நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று ஊதினாள். ஊதாவும் சிவப்புமாகச் சோப்பு நுரை காற்றில் பரவிச் சிதறியது. அதைப் போலத்தானே அவள் கனவுகளும் என்று ஒரு கணம் தோன்றியது. அடுத்த நொடி தலையை உலுக்கி அந்த நினைப்பை உதறினாள்.
பக்கத்தில் இருந்த மரத்தின் மீது ஒரு குட்டிப் பறவை வந்து அமர்ந்தது. கறுப்பும் வெளுப்புமான இறகுகளோடு தலையை அங்குமிங்கும் சட்சட்டென்று திருப்பியது. அதன் தலையில் ஸ்பைக் வைத்தது போல் சிகையலங்காரம் தெரிந்தது. “ஸ்பைக் வெச்சிருக்கியா நீ?” கிசுகிசுப்பாகக் கேட்டாள். அதன் பெயர் புல்புல்தாரா என்று அவள் அறிவாள். செம்புழைச் சின்னான் என்று கலைக்களஞ்சியத்தில் போட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
“இப்படிக் காலங்காத்தால சாவகாசமா உக்காந்திருக்கியே.. வேலைக்கெல்லாம் போகமாட்டியா நீ..?” என்றாள். அது கீச் என்றது.
காம்பவுண்ட் சுவர் தாண்டிப் பார்க்கையில் பக்கத்து வீட்டு நித்யா தோளில் கைப்பையை மாட்டிக் கொண்டு வேகுவேகென்று போய்க்கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பின்னால் அரவம் கேட்டதும் சட்டென்று திரும்பினாள்.
மாமியார் பரிமளம் வலது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, இடது கையால் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.
நர்மதா சட்டென்று குனிந்து துணிகளை வகை பிரித்து ஊற வைக்கத் தொடங்கினாள். கலர் துணிகள், மாமனாரின் வெள்ளைத் துணிகள் என்று தனித்தனியாக நனைத்தாள். குழாயில் கையைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் போக யத்தனித்தாள்.
“இந்தா நர்மதா, ஒரு நாளைப் போல ஆடி அசைஞ்சு வேலை செய்யிறே. இன்னிக்கு உம் புருஷனும் ராஜேஷும் சீக்கிரம் ஆபீசுக்குப் போகணும்னு சொன்னாங்க இல்ல. சமையல் பண்ற உத்தேசம் இருக்கா?” என்று எள்ளல் தொனியில் கேட்டார் பரிமளம். “இந்தக் கொல்லைல என்னதான் இருக்கோ.. இங்க வந்தா தங்கிடுறா..” என்று நொடித்துக் கொண்டார்.
“இதோ அத்தை.. சீக்கிரம் பண்ணிடுறேன்..” பேச்சோடு பேச்சாக ஓடினாள்.
“ஆமா.. குளிச்சியா நீ?..”
“ஆச்சுத்தே..”
வாசலில் இருந்த பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள். பாலைக் காய்ச்சி புது டிகாக்ஷன் காபி கலந்து மாமனாருக்கும் மாமியாருக்கும் தந்தாள்.
நேற்றே ராஜேஷ் பூரி, கிழங்கு கேட்டிருந்தது நினைவுக்கு வர, உருளைக்கிழங்குகளை எடுத்து வேகப் போட்டுவிட்டு கோதுமை மாவை எடுத்துப் பிசைந்தாள். அவற்றை ஒருபக்கம் ஒதுக்கி விட்டு ஊறப்போட்ட அரிசியை குக்கரில் ஏற்றிவிட்டு, சாம்பாருக்குக் காய்களை அவசரம் அவசரமாக நறுக்கத் தொடங்கினாள். திருமணமாகி வந்த அடுத்த நாளில் இருந்தே கரண்டியைப் பிடிக்கத் தொடங்கியாகிவிட்டது. சாம்பார், ரசம் வைத்துவிட்டு வெண்டைக்காய்களைக் கழுவித் துடைத்து விட்டு நறுக்கி வறுவல் செய்தாள். ரமணனும் ராஜேஷும் ஓர் ஆத்திர அவசரத்துக்குக்கூட ஆபிஸ் கேண்டீன் பக்கம் ஒதுங்க மாட்டார்கள். எத்தனை சீக்கிரம் போக வேண்டியிருந்தாலும் நர்மதா சீக்கிரம் எழுந்து சமைத்துக் கட்டிக் கொடுக்க வேண்டும்.
