தமிழ் சினிமாவில் நாயகர்களின் ஆதிக்கமும் ஆண் மையக் கதை அமைப்புகளும் புதிதானவை அல்ல. ஆனால், சமீபமாக வன்முறையை ஒரு சுவைபோலத் திரைப்படங்கள் இயல்பாக்குகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. முன்பெல்லாம் U/A என்றும் அடல்ட் படங்கள் என்றும் தனித்தனியாக வகை பிரித்தோம். இப்போதும் வயதுவந்தோருக்கான படங்களை A என்று சென்சார் சர்டிபிகேட் தந்துவிட்டால், அவற்றை நாம் தவிர்த்துவிடுகிறோம். ஆனால், பெரிய நாயகர்களின் படங்கள், தாளமுடியாத வன்முறைக் காட்சிகளோடும், பாலியல் சித்தரிப்புகளோடும், மோசமான வசைகளோடும் வெளியானால், நாயக வழிபாட்டுக் கடமையோடு நம் குழந்தைகளோடு சென்று படத்தைப் பார்த்துவிட்டுத் தவறாமல் ஒரு செல்ஃபி ஸ்டேடஸ் போடுவதை வழக்கமாக்கிக்கொண்டு இருக்கிறோம். விக்ரம், லியோ, ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் இந்த வரையறைக்குள் வருகின்றன.


ஜெயிலர் படத்தின் நு காவாலு பாடலை டிக்டாக் செய்யாதவர்கள் அரிது. இப்போது வரை போட்டிக்கு யாரும் இல்லாத சூப்பர் ஸ்டாருக்கும் அவர் படத்தை வெற்றிபெற வைக்க அதீத வன்முறைக்காட்சிகளும் அபத்தமான பாடல் வரிகளுடன் ஒரு கவர்ச்சிப்பாடலும் தேவைப்படுகின்றன. எப்போதுமே பெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருந்த முதல் வரிசை நாயகர்கள் அனைவருமே ஆக்‌ஷன் நாயகர்கள்தாம். ஆனால், இப்போது வன்முறைக்காட்சிகள் வரம்பு மீறிச் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ரசிக்கக்கூடிய ஸ்டண்ட் காட்சிகளிலிருந்து விலகி, ரத்தம் சொட்டும் கொடூரக்காட்சிகள் இப்போது இயல்பாகிவிட்டன. ஃபேமிலி ஆடியன்ஸ் என்னும் வகைக்கு இப்போது எந்த மதிப்புமே இல்லாமல் போய்விட்டது. சமூகத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை, சினிமாவைப் பார்த்து மக்கள் கெட்டுப்போகிறார்களா என்பது காலம்காலமாக இருந்து வரும் விவாதம். இது ஓர் அர்த்தமற்ற விவாதம். முன்னணி நாயகர்கள் எப்போதுமே பெண்களையும் சமூகத்தையும் வழிநடத்தப் பிறந்தவர்கள் என்பதாகவும், வன்கொடுமை செய்தவனையே கல்யாணம் செய்ய வேண்டும்,தாலி செண்டிமெண்ட், குடும்ப உறவுகளின் சிடுக்குகளைச் பொறுமையை விடாமல் விடுவிக்கும் நாயகி என்று பல கற்பிதங்களோடு சில ஆண்டுகளுக்கு முன்வரை சினிமாக்கள் வெளிவந்தன. இப்போது அவற்றை மறுபடி பார்க்கும்போது அபத்தமாக இருக்கிறது. எவ்வளவு பின்தங்கிய மனப்பான்மை நமக்கு என்று வெட்கம்கொள்ள வைக்கின்றன சில நூறு நாள் கண்ட படங்கள்.


