மிகுந்த தயக்கத்துடன் அந்த சிறிய தகரக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். ஒரு பெரிய மாமரம் காற்றில் அசைந்தாடியபடி எங்களை வரவேற்க, தனது மேல் தோலை ஆங்காங்கே உரித்துக்கொண்டு, எலும்புகள் தெரிய காட்சியளிக்கிறது அந்த வரலாற்று சான்று. எத்தனை ஆண்டுகால ஆசை, இன்று கண்முன்னால்..! நம்பமுடியாமல் முழு வடிவையும் கண்களுக்குள் புதைத்து கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போகிறேன்.

எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அலைபேசி எண்ணில் நான் வந்திருப்பதைத் தெரிவிக்க, “வந்திட்டீங்களா… வாங்க, வாங்க… அந்தப் படிக்கட்டு வழியே மேலே ஏறி வாங்க” என்ற குரலிலேயே நட்பின் நேசம் வழிகிறது. பொலிவிழந்தாலும் கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கும் அந்த மாளிகையைச் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே மேலே ஏறுகிறோம் நானும் அக்ஷயும், பூஷிதாவும்.

ஊரின் மையப்பகுதியில் இருக்கிறது பல்வேறு வரலாறுகளையும் அற்புதங்களையும் தாங்கி நிற்கும் போடிநாயக்கனூர் ஜமீன் அரண்மனை. போடிக்குச் செல்லும்போதெல்லாம் ‘அரண்மனை ஸ்டாப்ல’, ‘அரண்மனைக்கு பக்கத்தில’ என்று அடையாளப்படுத்தி பேசிக்கொள்வோமே தவிர, உள்ளே செல்வதற்கான வாய்ப்போ அனுமதியோ கிடைத்ததில்லை.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் சோர்ந்திருந்த நேரத்தில் ஒருநாள், குடும்ப நண்பரும் சமூக சேவகருமான சிதம்பரம் அண்ணாவிடம் அரண்மனை பார்க்க முடியாத சோகத்தைப்(!) பகிர்ந்துகொண்டபோது, ‘இப்ப என்ன?, அரண்மனைக்குள் போகணும், அவ்வளவுதானே?’ என்றவர், இரண்டாவது நிமிடத்தில் ஒரே ஒரு அலைபேசி அழைப்பிற்குப்பின் ‘நாளைக்கேகூட போகலாம்’ என இன்றைய ஜமீன் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீ குமார் பாண்டியன் அவர்களின் அலைபேசி எண்ணைப் பகிர்ந்தார்.

‘அட, எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கு, நாம்தான் சரியான வழியைக் கண்டுபிடிக்கணும்’ என்று திடீரெனெ உதித்த தத்துவ முத்தை (!) எனக்கு நானே கூறிக்கொண்டு உடனே அந்த அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டேன். ஜமீன்தாரரிடம் பேசுகிறோம் என்ற தயக்கத்துடன் நான் பேச, எதிரில் பேசிய குரலிலோ அத்தனை எளிமை! எப்போது வேண்டுமானாலும் அரண்மனைக்கு வரலாம் என்றவர், “எப்படி வருவீங்க, பாதை தெரியுமா?, கட்டபொம்மன் சிலைக்குப் பின்னால இருக்கு, கவனமா வாங்க”, என்றெல்லாம் அக்கறையுடன் வழிகூற, நன்றிகூறி கிளம்பிவிட்டோம். 

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் வழியெங்கும் பசுமைதான். காரணம், மேற்கிலிருந்து போடி நகர் நோக்கிவரும் ஊத்தாம்பாறை ஆறு, வலசையாறு, முத்துக்கோம்பையாறு, கூவலங்காறு, கொட்டக்குடி ஆறு என ஐந்து ஆறுகள். இதனால் பஞ்சநதி என்ற பெயரும் ஊரின் பெயராக ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

 உயரமான மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றால், இன்முகத்துடன் வரவேற்கிறார் ஸ்ரீ குமார் பாண்டியன். “உங்களைப்போல ஆராய்ச்சி செய்பவர்கள் (!) அளவுக்குத் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்” எனத் தொடங்கியவருடன் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் பயணிக்க வேண்டியிருக்கிறது.

