பகுதி 2
“என்ன இப்படித் திடீர்ன்னு உங்களுக்குக் காய்ச்சல் வந்துடுச்சு. எங்கயாவது போனீங்களா? ஒழுங்கா சாப்பிட்டிங்களா?”
“நான் வேலை முடிஞ்சதும் நேத்து வீட்டுக்குத்தான் வந்தேன். வேலையில சரியா சாப்ட்டு தண்ணி குடிக்காம விட்டுட்டேன் போல இருக்கு. அதனால ஒருவேளை காய்ச்சல் வந்துச்சோ?”
“என்னவோ டாக்டரம்மாகிட்டயே கேட்போம்” என்று மனைவியுடன் உரையாடிக்கொண்டிருந்த காத்திருப்பு நேரத்தில் தனது ஓபி சீட்டின் எண் வாசிக்கப்பட மருத்துவர் அறைக்குச் சென்றார்கள் இருவரும்.
“வாங்க இப்படி உட்காருங்க, என்ன உடம்புக்குப் பிரச்னை?”
“டாக்டர் திடீர்ன்னு கடும் காய்ச்சல், ஒடம்பு ரொம்ப சோர்ந்து போயிடுது. உட்காரவே முடியல.”
“வீட்ல யாருக்காவது காய்ச்சல் இருக்கா? இல்ல காய்ச்சல் இருக்கவங்ககூட இருந்தீங்களா?”
“வீட்ல யாருக்கும் காய்ச்சல் இல்ல. வேலை செய்யற இடத்துலயும்கூட இல்ல டாக்டர்.”
“ஓ சரி. காய்ச்சல், அசதி தவிர வேறேதும் அறிகுறி இல்லைல?”
“இல்லைங்க.”
மருந்துகளை மருந்துச் சீட்டில் எழுதத் தொடங்கிய வேணி முடித்துவிட்டு, “இதைச் சரியான வேளைக்குச் சாப்பிடுங்க. உடம்பு சரியாயிடும். இருந்தாலும் ரத்தப் பரிசோதனை பண்ணிடலாம்.”
“சரிங்க டாக்டர். நீங்க வந்ததுக்கு அப்புறம்தான் இந்த மருத்துவமனைக்கே ஒரு பொலிவு வந்திருக்கு. உங்கள எல்லாரும் நல்லா வைத்தியம் பார்க்கறீங்கன்னு புகழ்றாங்கம்மா. நீங்க புள்ள குட்டியோட நல்லா இருக்கணும். உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க?”
“எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. நான் என் கடமையைத்தான் செய்றேன். பெருசா ஒன்னும் செய்யல. என் வேலையை ஒழுங்கா செய்யறேன் அவ்ளோதான். அதையே பெருசா நெனச்சா எப்படி?”
“என்னங்க அப்படி இருக்கவங்க கம்மியாயிட்டாங்க, என்ன இருந்தாலும் நீங்க எங்களுக்கு ஒசத்திதான் டாக்டர். ரெண்டும் பொண்ணா! அச்சச்சோ, பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ருவாங்களே… உங்ககூட கடைசி வரை இருக்க மாட்டாங்களே! இன்னொரு கொழந்தை வைச்சுக்கக் கூடாதா டாக்டரம்மா. இப்படிப் பொண்ணாப் போச்சே ரெண்டும்.”
வேணிக்கு ஒரே சிரிப்பு. இந்த டயலாக்குகளைக் கேட்டுக்கேட்டு கடுப்பு ஒருபுறம் வந்தாலும் இந்தச் சமூகத்தை எண்ணி சிரிப்புதான் வந்தது.
“உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க? என்ன படிக்கறாங்க?”
கேள்வி கேட்டுக்கொண்டே தன் உதவியாளரை அழைத்து அடுத்து ஆள் இருக்கிறார்களா என்று வினவ, “இல்லைங்க டாக்டர். ஓபி நேரம் முடிஞ்சிடுச்சு” என்று பதில் வந்தது.
“ எனக்கு பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு. பையன் 9 வது, பொண்ணு 12 வது படிக்கறாங்க டாக்டர்.”