குக்கர் விசிலடித்தது. அடுப்பை அணைக்காமல் அதனை இறக்கிவிட்டு, மசாலா செய்தாள். பூரி போட எண்ணெய் ஒரு பக்கம் காய்ந்துகொண்டிருந்தது. பூரிகளை இட்டுப் பொரிக்கத் தொடங்கினாள். ஹாட்கேசில் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிடும் டேபிள் மீது வைத்தாள். இரண்டு டிபன் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், வறுவல், தயிர் இட்டு நிரப்பினாள். தெர்மாகோல் பாட்டில்களில் சுடுநீர் நிரப்பினாள். சிறிய துண்டுகளை மறக்காமல் எடுத்து வைத்தாள்.
ரமணன் காலையில் எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட மாட்டான். அவனுக்கு இட்லி வார்த்து வைத்துவிட்டு, அவசரமாகத் தேங்காயைத் துருவி சட்னி அரைத்தாள். தினமும் சமைக்கும் போதுதான் காய்கறிகள், வெங்காயம், தேங்காய் எல்லாம் நறுக்க வேண்டும். முன் தினமே மறுநாள் சமையலைத் திட்டமிட்டு காய்களைத் திருத்தி வைக்கலாம் என்றால் ஆரம்பத்திலேயே பரிமளம் அதற்குத் தடை போட்டிருந்தார்.
“சமைக்கும் போது ஃப்ரெஷ்ஷா காய் அரியணும்.. அதென்ன முன்னாடியே ஃப்ரிட்ஜுக்குள்ள ரெடி பண்ணி வைக்கிற பழக்கம்?..” கைகள் இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தன.
“மணி எட்டாச்சு.. மாமா மாத்திரைச் சாப்பிட வேண்டாமா?” பரிமளத்தின் குரல் உரத்துக் கேட்டது. ‘ஐயோ.. இன்னும் அவருக்கு டிபன் ரெடி பண்ணலையே..’ எனத் தன்னைத்தானே கடிந்துகொண்டு, “ஒரு பத்து நிமிஷம் அத்தே.. கஞ்சி ரெடியாகுது..” என்றவாறு அடுப்பில் சுடுதண்ணீரை வைத்து விட்டு, கறுப்பு கவுனி அரிசி, பாசிப்பருப்பு, மிளகு,சீரகம் கலந்து இடித்து வைத்திருந்த கலவையை இரண்டு ஸ்பூன் எடுத்து கொதித்திருந்த நீரில் இட்டுக் கரைத்தாள். இரண்டு பல் பூண்டும், ஓர் இனுக்குக் கறிவேப்பிலையும் தட்டி உள்ளே போட்டு, சிம்மில் கொதிக்க வைக்கத்தாள்.
கணவனும் கொழுந்தனும் சாப்பிட்டுவிட்டு அவரவர் மதியச் சாப்பாட்டு மூட்டையை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்கள்.
“என்ன தேங்காய் சட்னி மட்டும் பண்ணிருக்க? எனக்கு ரெண்டு சட்னி வேணும்னு தெரியாதா உனக்கு?” என்று ரமணன் கடுகடுத்தான்.
அவள் பதில் பேசாது நின்றிருந்தாள். முன்பெல்லாம் ஏதாவது சமாதானம் சொல்வாள். இந்த ஆறு வருடங்களில் பேச்சு வாங்கி, வாங்கி உடம்பில் ஒரு தடித்தனம் வந்திருந்தது.
மாமனாரும் மாமியாரும் சாப்பிட்டுவிட்டு, அவரவர் மாத்திரைகளை விழுங்கிவிட்டு, முற்பகல் ஓய்வு எடுக்கப் போய் விட்டார்கள். இத்தனை வகைகளைச் சமைத்ததில் பசி பறந்து போயிருந்தது. ஆறிப் போயிருந்த காபியைச் சுட வைத்து வாயில் ஊற்றிக் கொண்டு பாத்திரங்களை எல்லாம் துலக்கி வைத்தாள். மணியைப் பார்க்கையில் பத்தரை. பத்து நிமிடம் ஓய்வெடுக்கலாமா என்கிற எண்ணத்தை ஊறப் போட்டிருந்த துணிகளின் நினைப்பு ஒத்திப் போட்டது.
துவைக்கும் கல்லுக்குப் போனாள். இயந்திர கதியில் கைகள் தாமாக துணிகளை எடுத்து சோப்புப் போடத் தொடங்கின.
’துணிகளை மிஷின்ல போட்டா அழுக்கு போகாது நர்மதா.. கையிலயே துவைச்சிடு..’ என்று பரிமளம் முதல்நாளே சொல்லி விட்டார்.
வெயில் ஏறத் தொடங்கியது. மளமளவென்று துணிகளைத் துவைத்து, அலசிக் காயப் போட்டாள். முகத்தைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்த போது மாமியாரும் மாமனாரும் சாப்பிட எழுந்து வந்தனர். அவசரமாக அப்பளம் பொரித்து, சாம்பார், ரச வகையறாக்களைச் சூடுபடுத்திப் பரிமாறினாள். சாப்பிட்டுவிட்டு இருவரும் முன்னறைக்குச் சென்று தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினர்.
பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட அலுப்பாக இருந்தது அவளுக்கு. இருந்தாலும் ஓய்வாக அவள் இருக்கும் நேரம் அதுதான். சோற்றைத் தட்டில் போட்டுக்கொண்டு கொல்லைப்புறம் வந்தாள். அந்த வீட்டில் அவளுக்கு மிகவும் பிடித்தது கொல்லைப்புறம் மட்டும்தான். மஞ்சள், சிவப்பு, பன்னீர் ரோஜாச் செடிகளும், கறிவேப்பிலை, முருங்கை மரம், கத்தரிச் செடிகளும், ஒட்டு மாமரமும், வேப்ப மரமும், இரண்டு தென்னையுமாகக் கொல்லை செழித்துக் கிடந்தது. மதிய வேளைகளில் அங்குதான் பெரும்பாலும் அமர்ந்து கொண்டு அணில்களுடன் பேசிக்கொண்டிருப்பாள். அவற்றுக்கு அவ்வப்போது மிக்ஸரை எடுத்து வந்து கொட்டி வைப்பாள். அணில்கள் மெல்ல வந்து சின்ன ஈரமான உருண்டைக் கண்களால் மருட்சியாகப் பார்த்துக் கொண்டே முன்னங்கால்கள் இரண்டிலும் மிக்ஸரை அள்ளியள்ளி வாயில் திணித்துக்கொள்ளும். இரண்டு கன்னங்களிலும் உப்பலாக அதக்கிக் கொண்டு ஓடும். பார்த்துக் கொண்டே நின்றிருப்பாள்.
அணில்களும் கிளிகளும் மைனாக்களும் ஸ்பைக் குருவிகளுமாகக் கொல்லை எப்போதும் ‘கோ’வென்று கிடக்கும். மாங்காயைக் குடைந்து தின்னும் அணிலைப் பார்த்துக் கொண்டே இவளும் சாப்பிட்டாள். தட்டைக் கழுவி வைத்துவிட்டு, கையில் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தாள். அந்த நேரம் மட்டும் அவளுக்கே அவளுக்கான நேரம். அந்தப் பிற்பகல் வேளையில்தான் சற்றேனும் ஓய்வாள். பிறந்த வீட்டில் எந்நேரமும் வாசித்துக் கொண்டும், என்னத்தையாவது எழுதிக் கொண்டும் இருப்பாள். இங்கே வாசிப்பதற்கே நேரத்தை யாசிக்க வேண்டியிருந்தது.
எல்லாரையும் போல அவளும் படித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற முடிவில்தான் இருந்தாள். ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்று சொல்வார்கள். அப்பா மூன்று மட்டும் பெற்றும் ஆண்டியாகத்தான் இருந்தார். அவரது உத்தியோகம் அப்படி. ஒரு கம்பெனியில் கணக்காளராக ஒட்டிக்கொண்டிருந்தார். அவரைவிடப் பழைய டேபிள், சேர், கோப்புகள். முதலாளி மாறி அவரது மகன் பொறுப்புக்கு வந்த பின்னும் அந்தப் பழைய பொருட்களுடன் அவரையும் பழகிய பாவத்துக்கு வைத்துச் சொற்ப சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தான். அவருக்கும் அதை விட்டால் வேறு கதியில்லை. வேறு வேலைக்குச் செல்வதற்கும் தெம்பில்லை.
மேற்படிப்பு முடித்துவிட்டு நர்மதா வேலை தேடிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவனது ஜாதகம் வந்தது. அவளது ஒளிப்படத்தைப் பார்த்த கணத்திலேயே ரமணன் சம்மதித்து விட்டதையும், அவளது இரண்டு தங்கைகளையும் படிக்க வைப்பதாக உறுதியளித்ததையும், அவர்கள் திருமணத்துக்கும் உதவி செய்வதாகச் சொன்னதையும் அப்பா மீண்டும் மீண்டும் அம்மாவிடம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தார். திருமணத்துக்கு ஒப்புதல் சொல்லும் முன்பு அவனைப் பார்த்துப் பேச வேண்டும் என்று கேட்டாள் நர்மதா.
*
அவன் நர்மதாவின் எதிரில் அமர்ந்திருந்தான். அவளைப் பார்வையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக அளவெடுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அவனது பார்வை உறுத்தலாக இருந்தது. அவள் அவனது கண்களைப் பார்த்தாள். சின்ன கண்கள். ஆனால் அங்கும் இங்கும் பார்வை அலைந்து கொண்டேயிருந்தது. ‘நிலையில்லாத மனம் போல’ என்று தனக்குள் எண்ணமிட்டவாறே அவள் அமர்ந்திருந்தாள்.
