ஹாய் தோழமைகளே,
கடந்த இரண்டு வாரமா journaling, அதான் நம்ம நாட்குறிப்பு எழுதுவது, தொடர்ந்து எழுதினீர்களா?
இப்போது ஒரு நாள் நேரமெடுத்து அமைதியாக எல்லாவற்றையும் படிங்க.
உங்களைப் பற்றியும், உங்கள் உணர்வு கொந்தளிப்பைப் பற்றியும் நிறைய விஷயத்தை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். அப்படியே அந்த மனநிலையை மாற்றும் வழியும் புலப்பட்டிருக்கும்.
இதை நீங்கள் சின்ன சின்ன விஷயங்களில் உங்களுக்கு ஏற்படும் உணர்வு வேகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமன்றி சில இறுக்கங்களுக்கும் மன அழுத்தத்திற்கும் நமது நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளுமே மிகப்பெரிய காரணியாகும். அதுவும் உங்களுக்குப் புரிந்திருக்கும். அந்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் சீர்தூக்கிப் பாருங்கள். மாற்ற வேண்டியவற்றை எந்த மறுபரிசீலனையும் இல்லாமல் மாற்றிக்கொள்ள முனையுங்கள். இது ஒரே நாளில் நடந்து விடாது. சமரசமின்றி முயன்றால் நிச்சயம் நடக்கும்.
இப்போது மூன்றாம் படிக்கு (Step), வருவோம். இதன் பெயர் ஜோஹரி சாளரம் (Johari Window).
ஜோஹாரி சாளரம் என்பது மக்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவை நன்கு புரிந்துகொள்ள உதவும் கருவி. இது 1955 ஆம் ஆண்டில் ஜோசப் லுஃப்ட் மற்றும் ஹாரிங்டன் இங்காம் ஆகிய உளவியலாளர்களால் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தில் உள்ளது போல் நான்காகப் பிரிக்கபட்ட ஒரு வரைபடத்தை வரைந்து கொள்ளுங்கள். ஆனால், படத்தில் உள்ளது போல அனைத்துப் பிரிவும் சமமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நிஜத்தில் சமமாகவும் இருக்காது.
இதில் அரீனா (Arena) பகுதியில், நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்த, மற்றவருக்கும் தெரிந்த குண நலன்களைக் குறிப்பிடலாம்.
உதாரணமாக, முன்கோபி, அன்பானவள், கடின உழைப்பாளி போன்றவை. இந்தப் பிரிவை நிரப்ப நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்ததில், மற்றவருக்கும் தெரிந்த விஷயங்களை எழுதுவோம்.
உதாரணமாக, எனக்குச் சட்டென்று கோபம் வரும், ஆனால், அதை மற்றவரிடத்தில் காட்டாததால், பிறர் அறியாத குணம்.
அப்போது கோபம் முதல் பிரிவில் வராது.
Arenaவில் வரும் அனைத்தும் நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்தது, மற்றவரும் அறிந்தது.
அடுத்த பிரிவு பேசட் (Façade) முகப்புத் தோற்றம், அதாவது நாம் மற்றவரிடம் கட்டமைத்த நமது பிம்பத்தில் மறைக்கபட்ட குணங்கள்.
மேலே பேசிய முன்கோபம் இங்கு வரும். ஏனெனில் இது எனக்குத் தெரியும், மற்றவருக்குத் தெரியாது.
அடுத்த பிரிவு பிளைன்ட் ஸ்பாட் (Blind spot), அதாவது நமக்கு நம்மைப் பற்றித் தெரியாத குணம், பிறருக்குப் புரிந்த குணம். இதை நம் இணையரிடம், பிள்ளைகளிடம், தோழமையுடன், உறவினரிடம், சக பணியாளரிடம் என யாரிடம் நமக்கு நம்பிக்கையும் மதிப்பும் உள்ளதோ அவரிடம் Feed Back கேட்கலாம்.
இதை ஏற்றுக்கொள்ள உண்மையிலேயே திறந்த, திட மனம் அவசியம். நாம் நம்மைப் பற்றி வைத்துள்ள பிம்பங்கள் அனைத்தும் உடைபடும் இடம் இதுதான்.