பதிமூன்றாம் நூற்றாண்டில், ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டம், குத்து பல்லாரி என்ற மாவட்டத்தில் உள்ள கூட்டி என்ற பகுதியில் சிறுகுழுத் தலைவராக இருந்தவர் ஜக்கு நாயக்கர் அவர்கள். அலாவுதீன் கில்ஜியின் படைகள், அவரது தளபதியான மாலிக்காபூர் தலைமையில் தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தபோது, ஜக்கு நாயக்கரும் அவரது குழுவினரும் அவ்விடத்தைவிட்டு, தெற்கு நோக்கி நகர்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் வேகிளியார் சில்லவார் (சீலவார்) பிரிவைச் சேர்ந்தவர்கள். முதலில் மேற்குத் தமிழகத்தில் குடிபெயர்ந்தவர்கள் பின்னர் மதுரையின் தென்பகுதிகளை அடைந்து அங்கிருந்து (ஆண்டிபட்டி அருகேயுள்ள) ஜக்கம்பட்டி, (ஜம்புலிபுத்தூர் அருகே) சில்வார்பட்டி, எனப்பரவி இறுதியில் பூஞ்சார் மன்னரின் ஆளுகைக்குள் இருந்த இன்றைய போடிப் பகுதியில் குடியேறினர்.

“மொழி கடந்து, மாநிலம் கடந்து வந்தவர்கள் இந்த மண்ணின் ஜமீன்தாரர்களாக எப்படி மாறினார்கள்?” ஆர்வமிகுதியில் குறிக்கிடுகிறேன். “அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்” என்றவர் தொடர்கிறார். அந்த சமயத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பன்றி அங்கிருந்த விளைநிலங்களை அழித்துக்கொண்டிருந்தது. திருவிதாங்கூர் மகாராஜா அந்த பன்றியை அழிப்பவர்களுக்கு சன்மானம் தருவதாக அறிவிக்க, ஜக்கு நாயக்கர் அங்கு சென்று தனியாளாக, அந்தப் பன்றியைக் கொன்று, மன்னரின் மதிப்பைப் பெறுகிறார்.

தனது பிரச்னை தீர்ந்த மகிழ்ச்சியில் பூஞ்சார் மன்னர், ஜக்கு நாயக்கருக்கு, நூறு பொற்காசுகள், தங்க ஆபரணங்கள், பட்டத்து யானை, அம்பாரி, தங்கக்காப்பு, பல்லக்கு என மரியாதை செய்து, இந்தப் பகுதியின் தலைவராகவும் நியமிக்கிறார். இப்படியாக 1330களில் ஆந்திராவிலிருந்து, அன்றைக்கு திருமஞ்சனக்காடு என்று அழைக்கப்பட்ட இன்றைய போடிப் பகுதிக்கு குடியேறியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உண்டு என்கிறார் ஸ்ரீ குமார். பழனி மலைக்கும் திருவிதாங்கூர் மலைகளுக்கும் இடைப்பட்ட செழிப்பான பகுதிதான் திருமஞ்சனக்காடு. இதன் எல்லைகளாக, கிழக்கே ஆண்டிபட்டி கணவாய், தெற்கே கொட்டிபுரம் புதூர், மேற்கே போடிமெட்டு மலைப்பகுதியும் குரங்கணி மலைப்பகுதியும் இருந்திருக்கின்றன.

பொ. ஆ. 1529 ல் விஸ்வநாத நாயக்கர், அவரது அமைச்சர் தளவாய் அரியநாத முதலியார் உதவியுடன் அன்றைய தெலுங்கு நாட்டை ஆண்ட காக்கத்தியர் இராச்சியத்தின் பாளையக்காரர் முறையைத் தழுவி பாளையம் என்ற அமைப்பை மதுரையில் உருவாக்குகிறார். தனது ஆளுகைக்குட்பட்ட நாட்டை (மதுரை மண்டலத்தை), 72 பாளையங்களாக (72 ஆயுத நிலையங்கள் – Military administrative Units) பிரித்த போது திருமஞ்சனக்காடு, முதல் பாளையமாக உருவாக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து வரி வசூலித்தலும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளித்தலும் தேவையான போது நாயக்கரின் படைக்கு போர்வீரர்களை அனுப்புவதும் இவர்களது பொறுப்புகளாக இருந்தன.

அதுசரி, திருமஞ்சனக்காடு எப்படி போடிநாயக்கனூரானது? என்ற எனது அடுத்த கேள்விக்கும் பதில் இருக்கிறது அவரிடம். 1540 முதல் 1554 வரை பொறுப்பில் இருந்த சீலபோடைய நாயக்கர் காலத்தில் மல்லாக்கான் என்ற முகமதிய தளபதி, தன்னை எந்த சிற்றரசனும் வெற்றி கொள்ள முடியாது என்று இறுமாப்பாக சொல்லி வந்த நிலையில், சீலபோடைய நாயக்கர் மல்லாக்கானை வெற்றி கொள்ள, அதன்பிறகுதான் இந்தப்பகுதி அவர்களது குடும்பப் பெயரால் போடிநாயக்கனூர் ஆனது. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் ஆட்சி சென்ற பின்னர் பாளையங்கள், ஜமீன்களாக மாறின. மதுரை திருமலை நாயக்கரின் கீழ் இந்த ஜமீன்கள் வந்தன.

