ஹாய்  தோழமைகளே,

கடந்த அத்தியாயத்தில் லட்சியப் பாதையை எப்படி உருவாக்குவது என்றும், எப்படி ஒரு நேர் மறையான லட்சியம் நம்மை உணர்ச்சியின் பிடியில் இருந்து வெளிக்கொண்டு வரும் என்றும் பார்த்தோம். தோழிகள் சிலர், கடந்த அத்தியாயத்தைப் படித்த பின் அதெப்படி லட்சியம் உணர்வைக் கட்டுப்படுத்தும் என்று கேட்டனர்.

நம் எல்லாருக்கும் தெரிந்த உதாரணம்தான். மிக நேசமான தம்பதிகளாக வாழும் இணையரில் ஒருவர் இறக்க நேரிட்டால், ஒருவேளை குழந்தைகளுக்கான கடமை ஏதும் இல்லாவிடில் எஞ்சியிருக்கும் கணவனுக்கோ / மனைவிக்கோ அந்தத் துயரிலிருந்து வெளிவருவது கடினம். உடலளவில், மனதளவில் நோயில் விழுந்த நிறைய பேரைப் பார்த்திருப்போம்.

ஒருவேளை குழந்தைகளுக்கான கடமை எஞ்சியிருந்தால், அத்தனை துயரையும் உடல் நோயையும் ஒதுக்கி, தன் குழந்தைகளை வளர்ப்பதிலேயே முழுக் கவனமும் செலுத்தி கடமையாற்றுபவரையும் பார்த்திருப்போம்.

அப்போது இவர்களை இயக்குவது மனமும் அதிலுள்ள லட்சியமும்தானே?

இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. அப்படிக் கடமை இருந்தாலும் மீள முடியாத துக்கத்தில் வீழ்பவர் பலர். ஆனால், ஒரு துயரமோ உணர்வு பேரலைக்குப் பிறகோ நாம் விதிவிலக்குதான் என்பதைப் புரிந்துகொள்வதால் யாருக்கும் உபயோகம் இல்லை. எந்தக் கடமையும் லட்சியமும் இல்லாது வாழ்வோரும் உண்டு.

இந்த அத்தியாயம் அவர்களுக்காகத்தான்.

நம் அன்றாட வாழ்விலேயே சில ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றும்போது உணர்வின் தாக்கத்தில் இருக்கும் நேரத்தில் அவை உதவிக்கு வரும். இந்த ஒழுங்குமுறை வழிமுறைகள் (Self Regulation).

  1. வேகத்தைக் குறைப்பது (Slow down)

எங்கு வேகத்தைக் குறைப்பது, எவ்வளவு குறைப்பது என்று கேட்டால், எல்லாவற்றிலும்தான். நின்று நிதானமாக நம்மை நாமே ஆராய்ந்து கொள்ளும் அளவிற்கு வேகத்தைக் குறைக்க வேண்டும்.

இன்றைய அவசர உலகில் அனைவருமே ஏதோ ஒன்றை நோக்கி ஓடுகிறோம். அதில் வெற்றி பெற முடியாவிடில் மற்றொன்றை நோக்கி ஓடுகிறோம். ஏன் வெற்றி பெற முடியாமல் போனதென்று யோசித்து சரி செய்ய நமக்கு நாம் நேரமே கொடுப்பது இல்லை.

நிறைய பேர் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பற்றி மனதில் சிந்திப்பதும், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதும் என உடலுக்கும் மனதுக்கும் ஏகப்பட்ட அழுத்தத்தைக் கொடுத்து எந்த வேலையையும் சரியாக முடிப்பதில்லை. முடித்தாலும் சரியாகச் செய்யாமல் அதையே திருப்பித் திருப்பிச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்த வேகத்தை குறைக்கும் போது, வாழ்வு நாம் நினைத்தபடி போகாத நிலையில் நின்று நிதானித்து வந்த பாதையை ஆராயவும், நம் தவறுகளைத் திருத்தவும் வழிபிறக்கும். எல்லாவற்றிலும் வேகத்தை மட்டுப்படுத்தும்போது மனம் ஒரு தளர்வு நிலையில் இருக்கும்.

அது மட்டுமன்றி இது போன்ற வேகத்தடைகள் நாம் செய்யும் வேலையை மிகுந்த சிரத்தையுடன் செய்ய உதவி செய்யும். செய்து முடித்த வேலையைத் திரும்பச் செய்ய வேண்டிய அவசியம் வராது.

உணர்வு கொந்தளிப்பின் முக்கியக் காரணம் அமைதி இல்லாத மனம்தான். எப்போதும் நிதானத்துடன் இருக்கும் போது, மனம் அமைதியாகவும் உணர்வு கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும்.

