நட்புகளுடனோ உடன்பிறப்புகளுடனோ தன் சுயம் விரும்பிய அனுபவங்களை உட்கிரகித்து இச்சமூகத்தில் பேராளுமையாக மேலெழும்ப பயணங்கள், அவள் திரட்டிய தகவல்கள், சமூகத்துடனான உறவு ஆகிய எரிபொருள்கள் எல்லாம் இதுநாள்வரை பேருதவி இருந்து ஒளியாகத் தந்தது.
திடீரென எரிபொருள் கிடைக்காமல் வண்டி அப்படியே கிடப்பில் போடப்பட குயிலியின் அம்மா நாச்சி, “இனி நீச்சலுக்குச் செல்ல வேண்டாம், முன்ன மாதிரி ஊர் சுத்தறதையும் நிறுத்திடு” என்றாள்.
பெரும் உத்வேகத்துடன் வானில் உயர உயரப் பறந்த பறவையின் இறக்கைகளை உடைத்து கூண்டில் அடைத்து விட்டனரே என்ற எண்ணமும் வாட்ட, அனைத்தையும் இழந்த ஒட்டுமொத்த உணர்வை யாரிடம் சொல்லி விவரித்து, தீர்வு தேட முடியும் எனத் தோன்றவில்லை, நம்பிக்கையுமில்லை.
இனி வாழ்க்கையில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வெளிச்சமே தென்படாத உணர்வு. ஏன் நமக்கு மட்டும் நடக்குது? உடன்பிறந்த தம்பியையோ அண்ணனையோ அம்மா சொல்லவில்லை. அம்மாவின் பேச்சை மீறியதில்லை. அவள் விருப்பத்தை அம்மா தடுத்ததும் இல்லை. இதையெல்லாம் அம்மாவிடம் ஏன் என்று கேட்டு விடுவோம் என்று கிளம்பினாள்.
“அம்மா, ஊர் உலகத்துல எல்லாம் பருவமெய்தின சடங்கு செஞ்சு, ஊர் கூட்டி எம்பொண்ணு வயசுக்கு வந்துட்டான்னு பெரிய செலவு பண்ணி, அலங்காரம் பண்ணி பெரிய விழா எடுத்து படிப்பை 10, 15 நாள்கள் நிறுத்திட்டு, தாய்மாமன்கிட்ட சீர் வாங்கிட்டு, தாய்மாமன் இல்லன்னா ஏதாவொரு மாமன்கிட்ட கெஞ்சி சீர் செய்யச் சொல்லி , அவளை அந்த நாள்களில் வீட்டுக்குள்ள விடாம தீட்டுனு வெளில தனியா உட்கார வைச்சு, தனி டம்ளர், தட்டுனு எதையும் வீட்ல தொடக் கூடாது தொட்டா தீட்டுன்னு ஒதுக்கி வச்சுட்டு, இருக்கற சடங்கு அத்தனையும் இந்தச் சின்னப் பொண்ணு கேட்டான்னு ஒத்துக்கிட்டு என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனீங்க. நான் உங்களுக்குப் பொறந்தத நெனச்சுப் பெருமைப்படறேன். நீ அம்மாவா கிடைச்சதை மனமகிழ்வா, யாருக்கும் கிடைக்காத அற்புதமா எண்ணி மகிழ்ந்திருந்த சமயத்துல. . . இப்படி என் இறக்கையை ஒடச்சி வீட்டுல உட்காரச் சொல்றிங்களே… ஏம்மா எனக்குப் பிடிச்ச நீச்சலுக்குப் போகக் கூடாதுன்னு சொல்ற , எனக்கு இப்பவே பதில் தெரிஞ்சாகணும்.”
“உன் விருப்பத்தை எப்பவும் நானும் மதிக்கறேன் செல்லம். ஆனா, இப்போ பெரிய பொண்ணு ஆயிட்ட. முன்ன மாதிரி வெளில சுத்தாத, பொண்ணுங்களுக்கு இந்தச் சமூகத்துல பாதுகாப்பு இல்ல.”