ஜக்கு நாயக்கர் பரம்பரைக்கான பதிவுகள் பொ.ஆ. 1376 முதல் கிடைக்கிறது. 1376 முதல் 1413 வரை ஜக்கு நாயக்கர், 1413 முதல் 1454 வரை ராசு நாயக்கர், 1454 முதல் 1483 வரை ஜக்கு நாயக்கர், 1484 முதல் 1502 மூத்த பங்காரு நாயக்கர், 1502 முதல் 1520 வரை போடைய முத்து நாயக்கர், 1520 முதல் 1531 வரை ராசு நாயக்கர், 1531 முதல் 1540 ஜக்கு முத்து நாயக்கர், 1540 முதல் 1554 வரை சீல போடைய நாயக்கர், 1554 – 1576 வரை திருமலை போடைய நாயக்கர், 1576 முதல் 1602 வரை திருமலை பங்காரு முத்து நாயக்கர், 1602 – 1632 வரை திருமலை போடைய நாயக்கர், 1632 முதல் 1684 வரை ஜக்கன நாயக்கர், 1684 முதல் 1701 வரை ராசு நாயக்கர், 1701 – 1737 வரை சக்கரப்ப நாயக்கர் என நீளும் பட்டியலில், அதற்குப்பின்னர் ஒன்றிரண்டு பெண்களின் பெயரும் தென்படுகிறது.

சக்கரப்ப நாயக்கருக்கு குழந்தை இல்லாததால் இவரது மனைவி அக்கம்மாள் – தொப்பம்மாள்1737 முதல் 1747 வரை ஜமீன்தாரிணியாக பொறுப்பு வகித்தார். அவருக்குப்பிறகு 1747 முதல் 1775 வரை சங்கரப்ப நாயக்கரின் சகோதரர் சீல ஜக்கன்ன நாயக்கர், 1775 முதல் – 1778 வரை போடைய நாயக்கர், 1778 – 1800 வரை திருமலை போடைய நாயக்கர், 1800 முதல் 1840 வரை திருமலை போடைய ராசு நாயக்கர், 1840 முதல் 1862 வரை பங்காரு திருமலை நாயக்கர் என வாரிசுரிமைப்படி ஜமீன்தார் பட்டம் கட்டிக்கொண்டனர்.

பங்காரு திருமலை நாயக்கர் 1862ல் இறந்தபோது, அவரது மகன் திருமலை போடைய காமராஜ பாண்டிய நாயக்கர் சிறுவனாக இருந்ததால் ஆங்கிலேயர்களே ஜமீனை நேரடியாக நிர்வகித்தனர். அதன்பின் காமராஜ பாண்டியர் 1862 முதல் 1888 வரை நிர்வகித்தார். அவருக்குப்பிறகு அவரது மகள் காமுலு அம்மாள் 1888 முதல் 1921 வரை ஜமீன்தாரிணி பொறுப்பிலிருந்தார். 1921 – 1941 வரை ஜமீன்தாரராக இருந்த டி.வி.கே. காமராஜபாண்டிய நாயக்கருக்கு ஆண்குழந்தை இல்லாததால் அவரது உறவினராகவும் வாரிசாகவும் விளங்கிய டி.பி.எஸ்.எஸ். ராஜபாண்டிய நாயக்கர் 25வது ஜமீன் பட்டம் சூட்டப்பட்டு 1941 முதல் 1968 வரையிலும் இருந்தாலும் 1948 ல் தமிழ்நாட்டில் ஜமீன்முறை (ஜமீன்தார் முறை ஒழிப்புச்சட்டம் 1948) ஒழிக்கப்பட்டது. அவருக்குப்பின் அவரது மகன் டி.பி.எஸ்,எஸ்.ஆர். வடமலைமுத்து சீலராஜய பாண்டியன் 1968 முதல் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப்பின் அவரது மனைவி முத்து வீரசுருளியம்மாளும் தற்போது ஸ்ரீ குமார் பாண்டியன் பொறுப்பிலும் ஜமீன் அரண்மனை இருக்கிறது.