முன்னணி கதாநாயகர்கள் நடித்த பல படங்கள் இதற்கு உதாரணம். வெற்றிபெற்ற தொழில் அதிபராக இருக்கும் நாயகியின் திமிரை நாயகன் அடக்குவதும், தன்னை மணம் புரியக்கேட்கும் பெண்ணை அவமதிப்பதும், ஆனால், தான் இன்னொரு பெண்ணை ஸ்டாக்கிங் செய்வதைப் புனிதப்படுத்துவதும், வேலை எதுவுமின்றி அலைந்தாலும் தான் ஆண் என்பதால் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் அதை காதல் என்று வகைப்படுத்துவதும் காலம்காலமாக சினிமாவில் இயல்பாக்கப்பட்ட விஷயங்கள்.


இப்போது தமிழ்த்திரை இந்த அரைவேக்காட்டுத்தனத்தில் இருந்து விலகுவது போன்ற பிம்பம் தோன்றினாலும், அர்த்தமற்ற, எழுதவும் காணவும் சகிக்காத காட்சிகளின் ஊடாக மீண்டும் ஒரு நச்சு சுழலுக்குள் நாம் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது. அதுவும் இளைய தலைமுறையினர் இவ்வாறான அர்த்தமற்ற வன்முறைக் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களை எடுப்பதும், அறிவுஜீவிகள் இவற்றைச் சிலாகிப்பதும் நிலைமையை இன்னும் அபாயகரமாக்குகின்றன. மிகச்சிறந்த படங்கள், சமூக ஸ்டீரியோடைப்புகளைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடிய திரைப்படங்கள் நிச்சயமாக வருகின்றன. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஜெய்பீம், விசாரணை, சித்தா, அருவி போன்ற மனசாட்சியை உலுக்கும் படங்களும், குட்நைட், டாடா, கட்டா குஸ்தி போன்ற ஃபீல்குட் படங்களும், நுட்பமான அரசியலைப் பேசும் மெட்ராஸ், கர்ணன், அசுரன், காலா, டானாக்காரன், மாமன்னன் போன்ற படங்களும் வரவே செய்கின்றன. இந்த விளம்பர உலகில், அத்தகு முயற்சிகளைச் செய்யும் அனைவரையும் நிச்சயம் நாம் ஊக்குவிக்க வேண்டும். மாறாக அத்தகு படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கே படைப்பாளர்கள் சிரமப்பட நேர்வது பெரிய துரதிர்ஷ்டம். ஆனால், பெரும் பொருட்செலவில் தொடர்ந்து படம் நெடுக ரத்தம் தெறிக்கும் விதவிதமான கொலைகளைக் காட்சிப்படுத்தும் திரைப்படங்களைப் பார்ப்பதில் யாருக்கு என்ன பலன் இருக்கக்கூடும்? இவற்றால் ஏதேனும் சமூக மாற்றம் ஏற்பட்டதா என்றால் அதற்கு எதிர்மறை பதில்தான் கிடைக்கும். சினிமா ஒரு வியாபாரம் மட்டுமே என்று திரைத்துறையினர் நிறுவினால், அதைப் போன்ற சமூக துரோகம் ஒன்று இருக்க முடியாது. இன்று சினிமா நடிகர்கள் போல குறுகிய காலத்தில் அதிகமாகப் பணம் பண்ணும் தொழில் வேறு கிடையாது. உடல் உழைப்போ மூளை உழைப்போ, உழைப்பை மூலதனமாகக்கொண்டு நேர்மையாக வாழும் சராசரி குடிமக்கள் யாருமே நூறு கோடி சம்பாதிப்பதை ஒரு தொலைதூரக் கனவாகக்கூடக் கொள்ள முடியாது. வறுமைக்கோட்டுக்கு கீழே 23 கோடி மக்கள் வாழும் நாடு இது. இங்கே இவ்வளவு சம்பாதித்த பின்னர், அதுவும் மக்களின் பணத்தை வருமானமாகப் பெற்ற பின்னர் சினிமா வெறும் வியாபாரம் என்று சொல்வது அயோக்கியத்தனமானது.


