“ஆடி அசைந்துவரும் அலங்கரிக்கப்பட்ட 300 யானைகள், அந்த யானைகளின் மீது இலங்கையின் புனிதச் சின்னமான புத்தரின் பல் கொண்ட தங்கப்பேழைகள், தெய்வங்களின் திருஆபரணங்கள் கொண்ட அழகுப் பேழைகள், தீ நடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் என அற்புதமாக நடனமாடியபடி நகர்ந்துவரும் 2 ஆயிரம் நடனக்கலைஞர்களின் ஊர்வலங்கள், இசைக்கு ஏற்றபடி நடன அசைவுகளை ஏற்படுத்தும் மின் விளக்குகளால் ஒளிரும் கட்டிடங்கள், 90 கிலோமீட்டர் நீண்டு செல்லும் மிகப்பெரிய பேரணி. கண்டி நகரம் மட்டுமல்லாது மொத்த இலங்கையும் மகிழ்ந்து பங்கேற்கும் பெரஹரா திருவிழா.” இப்படி இலங்கைத் தோழிகள் எசல பெரஹர என்று அழைக்கப்படும் எசல ஊர்வலம் பற்றி விவரிக்கும்போதெல்லாம் ‘ஆ’வென வாய்பிளந்து கேட்டிருக்கிறேன். இன்னும் இந்தத் திருவிழாவைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
எசல பெரஹர அல்லது எசலா பேரணி என்பது இலங்கையின் கண்டி நகரத்தில் நிகழும் ஒரு பௌத்த திருவிழா. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நடைபெறுவதாகக் கூறப்படும் இவ்விழா, மழை வேண்டியும் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்ட நாளை கொண்டாடுவதற்காகவும் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்றைக்கு இலங்கையின் தனித்துவமான விழாவாக மாறியுள்ளதால், அச்சமயத்தில் வெளிநாட்டாரின் வருகை அதிகமாக உள்ளது.
இந்தியாவிற்கு தீபாவளி போல, இலங்கைக்கு பெரஹரா மக்கள் விரும்பும் மிகப்பெரிய விழாவாக இருக்கிறது. ஆடி மாதத்தில் (ஜூலை அல்லது ஆகஸ்ட்) தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின்போது புத்தருடைய புனிதப்பல் அடங்கிய பேழையை நன்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது ஏற்றி, தெருக்களில் ஊர்வலம் வருகிறார்கள். எழுபது ஆண்டுகளுக்குமுன் பொன்னியின் செல்வனில் கல்கி விவரித்த நிகழ்வுகள் சற்றும் குறையாமல் இன்றும் கொண்டாடப்படுவது அதிசயமாகத்தான் இருக்கிறது. இத்திருவிழாவின் கோலாகலத்தை அப்படியே உள்வாங்க வேண்டுமென்றால், கல்கியின் வார்த்தைகளில் வாசித்தால்தான் முடியும். பெரஹர திருவிழாச் சிறப்புகளை கல்கி அள்ளி அள்ளித் தெளித்திருப்பார் வந்தியத்தேவனின் எண்ண அலைகளாக.
“இவ்வளவு கூட்டமாக ஜனங்கள் போகிறார்களே? இன்றைக்கு இந்த நகரத்திலும் ஏதாவது உற்சவமோ?” என்றான் வந்தியத்தேவன்.
“இந்த நாட்டில் நடக்கும் திருவிழாக்களுக்குள்ளே பெரிய திருவிழா இன்றைக்குத்தான்” என்றார் இளவரசர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சமுத்திரத்தின் கொந்தளிப்பைப் போன்ற பேரிரைச்சல் ஒன்று கேட்டது. வந்தியத்தேவன் இரைச்சல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு பெரிய சேனா சமுத்திரத்தைப் போன்ற பெருங்கூட்டம், வீதிகளில் முடிவில்லாது நீண்டு போய்க்கொண்டிருந்த ஜனக்கூட்டம் வருவது தெரிந்தது. அந்த ஜன சமுத்திரத்தின் நடுவே கரிய பெரிய திமிங்கிலங்கள் போல் நூற்றுக்கணக்கில் யானைகள் காணப்பட்டன. கடல் நீரில் பிரதிபலிக்கும் விண்மீன்களைப்போல் ஆயிரம் ஆயிரம் தீவர்த்திகள் ஒளிவீசின. ஜனங்களோ லட்சக்கணக்கில் இருந்தார்கள்.