அவன் லேசாகச் செருமியவாறே, “என்ன சாப்பிடறே?” என்றதும் சட்டென்று கலைந்தாள். அவன் அப்படி ஒருமையில் அழைத்தது ஏனோ உறுத்தியது.
“என்ன.. முதல் சந்திப்பிலேயே வா போன்னு சொல்றேன்னு பாக்குறியா?..” என்றான் அவள் மனதைப் படித்தவனாய்.
அவள் மெல்ல மையமாகத் தலையாட்டினாள்.
“நாமதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோமே.. அப்புறம் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டியான பேச்சு.. அதான்..”
“ஓ..” என்றாள் அவள் மெதுவாக.
“அதுக்காக நீ என்னை வா போன்னு கூப்ட்டுறாத.. எனக்குப் பிடிக்காது.. மரியாதையா வாங்க போங்கன்னு பேசணும்.. புரிஞ்சுதா..” என்றவன் அவள் திகைத்துப் போய் உட்கார்ந்திருப்பதைக் கவனிக்காதவன் போல, “சொல்லு.. என்ன சாப்பிடுறே?.” என்றான் மீண்டும்.
“ரசமலாய்..”
“அது எனக்குப் பிடிக்காது..” என்று அருவெறுப்பாகத் தலையை ஆட்டியவன், “பாஸந்தி சொல்றேன்..” அவளைப் பேசவிடாது சர்வரை அழைத்து ஆர்டர் செய்தான். “ரெண்டு மெதுவடை.. ரெண்டு பாஸந்தி..”
இவள் பக்கம் திரும்பி, “அப்புறம்..” என்றான்.
நர்மதா டேபிளில் சிந்தியிருந்த நீரில் ஒற்றை விரலால் கோடு கிழித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மெதுவடையும் பிடிக்காது.
“என்னைப் பொறுத்தவரைக்கும் நீ வெள்ளை பேப்பர் மாதிரி இருக்கணும்..” என்றவன் அவள் விழிப்பதைப் பார்த்து விட்டுச் சிரித்தான். “அப்போதான் எனக்குப் பிடிச்ச மாதிரி அதுல எழுதிக்க முடியும்..” அவளுக்குள் புசுபுசுவென்று எரிச்சல் மூண்டது.
அவனுடைய வேலை, தேவைகள், அவன் பெற்றோர், உடன் பிறந்தோர், அவன் குடும்பத்தை அவள் எப்படிக் கவனித்துக் கொள்வது, அவளால் அவன் குடும்ப உறவுகளுக்குள் விரிசல் வராமல் கவனமாக அவள் எப்படி நடந்துகொள்வது, அவர்களை அவள் எவ்வாறு அனுசரித்துப் போவது, அவனுடைய உறவினர்கள், நண்பர்கள், அவனுக்குப் பிடித்த சினிமா, நிறம், பாடல்கள் எக்ஸெட்ரா..எக்ஸெட்ரா..
அவள் காதில் எதுவுமே விழவில்லை. முதல் சந்திப்பு அவ்வளவு உவப்பாக இல்லை. ஆனாலும் அப்பாவின் கண்ணீரும், இயலாமையும் அவளை வாய்மூடி மௌனியாக்கிவிட்டது. பேசாமல் ரமணனுக்குக் கழுத்தை நீட்டினாள்.
*
திருமணம் முடிந்த ஆறுமாதங்கள் கழித்து அவள் மெல்ல அந்தப் பேச்சை எடுத்தாள்.
“ஏங்க.. நா.. நான்.. வந்து.. வந்து.. வேலைக்குப் போகட்டுமா?..” கேட்டுவிட்டாள்.
“என்ன?.. வேலைக்குப் போறியா?.. ஏன் நான் முடியாம கெடக்குறனா?..”
“இல்லைங்க.. அது வந்து.. நான் வேலைக்குப் போகணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசைப்பட்டுட்டு இருந்தேன்..” அவள் மென்று விழுங்கினாள்.
“ம்.. அப்புறம்..” அவன் கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டான். அவள் மௌனமாக இருந்தாள்.
“பொம்பளை சம்பாதிச்சு.. நான் உக்காந்து சாப்பிடவா?..” அவன் முகம் சிவந்தது. “அப்படி உன் சம்பாத்தியத்துல.. சாப்பிடுற அளவுக்கு நான் மானம் கெட்டுப் போகலை.. பொம்பளைங்க சம்பாதிச்சா திமிர் ஏறிடும்டி.. புருஷன் பேச்சைக் கேட்க மாட்டிங்க.. ஆட ஆரம்பிச்சிருவீங்க.. அதுவுமில்லாம இந்த வீட்டு வேலையெல்லாம் யார் பாக்குறது?..” அவன் அருகில் வந்து அவளைப் பார்த்துக் கேட்டான். “இப்ப உனக்கு வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன?..”