ஒரு பள்ளியில் வாழ்க்கைக் கல்வி பற்றிய வகுப்பு எடுக்கும் போது இதை ஒரு விளையாட்டு போல விளையாடினோம். ஒரு மாணவனை அழைத்து அவனைப் பற்றிய குணங்களை அவனையே போர்டில் எழுதச் செய்தோம். பின்னர் மற்ற மாணவ, மாணவியரையும் அவன் எழுதிய குணங்களைப் பற்றிய அவர்கள் கருத்தைத் தனித்தனியாக பேப்பரில், பெயர் எழுதாமல் எழுதச் சொன்னோம்.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த மாணவன் குறிப்பிட்டு இருந்த இரண்டு குணங்களை, மற்றவர்கள் உதாரணங்களோடு மறுத்து இருந்தார்கள். சிறுவர். சிறுமியராதலால் இதைச் சுலபமாகச் செய்ய முடிந்தது. பெரியவர்களிடம் இது போன்ற விளையாட்டைச் செய்து பார்த்தால், சொல்லப்பட்ட செய்தியைவிடச் சொன்னது யார் என்பதைக் கண்டுபிடித்து, பகை வளரவே வாய்ப்பு அதிகம். நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான். எந்தவிதமான கருத்துக்கும் தயாராக மனதைத் திறந்த நிலையில் வைத்துக்கொண்டு உங்கள் நட்பு, உறவு வட்டத்தை அணுகுங்கள், கிடைக்கும் பதில்கள் உங்களை பரவசப்படுத்தலாம், ஆச்சரியபடுத்தலாம், கோபப்படுத்தலாம். எல்லா உணர்வையும் ஒதுக்கி வைத்து இதையெல்லாம் blind spot பகுதியில் எழுதி வையுங்கள். அதை நீங்களே சீர்தூக்கிப் பார்த்து, எதையெல்லாம் மாற்ற வேண்டும், தொடர வேண்டுமென முடிவு செய்யலாம்.
அடுத்த பிரிவு மிக மிக முக்கியமானது, unknown. நம்மைப் பற்றி நமக்கும் தெரியாத, மற்றவருக்கும் தெரியாத விஷயங்கள். யாருக்குமே தெரியாத போது யாரிடம் கேட்பது?
நம்மைதான் நாம் கேட்க வேண்டும்.
நமது ஒவ்வோர் எண்ண ஓட்டத்தையும் நாட்குறிப்பில் எழுத எழுத எல்லா நேரமும் நாம் நம்பும் அளவிற்கு நல்லவளோ / கெட்டவளோ இல்லை என்பது புரியும். அந்த நமக்கே தெரியாமல் நமக்குள்ளே உள்ள குணங்களை இங்கு எழுதலாம். இந்தப் பிரிவின் கட்டம் பெரியதாக பெரியதாக (அதாவது நம்மை நன்றாக நாம் புரிந்து கொள்ள புரிந்துகொள்ள), தன்னை அறிதல் ஆழமாகிறது.
மற்றவற்றின் வீண் புகழ்ச்சிக்கும் மயங்க மாட்டோம், இகழ்ச்சிக்கும் கோபம் வராது. எனக்கு என்னைப் பற்றி இன்னும் அதிகம் தெரியும், “இதென்ன பிரமாதம் இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் இருக்குள்ள உள்ள“ என்று சிரித்துக்கொண்டே கடக்கக் கற்றுக் கொள்வோம்.
எந்த ஒரு தோல்விக்கும், மன வருத்தத்திற்கும் காரணம் வெளியே தேடுவதையும், பழியை மற்றவர் மேல் போடுவதையும் நிறுத்திக்கொள்வோம்.
தேடலைத் தனக்குள் ஆரம்பிக்கும் பயிற்சி கைவந்துவிட்டால் வானமே உங்கள் வசம்தான். மனம் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் போதெல்லாம், உணர்வை விட்டுவிட்டு நாம் நம்மில் மூழ்கி விட ஆரம்பிப்போம்.
செய்து பாருங்கள் தோழிகளே, இந்த மந்திரக்கோலின் மகிமையை உணர்வீர்கள்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.
’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.