“இதுதான் இந்த இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா” என்றார் இளவவரசர் அருள்மொழிவர்மன்.
முதலில் முப்பது யானைகள் அணிவகுத்து வந்தன. அவ்வளவும் தங்க முகபடாங்களினால் அலங்ககரிக்கப்பட்ட யானைகள். அவற்றில் நடுநாயகமாக வந்த யானை எல்லாவற்றிலும் கம்பீரமாக இருந்தது. அலங்காரத்திலும் சிறந்து விளங்கியது. அதன் முதுகில் நவரத்தினங்கள் இழைத்த தங்கப்பெட்டியொன்று இருந்தது. அதன் மேல் ஒரு தங்கக்குடை கவிந்திருந்தது. நடுநாயகமான இந்த யானையைச் சுற்றியிருந்த யானைகளின் மீது புத்த பிக்ஷூக்கள் பலர் அமர்ந்து வெள்ளிப் பிடிபோட்ட வெண் சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு இடையிடையே குத்துவிளக்குகளையும் தீவர்த்திகளையும் இன்னும் பலவித வேலைப்பாடமைந்த தீவர்த்திகளையும் தீபங்களையும் ஏந்திக்கொண்டு பலர் வந்தார்கள்.
யானைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் ஜனக்கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் சுமார் நூறுபேர் விசித்திரமான உடைகளையும் ஆபரணங்களையும் தரித்து நடனமாடிக்கொண்டு வந்தார்கள். அவர்களில் பலர் உடுக்கையைப் போன்ற வாத்தியங்களைத் தட்டிக்கொண்டு ஆடினார்கள். இன்னும் பலவகை வாத்தியங்களும் முழங்கின. அப்பப்பா! ஆட்டமாவது ஆட்டம்! கடம்பூர் அரண்மனையில் தேவராளனும் தேவராட்டியும் ஆடிய வெறியாட்டமெல்லாம் இதற்கு முன்னால் எங்கே நிற்கும்! சிற்சில சமயம் அந்த ஆட்டக்காரர்கள் விர்ரென்று வானில் எழும்பிச் சக்கராகாரமாக இரண்டு மூன்று தடவை சுழன்று விட்டுத் தரைக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் சுழன்றபோது அவர்கள் இடையில் குஞ்சம் குஞ்சமாகத் தொங்கிக்கொண்டிருந்த துணி மடிப்புகள் பூச்சக்கரக் குடைகளைப் போலச் சுழன்றன. இவ்விதம் நூறுபேர் சேர்ந்தாற்போல் எழும்பிச் சுழன்றுவிட்டுக் கீழே குதித்த காட்சியைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லைதான்! இரண்டாயிரம் கண்களாவது குறைந்தபட்சம் வேண்டும். ஆனால், அத்தகைய சமயங்களில் எழுந்த வாத்திய முழக்கங்களைக் கேட்பதற்கோ இரண்டாயிரம் செவிகள் போதமாட்டா! நிச்சயமாக இரண்டு லட்சம் காதுகளேனும் வேண்டும். அப்படியாக உடுக்கைகள், துந்துபிகள், மத்தளங்கள், செப்புத் தாளங்கள், பறைகள், கொம்புகள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் கேட்போர் காதுகள் செவிடுபடச் செய்தன.