“இல்ல.. தங்கச்சிங்க படிக்குறாங்க.. அவங்களுக்கு..” அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.
“படிச்சு என்ன பண்ணப் போறாளுங்க.. சீக்கிரம் எதாவது ஜாதகம் வந்துச்சுன்னா.. கட்டிக் குடுத்துத் தள்ளிவிட வேண்டியதுதானே?..” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னடி பார்க்கிறே?.. சோத்துச் சட்டியைக் கழுவ எதுக்கு படிக்கணும்?”
“எங்கப்பா, அம்மாவை யார் பாத்துக்கிறது? நாங்கதானே?.. வேலைக்குப் போனாத்தானே அவங்களுக்குக் காசு கொடுக்க முடியும்?.. அதான்..” வேகமாகப் பேசத் தொடங்கியவள் தணிந்த குரலில் முடித்தாள்.
“நீ உங்கப்பா, அம்மாக்குச் சம்பாதிச்சுக் குடுக்கக் கிளம்பிட்டேன்னா.. இந்த வீட்டு வேலையெல்லாம் யார் பண்றது?.. போ..போய் நல்லா ஏலக்காய் டீ போட்டு எடுத்துட்டு வா..” அவன் உள்ளே போய்விட்டான்.
அன்றிலிருந்து வேலைக்குப் போக வேண்டும் என்று மீண்டும் கேட்கவில்லை. அவள் எதுவும் சிந்திக்காதவாறு, கேள்வி கேட்கத் துணியாதவாறு அவன் ஒவ்வொன்றிலும் அவன் குறை கண்டுபிடிக்கத் தொடங்கினான். குழந்தை எதுவும் உண்டாகவில்லை என்பதால் அதனைக் குத்திக் காட்டி அவளை ஒரு குற்ற உணர்ச்சியிலேயே வைத்திருந்தான்.
திடீரென்று ஒலித்த அலைபேசிச் சத்தத்தில்தான் நர்மதா கண் விழித்தாள். கையிலிருந்த நாவல் நழுவியிருந்தது. வாயின் ஓரம் லேசாக எச்சில் கோடாக வழிந்திருந்ததைத் துடைத்துக் கொண்டு போனை எடுத்தாள். அம்மாதான்.
“நர்மதா.. கண்ணு.. நல்லாருக்கியாடி.. சாப்டியா?..” அம்மாவின் குரல் கேட்டதும் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.
சமாளித்துக் கொண்டு, “ம்மா.. நல்லாருக்கேன்மா.. நீ எப்படி இருக்கே?.. தீபிகாவும் ராதிகாவும் சௌக்கியமா?..” என்றாள்.
“எல்லாரும் நல்லாருக்கோம்..” என்ற அம்மாவின் குரல் தயங்கியது. “வந்து.. அப்பாவுக்கு மூட்டு வலி ஜாஸ்தியா இருக்கு.. நல்ல ஆஸ்பத்திரில காட்டணும்.. அதான்.. மாப்பிள்ளை கிட்ட எதாச்சும்.. காசு கிடைக்குமான்னு..” முடிக்காமலே நிறுத்தினார்.
“நீ தெரிஞ்சுதான் பேசறீயாம்மா?.. நானே இங்க சம்பளம் இல்லாத வேலைக்காரி.. என்னன்னு சொல்லிக் காசு கேக்குறது?..” இயலாமையில் அழுகையும் கோபமும் ஒருங்கே வந்தது.
“இல்லம்மா.. நேத்து மாப்பிள்ளை போன் பண்ணியிருந்தாரு..” அவளுக்குச் சுருக்கென்றது.
“அவரோட பிரெண்டு ஒருத்தருக்குப் பொண்டாட்டி செத்துப் போய் ஆறு மாசம் ஆகுதாம்.. நாலு வயசுக் குழந்தையை வெச்சிட்டு சமாளிக்க முடியலையாம்..” நர்மதாவுக்கு முகம் கோபத்தில் சிவந்தது.
“ம்..மேல சொல்லு..”
”அதான் நம்ம தீபிகாவை.. ரெண்டாந்தாரமா கட்டிக் குடுக்கறீங்களான்னு கேட்டாரு.. சோறு, துணிக்கு கஷ்டமில்லை.. அவ லைஃப் செட்டிலாய்டும்னாரு..” அம்மாவை முடிக்கவிடவில்லை அவள்.
