“அதோ தெரியுது பாருங்க ‘ஒத்த மரம்’ – அதுதான் இத்தனை பேரை காவு வாங்கிய இடம்” என்று உள்ளூர்காரர் ஒருவர் கைகாட்டிய இடத்தில், தூரத்து மலையில் ஒற்றையாய் நிற்கிறது அந்த மரம். 2018, மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் குரங்கணி கிராமத்தில் நின்றுகொண்டு அந்த மரத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். அதற்கு 15 நாள்களுக்கு முன்னதாகத்தான் நாட்டை உலுக்கிய அந்தத் துயரம் நடந்தேறியிருந்தது.
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி 39 பேர் மேற்கொண்ட மலையேற்றத்தின்போது, காட்டுத்தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்கள் கடைசியாக நின்று கொண்டிருந்த இடம்தான் அந்த ‘ஒத்தமரம்’. அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், இறந்தவர்களின் உடலைக் கீழே கொண்டுவருவதற்காகவும் குரங்கணிக்கு மேலே மலைப்பகுதிகளில் வாழும் முதுவர் இனத்தைச்சேர்ந்த பழங்குடியினர் தங்களிடமிருந்த மிகச்சில உடமைகளான போர்வைகள், உடைகளை தந்துதவியதால், தங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களுக்காகத் தவிக்கின்றனர் என்ற செய்தி கேள்விப்பட்டு, WCCI (Women and Child Care International) அமைப்பின் சார்பாக அவர்களுக்கான நிவாரணப்பொருள்களை எடுத்துக்கொண்டு குரங்கணியை அடைந்திருந்தோம்.
போடி நாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட ‘முதுவார்குடி’ என்ற மலைகிராமம் குரங்கணியிலிருந்து (குரங்கணியே மலைகிராமம்தான்) 6 கிலோமீட்டர் மலை உயரத்தில் உள்ளது. முதுவர்கள் வாழ்வதால் முதுவார்குடி என்ற காரணப்பெயர், பேச்சு வழக்கில் முதுவாக்குடி.

நாங்கள் அங்கு சென்ற 2018ஆம் ஆண்டில் முதுவார்குடி செல்வதற்கான பாதை ஏதும் கிடையாது. காடுகள் சூழ்ந்த மலைப்பகுதியில் 6 கிலோமீட்டர் நடைபயணமாக மலையேறவேண்டும் அல்லது மலையேறுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆறு சக்கரங்கள் கொண்ட வாகனத்தில் (ஜீப்பில்) 2500 ரூபாய் கொடுத்து செல்லவேண்டும் என்பதால், நாங்கள் இரண்டாவது வழியைத் தேர்வு செய்திருந்தோம். கரடு முரடான மலையில் வாகனம் செங்குத்தாக செல்லும்போதும், கொண்டைஊசி வளைவுகளில் சரட்… சரட்டென திரும்பும்போதும், கொஞ்சமல்ல, நிறையவே கலக்கமாகத்தான் இருந்தது.
‘திரும்பி வருவோமா?’ என்ற அச்சத்தினூடான கடுமையான 45 நிமிட பயணத்தின் முடிவில் ‘முதுவன்’ பழங்குடியின மக்கள் வாழும் அந்த அழகிய மலைக்கிராமத்திற்குள் நுழைந்தோம். மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் அடர்ந்த வனப்பகுதியுடன் அமைந்துள்ளது முதுவார்குடி.
பழங்குடி மக்களில் முதுவர்களே ஆதிப் பழங்குடியினர் எனக் கருதப்படுகின்றனர். இக்குடியினர் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் 87 இடங்களிலும், தமிழ்நாட்டில் ஆனைமலையைச் சுற்றி 13 கிராமங்களிலும் மதுரை, போடிநாயக்கனூரைச் சேர்ந்த மலைப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம் தாலுகாவில், மூணார் நகரிலிருந்து 35 வது கிலோமீட்டர் தூரத்தில் பெரியபாறை, நியமக்காடு, ராஜமலை மற்றும் இடைமலைக்குடியில் 28 பிரிவுகளைச் சேர்ந்த குடிகளாக இருக்கிறார்கள்.