இந்த ஆட்டக்காரர்களும் அவர்களைச் சுற்றி நின்ற கூட்டமும் நகர்ந்ததும் முப்பது யானைகள் முன்போலவே ஜாஜ்வல்யமான ஆபரணங்களுடன் வந்தன. அவற்றில் நடுநாயகமான யானையின் மேல் ஓர் அழகிய வேலைப்பாடு அமைந்த பெட்டி இருந்தது. அதன் மேல் தங்கக்குடை கவிந்திருந்தது. சுற்றி நின்ற யானை மீதிருந்தவர்கள் வெண் சாமரங்களை வீசினார்கள். இந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னாலும் ஆட்டக்காரர்கள் வந்தார்கள். இந்த ஆட்டக்காரர்களுக்கு நடுவில் ரதி, மன்மதன், முக்கண்ணையுடைய சிவ பெருமான் வேடம் தரித்தவர்கள் நின்றார்கள். சுற்றி நின்றவர்கள் ஆடிக் குதித்தார்கள்.
“இது என்ன? சிவபெருமான் இங்கு எப்படி வந்தார்?” என்று வந்தியத்தேவன் கேட்டான். “ கஜபாக்ய என்னும் இலங்கை அரசன் சிவபெருமானை அழைத்து வந்தான், அதற்குப் பிறகு இங்கேயே அவர் பிடிவாதமாக இருக்கிறார்” என்றார் இளவரசர்.
“ஓ வீர வைஷ்ணவரே! பார்த்தீரா? யார் பெரிய தெய்வம் என்று இப்போது தெரிந்ததா?” என்று வந்தியத்தேவன் கேட்டு முடிவதற்குள் மற்றும் சில யானைகள் அதே மாதிரி அலங்காரங்களுடன் வந்துவிட்டன. அந்த யானைகளுக்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் கருடாழ்வாரைப் போல் மூக்கும் இறக்கைகளும் வைத்துக் கட்டிக்கொண்டிருந்த நடனக்காரர்கள் சுழன்றும், பறந்தும், குதித்தும் மூக்கை ஆட்டியும் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள்.
“அப்பனே! பார்த்தாயா? இங்கே கருட வாகனத்தில் எங்கள் திருமாலும் எழுந்தருளியிருக்கிறார்” என்றான் ஆழ்வார்க்கடியான். மீண்டும் ஒரு யானைக்கூட்டம் வந்தது. அதற்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களோ கைகளில் வாள்களும் வேல்களும் ஏந்திப் பயங்கரமான யுத்த நடனம் செய்துகொண்டு வந்தார்கள். தாளத்துக்கும் ஆட்டத்துக்கும் இசைய அவர்கள் கையில் பிடித்த வாள்களும் வேல்களும் ஒன்றோடொன்று டணார் டணார் என்று மோதிச் சப்தித்தன. இவ்வளவுக்கும் கடைசியாக வந்த யானைக்கூட்டத்துக்குப் பின்னால் ஆட்டக்காரர்கள் அவ்வளவு பேரும் இரண்டு கையிலும் இரண்டு சிலம்புகளை வைத்துக்கொண்டு ஆடினார்கள். அவர்கள் ஆடும்போது அத்தனை சிலம்புகளும் சேர்ந்து ‘கலீர் கலீர்’ என்று சப்தித்தன. ஒரு சமயம் அவர்கள் நடனம் வெகு உக்கிரமாயிருந்தது. இன்னொரு சமயம் அமைதி பொருந்திய லளித நடனக் கலையாக மாறியது. இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டும், பலவித சப்த விசித்திரங்களைக் கேட்டும் பிரமித்து நின்ற வந்தியத்தேவனுக்கு இளவரசர் இந்த ஊர்வலத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் கூறுவார். கல்கியின் எழுத்துகளை வாசிக்க வாசிக்க, அந்த பெரஹரா ஊர்வலத்தில் நாமும் ஒருவராக நிற்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.