இவர்களில் ஒரு சிலர் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் கிடைத்திருக்கின்றன. திருமலை பங்காரு முத்து நாயக்கர் திருமஞ்சனக்கோட்டை காவல் பொறுப்பு ஏற்றதுடன் சின்னமனூர் பூலாநந்தர் கோவில் கட்டியுள்ளார். இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு அடுத்தபடியாக பூச்சரக்கொடை வழங்கும் உரிமையை மதுரை நாயக்கர் அரசால் பெற்ற சக்கரப்ப நாயக்கர், திப்புசுல்தானிடமிருந்து தன்னைப் பாதுகாக்க கோட்டையைக் கட்டினார். திருமலை போடைய ராசு நாயக்கர் குழந்தை இல்லாததால் ஆறு பெண்களை மணந்தார் என்ற தகவலும் உபரியாகக் கிடைக்கிறது. பங்காரு திருமலை போடைய நாயக்கர் கொட்டக்குடி ஆற்றில் 4 இலட்ச ரூபாய் செலவில் அணையும், சுப்பிரமணியர் கோவிலையும் கட்டியதும் இந்த அரண்மனையைக் கட்டியவரும் இவரே. ஆங்கிலேய ஆட்சியர் ரோஸ்பீட்டருடன் (Rous Peter – 1812 ல் மதுரை – திண்டுக்கல் ஆட்சியர்) வேட்டைக்குச் செல்லும் வழக்கத்தை திருமலை போடைய நாயக்கர் கொண்டிருந்தார். இவரது காலத்தில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகக்கூறி, ஆங்கிலேயரால் இவருக்குத் தங்கப்பதக்கமும் ஆங்கிலேயரால் வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் வழியில் ஆங்கிலேயருக்கு ஓய்வு விடுதி, காமராஜ் பூபால சமுத்திர கண்மாய், மதுரை மேலமாசி வீதியில் பெரிய மாளிகை போன்றவற்றைக் கட்டியவர் காமராஜ் பாண்டியர்.

ஸ்ரீகாமுலு அம்மாள் கண்டமனூர் ஜமீனில் பிறந்து போடிநாயக்கனூர் ஜமீனில் 21வது பட்டம் பெற்ற திருமலை போடைய காமராச பாண்டியரை மணம் முடித்தவர். வத்தலக்குண்டு சென்றாயப்பெருமாள் கோவில், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு சமூகப்பணிகளை செய்துள்ளார். போடி நகரில் 1903ல் விக்டோரியா ஆரம்பப்பள்ளியாக தொடங்கப்பட்டது, இன்று ஜமீன்தாரணி காமுலம்மாள் (JKM) நினைவு மேல்நிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது. இங்கிலாந்தை ஆட்சிசெய்த ஏழாம் எட்வர்டு 1903 ஆம் ஆண்டு காமுலம்மாளைப் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். இவரது காலத்தில் 1913 ஆம் அண்டு ஆங்கிலேயர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் நறுமணப்பொருள்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல போடிநாயக்கனூரில் ரயில் நிலையம் உருவாக்கினர். மேலும் குரங்கனி – டாப் ஸ்டேஷன் பகுதியில் விளையும் பொருள்களை தரைப்பகுதிக்கு கயிறு (விஞ்ச்) மூலம் கொண்டுசெல்லும் வசதியும் செய்யப்பட்டது. எஸ்டேட்டில் காபி பயிரிடும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியது காமுலு அம்மாள்தான் என்கின்றனர் போடிவாசிகள்.

1921 – 1941 வரை ஜமீன்தாரராக இருந்த டி.வி.கே.காமராஜபாண்டிய நாயக்கர் மதுரை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், 1929 முதல் போடிநாயக்கனூர் முனிசிபல் கவுன்சில் சேர்மன், 1930ல் சென்னை மாநில சட்டப்பேரவையில் எம்.எல்.சி. என பல பொறுப்புகள் வகித்தவர். 1938ல் சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.

ஜமீன் ஒழிப்புச் சட்டத்திற்குப் பிறகு குறிப்பிட்ட நிலங்கள் மட்டும் தரப்பட்டு, மற்றவையனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டது. ஜமீன் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்களையும்கூட, இன்று நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, பஞ்சாயத்து அலுவலகம், பேருந்து நிலையம், வாரச்சந்தை போன்றவற்றிற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்கள் என தனது வம்சாவளியினர் செய்த பணிகளைப் பட்டியலிடுகிறார் ஸ்ரீ குமார்.

1849 – 1862 வரை ஜமீன்தாரர் பொறுப்பிலிருந்த பங்காரு திருமலை போடி நாயக்கர் ஆட்சியில்தான் இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில், இன்றைய போடியை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி, ஜக்கநாயக்கன்பட்டி போன்ற பகுதிகள் மக்கள் வசிக்கும் ஊராகவும், அரண்மனை இருக்கும் பகுதி அடர்வனமாகவும் இருந்திருக்கிறது. சுற்றிலும் அடர்வனமும், நடுவில் இந்த மூன்று அடுக்கு மாளிகையுமாய் கற்பனை செய்து பார்க்க… மிக ரம்மியமாக, பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