“ஆனா தம்பி, அண்ணன் வெளில சுத்தறானுங்க, அவனுங்கள ஒன்னும் சொல்லலியேமா! ”
“பெரிய பொண்ணு ஆனதுக்கப்புறம் வெளில போகக் கூடாது. எனக்கு காரணம் சொல்லத் தெரியல. ஆனா, வெளில போகாதம்மா, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”
குயிலியை அவள் விருப்பப்படி இருக்கவிட்ட, அனுமதித்த அம்மாவே இப்படிச் சொன்னதும் அம்மாவின் பேச்சு சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு புறமும், ஏன் அதை மீறினால்தான் என்ன என்றும், மீறினால் அம்மா சொல்படி எதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோமா என்ற பயமும் ஒருபுறம் வாட்டி வதைத்தது. அப்படி என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது என்று பலவாறு சிந்தனை பறந்தது குயிலிக்கு.
‘சரி, யாரிடமாவது இது குறித்துக் கேட்போம். நம்மை எங்கும் தடை பண்ணாத அம்மாவே இப்படிச் சொல்றாங்க. காரணம் தெரிஞ்சுக்காம விடறதில்ல. ஒவ்வொருத்தரா இதுக்குச் சரியா வருவாங்களா’ என்று மனம் அலசிக்கொண்டே இருந்தது.
தனது ஆசிரியர் தனலட்சுமியிடம் கேட்கலாம் என யோசித்தாள். தனலட்சுமி டீச்சர் தன் வகுப்பிற்கு வரவில்லை, எனினும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். நாளை பள்ளிக்குச் சென்றதும் கேட்டு, தெளிவு பெற வேண்டும் என மனதில் இறுதிக்கொள்ள முடிவெடுத்தாள்.
மறுநாள் தனலட்சுமி டீச்சரைச் சந்தித்தாள்.
“ரொம்ப அவசரமா இப்பவே பேசணுமா? மதியம் வரை வகுப்பிருக்கு. மதிய உணவு இடைவேளையின் போது பேசலாமா “ எனக் கேட்க
”மதியமே பேசலாம் மிஸ். தனியா பேசணும்” என்றாள் குயிலி.
மதியம், “சொல்லுமா?” என்றார் ஆசிரியர். தனது பயணக்கனவுகள், தான் மேற்கொண்ட பயணங்கள், பயணங்களில் அறிந்த விஷயங்கள், நீச்சல் கற்ற அனுபவங்கள், நீச்சலில் பெற்ற திருப்தி எனத் தன்னைப் பற்றி எவ்வித இடையீடும் இல்லாமல் சொல்லி முடித்தாள். ஆசிரியரும் கவனமாகக் கேட்டார்.
“அழகான வாழ்க்கையை வாழ்ந்திருக்கம்மா. ஒரு பொண்ணை இப்படிச் சமூகத்தில் அனுமதிக்க மாட்டாங்க. அந்த வாய்ப்பு உனக்குக் கிடைச்சிருக்கு.”
“நீங்க சொல்வது உண்மைதான். எங்க அம்மா என் விஷயத்துல எங்கும் தலையிட்டதே இல்லை. தவறு செய்யும்போது தயங்காம மாற்றுக் கருத்துச் சொல்லி வழிநடத்தத் தவறமாட்டாங்க. ஆனா, அவங்க நேத்து சொன்னதுக்குதான் என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்க உங்ககிட்ட வந்தேன்.”
“அப்படி என்னம்மா அம்மா சொன்னாங்க?”
“மிஸ், பொதுவா மாதவிடாய் முதல்முறை வந்தா சடங்கு, சம்பிரதாயம்ன்னு நிறைய இருக்கும். அதுக்குன்னு பெரிய விழா எடுப்பாங்க. ஆனா, நான் கேட்டன்னு அந்த விழாவோ சடங்கோ ஏதும் பண்ணலை. என்னை முதல் நாளே பத்தாம் வகுப்புத் தேர்வுன்னு பள்ளிக்கூடம் அனுப்பி வைச்சிட்டாங்க” என்றாள் குயிலி.
“ஆஹா, எவ்ளோ பெரிய விஷயத்த சாதிச்சிருக்க குயிலி நீ. அதுக்கு உங்க அம்மாவும் குடும்பமும் எவ்ளோ ஆதரவு தெரிவிச்சிருக்காங்க தெரியுமா! வாழ்த்துகள் உனக்கும் உங்க குடும்பத்துக்கும். இதுல எவ்ளோ பிரச்னைகளை உங்க அம்மாவும் குடும்பமும் சந்திக்க வேண்டி வந்திருக்கும். சந்தித்திருக்கும். அதெல்லாம் உனக்காகத் தாங்கிக்கிட்டாங்க. இப்படித் தொடங்கின மாற்றங்கள்தாம் சமூகத்தை முன்னோக்கி சமத்துவ சமூகமாக நகர்த்திக்கிட்டிருக்கு. நான் என் குடும்பத்துலயும் இப்படியொரு மாற்றத்தை முன்னெடுக்கணும்ன்னு நெனச்சிட்டு இருக்கேன்.”