“ம்மா.. அந்தாள்தான் அறிவில்லாம கேட்டான்னா.. இது ஒரு விஷயம்னு நீயும் பேசிட்டிருக்கே?”
“இங்க பாரு.. மூணு வேளை சோத்துக்கும்.. கட்டிக்க நாலு துணிக்கும்.. என்னை வித்தது போதும்.. அவங்க ரெண்டு பேரையும் ஒழுங்காப் படிச்சு முடிச்சு.. வேலைக்குப் போகச் சொல்லு.. கல்யாணம், கருமாதி எல்லாத்தையும் அப்புறம் பாத்துக்கலாம்.. நான், நீயெல்லாம் கல்யாணம் பண்ணி என்னத்தைச் சாதிச்சோம்? சொல்லு.. ஏன் ரெண்டாந்தாரமாத்தான் மாப்பிள்ளை பார்ப்பாரோ?.. அந்தாளுக்கொரு தங்கச்சி இருந்தா.. இப்படித்தான் சம்பந்தம் பார்ப்பாரா?..” மூச்சு இறைத்தது.
அம்மா மறுமுனையில் வாயடைத்துப் போயிருந்தார். நர்மதா போனை கட் பண்ணிக் கீழே வீசினாள். கண்ணீர் கட்டுப்பாடின்றிப் பெருகத் தொடங்கியது.
அழக்கூட அவளுக்கு நேரமில்லை. வீடு துடைக்க வேண்டும்.
“நர்மதா.. தினமும் வீட்டை மாப் போட்டு.. ஒரு இழு இழுத்திரு.. வீடு சுத்தமா இருந்தாத்தான் எனக்குப் பிடிக்கும்..” மாமியாரின் அசரீரி கேட்டது. வீடு சுத்தம் செய்து விட்டு
ஐந்தரை மணி வாக்கில் வடை அல்லது பஜ்ஜி என்று ஏதாவது சூடாகப் போட்டு, தேநீரோ காபியோ கலக்க வேண்டும். அதன் பின்னர் இரவு எல்லோருக்கும் சப்பாத்தி தினப்படி செய்ய வேண்டும். தொடு கறிகள் மட்டும் தினமும் மாறும். அடுப்படியைச் சுத்தம் செய்து துடைத்துவிட்டு அவள் படுக்கையில் அடையும் போது மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்கும். ரமணனின் பசியைத் தீர்த்து விட்டு, தானும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிக் கொண்டு கண்களை அடைப்பாள்.
வரிசை கட்டியிருக்கும் வேலைகள் பூதாகரமாகக் கண்முன் எழும்பவே, அப்புறம் அழுது கொள்ளலாம் என்று அழுகையை ஒத்தி வைத்து விட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு எழுந்தாள்.
*
அன்று காலை. கடைத்தெருவில் காய்களை வாங்கிக் கொண்டிருந்த நர்மதாவின் தோளை யாரோ தொட்டதில் திரும்பிப் பார்த்தவள் சட்டென்று மலர்ந்தாள்.
“ஹேய்.. மஞ்சரி.. எப்படி இருக்கே?..” மஞ்சரியை விடாப்பிடியாக வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
அவளுக்குப் பிடித்த இஞ்சித் தேநீர் தயாரித்தாள். சிற்றுண்டி வகையறாக்களோடு கொல்லையில் அமர்ந்து கொண்டார்கள்.
“அப்புறம்.. என்ன பண்ணிட்டு இருக்க?..” புன்னகையோடு வினவினாள் நர்மதா.
“நான் இப்ப ஒரு கம்பெனியில் ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட்ல வொர்க் பண்றேன்..” மஞ்சரி முறுக்கைக் கடித்துக் கொண்டே கேட்டாள். “ஆமா..நீ எங்க வொர்க் பண்றே?..”
நர்மதாவின் முகம் மாறியது.
“நா.. நான்.. வேலைக்கெல்லாம் போகலை..” நர்மதா பக்கத்தில் இருந்த செம்பருத்திச் செடியைத் தடவிக் கொண்டே சொன்னாள்.
மஞ்சரியின் முகத்தில் அதிர்ச்சி.
“என்னடி பண்றது?.. சின்ன வயசுல ரத்தம் சூடா இருக்கும்.. எவ்வளவோ ஆசைப்படுவோம்.. எதாச்சும் சாதிக்கணும்.. வேலைக்குப் போகணும்.. உலகத்தைப் புரட்டணும்னு ஆசை இருக்கும்.. ஆனா குடும்ப சூழ்நிலைன்னு ஒண்ணு இருக்குல்ல.. கடைசியில் அதுதான்டி ஜெயிக்குது.. அப்ப புரியலை.. இப்ப புரியுது..”