சுவரெங்கும் புகைப்படங்கள். அவற்றைப் பார்வையிட்டபடியே அரண்மனையைச் சுற்றிப்பார்க்கக் கிளம்புகிறோம். மாளிகையின் உச்சிக்குச் சென்றோம். பேச்சு வழக்கில் சொல்வதைப்போல ‘கண்ணுக்கெட்டிய தூரம் வரை அரண்மனையைச் சேர்ந்த இடம்’ தான் என்கிறார் குமார் பாண்டியன். மலையின் பின்னணியில் மரங்கள் சூழ்ந்தே இருக்கிறது அரண்மனை இன்னமும். மூன்றாம் அடுக்கிலிருந்து பார்த்தால் மாளிகையின் உச்சியில் கோயில் கோபுரம் போன்ற அமைப்பில் கலைநயமிக்க வண்ண ஓடுகள் (டைல்ஸ்) ஒட்டப்பட்டுள்ளது. பௌர்ணமி நிலவில் அவைகள் மின்னும் ஒளி அற்புதமாக இருக்குமாம். ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்டது என்கிறார் உடன் வந்த ஸ்ரீ குமார் பாண்டியனின் மனைவி. அதற்கும் மேலே கோவில் கலசங்கள் போல ஐந்து கலசங்கள் இருக்கின்றன.

சிதறி விழுந்து கிடந்த ஒரு ஓட்டினை எடுத்துப் புரட்டிப்பார்க்கிறேன். Made in Japan, SAJI , TRADE MARK என்ற எழுத்துக்களும் அடையாளங்களும் உள்ளன. அவற்றை புகைப்படம் எடுத்து உடனே இணையத்தில் ஆராய்கிறார்கள் பிள்ளைகள். சுவாரஸ்யமான செய்திகள் கிடைக்கின்றன. SAJI என்பது 1900 முதல் 1940 வரை ஜப்பானில் இயங்கிய Saji Tile Works’ என்ற நிறுவனத்தைக் குறிக்கிறது. உற்பத்தியாளர் நாகோயோ என்பவர். ஜப்பான் Saji Tile work நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த டைல் மஜாலிக்கா ஆர்ட் நவோ (Majolica Art Nouveau) டைல் வகையைச் சார்ந்தது. இந்த வகை ஓடுகள் இந்தியா, மலேசியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அலங்காரச்சுவர்களிலும் வாசல் நிலைகளிலும் அடுப்பைச் சுற்றிலும் (Fireplace surround) பொருத்தப்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த டைல்ஸ் தயாரிக்கப்பட்ட காலம் 1930 – 1940. எனில், இந்த வண்ணஓடுகள் அரண்மனை கட்டப்பட்ட காலத்தில் பதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை, அதற்குப் பின் வந்த ஜமீன்தாரர்கள் குறிப்பாக, 1921 முதல் 1941 வரை பொறுப்பில் இருந்த T.V.K. காமராஜ பாண்டிய நாயக்கர் காலத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த முக்கிய அரண்மனையைச் சுற்றிலும் ஏராளமான சிறுசிறு வீடுகளும் தோட்டங்களுமாக இருக்கின்றன. கண்கொடுத்த ராசு நாயக்கருக்கு ஐந்து பிள்ளைகள் என்பதால், பெரிய அரண்மனை தவிர்த்து. கீழமச்சு அரண்மனை, மேலமச்சு அரண்மனை, மச்சு அரண்மனை, கொட்டத்து அரண்மனை என நான்கு அரண்மனைகள் (வீடுகள்) கட்டப்பட்டன. யார் பட்டத்துக்கு வருகிறார்களோ அவர்களுக்கே பெரிய அரண்மனை. அதுதவிர, பணியாளர்களுக்கும் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதால்தான் அரண்மனை வளாகத்திற்குள் அத்தனை வீடுகள். வெளிவாசலிலிருந்து மாளிகை வரை செல்லும் பாதையின் சுவர்கள் வளைந்து நெளிந்து செல்கிறது. ஒவ்வொரு வளைவிலும் காவலாளிகள் நிற்பதற்காக அந்த ஏற்பாடாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அரண்மனையை பிரதியெடுத்தது போல அமைக்கப்பட்டதாம் இந்த அரண்மனை. அரண்மனையைச் சுற்றி பெரிய தோட்டம், நந்தவனம், குதிரை லாயம், யானை லாயம், கோதா என்று சொல்லக்கூடிய விளையாட்டு மண்டபம், போன்ற பகுதிகளைக் காணமுடிகிறது. கீழ்த்தளத்தில் நடைபெறும் பஞ்சாயத்து, நீதிமன்ற காட்சிகளை மூன்றாம் அடுக்கிலிருந்து பெண்கள் பார்க்க முடியும். தூரத்தில் பரமசிவன் கோவில் மலை தெரிகிறது. அங்கு கார்த்திகை விளக்கேற்றும் நிகழ்வை இங்கிருந்தே இரசிக்கலாமாம். தெருவில் நடக்கும் திருவிழாக்களை பெண்கள் வேடிக்கை பார்ப்பதற்காக இரண்டு பெரிய மாடங்கள். காவலாளிகளுக்கான கண்காணிப்பு அறைகள் என ஒரு அரண்மனைக்குரிய சகல இலட்சணங்களுடன் இருக்கிறது அரண்மனை.