“நான் யோசிச்சு பார்த்தேன் மிஸ். இந்தச் சடங்கெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன். அதுக்குச் செலவு பண்றத என் படிப்புக்குச் செலவு பண்ணுங்க. நான் படிக்கணும்ங்கிறதுதான் நான் கேட்டதோட நோக்கமே!” என்றாள் குயிலி.
“ரொம்ப சூப்பர்ம்மா” என்று குயிலை அணைத்தார் தனலட்சுமி.
“என்ன சந்தேகம்?”
“இல்ல மிஸ். இதெல்லாம் ஒத்துக்கிட்ட அம்மா, நான் பருவம் அடைஞ்சதுக்குப் பிறகு வெளில எங்கயும் முன்ன மாதிரி போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. காரணம் கேட்டா சொல்லத் தெரியலன்னு சொல்றாங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கலன்னா மண்டை வெடிச்சிரும் போல இருக்கு. அம்மா சொல்லைத் தட்டவும் முடியல. அம்மாகிட்ட அறிவியலா புரிய வைச்சிடுவேன். அப்படித்தான் மாதவிடாய் தீட்டு இல்லன்னு புரிய வைச்சேன். அதே நேரத்துல என்னால எங்கயும் போகாம வீட்டுக்குள்ளயும் இருக்க முடில. ஒரே மன அழுத்தமா இருக்கு. எதைப் பார்த்தாலும் வெறுப்பா இருக்கு. படிக்கக்கூடப் பிடிக்கல. சாப்பிடவும் தான்” என்றாள் குயிலி விரக்தியோடு.
“இவ்ளோ நாள் உன் சுயம் தேடின வாழ்க்கையை வாழ்ந்துட்டு திடீர்ன்னு சுயத்தைச் சுருக்கிக்கறதுங்கிறது மிகப்பெரிய வலியும் வேதனையும் தரும்தான். எனக்கு அது நல்லாவே புரியுது. ஆனா, என்ன செய்யறது, நம் சமூகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கற சமூகமாக மாறணும்.”
“அப்போ பொண்ணா பொறந்தா வெளில தன் விருப்பப்படி போகக் கூடாதுன்னு சொல்றீங்களா?”
“நான் அப்படிச் சொல்லல. சமூக நிலையை ஒட்டிச் சிந்தித்து அதில் மெல்ல மாற்றங்கள் கொண்டு வர முயற்சி பண்ணணும். சமூகம் ஆண்களுக்கு ஒரு செளகரியத்தைக் கொடுத்திருக்கு. அதன்படி ஒப்பிட்டு யோசிக்காம நமக்கான வெளியை, எதார்த்தத்தை ஒட்டி நாம் உருவாக்கணும். உன்ன மாதிரி பெண்களால் தான் இந்தச் சமூகம் ஆரோக்கியமான சமூகமாக நகரும். அதனால எப்படி உனக்கான வெளியை உருவாக்கிக்கறதுனு யோசி, இது போல தனக்கான வெளியை உருவாக்கி வாழ்க்கையில் சாதித்த பெண்கள் வாழ்க்கை வரலாற்றைப் படித்து அவர்கள் எப்படி இந்தச் சமூகத்தில் மாற்றத்திற்கான ஊன்றுகோலாக இருந்திருக்காங்கன்னு முன்மாதிரியா எடுத்துக்கிட்டு, உன் வாழ்க்கைல எப்படிச் சாத்தியப்படுத்தலாம்ன்னு நீதான் கண்டறியணும். பின்னோக்கிப் பார்த்தா எவ்ளோ ஒடுக்குமுறைக்குப் பெண்கள் உள்ளாகியிருக்காங்க. அப்படிப் பாடுபட்டவர்கள் தோள்மீதேறி நாம் பயணிக்கிறோம். நாமும் நம் பங்கிற்குச் சமூகக் கடமை ஆற்றுவோம் குயிலி.”
“சரி, ஏன் அப்படிப் பெண்களுக்குச் சமூகம் கட்டுப்பாடு விதிச்சிருக்கு.”
“அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. ஒரு காலத்தில் தாய்வழி சமூகமா, மூத்த தாய் சமூகத்தை வழிநடத்திக்கிட்டு இருந்த காலம் மாறி, தந்தைவழி சமூகமாகப் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களை, கட்டுப்பாடுகளைப் பெண்கள் மீது திணித்து அவளை அடக்கி ஆணுக்குக் கீழ்தான் பெண் எனப் பின்னால் உருவான தந்தைவழி மதங்கள், சமூகத்தில் பின்னப்பட்ட பண்பாட்டின்வழி கருத்தியல்கள் எல்லாம் போதிக்க, பொண்ணுக்கான வெளியானது கட்டுப்படுத்தப்பட்டது. இவை எல்லாம் ஆண், பெண் என இருவரும் ஏற்றுக்கொண்டு நடக்கும்படி ஆனது. அதில் குறிப்பாக அவளது உடல் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அதில் குடும்ப கெளரவம், தன் உடலை வேறொருவன் தொட்டால் அவள்தான் குற்றவாளி எனக் குற்றத்துக்குள்ளானோரையே குற்றவாளி ஆக்கி பெண்ணை அடக்கி வைத்தனர்.
“பதின்ம வயது பருவத்தில் தன் அடையாளம் தேடிக் கண்டடைதல், ஆர்வம், ஆளுமையை வளர்த்தல், தன் திறன்களை வளர்க்க, பேராற்றல் வளர இருக்கும் பருவம் எனப் பல புதுமைகளை உள்ளடக்கிய அழகான, அருமையான பருவம் அது. உள்ளமும் உடலும் வீட்டிற்குள் முடக்குவதால் சமூகத்திற்கே பேரிழப்புதான். அதை இச்சமூகம் புரிந்துகொண்டு மாற்றம் காண வேண்டும். இப்படி ஒடுக்கப்படுவதால் குறிப்பாகப் பெண்கள் பல உளச்சிக்கலுக்கு ஆளாகி சவலை மனிதர்களாக வளர்க்கப்படுகின்றனர். அதனாலேயே பெண் இந்தச் சமூகத்தில் வளரல, வளர்க்கப்படுகிறாள் என மாற்றத்தை யோசிப்பவர்கள் சொல்வார்கள் குயிலி.”
“நீங்க சொன்னதை எல்லாம் தேடிப்பிடித்துப் படிக்க ஆர்வம் வந்திருக்கு. நம்மைச் சுற்றி பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வலை மெல்ல மெல்லவே மாற்றம் காணும் என்ற புரிதல் எனக்கு வந்துடுச்சு. நான் என்னாலான முயற்சிகளை எடுத்துப் பெண் சமூகம் தன் வெளியை உருவாக்கிக்கொள்ள முன்னோடியாய் இருப்பேன் மிஸ். என்னைத் தெளிவுபடுத்தி யதார்த்தத்தைப் புரிய வைத்ததற்கு நன்றி மிஸ். நீங்க சொன்னது போல இந்தச் சமூகத்தின் தடைகள் தாண்டி சாதித்த, தனக்கான வெளியை உருவாக்கிக்கொண்ட பெண்கள் பத்தி வாசிக்கத் தொடங்குறேன். நீங்களும் அப்பப்போ ஆளுமைகளை எனக்குச் சொல்லுங்க.”
“சரிம்மா. தேவைப்படும் போது கூப்பிடு. நீ படிச்ச புத்தகங்களின் கருத்துகளை உன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பகிர்ந்துக்க. அது முக்கியம். வாசிச்ச புத்தகங்களை மத்தவங்க வாசிக்கக் கொடு. குறிப்பா உன்னுடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்குக் கொடும்மா குயிலி.”
பதின்ம வயது குழந்தைகளைச் சரியாகக் கையாண்டால் மனித வளம் பெருகி இச்சமூகம் முன்னேற வழிவகுக்கும். அதற்கு அவர்களின் உளவியல், உடலியல் தேவைகளை அறிவியல் மனப்பான்மையோடு அணுக வேண்டும். அவர்களுக்கான கல்வி, இயங்கு வெளி, சமூகத்தை, சமத்துவத்தின்மீது நம்பிக்கைகொண்ட மக்கள் கட்டமைக்க உந்துகோலாக இருக்க, ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாக வலியுறுத்த வேண்டும். சமூகம் மாறும் என நம்புவோம். அதுவரைத் தொடர்ந்து உரையாடுவோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
சாந்த சீலா
சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.