ஒரு கதை.

ஒரு மன்னன் நகர்வலத்திற்குச் சென்ற போது, அவர் விரலில் இருந்த மோதிரத்தில் பதித்திருந்த பெரிய வைரக்கல் கடற்கரையில் விழுந்துவிட்டது. அதைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு மிகச் சிறந்த பரிசளிக்கப்படும் என அறிவித்தான்.

ஊரே தேடியும் அந்தக் கல்லை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் சலித்துப் போய் தேடுவதைக் கைவிட்டனர்.

ஒரே ஒரு குடிமகன் கடற்கரைக்கு வந்து ஒவ்வொரு கல்லாகப் பொறுக்கி எடுத்து தேடத் தொடங்கினான்.

ஒவ்வொரு கல்லாகப் பொறுக்கி அது சாதரண கல்லாக இருந்ததால் கடலில் தூக்கி எறிவான். அப்படியே பல நாள்கள் சென்றன. அவனும் நம்பிக்கை இழந்துவிட்டான். ஆனாலும் ஒரு பழக்கமாகத் தினமும் தேடிக்கொண்டிருந்தான். மனம் அமைதி இன்றி, ஒரு மனம் ஒன்றாதச் செயலாக, ஓர் அனிச்சையான செயலாகக் கல்லை எடுத்துப் பார்த்துக் கடலில் எறிவான்.

ஒருமுறை அவன் கைகளில் அந்த வைரம் சிக்கியது. ஆனாலும் அதை ஓர் அனிச்சைச் செயலாகக் கையில் எடுத்து கடலில் எறிந்து விட்டான். கடலில் எறிந்த பின்தான் அவனுக்கு அது வைரமென்றே உறைத்தது.

இப்படித்தான் நாமும் நம் வாழ்வெனும் வைரத்தை மனம் ஒன்றாமல் வாழ்வதின் மூலம் தொலைத்து விடுகிறோம்.

அவன் சிறிது நிதானத்து ஒவ்வொரு கல்லையும் ஆராய்ந்திருந்தால் வைரமென்று புரிந்திருக்கும். வேகத்தைக் குறைக்கும் போது வாழ்வெனும் வைரம் வசப்படும்.

  • எந்த நிகழ்விற்கும் எதிர் வினையாற்றாமல், என்ன சொன்னால் / செய்தால் நிலைமை சரியாகும் என யோசித்துப் பதில் வினையாற்றுவது (Respond, not to react).

நாம் அனைவருமே உடனே எதிர்வினையாற்றவே பழகி உள்ளோம்.

ஒரு பழைய கதை.

உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்து விட்டு, காத்திருந்த பெண்ணின் மேல் ஒரு கரப்பான் பூச்சி வந்து அமர்ந்தது. அவள் அதைp பார்த்து அலற பக்கத்தில் வந்த சர்வ் செய்யும் இளைஞன் வைத்திருந்த உணவில் விழுந்தது பூச்சி.

அவன் தட்டைத் தவறவிட பூச்சி பறந்து அடுத்த மேஜையில் அமர்ந்திருந்த சிறுவனின் மேல் விழுந்தது. அவன் அமைதியாக, மெதுவாக நகர்ந்து மேஜை இல்லாத இடத்தில் தட்டிவிட பூச்சி வெளியே போய்விட்டது.

இதில் அந்தச் சிறுவனைத் தவிர அனைவரும் எதிர்வினையாற்றினார்கள். அவன் மட்டும்தான் அமைதியாகப் பதில் வினையாற்றினான். ஒரு தொடர்ச்சியான குழப்பச் சூழலில் அனைவருமே இயல்பாக எதிர்வினைதான் ஆற்றுவர். உணர்வுசார் நுண்ணறிவு கைவரப்பெற்றவரோ பயின்றவரோ மட்டுமே பதில் வினையாற்றுவர்.

நாம் முன்னரே பேசிய வண்ணம், சிலருக்கு இந்த நுண்ணறிவு பிறவியிலேயே இருக்கும். (பன்முக நுண்ணறிவில் ஒன்று). ஆனால், முயன்றால் கை வராதது எதுவும் இல்லை.

எதிர்வினையாற்றும் போது, அதனால் வரும் பின்விளைவை நாம் கணிக்க முடியாது, ஆனால், பதில் வினையாற்றும்போது, என்ன விளைவு வேண்டுமென்பதை நாமே முடிவு செய்ய முடியும்.

எந்தச் சூழ்நிலையிலும் பதட்டமாகாமல், நன்கு மூச்செடுத்து தளர்வு படுத்திக்கொண்டு சிந்தித்துச் செயல்பட நாமும் பழகுவோம், நம் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.