 சுவர்கள் ஒவ்வொன்றும் ஒன்றரை அடி கனத்தில், சில இடங்களில் இரண்டு அடி சுவர்கள். அத்தனையும் சுண்ணாம்புச் சுவர்கள். கடுக்காய், முட்டை, கருப்பட்டி, சுண்ணாம்பு கலந்து கட்டப்பட்டுள்ளது. தரைக்கும் அதே கலவைதான் போல, வழுவழுவென முகம் பார்க்கலாம்போல இருக்கிறது. சில இடங்களில் சுவர்களே பளிங்குக்கல் போல பளபளக்கிறது. வியப்பு மாறாமல் ஒவ்வொரு அறையாகச் சுற்றிப்பார்க்கையில் இது (Indo – Saracenic) இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலை என்கிறார்கள் மகனும் மகளும். பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடக்கலை பாணி, இந்திய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் சிறப்பான அமைப்புகளை, பிரிட்டிஷ் வடிவமைப்புகளுடன் இணைக்கிறது என்று விளக்கமும் சொல்கிறார்கள்.

சுற்றிச் சுற்றி நிறைய அறைகள். சிறிய அறைகளில் கூட ஐந்து, ஆறு ஜன்னல்கள். காற்று சிலுசிலுவென அறையை நிரப்பிக் குளிர்விக்கிறது. ஒவ்வொரு அறையின் நிலைவாசல்படிகளே நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அத்தனை அழகாய்… கண்களை திருப்புவது கடினமாக இருக்கிறது.

இரண்டாவது அடுக்கில் ஆங்காங்கே நிறைய மண்பாண்டங்களும் குலுக்கைகளும் தாங்கள் வாழ்ந்த பழங்கதை பேசி நலம் விசாரிக்கின்றன. ஜன்னல்கள் அனைத்தையும் நீல வண்ண பெல்ஜியம் கண்ணாடிகள் அலங்கரிக்கின்றன. நுணுக்கமாக செதுக்கிய தேக்குமரத் தூண்கள், மகாராஷ்டிரா பாணி மர வளைவுகள், ஒவ்வொரு ஜன்னலின் மேற்புறமும் இயற்கை வர்ணத்தில் சிங்கம், மான் போன்ற அழகிய ஓவியங்கள், பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி, மரத்தாலான சேமிப்பு பெட்டிகள், ஐந்து அறைகள் கொண்ட அஞ்சறைப்பெட்டி என பார்க்கப் பார்க்கத் திகட்டாத பொக்கிஷங்களால் நிரம்பியிருக்கிறது இந்த இரண்டாம் அடுக்கு. இந்த அடுக்கு முழுவதும் தானிய சேமிப்புக்கான அறைகளாக இருந்திருக்க வேண்டும்.

முகம்பார்க்கும் பெல்ஜியக் கண்ணாடிகளைத் தடவிப்பார்க்கிறேன். எத்தனை முகங்களைப் பிரதிபலித்திருக்கும்? என்னால் அசைக்கவே முடியாத மிகப்பெரிய குழவியில் எத்தனை பேர் சேர்ந்து மாவு அரைத்திருப்பார்கள்? கேட்பாரறற்றுக் கிடக்கும் அருங்கோண வடிவ கல்லில் எந்தக் குழந்தைக்கு சந்தனம் அரைத்திருப்பார்கள்? கற்பனை ஓடுகிறது.

அரண்மனைக்குள் நுழைந்ததிலிருந்து ஏழாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை அவர்முன் வைத்தேன் – “சார், லட்சுமி விலாசம் எங்கே?” புத்தகங்களிலும் வலைதளங்களிலும் படித்துப் படித்து மனமெங்கும் நிறைந்து கிடந்த லட்சுமிவிலாசம் என்ற பகுதிக்குச் செல்ல மனம் துடித்துக்கொண்டிருந்தது. ஒரு சிறு புன்னகையுடன் “வாங்க, வாங்க அங்கேதான் போகப்போகிறோம்” என இருள் அடர்ந்து கிடக்கும் குறுகலான படிக்கட்டுகளில் கையில் விளக்கேந்தி, வளைந்து வளைந்து அவர் இறங்கிச்செல்ல, நாங்கள் பின் தொடர்கிறோம். அமானுஷ்ய சுரங்கத்திற்குள் நுழைவது போல, சற்று பயமாகக் கூட இருக்கிறது.

