பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு சுவாரசியமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் திருமணத்திற்குப் பிறகு குழந்தையைத் தள்ளிப் போடுபவர்கள், மறுபக்கம் அதை எதிர்ப்பவர்கள். குழந்தையைத் தள்ளிப் போடுவதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் மிக முக்கியமான இரண்டு, தொழில் ரீதியான முன்னேற்றமும் பொருளாதாரமும். இரண்டுமே தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணிகளே. சரி, இதில் என்ன இருக்கிறது? குழந்தை எப்போது வேண்டும் என்பது கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் ஒரு தனிப்பட்ட விஷயம். இதில் நாம் தலையிடுவதற்கோ கருத்து தெரிவிப்பதற்கோ எதுவும் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்கூட, இதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில் ஒரு மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
குழந்தை என்பது கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் ஒரு தனிப்பட்ட விஷயம்தான். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் அது ஒரு சமுதாயக் கட்டமைப்புக்கு இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதை வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்திலோ, தொழில் முன்னேற்ற அடிப்படையிலோ அல்லது ‘வீட்டில் என்ன விசேஷம்’ என்கிற சமுதாய எதிர்பார்ப்பாகவோ மட்டும் பார்க்க முடியாது. அதையும் தாண்டிய ஓர் அறிவியல் ரீதியான முறையில் இதை அணுக வேண்டும்.
குழந்தை பெறுவதற்கு முன்னால் நான் என் தொழிலில் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். என்னுடைய பொருளாதார நிலையில் ஓரிரு படிகள் மேலே சென்றிருக்க வேண்டும். குழந்தைக்குத் தேவையான அத்தனை அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கணவன், மனைவிக்கு இடையிலான புரிதல் அதிகரித்திருக்க வேண்டும். ஒரு தாயாகவோ தந்தையாகவோ பொறுப்பேற்பதற்கு மனரீதியாகத் தயாராக வேண்டும் போன்ற கோரிக்கைகள் எவ்வளவு நியாயமானதோ அதே அளவுக்கு நம் ஆரோக்கியம் சார்ந்து யோசிப்பதும் நியாயமானதே.
ஓர் ஆணுடைய உடலுக்கும் பெண்ணுடைய உடலுக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒருபோதும் ஓர் ஆண் பெண்ணாகவோ, ஒரு பெண் ஆணாகவோ உணரலாமே தவிர மாற முடியாது. இந்த நிதர்சனத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சென்று ஆராய்ந்தால் இதில் இருக்கும் கருத்தியல் சார்ந்த உண்மைகள் புலப்படும்.
பெண்ணிற்கும் ஆணிற்கும் உடல் ரீதியாக இருக்கும் தனித்துவங்களைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அதுவும் குறிப்பாகப் பருவமடைதல், கருத்தரித்தல், தனிப்பட்ட சுகாதாரம் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான சூழ்நிலைகள் அமையாவிட்டாலும், தயக்கங்களை உடைத்து இவற்றைப் பற்றிய புரிதலை இளம் தலைமுறையினருக்கு ஏற்படுத்துவது நம் கடமை. அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு இதுவே ஒரு சிறந்த முயற்சி.
பொதுவாகவே பெண்களின் வாழ்நாளுக்குத் தேவையான அத்தனை கருமுட்டைகளும் அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே, அதாவது அவர்கள் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் போதே உருவாகிவிடுகின்றன. பெண்கள், பருவமடைந்தவுடன் மொத்த கருமுட்டைகளில் மாதம் ஒன்று என்கிற கணக்கில் ஒவ்வொன்றாக முதிர்ச்சி அடைந்து கருத்தரித்தலுக்காகத் தயார்படுத்தப்படுகின்றன. கருத்தரிக்காத மாதங்களில் அவை உடைந்து உதிரப்போக்கு நடைபெறுகிறது. இதைத்தான் மாதவிடாய் என்கிறோம்.
பெண்களின் வயதிற்கும் கருமுட்டைகளின் ஆரோக்கியத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பெண்களின் கருமுட்டைகள் யாவும் அவர்கள் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் போதே உருவாக்கப்படுகின்றன என்பதனால் பிறப்பிற்குப் பின் உணவு பழக்கவழக்கங்களாலும் சுற்றுச்சூழலாலும் உடலில் ஏற்படும் தாயனை மாற்றங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. உதாரணத்திற்கு ஒரு பெண்ணின் வயது இருபத்தைந்து என்று வைத்துக் கொண்டால் அவள் கருமுட்டைகளின் வயதும் இருபத்தைந்தே. அதாவது இருபத்தைந்து ஆண்டுகளாக அவள் உடல் எதிர்கொண்ட வேதியியல் மாற்றங்கள் அனைத்தும் அவள் கருமுட்டைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இதில் தாயனை மாற்றங்களும் மரபணு பிறழ்வுகளும் அடக்கம். பெண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க கருமுட்டைகளின் வயதும் அதிகரிக்கும். கூடவே அதில் ஏற்படும் தாயனை மாற்றங்களும் அதிகரிக்கும். இது சில நேரத்தில் மரபணுக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அந்தப் பெண்கள் பெற்றெடுக்கக் காரணமாகிறது.