நம்மிடமும் பெரும் தவறு இருக்கிறது. நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் நமக்குத் துளியேனும் கவனம் இருந்தால், இத்தனை வன்முறையை அவர்களுக்கு நாம் பழக்கப்படுத்துவோமா? மிக அண்மையில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்த்தபோது எவ்வளவு நுணுக்கமான வன்முறையும் இன வெறுப்பும் அதில் காட்டப்படுகிறது என்று உணர்ந்தேன். நிற வேற்றுமை, பெண் உடல் குறித்த அவமதிப்புகள், மாற்றுத்திறன் படைத்தோர், திருநங்கைகள் குறித்த மோசமான வெளிப்பாடுகள், தீவிரவாதிகள் என்றால் முஸ்லீம்கள், சைக்கோ கொலைகாரன் என்றால் தகாத உறவுடைய பெண்ணால் பாதிக்கப்பட்டவர் போன்றவை சினிமாவில் எந்தவித சிந்தனையும் இல்லாமல் காட்டப்படும் விஷயங்கள். பொதுபுத்தியில் இத்தகைய எண்ணங்கள் நிலைப்படுவதற்கு சினிமாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பெரிதும் பாராட்டப்பட்ட ‘போர்த்தொழில் பழகு’ திரைப்படத்திலும், தவறான நடத்தை உள்ள, தன்னைத் தேளாகக் கொட்டும் மனைவியைப் பழிவாங்கவே கன்னக்குழி பெண்களை வில்லன் கொல்வதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒருவகையில் அது ஆண் மைய வெளிப்பாடே. குடும்ப வன்முறையால், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களே நிதர்சனத்தில் அதிகம். அவர்கள் யாரும் சைக்கோ கொலைகாரர்களாக மாறி ஆண்களைக் கொல்வதில்லை. குறைந்தபட்சம் அப்படி படங்கள் வருவதில்லை. அப்படிப் பழிவாங்க வேண்டுமானால் அவர்கள் சாக வேண்டும். அவர்களின் ஆவி பழிவாங்குதலைச் செவ்வனே செய்யும்.


தன் திறமையை மட்டுமே முதன்மையாகக்கொண்டு திரையுலகில் சாதிக்கும் பெண்களின் எண்ணிகை சொற்பம். அதுவும் மிகச் சமீபத்தில்தான் நாற்பது வயதைக் கடந்த பெண்களும் நாயகிகளாகத் தொடர்வது சாத்தியமாகியது. கனவுக்கன்னியாகவே பெண் கதாபாத்திரம் இருக்கவேண்டும் என்னும் வக்கிரமான சிந்தனையின் வெளிப்பாடு இது. பெண் உடல் மற்றும் அதன் மீதான ஆணின் ஆதிக்கத்தை சினிமா இயல்பாக்குகிறது. நு காவாலு என்று நம் வீட்டுக் குழந்தைகளை ஆட வைக்கிறோம். அதன் அர்த்தம் அறிந்துதான் செய்கிறோமா? இயல்பு வாழ்வில் ஓர் ஆணை நம் பெண் குழந்தைத் திருமணம் செய்ய வேண்டுமென விரும்பிக் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதை ஒப்புக்கொள்வோம்?
நம் பிள்ளைகள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் போகும் திசை மிகவும் அபாயகரமாக உள்ளது. மக்கள் தொகையில் ஐம்பது சதவீதம் இருக்கும் பெண்கள், வீட்டில், பயணத்தில், படிக்கும் இடங்களில், பணியிடங்களில் என்று எல்லா இடங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை (வல்னரபில்) இருப்பதன் காரணம் என்ன? ஓர் இனத்தைச் சார்ந்தவர்களோ, மொழி பேசுபவர்களோ மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்தால், அவர்கள் அரசியல் ரீதியாகச் சக்திவாய்ந்த ஒரு தொகுப்பாக இருப்பார்கள். தனி நபராகவோ குழுவாகவோ உள்ள ஆண் பெண்ணுக்கு எப்போதும் ஓர் அச்சுறுத்தலாகவே உள்ளான். சமீபக் காலங்களில் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தாலே இது புரியும். கடந்த ஒரு மாதத்தில் எத்தனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தலைநகரில் நடந்தாலோ, வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்ணோ குழந்தையோ மரணமடைந்தால் தவிர, அந்த வன்கொடுமைக்குப் பெரிய கவனம் தரப்படுவதில்லை. தன் நண்பனோடு இருக்கும் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை வீடியோ எடுத்து மிரட்டும் செய்திகள், வன்கொடுமைக்கு மறுத்த பெண்ணை ரயில் தண்டவாளத்தில் தள்ளிய நிகழ்வு, விமானத்தில் பயணித்த திரைக்கலைஞரிடம் பாலியல் அத்துமீறல், மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் என எத்தனை நிகழ்வுகள். இவற்றை நிகழ்த்துவதும் சாமானிய மனிதர்களே என்பது மனதுக்குள் சொல்ல இயலாத அதிர்வை ஏற்படுத்துகிறது.


