ஜேசுநஸ்ரியான்) எம்.ஜி.ஆர். பரிசளித்திருக்கிறார். கடிகாரம் என நினைக்கிறேன்.

திரையரங்கு இருந்த இடத்தையும் எம் ஜி ஆர் பார்வையிட்டார்.

பிரதமர் சரண் சிங் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார். சிவாஜி கணேசன் ரூபாய் 25,000 வழங்கினார். ரோட்டரி சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் ஏராளமாக நிதி உதவி செய்தன. சிகிச்சை பெறுவோருக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இலவச உணவு வழங்கப்பட்டது. 

எம் ஜி ஆர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டார். அது குறித்த செய்தி தெரியவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓலைக் கொட்டகைகளை நீக்கும்படி அரசு உத்தரவு இட்டது. எங்கள் ஊரிலிருந்த ஓலைத் திரை அரங்கும் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை ஆனது. அவற்றில் கூட மாட்னி காட்சிக்குத் தடை விதித்தது தமிழக அரசு என நினைக்கிறேன்.

மேலும் விவரங்களை இந்தத் தளத்தில் பார்க்கலாம்.

எங்கள் கல்லூரி சார்பாக என் எஸ் எஸ் மாணவிகளுக்குத் தகவல் திரட்டும் கேள்வித் தாள்கள் (questionnaires) கொடுக்கப்பட்டிருந்தன. அதில் தீ விபத்தில் இறந்தவர்கள், காயம் பட்டவர்கள் பற்றியும்,காயத்தின் தன்மை போன்ற பல விபரங்களையும் அறிந்து கொள்வதற்கான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. நாங்கள் அதை  எடுத்துக்கொண்டு தீ விபத்து நடந்த இடத்திற்குச் சென்றோம். திரையரங்கம் இருந்த இடம் சாம்பல் மேடாகக் காட்சி அளித்தது. அதில் சிலர் கம்மல் போன்ற பொருள்கள் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். பார்க்கும்போது மனது கனத்துப் போனது.  கிட்டத்தட்ட அந்தப் பகுதி முழுவதும் எல்லா வீடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் காயம், கண்ணீர், துன்பம். தீக்காயங்களைப் பார்க்கவே சகிக்கவில்லை. 

இந்தக் கேள்வி-பதில்கள் அரசாங்கம் இவர்களுக்கு உதவி புரிய வசதியாக அரசாங்கத்திற்கு  அனுப்பப்படும் என்று கூறினார்கள். இதனை அடிப்படையாக வைத்து ரொம்பவும் தீவிரமாகக் காயம் பட்டவர்களுக்கு எங்கள் கல்லூரி நிர்வாகமும் உதவி செய்தது. 

எங்களது சேவைக்காக 1979- 80-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு என் எஸ் எஸ். கேடயம் (shield) எங்களுக்குக்  கிடைத்தது. ஒரு பெண்கள் கல்லூரி இந்தக் கேடயத்தைப் பெற்றது அதுவே முதல் முறை. 

மாரியப்பன் என்ற பாடகர், அவர் சிறுவயதில் கேட்டப் பாடலை மீண்டும் நினைவு கூர்ந்து தருகிறார் 

தூத்துக்குடி நகர் தினிலே 

லூரம்மாள் மட்டக்கட தெருவினிலே 

ராஜாமணி என்பவரால் 

நடத்தி வந்த தேட்டரிலே 

பயங்கர தீயாச்சி 

பல உயிர்களும் போச்சி 

1979 யிலே நடிகர் திலகம் நடித்த 

பாவமன்னிப்பு நடக்கயிலே 

தியேட்டருக்கு போன தங்கம் திரும்பி நீங்க வந்தீங்களா?

மண் மூடி போவதற்கா தங்கம் 

ஒன்று கூடி போனீங்க

கண்ணாடிக் கருவளையல் 

கழிந்து கிடக்கும் ரப்பர் வளையல்கள் 

சின்னப்பூ தினுசுகளாம் தேங்காப்பூ துண்டுகளாம் 

அச்சடிச்ச சேலைகளாம் 

அழகு ஜடை பின்னல்களாம் 

செந்துருக்கம் பொட்டு வச்சி 

தேட்டருக்கு போன தங்கம் 

திரும்பி கூட வந்தீங்களா?

லெச்சுமி தியேட்டர பாத்து அங்கு அழுது போனது ஆளு 

லட்சுமி திரையரங்கின் இன்றைய நிலை, படங்கள் நன்றி: https://tamil.abplive.com/news/tamil-nadu/kin-of-victims-relive-pain-of-lakshmi-theatre-fire-tragedy-11305

தொடரும்…

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.