வயது முதிர்ந்த தாயிற்குப் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் மரபணுக் குறைபாடுகளுடன் பிறக்கும் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், அப்படி வயது முதிர்ந்த தாயிற்கு மரபணுக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பது உண்மை. வயது அதிகரிக்கும் போது கருமுட்டைகளின் ஆரோக்கியம் கணிசமாகக் குறைகிறது. அதே போல இளம் வயது பெண்கள் அதாவது 16 – 24 வயதுள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு காரணம் கருப்பையின் வளர்ச்சி, உடல் வளர்ச்சி போன்றவைதான். ஆதலால் குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் தாயின் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. சரி எதுதான் கருத்தரிப்பதற்குச் சரியான வயது என்று பார்த்தால் 25 – 34 என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இப்போதிருக்கும் வாழ்க்கை முறையில் 25 – 30 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதற்கு மேல் ஓரிரு ஆண்டுகள் வைத்துக் கொண்டாலும் அதிகபட்சம் 32 வயதே சரியானது.
சரி, ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையா? ஆண்களின் விந்தணுக்கள் கருமுட்டைகளைப் போல் அல்லாமல் புதுப்பித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. ஓர் ஆணின் உடலில் தினமும் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல ஒரு விந்தணுவின் சுழற்சி முடிவதற்கு இரண்டரை மாதங்கள் வரை ஆகும். இதனால்தான் கருமுட்டைகளில் ஏற்படும் பிரச்னைகளைவிட விந்தணுக்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குணப்படுத்துவது சுலபம். சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இவை அனைத்தும் பெரும்பான்மையான விந்தணு பிரச்னைகளைக் குணப்படுத்த போதுமானவை.
என் தாத்தாவோடு பிறந்தவர்கள் பத்துப் பேர். அந்தக் காலத்தில் பத்துப் பதினைந்து பிள்ளைகள் பெற்றுக் கொள்வதெல்லாம் சாதாரணம். அப்படியானால் ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போம். முதல் குழந்தை பிறக்கும் போது தாயின் வயது 16 அல்லது 17 என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வருடம் இடைவெளி இருந்தால் பத்தாவது குழந்தைப் பிறக்கும் போது தாயின் வயது 36 அல்லது 37 தொட்டிருக்கும். அப்படி என்றால் அவர்களுக்கு மரபணுக் குறைபாடுகள் உள்ள குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்க வேண்டுமே. ஆனால், இந்த மரபணுக் குறைபாடு என்கிற வார்த்தையே சமீபத்தில்தான் பிரபலமாகி உள்ளது. மேற்கூறிய அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளுக்கு இது முரணாக இருப்பதை உணர முடிகிறது.
இதற்கு காரணம் நம் உடலை வெறும் மரபணுக்கள் என்கிற வட்டத்திற்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. சுற்றுச்சூழல், பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், வாழ்வியல், தட்பவெப்ப நிலைகள் முதலியவைதான் மரபணுக்களின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும்தான் மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன. நம் தாத்தாவின் தலைமுறைக்கும் நமக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களே இதற்கான பதில். முந்தைய தலைமுறையின் ஆரோக்கியம் இந்த நவீன தலைமுறையினரிடம் இல்லாமல் போனதற்கு உணவும் வாழ்க்கை முறையும்தான் காரணம். தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கியது ஆனால், உடல்? முந்தைய தலைமுறையினரைவிட அடுத்த தலைமுறையினர் அறிவில் கிட்டத்தட்ட 10 புள்ளிகள் மேலோங்கி இருப்பர் என்பது விதி. ஆனால், ஆரோக்கியத்தில் என்பது கேள்வி. இந்தக் கேள்விதான் இன்றைய தலைமுறையினரின் அடிப்படை உடல்நல பிரச்னைகளுக்கான தீர்வு. கொஞ்சம் ஆரோக்கியம் சார்ந்தும் சிந்திப்போம்.
(தொடரும்)
படைப்பாளர்:
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.