மஞ்சரி அவளை ஆழ்ந்து பார்த்தாள்.
நர்மதா தன்னுடைய குடும்பச் சூழல் பற்றி, ரமணன் பற்றி எல்லாம் சொன்னாள்.
மஞ்சரி மெல்ல அவள் கையைப் பற்றினாள்.
“நடந்ததுக்கு எல்லாம் நீயும்தான் காரணம்.. யாரையும் குத்தம் சொல்லாதே..”
நர்மதா குழப்பத்துடன் பார்த்தாள்.
“ஆமாண்டி.. உனக்கு ஆசைப்பட மட்டும்தான் தெரிஞ்சுது.. அதை அடையப் போராடத் தெரியலை..உன் உள் மனசு போராட்டத்துக்குத் தயாராகலை..”
நர்மதா நகம் கடித்துக் கொண்டிருந்தாள். மஞ்சரி பேசிய உண்மை அப்பட்டமாக முகத்தில் அறைந்தது.
“நீ சுலபமா சொல்லிட்டே மஞ்சரி.. என் சிச்சுவேஷன்ல இருந்து பாரு..”
“இதோ பாரு.. எல்லா சிச்சுவேஷனும் நாம ஏற்படுத்திக்குறதுதான்.. முதல்ல தனியா உக்காந்து சுய அலசல் பண்ணு.. நீ மட்டும் எல்லாருக்காகவும் சேவை செஞ்சுட்டே இருக்க முடியாது.. உனக்குன்னு ஒரு சின்ன விஷயமாவது இந்த ஆறு வருஷ வாழ்க்கைல பண்ணிருக்கியா?” நர்மதா யோசிக்க ஆரம்பித்தாள்.
“உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா மஞ்சரி?”
“அஞ்சு வருஷம் ஆச்சு.. அவர் ஐ.டி.ல வொர்க் பண்றாரு.. ஒரு பொண்ணு.. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் போறா.. நான் கல்யாணம் பண்ணும் போதே தெளிவா பேசிட்டேன்.. என்னால படிச்ச படிப்பை மூட்டை கட்டி வெச்சிட்டு.. சமையல் மட்டும் செஞ்சிட்டு உக்கார முடியாதுன்னு.. ஓகேன்னாரு.. வேலைகளை ஷேர் பண்ணிட்டு.. குழந்தையையும் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாத்துகிட்டு.. அப்படியே லைஃப் போகுது..”
தனக்கென்று ஒரு காபி போட்டுக் குடிக்கக்கூட நேரமின்றி அடுத்தவர்களுக்கே வேலை செய்து ஓய்ந்து போனதை எண்ணி சுய கழிவிரக்கத்தில் அழுகை வந்தது அவளுக்கு.
மஞ்சரி ஆறுதலாக அவள் தலையைத் தடவினாள். “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை.. உனக்கான இலக்கு என்னன்னு நிர்ணயிச்சிட்டு.. அதை அடையறதுக்கு முயற்சி செய்.. வேலைக்குப் போகணும்னா போ.. ஆனா உனக்காக மொதல்ல நீதான் குரல் கொடுக்கணும்.. முதல் அடியை எடுத்து வை.. பயணத்துக்கான ஆரம்பம் அதுதான்.. அதுக்காக உன் குடும்பத்தை விட்டுட்டு வெளியே வந்துடுன்னு சொல்லலை.. உன் குடும்பத்துக்கு உன்னைப் புரிய வை.. எல்லாத்துக்கும் தயாரா இரு.. எதையும் தொலைச்ச இடத்துலதானே தேடணும்? உன் பிரச்சினைக்கான தீர்வு உன்கிட்டத்தான் இருக்கு.”
அவள் விடைபெற்றுக் கொண்டு சென்று வெகுநேரமாகியும் நர்மதா அப்படியே அமர்ந்திருந்தாள்.
*
ஒரு வாரம் கழித்து ஞாயிற்றுக் கிழமை அன்று காலை வேளையில் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” நர்மதா சொன்னதும் ரமணன் அவளை விசித்திரமாகப் பார்த்தான்.