தமிழகத்து அரசர்களும் இலங்கை அரசர்களும் நட்புரிமையுடன் இருந்த காலத்தில், சேரன் செங்குட்டுவன் கண்ணகி தெய்வத்துக்கு விழா நடத்தியபோது இலங்கையிலிருந்து கஜபாகு மன்னன் தமிழகம் சென்றிருக்கிறான். அப்போது அங்கு நடைபெற்ற திருவிழாக்களைக் கண்டு கழித்தான். பின்னொரு சமயம் சேரன் செங்குட்டுவன் நட்பின் பொருட்டு இலங்கைக்கு வந்திருந்தபோது கஜபாகு மன்னன் நண்பனை வரவேற்கும் முகமாக விழா எடுத்தான். தமிழர்களின் தெய்வமாகிய சிவபெருமான், திருமால், கார்த்திகேயன், பத்தினித்தெய்வம் என நான்கு தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் திருவிழா நடத்த, அந்த விழாக்களின்போது மக்கள் அடைந்த குதூகலத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மன்னன் ஆண்டுதோறும் அந்த விழாக்களை நடத்தத் தீர்மானித்தான். புத்தர் பெருமானுக்கு அவ்விழாவில் முதல் இடம் கொடுத்து மற்ற நான்கு தெய்வங்களையும் பின்னால் வரச் செய்து மிகப்பெரிய பேரணியுடன் விழா நடத்தினான். அன்று முதல் அவ்விழா இலங்கையில் நிலைத்து நின்று மிகப் பெரிய திருவிழாவாக ஆண்டுதோறும் விடாமல் நடந்து வருகிறது. முதலில் வரும் யானை மீதிருக்கும் பெட்டிக்குள் இலங்கையின் விலை மதிப்பற்ற செல்வமாகக் கருதும் புத்த பெருமானின் பல்லையும் பின்னால் வரும் பெட்டிகளில் சிவன், விஷ்ணு, முருகன், கண்ணகி ஆகியோரின் திருஆபரணங்களை பெட்டிகளில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றனர் என்று விழா குறித்த செய்திகளைக் கூறுகிறார் கல்கி. இந்த நூலை எழுவதற்காக மூன்று முறை இலங்கை சென்ற கல்கி ஒருவேளை இந்த ஊர்வலத்தைப் பார்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
ஆனால், இத்தனை வருடம் கழித்தும் இப்போதும் பழமை பாரம்பரியங்கள் மாறாமல் பல்வேறு இசைக் கருவிகள் முழங்க, ஆண்களும் பெண்களும் நடனமாடி வர, நூற்றுக்கணக்கான யானைகள் ஊர்வலமாக வர கண்டி நகரமே விழாக்கோலம் கொண்டு இவ்விழாவை கொண்டாடித் தீர்க்கிறது. தலதா மாளிகை வாசலில் இருந்து கிளம்பும் ஊர்வலம் ராஜவீதி வழியாகச் செல்கிறது. காவடி ஆட்டமும் சமீபக் காலங்களில் இடம்பெறுகிறது. அரச குடும்பத்து வாரிசுகள் மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கின்றனர். தற்போது, இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு புனிதப் பொருள்களை எடுத்துச் செல்லும் நடுங்காமுவா ராஜா என்ற யானைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்ற செய்தியிலிருந்து இத்திருவிழாவில் யானைகளுக்கான முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொண்ட யானைகளுக்கு ஜனாதிபதி பழங்கள் ஊட்டுவதுடன், ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்குச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்குகிறார். இறுதியாக தியா கெப்பீம என்னும் நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் முடிவு பெறுகின்றன. தோழிகளின் விவரிப்புகளும் கல்கியின் வர்ணனைகளும் இணையதளத்தில் கிடக்கும் காணொலிக்காட்சிகளும் மனமெங்கும் நிரம்பிக்கிடக்க, நேரில் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.