2010ல் கேரளா அரசு, கேரளாவில் வாழும் முதல் ஆதிவாசிப் பஞ்சாயத்தாக இடைமலைக்குடியை அறிவித்திருக்கிறது. கண்ணன் தேவன் மலைப்பகுதிகளில் தேயிலை பயிரிட சர் தாமஸ் மன்ரோ வந்தபோது தமிழர்களான முதுவர்கள் அந்த மண்ணில் குடிபெயர்ந்திருக்கவேண்டும். முதுவர் என்பதற்கு தமிழ் அகராதியில் ஒருசார் மலைச்சாதியினர் (A hill tribe) என்ற குறிப்பு காணப்படுகிறது. இப்பழங்குடியினர் நீக்கிரிட்டோஸ் (Negritos) இனத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
பாண்டிய மன்னர்களின் விசுவாசக் குடிமக்களாக இருந்த இவர்கள் அரச குடும்பத்தின் தெய்வமான மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். பாண்டிய வம்சம் வீழ்த்தப்பட்டபோது, எஞ்சியிருந்த அரச குடும்ப உறுப்பினர்களுடன் முதுவர்களும், கேரளாவில் உள்ள திருவிதாங்கூருக்குக் குடிபெயர்ந்தனர். அவ்வாறு செல்லும்போது மதுரை மீனாட்சியின் சிலைகளை தங்கள் முதுகில் சுமந்து சென்றதால் முதுவர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும், தங்கள் குழந்தைகளை முதுகில் சுமந்து செல்லும் பழக்கமுடையவர்களாக இருப்பதால் முதுவர் என்று அழைக்கப்படுகின்றனர் எனவும் இருவேறு கருத்துகள் உண்டு. ஆனால், இவர்கள் எந்தக்காலகட்டத்தில் காடுகளில் குடியேறினர் என்பது குறித்த ஆவணப்படுத்தப்பட்ட செய்திகள் ஏதும் இல்லை.

முதுவார்குடி – தமிழ் சினிமாவில் பார்ப்பதுபோல, ஊரின் நடுவே ஆலமரம், சுற்றிலும் வீடுகள். மொத்தமே 25 வீடுகளுக்குள்தான் இருக்கவேண்டும். எங்களது வாகன ஓட்டுநர், அங்கிருந்த குடித்தலைவரிடம் நாங்கள் வந்திருப்பதற்கான காரணத்தை விளக்க, அவர் ஒரு சப்தம் (ஒலி) கொடுக்கவும், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் ஒரு ஐம்பது பேர் அவ்விடத்தில் கூடினர். எந்தவித அணிகள், ஆபரணங்கள், ஆடம்பரங்களில்லாத எளிய மக்கள். தங்களிடமிருக்கும் ஒன்றிரண்டு போர்வைகளையும் உடுப்புகளையும் தந்துவிட எத்தனை பெரிய மனம் வேண்டும்?
ஊடகங்களின் வெளிச்சம் முழுக்க குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றியே இருந்ததால், தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய இவர்களைப்பற்றிய செய்திகள் வெளிவரவில்லை. தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச்சென்ற தன்னார்வலர் மூலமாகவே எனக்கு இவர்கள் குறித்துத் தெரியவந்தது. தோழிகளின் பங்களிப்பில் நிவாரணப்பொருள்கள் சற்று நிறையவே சேர்ந்துவிட, அவர்களுக்குத் தாராளமாகவே கொடுக்கமுடிந்தது.
மிகுந்த தயக்கத்துடன் பெற்றுக்கொண்டனர். பெண்கள் அணிந்திருந்த வித்தியாசமான சேலைக்கட்டை ரசித்துக்கொண்டே அவர்களுடன் பேச முற்பட்டேன். ஆனால் அவர்களுக்கு அந்நியர்களுடனான உரையாடலில் பெரிதாய் நாட்டமில்லை. பெண்கள் மிகச்சில வார்த்தைகளே பேசினர். ஆண்கள் மிகுந்த மரியாதையுடன் ஒதுங்கி இருந்தனர்.

அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று, இதுதான் அவர்களுக்கான வாழ்விடம். ‘முதுவார்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தவுடன் உடல் புல்லரிக்க… வேறென்ன, வழக்கம்போல புகைப்படம்தான். நான்கு மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளிக்கு ஒருவேளை பெண் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தால், இந்த மலையேறி தினமும் அவர் பள்ளிக்கு வருவதற்கு நடைமுறை சாத்தியமே இல்லை என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். சாக்கடை வசதிகளின்றி…கழிவுநீர் ஓடியது. கழிப்பறை என ஏதும் இல்லை.
மலையும் வனமும் சூழ்ந்திருக்கும் இந்த அற்புதமான இயற்கைச்சூழலில் விலங்குகள் சூழ மகிழ்வாக வாழ்கின்றனர். மிகத் தனித்துவமான பழங்குடி வாழ்க்கைமுறையை இன்றும் பின்பற்றுகின்றனர். பாரம்பரிய முறைப்படி தங்களுக்குத் தேவையான மூலிகைப்பொடி மற்றும் எண்ணெய் போன்றவைகளை அவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள். பணம் கொடுக்க முற்பட்டபோது மென்மையான சிரிப்புடன் மறுத்துவிட்டார்கள்.
வனப்பொருள்களை சேகரிப்பது அவர்கள் வாழ்வியல் முறைகளில் ஒன்று என்பதால், அவர்கள் வீடுகளில் வைத்திருந்த தூய்மையான தேனை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டோம். முதுவர் மொழி என்பது தமிழும், மலையாளமும் கலந்த மொழி எனக் கூறப்பட்டாலும் அவர்கள் பேசிய மொழியை புரிந்து கொள்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. வந்த வேலை முடிந்து விடைபெற்று கீழிறங்கினோம். மனம் அந்த கொடூர நிகழ்வையே சுற்றிக்கொண்டிருந்தது.
குரங்கணியிலிருந்து கொழுக்கு மலைக்கு கேரள மாநிலம் மூணாறு, சூரியநெல்லி வழியாக ஜீப் பாதை உண்டு. அதே சமயத்தில் குரங்கணியிலிருந்து ஒற்றையடி மலைப்பாதை உண்டு. இந்த பாதையில் அருவிகளும், தேயிலைத் தோட்டங்களும், மேகங்கள் மோதும் மலைகளும் இருந்தாலும், அது வனத்துறையினரால் பயணிப்பதற்கென அங்கீகரிக்கப்பட்ட மலைப்பாதை இல்லை. போடி, கொட்டக்குடி, குரங்கணி பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே கொழுக்குமலைத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அந்தப் பாதையை பயன்படுத்துவதுண்டு. அதில் வேறு நபர்கள் செல்ல எப்போதும் அனுமதி கிடையாது. குரங்கணியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் ஊடாக டாப் ஸ்டேஷன் வரையிலான டிரெக்கிங் பாதைதான் வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான பாதை. வழியெங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை இரசித்துக்கொண்டே செல்வது உண்மையில் ரம்மியமான அனுபவமாகவே இருக்கும்.
ஆனால் மூன்று குழந்தைகள், ஒன்பது ஆண்கள், 27 பெண்கள் (சென்னையைச் சேர்ந்த 27 பேர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர்) என இரண்டு குழுவாகச் சென்ற மலையேற்றக்குழுவினர் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒற்றையடிப்பதையின் வழியாக கொழுக்கு மலையை அடைந்திருக்கின்றனர். இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் திரும்பும் வழியில் அந்த ‘ஒத்த’ மரத்தினடியில் மதிய உணவுக்காக, இரண்டு குழுவினரும் கூடியிருக்கின்றனர். அப்போதுதான் அடர்ந்த காட்டுத்தீ அவர்களைச் சூழ்ந்தது. தப்பிக்க அங்குமிங்குமாய் ஓடியதில், தீயால் சூழப்பட்ட ஒரு குன்றில் சிக்கிக்கொண்டவர்கள், தீயிலிருந்து தப்பிப்பதற்காக, அந்த மலையிலிருந்து கீழே பள்ளத்தில் குதித்திருக்கின்றனர்.