“ ஓ சிறப்பு. பொண்ணை நல்லா காலேஜ்க்கு அனுப்பி படிக்க வைங்க.”
“எங்கங்க பொண்ணை இவங்க சனங்க படிக்க வைக்கறாங்க? எம் பொண்ணு ரொம்ப நல்லா படிப்பா. நேத்துகூட வக்கீல் ஆவணும்னு கேட்கறா. காலேஜ் எல்லாம் படிக்க அனுப்ப மாட்டோம். இதோட நிறுத்திடுவோம்னு சொல்லிட்டாங்க” என்று கமலா சொன்னார்.
“ஆமா டாக்டர். பொண்ணைப் படிக்க செலவு செஞ்சா இன்னும் கண்ணாலம், வரதட்சணைனு யார் செலவு செய்யறது? அதுவுமில்லாம அதிகம் படிச்சா அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கணும், வரதட்சணையும் கூடுதலா கேட்பாங்க. எங்க சாதிசனத்துல நெம்ப படிச்ச மாப்பிள்ளையும் கம்மிதான். வீட்ல நான் மட்டும்தான் சம்பாதிக்கறேன். என்னோட வருமானமும் கம்மி. எப்படி நான் சமாளிப்பேன் சொல்லுங்க டாக்டர்?”
“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”
“எங்க டாக்டர்? படிக்க வைச்சு புருசன் வீட்டுக்குப் போயித்தான் சம்பாரிச்சி குடுக்கப் போறாங்க. நம்மகூடவா இருக்கப்போறாங்க? காலாகாலத்துல கண்ணாலம் பண்ணி வைச்சிட்டா கடமை முடிஞ்சிடும். இல்லன்னா வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு எத்தனை நாளைக்குத்தான் இருக்கறது? எங்களுக்கு அதெல்லாம் செட் ஆகாதுங்கமா.”
“இதோ பாருங்க. நீ சொல்ற எதார்த்த சிக்கல் நம்ம சமூகத்துல இருக்கத்தான் செய்யுது. அதுவே சரின்னு ஒருத்தரோட நியாயமான ஆசையை நாம வாய்ப்பிருந்தும் மறுக்கறது எவ்ளோ பெரிய தப்பு? அவ படிக்க பண உதவி வேணும்னா சொல்லுங்க செய்வோம். எங்க அப்பா அம்மாவுக்கு நானும் என் தம்பியும்தான். அவங்க எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்காங்க. என்கூடத்தான் இருக்காங்க. அப்பா, அம்மா ரெண்டு பேரும் ரொம்பப் படிக்காதவங்கதான். நான் டாக்டருக்குத்தான் படிப்பேன்னு அடம்பிடிச்சேன். படிச்சேன். நல்ல வேலைல இருக்கேன். அவங்கள கூடவே வைச்சிருக்கேன். அவங்களுக்கு எதுனாலும் நானும் தம்பியும் சேர்ந்துதான் செய்வோம். எதாவது தேவைன்னா என்கிட்ட, தம்பிகிட்ட என்ன உரிமையோட கேட்பாங்களோ அதே போல உரிமையோட கேட்பாங்க. பெத்தவங்க ஆண் குழந்தை வீட்லதான் இருக்கணும்ன்னு சொல்லி பொண்ணோட படிப்பை நிறுத்திடறது எவ்ளோ பெரிய தப்பு இல்லையா? எங்க ரெண்டு பேரையும்தான பெத்தாங்க. எப்போதான் நாம மாறறது?’’
“அதெல்லாம் எதார்த்தத்துல செட் ஆகாது டாக்டர். பொண்ணு வீட்ல போயி எப்படி இருக்கறது? உங்க வீட்டுக்காரரோட அம்மா, அப்பா என்ன சொல்வாங்க? அவங்களுக்கு இருக்கும் உரிமை உங்க அப்பா, அம்மாவுக்கு இருக்காதே? இந்தச் சமூகம் பொண்ணு வீட்டோட போயிட்டான்னு கேவலமா பேசாதா?”