படிகளின் முடிவில்… அதோ தெரிகிறது அந்த அதிசயம்..! “யுரேகா… யுரேகா…” என கத்தாத குறையாக சுவர்களை நோக்கி மூவரும் ஓடுகிறோம். 200 ஆண்டுகால பழமையான ஓவியங்கள், ராமரின் அயோத்தி வாழ்வு முதல் ராவண வதம் வரை முழுக்கதையும் அற்புதமான நிறக் கலவைகளால் விரிந்தோடுகிறது. துயில்கொள்ளும் ரெங்கநாதர் ஓவியத்திலிருந்து தொடங்குகிறது காட்சிகள்.  

ராமர் சிவதனுசை தூக்கிவரும் காட்சியைப் பார்க்கும்போது நமக்கும் வலிப்பதுபோல தோன்றுகிறது. அவளும் நோக்க… அண்ணலும் நோக்கிய காட்சியில்தான் சீதையின் முகத்தில் எத்தனை வெட்கம்? அந்தத் திருமணக்காட்சிகளில் நாமும் ஒருவராகவே மாறிவிட, கொண்டாட்ட மனநிலையைத் தருகிறது. ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் திருமணக்காட்சிகள் தனித்தனியாக. நால்வருக்கும் ஒரேநாளில் திருமணம் முடிந்து மஞ்சள்நீராடிய ஓவியம் மனதை அள்ளுகிறது. மணமக்களுடன் சேர்ந்து எத்தனையெத்தனை பெண்களும் ஆண்களுமாய் மஞ்சள் நீராடியிருக்கிறார்கள்? மணமுடித்து அயோத்தி திரும்பும் நான்கு மணமக்களையும் வரவேற்கும் காட்சியை எப்படி விவரிக்க? மங்கல சீர்வரிசைகளை சுமந்து செல்லும் பெண்களும் நடனமாடும் மங்கையர்களும் அத்தனை நெளிவு சுழிவுகளுடன்…

பல்லக்கு ஊர்வலத்தில் இராமனும் சகோதரர்களும் ஊர்வலமாக வர வாணவேடிக்கை விடும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்… யானைகளும் சேவகர்களும் அம்பாரிகளும் பல்லக்குகளும் எத்தனை தெளிவாய்? மான் கேட்ட சீதையும் பொய்மானை துரத்திச் செல்லும் லட்சுமணனும்…  இராவணின் உருவம் பிரமிக்க வைக்கிறது.

பத்து பெண்கள் ஒரு ஓவியத்தில் இருந்தால் பத்து விதமான சேலை டிசைன்கள் என என்மனம் வழக்கமான பெண்ணின் மனமாய் அலைபாய்கிறது. சுவர்களில் வரையப்பட்டிருப்பது அதிசயம் என்றால் உத்திரத்தில் வரையப்பட்டிருப்பதை என்னவென்பது? எந்த ஓவியர் எப்படி அமர்ந்து இவ்வளவு நேர்த்தியாக உத்திரத்தில் ஓவியம் தீட்டியிருப்பார்? எத்தனை ஓவியர்கள் இந்த பணியைச் செய்திருப்பார்கள்? உத்திரத்தில் மட்டுமல்லாது அலங்கார வளைவுகளில்கூட அற்புதமான ஓவியங்கள்… அரண்மனையைக் கட்டிய பங்காரு நாயக்கரின் ஓவியமும் இறுதியாக வரையப்பட்டிருக்கிறது. வெகுநேரம் அந்த ஓவியங்களை ஆசை தீராமல் மூவரும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

மூலிகைச் சாறுகள், வண்ணக்கல்பொடிகள், வஜ்ரம் (பசை) ஆகியவற்றைக் கலந்து வண்ணப்பூச்சுகளைத் தயாரித்து பயன்படுத்தியிருக்கின்றனர். ஓவியங்களின் கீழே பேச்சு வழக்குத் தமிழில் விளக்கங்கள் எழுதியிருப்பது சிறப்பு. மண்டோதிரியின் பெயர் மாண்டவியம்மன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது படிக்கையில் ஆச்சரியமாக இருந்தது. கருப்பு நிறப்பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்கள் வாசிப்பதற்கு எளிதாக இருக்கும் என்ற சிந்தனை யாருக்குத் தோன்றியிருக்கும்? புள்ளிகள் இல்லாத தமிழ் எழுத்து நடைமுறை பனை ஓலை கையெழுத்துப் பிரதி எழுதும் மரபை ஒத்திருக்கிறது. வெளிநாட்டவர்கூட லட்சுமிவிலாஸ் ராமாயண ஓவியங்களை பார்வையிட வருவதாகத் தகவல் சொல்லியதுடன் அவர்கள் எழுதிச்சென்றிருக்கும் குறிப்புகளையும் காட்டுகிறார் குமார்.