காட்டுத்தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்றுவரை கண்டறியப்பட வில்லை. உள்ளூர் மக்களால் ‘மஞ்சாபுல்’ என்று அழைக்கப்படும், எண்ணெய் பதம் கொண்ட சுக்குநாரிப் புல் அதிகம் இருந்ததால் தீ வேகமாகப் பரவியுள்ளது என்கின்றனர். கோடை காலங்களில் தங்கள் ஈரப்பதம் முழுவதையும் இழந்து மலையின் மீது உலர்ந்த போர்வையாய் பரவிக்கிடக்கும் இந்தவகைப் புல். சில சமயங்களில் தோள்பட்டை உயரத்திற்குக்கூட வளர்ந்து நிற்கும். வெப்பத்தின் காரணமாக அதன் தண்டுகள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் ஏற்படும் தீப்பொறிகளால்கூட விபத்து ஏற்படுவதுண்டு.

தேனி மாவட்ட அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. பிரபாகரன் அவர்களிடம் தீ விபத்து குறித்து கேட்டபோது, அன்றைய நாளை நினைவுக்குக் கொண்டுவந்து விவரிக்கிறார். “சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குரங்கணியில் தீப்பற்றியதாகவும் மலையேற்றம் சென்ற ஆட்கள் சிக்கிக்கொண்டதாகவும் செய்தி வந்தது. நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், நானும் மருத்துவர் ராஜ்குமாரும் தன்னார்வலர்களாக உடனே கிளம்பிச்சென்றோம். காட்டுத்தீ தனது ஆட்டத்தை நிறுத்தாமல் இன்னமும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் எங்களை மேலே அனுமதிக்கவில்லை. இருள் சூழ்ந்து விட்டது. 12 பேர் மட்டும் உள்ளூர் ஆட்களால் காப்பாற்றப்பட்டு வேறு பாதை வழியாக அழைத்து வரப்பட்டனர். மற்றவர்களின் நிலை தெரியவில்லை. அலறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல் எங்களைத் தடுத்தவர்களையும் மீறி நாங்கள் இருவரும் மேலே சென்றோம்.”
“தீயணைப்புத் துறையினருடன் சேர்ந்து ஆட்களைத் தேடத் தொடங்கினோம். கதறலும், அழுகையுமாய் கழிந்த அந்த நாளை இன்று நினைத்தாலும் மனம் கனக்கிறது. தீயிடமிருந்து தங்கள் உயிரைக் காப்பற்றிக் கொள்வதற்காக, அந்த ‘ஒத்த மரத்தின்’ அருகிலிருந்த மிகப்பெரிய பள்ளத்தின் ஆழம் தெரியாமல் குதித்த 9 பேர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்திருந்தனர். கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து, அருகிலிருந்த ஆள்கள் மூலமாக ஸ்ட்ரெச்சரிலும், துணிகளிலும் டோலி கட்டி கீழே அனுப்பினோம். அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இருவரும் இரவு முழுக்க எங்களுடன் இருந்தனர். மலையேற்றக்குழுவில் சிலர் தீ எரிந்து கொண்டிருந்தபொழுது தீயுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்ததாக, உடன் வந்தவர்கள் கூறியதைக் கேட்டபோது படித்தவர்களின் அறியாமையை நினைத்து கோபமாக வந்தது…”
அந்த நாளின் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் மௌனித்து இருந்தவரிடம், “ இதுபோன்ற காட்டுத்தீ பேரிடர் சமயங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்?” எனக் கேட்கிறேன். “இந்த நிகழ்வைப் பொறுத்த வரை அவர்கள் தீ செல்லும் திசைக்கு எதிர் திசையில் அதாவது தீயை எதிர்த்து ஓடியிருக்கவேண்டும். ஏனெனில் இது புல்லில் ஏற்பட்ட தீ என்பதால் எரிந்து உடனே அணைந்துவிடும். சிறு சிறு கை, கால், தீக்காயத்துடன் தப்பித்திருக்கமுடியும். ஆனால் இது தீயினால் ஏற்படும் எல்லாப் பேரிடர்களுக்கும் பொருந்தாது. அடர்ந்த மரங்களில் தீப்பற்றினால் நாம் எதிர்த்துப் போகக்கூடாது, பின்னோக்கியே ஓடவேண்டும்” என்கிறார். இந்த தீ விபத்திற்குப் பிறகு, தேனி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பேரிடர் மேலாண்மை வகுப்புகள் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மலையேற்றத்திற்கு அனுமதி பெற்றார்கள்… பெறவில்லை என இருவேறு கருத்துகள் பொதுவெளியில் பேசப்பட்டன. ஆனால் நான்கு நாள்களாக வனப்பகுதியில் தீ ஒன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாக கிராமத்தினர் கூறுகின்றனர். பீடி, சிகரெட் பயன்படுத்திய மனிதர்களின் அலட்சியம், காட்டுப்பகுதிகளுக்குள் அனுமதியில்லாமல் செல்லுதல், வளர்ந்து நிற்கும் மஞ்சாப்புல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட அதிகப்படியான காற்று என காட்டுத்தீ பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. 22 உயிர்களை சில கணப்பொழுதில் பலி வாங்கிய அன்றைய விபத்திற்கு யாரை குற்றம் சொல்வது?