இளம் சிறார்கள் சினிமாவையும் யூடியூபையும் கட்டுப்பாடு எதுவும் இன்றி வெளிவரும் வெப்சீரிஸ்களையும் பார்த்துக் குற்றங்களில் ஈடுபடுவதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணை வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதும், ஒரு பொருள் போலக் கருதி பெண்களைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதுமான நிகழ்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. இந்த நச்சு சூழலை மேலும் மோசமடையச் செய்வதாக இந்த வெகுஜன திரைப்படங்கள் செயல்படுகின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது. வன்முறையை, ஒரு சமூகத்தவறை இயல்பாக்குவது போன்ற குற்றம் வேறு இல்லை. குற்ற உணர்வே இல்லாத மனிதனைப்போல ஆபத்தானவர் யாரும் இல்லை. இளம் சிறார்கள் ஜாதி ரீதியாகச் செயல்படுவதும், பதின் பருவத்தில் வன்முறையில் ஈடுபடுவதும் இப்போது பரவலாக நடக்கிறது. ஜாதிய உணர்வைத் தூக்கிப்பிடிக்கும், ஜாதியைப் புனிதப்படுத்தும் திரைப்படங்கள் அந்தந்த பகுதிகளில் பெருவெற்றி பெருகின்றன. அந்த ஹீரோக்களை நம் பிள்ளைகள் தங்கள் உதாரணமாக நினைத்துக்கொள்கின்றனர். அதன் விளைவு நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவு விபரீதமானதாக இருக்கிறது.
இந்த நிலையில், சினிமாவில், வெப் சீரிஸ்களில் வன்முறையை ஒரு சுவையாகவும் கலையாகவும் காட்டுவதை நிச்சயமாக கட்டுப்படுத்த வேண்டும். உலகம் கண்ணுக்கு தெரியாத இழை மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. சினிமாவின் வெளிப்பாடு சமூகத்தில் நிச்சயமாகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. அந்தத் தாக்கம் சமூகத்தின் சமநிலையைக் குலைக்க வல்லது என்பதை சினிமாவில் மட்டுமே நீதி போதிக்கும் வியாபாரிகள் புரிந்துகொண்டால் நல்லது. குறைந்தபட்சம் நாம் நம் வரையில் சமூகப்பொறுப்போடு நடந்துகொள்கிறோமா, நம் குழந்தைகளைச் சமூகத்தின் மீதான அக்கறையோடு வளர்க்கிறோமா என்பதை உறுதிசெய்துகொள்வது மிகவும் முக்கியமானது. இல்லையென்றால் நம் அடுத்த தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமாக குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டியவர்கள் நாம்தான்.

ஆதிரை தீட்சண்யா


சமூகத்தின்பால் தீராத அன்பு கொண்டுள்ள மனுஷி. மனிதகுலத்தைப் பலகீனப்படுத்தும் அத்தனை துன்பங்களையும் அன்பின் துணை கொண்டும் பேச்சுவார்த்தை மூலமும் கடக்க முடியும் என்று எப்போதும் நம்புகிறேன். நான் வகிக்கும் பணியில் என்னால் முடிந்தவரை சமத்துவத்தைப் நிலைநாட்ட முயல்கிறேன். society towards equality என்பது என் வாழ்வின் குறிக்கோள்.