வியப்பு மாறாமலும் அந்த இடத்தைவிட்டு அகல மனமில்லாமலும், பிற இடங்களையும் சுற்றிப்பார்க்கிறோம். அரச நீதிமன்றத்தின் சந்திப்பு மண்டபம் ஒன்றும் லட்சுமி விலாசம் மண்டபம் ஒன்றுமாய் பரந்த தர்பார் மண்டபம்… லட்சுமி விலாசம் மண்டபத்தின் உட்பகுதியில் பூஜை அறையில் போடி நாயக்கனூர் ஜமீன்தார்களின் குல தெய்வமான, எட்டு கைகள் கொண்ட வடமலை நாச்சியம்மனின் அரிய ஓவியமும் உள்ளது. பொன்னும் பொருளுமாய் ஆபரணங்களை சேமிப்பதற்கான கருவூலமாக பயன்படுத்தப்பட்ட சேமிப்பறைகள் கொண்ட தேக்கு மரப் பெட்டிகள் இன்று வெற்றிடங்களாய் காட்சியளிக்கிறது.

காலமும், வானிலையும் சுவரோவியங்களைத் தின்னத் தொடங்கியிருக்கின்றன. ஆங்காங்கே சிதைவுறத் தொடங்கியிருக்கும் ஓவியங்களைப் பார்க்கையில் இதையெல்லாம் யாராவது சீர் செய்து பாதுகாத்துவிட மாட்டார்களா என மனம் பதைபதைக்கிறது. தர்பார் மண்டபத்தின் மேற்கூரை உடைந்து விழுந்து பராமரிப்பின்றி கிடக்கிறது. மண்டபத் தூண்கள் திருமலை நாயக்கர் மஹாலை நினைவுபடுத்துகின்றன.

திப்பு சுல்தான் படையெடுப்பின்போது, அரண்மனைக்கு வடக்கே தம்பட்டான் பாறை என்ற இடத்திலிருந்து தம்பட்டம் அடித்து அந்நியர் படையெடுப்பை குறிப்பாக ஜமீனுக்கு அறிவிப்பார்களாம். அரண்மனைக்கும், ஜமீன் குடும்ப நண்பரான இஸ்லாமியப் புலவர் ராவுத்தர் வீட்டிற்கும் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக அரண்மனையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை ராவுத்தர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஊருக்குள் பேசப்படும் செய்தியில் வரும் சுரங்கப்பாதை எங்கிருக்கிறது என்றால், அப்படி எதுவும் இல்லை என்று ஸ்ரீ குமார் பாண்டியன் சொன்னபோது சிறிது ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இருவருக்குமான மதம் கடந்த ஆழ்ந்த நட்பின் காரணமாக போடி அரண்மனையில் இன்றும் ஆண் வாரிசு பிறந்தால், புது தொட்டில் சேலையும், தொட்டில் கயிறும் இராவுத்தர் பரம்பரையிலிருந்து அரண்மனைக்கு வழங்கும் மரபு தொடர்கிறது.

வெளிச்சுவர்களில் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருக்கும் யாளி போன்ற உருவம் கண்களைக் கவர்கிறது. ஆனால் தமிழகக் கோவில்களில் காணப்படும் யாளி போன்ற அமைப்பிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. தீய ஆவிகளைத் தடுக்கவும் கட்டிடத்தை பாதுகாக்கவும் வைக்கப்படும் விசித்திரமான தோற்றம் கொண்ட ஒருவகை கிரோடெஸ்க் (Grotesque) தான் அவைகள்.  

நன்றி சொல்லி கிளம்புகிறோம். வாசல்வரை வந்தவரிடம் விடைபெறும் முன்னர் மீண்டும் ஒருமுறை அரண்மனையைத் திரும்பிப் பார்க்கிறேன். 150 குடும்ப உறுப்பினர்களும், 200க்கும் மேற்பட்ட பணியாட்களுமாய் நடமாடிக்கொண்டிருக்கும் காட்சி மனக்கண்ணில் ஓடுகிறது. இதைச் சாதாரணக் கட்டிடமாகக் கடந்து போக முடியவில்லை. ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து குடியேறிய நாயக்கர் காலக்குடும்பத்தின் மரபை சாட்சியமாகத் தாங்கும் இந்த அரண்மனையின் ஒவ்வொரு சுவரும் ஒரு வரலாற்றையும் கலைநயத்தையும் பேசுகிறது.

ஆயிரமாண்டு கால வரலாற்றை மூளையிலும் முன்னூறு ஆண்டுகால கலைச்செல்வங்களை மனதிலும் நிரப்பிக்கொண்ட நிறைவில் வெளியேறுகிறோம்.

சான்றுகள்

Rajakambalam Hristory – Palavanatham blogs

Kambalathu Nayakkars

திருமலை போடி நாயக்கர் rajakambalarocks.blogspot

ஓவியங்களால் ஒரு அரண்மனை – தினமலர், பிப்ரவரி, 12, 2013

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.