‘கட்டுப்பாடுகள் என்பது பாதுகாப்பிற்குத்தான்’ என்பதைப் புரிந்து கொள்ளாமல், அரசு விதிகளை மதிக்காமல், மலையேறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கலாம். அந்த நிகழ்வுக்குப் பிறகு குரங்கணி செல்லும் போதெல்லாம், அந்த ‘ஒத்த மரத்தைப்’ பார்க்கும் போதெல்லாம், தீக்காயங்களோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண் ஒருவர், “அண்ணா தண்ணீ… தண்ணீ…” என்று கதறிய வார்த்தைகள் அந்த மலையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது.
நினைவுகள் கலைந்து நிகழ்காலம் வருகிறேன். முதுவாக்குடி வாழ் முதுவர்களின் இன்றைய வாழ்க்கைமுறையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியுடன் முதுவாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும் திரு. ராஜேஷ் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஓராசிரியர் பள்ளி, ஐந்து மாணவர்கள், தேனிக்கு அருகிலுள்ள கோடாங்கிபட்டியிலிருந்து தினமும் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருகிறார். முதுவாக்குடிகளிடம் தான் பார்த்து வியந்ததை, அவர்களது வாழ்வியலை ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
“சமீபத்திய கணக்கெடுப்பின்படி 29 குடும்பங்கள், 91 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமம் இது. நீங்கள் வந்ததற்கு இப்போது (அதாவது 2018க்குப்பிறகு) குரங்கணியிலிருந்து முதுவாக்குடி கிராமம் வரை கல்பாதை போடப்பட்டுள்ளது மட்டுமே ஒரே மாற்றம். அதாவது சதுரம் சதுரமான கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கல்பாதையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதே மிகப்பெரிய சாகசம்தான். மற்றபடி முதுவர்கள் வாழ்வியல் முறையில் எந்த மாற்றமும் இல்லை. பழங்குடி தமிழர்களின் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுகின்றனர். இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். பணத்தின் மீது பெரிதாய் நாட்டமுமில்லை, இன்றைய வெளியுலக ஆடம்பரங்கள் குறித்து எந்த ஆர்வமும் இல்லை.
முதுவர்கள் தங்கள் சமுதாய மக்களிடம் மட்டுமே சகஜமாகப் பேசுவார்கள். அதிலும் பெண்கள் பிறரிடம் பேசுவதேயில்லை, எதிர் ஆண்களின் கண்களைச் சந்திப்பதேயில்லை, ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் மட்டுமே மிளகு எடுத்தல், இஞ்சி எடுத்தல், ஏலக்காய் பறித்தல் போன்ற வேலைக்குச் செல்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் பணமே போதுமானதாக இருக்கிறது என்கிறார்கள்.
மற்ற நாட்களில் சும்மாவேனும் வனத்திற்குள்ளும் தங்கள் ஊருக்குள்ளும் சுற்றிக்கொண்டிருப்பது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆற்றில் மீன்பிடித்தல், வனத்திற்குள் செல்லுதல் என்று தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை மகிழ்வாய் வாழ்கிறார்கள்.”
கேட்கும்போதே மனதிற்குள் பெருமூச்சு எழுகிறது. “எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாமெல்லாம் என்றைக்கு நம் வாழ்க்கையை வாழ?”
தொடரும்…
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.