“என்னோட இணையரோட அப்பா, அம்மாவுக்கு எந்த அளவு உரிமை அவர்கிட்ட இருக்கோ அதே அளவு என்னோட அப்பா, அம்மாவுக்கு என்கிட்ட இருக்கில்லையா! ரெண்டு பேரோட அப்பா, அம்மாவையும் ரெண்டு பேரும் சமமா பார்க்கறதுதான சரி. அப்படித்தான் இருக்கோம். யதார்த்தத்துல சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதுக்காக ஒட்டுமொத்தமா பெண்ணோட படிப்பை நிறுத்தறது கொஞ்சங்கூட நியாயமில்லைங்க. பொதுவாக சொத்து, சடங்குகள் செய்வது எல்லாம் பையன்தான் செய்யணும்ன்னு இருக்கு. இதெல்லாம்கூட ஒரு காரணமா இருக்கும். சொத்து கொடுத்தா கொடுங்க. ஆனா, படிப்பை மட்டும் நிறுத்திடாதீங்க. சமீபகாலமா ஆண், பெண் குழந்தைகளுக்குச் சொத்து தருவதும், இறப்பு சடங்குகளில் பெண்களும் பங்கெடுக்கறதும் ஆங்காங்கே நிகழ்ந்துகிட்டுதான் இருக்கு. மாற்றம் வர்றதுதான இயற்கை! நியாயமான மாற்றம் பரவலாகட்டுமே! அது நம்ம நல்லதுக்குத்தான!”
“எங்க மனைவியோட அப்பாவிற்குப் பையன் இல்லைன்னு அவங்க அக்காதான் இறப்பு சடங்கெல்லாம் செஞ்சாங்க. சொந்தக்காரங்க எல்லாரும் அதை எதிர்த்து வீட்டைவிட்டே போய்ட்டாங்க. ஆனா, அவங்க அப்பாவின் ஆசையை ஒத்த ஆளா நிறைவேத்தினாங்க. இப்போ நல்லாத்தான் இருக்காங்க. சமூகம் பையன் இருக்கும்போது பொண்ணு வீட்ல இருக்காங்கன்னு சொல்லலையா? உங்க தம்பி அவங்க வீட்ல இல்லாம அக்கா வீட்ல இருக்கீங்கன்னு சொல்லலையா?”
“சமூகம் ஆயிரம் சொல்லும், வாழ்க்கையை நாமத்தான வாழப்போறோம். கேட்கறவங்களுக்குப் பதில் சொல்லிடுவேன் யார் பார்த்துக்கிட்டா என்னனு. தம்பியும் வாய்ப்பிருக்கும்போது வந்து பார்ப்பான். அப்பா, அம்மாவும் தம்பி வீட்டுக்கு அடிக்கடி போவாங்க. வந்து பார்த்துட்டும் போவான். பையன் வீட்லதான் இருக்கணும்னு எல்லாம் இந்த நவீனகாலத்துலயும் பேசிக்கிட்டு இருந்தோம்னா எப்படிங்க? போயி பொண்ணைப் படிக்க வைங்க! பையனோ பொண்ணோ எல்லாம் ஒன்னுதாங்க.”
இதையெல்லாம் கேட்டதும் கருப்பசாமியைவிட கமலாவுக்கே பெருமகிழ்ச்சி வந்தது. அவருக்கு வாய்க்காத கல்வியைத் தன் மகளுக்கு எட்டும்விதம் பேசியது பெரும் நம்பிக்கை ஒளியைத் தந்தது. கருப்பசாமிக்கும் ஏதோ நம்பிக்கை வந்து சேர்ந்ததை அவரின் பிரகாசமான தெளிவான முகமே காட்டிக் கொடுத்திருந்தது மருத்துவருக்கு. காய்ச்சல் உடலில் இருந்தாலும் மனநிறைவோடும் மனமகிழ்ச்சியோடும் வீடுவந்து பல்லவியைப் பார்த்தார் கருப்பசாமி.
முற்றும்
படைப்பாளர்:
சாந்த சீலா
சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.