“எங்கப்பா கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வெச்சது.. இங்க வந்து சமைச்சுப் போடுறதுக்கு மட்டும் இல்லை. பெத்தவங்களையும் கூடப் பொறந்தவங்களையும் கவனிச்சுக்குற பொறுப்பு உங்களை மாதிரி எனக்கும் இருக்கு.. அவங்களை வயசான காலத்துல யார் பாத்துப்பா? ஒவ்வொரு செலவுக்கும் உங்ககிட்ட கையேந்தி.. காரணம் சொல்லி.. திட்டு வாங்கிட்டு காசு வாங்குறது எனக்கு அவமானமா இருக்கு.. நான் சுயமா யாரையும் சார்ந்து வாழாமல்.. சொந்தக் கால்ல தன்னம்பிக்கையோட நிற்கிறதுக்குத்தான் படிச்சேன்.. வேலைக்குப் போறது என்னோட லட்சியம் மட்டுமில்ல இப்ப அவசியமும்கூட.. அதனால வான்டட் காலம் பார்த்து அப்ளை பண்ணினேன்.. எல்ஜி கம்பெனியில் அக்கவுண்ட் செக்சன்ல வேலை கிடைச்சிருக்கு.. ரெண்டு நாள் கழிச்சு போய் ஜாய்ன் பண்ணணும்..” கொஞ்சம் கூடத் திணறாமல், மெதுவான ஆனால் உறுதியான குரலில் பேசினாள் நர்மதா.
யாரும் எதுவும் பேசாமல் ரமணனைப் பார்க்க, அவன் கையை உதறிக் கொண்டு எழுந்தான்.
“யாரைக் கேட்டு முடிவு பண்ணினே?.. அவ்ளோ தைரியம் வந்துடுச்சா உனக்கு?..”
“என் விருப்பத்தை நிறைவேத்த நான் யாரைக் கேட்கணும்?”
“நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டேன்னா.. இந்த வீட்டு வேலையெல்லாம் யார் பாக்குறது?”
“நான் இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி யார் பார்த்தாங்க? என்னால முடிஞ்ச வேலைகளைச் செஞ்சு வைச்சிட்டு நான் கிளம்பிருவேன்.. மிச்ச வேலைகளை நீங்க இத்தனை பேர் இருக்கீங்கள்ல.. ஷேர் பண்ணி செய்யுங்க.. ஆம்பிளைங்க சமைச்சா ஆகாதா? இதுல என்ன தப்பு? நம்ம வீட்டு வேலையை நாமதானே பண்ணணும்? நாம ரெண்டு பேரும் வாழ்க்கைல இணைஞ்சு பயணிக்கிறோம்.. நான் உங்களுக்கு வேலை செய்யக் கிடைச்ச அடிமையும் இல்லை.. உங்க வீட்டுக்குச் சம்பளம் இல்லாத வேலைக்காரியும் இல்லைங்கிறதை முதல்ல புரிஞ்சுக்குங்க ரமணன்.. இன்பம், துன்பம் எதுனாலும் பங்கு போட்டுக்குற இணையர்கள்தான் நாம.. உனக்கு நான் இருக்கேன்ங்கிற நம்பிக்கையை ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுக்கணும்.. புரிஞ்சுக்குங்க..”
அவள் பெயர் சொன்னதைக் கேட்டதும் அவன் முகம் மாறியது.
“நீ வேலைக்கு போக நான் அனுமதிக்க முடியாது..”
“நான் உங்க கிட்ட அனுமதி கேட்கலையே ரமணன்.. தகவல் மட்டும்தான் சொன்னேன்..”
*
ஒரு மாதம் கழிந்தது. முதல் மாதச் சம்பளம் வாங்கிய அன்று நர்மதா மனசுக்குள் ஜிலுஜிலுவென்று உணர்ந்தாள். உற்சாகமாக இருந்தது. மழை வரும் போல் இருந்தது. காற்று ஈர வாசனையுடன் வீசியது. அவளுக்கு நடக்க வேண்டும் போல இருந்தது.
லேசாகத் தூறல் விழத் தொடங்கியது. பேருந்தைத் தவிர்த்து விட்டு மெல்ல நடக்கத் தொடங்கினாள். சிறகுகள் முளைத்தது போல் இருந்தது. மிதப்பது போல் நடந்தாள். “அப்பாவை நல்ல ஆஸ்பத்திரில காட்டணும்.. தீபிகா மேல படிக்கிறேன்னு சொன்னாளே.. அதைப் பத்தி விசாரிக்கணும்..” மனசுக்குள் எண்ணமிட்டவாறே நடந்து கொண்டிருந்தாள்.
வழியில் ஒரு சிறிய கஃபே இருந்தது. ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருந்தது. இதுவரை தனியாக வெளியில் சாப்பிட்டது இல்லை. தயக்கமாக இருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு கஃபேக்குள் நுழைந்தாள். ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்தாள். செல்போனை எடுத்து ‘வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும்.. பஸ் ஸ்டாப்ல வந்து பிக்கப் பண்ணிக்கோங்க..’ என்று ரமணனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்.
“ஒரு ரசமலாய் ப்ளீஸ்..” என்று புன்முறுவலோடு சொன்னாள்.
*
படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.