“அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும், உள்ளம் என்றொரு ஊர் இருக்கும், அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும், கடமை… அது கடமை… டாண்டன் டாண்டன் டாண்டன்…” இசையுடன் பாடி, ஓடி, குதித்து, இரண்டு விரல்களால் மூக்கைச் சுண்டிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். வயிற்றுப் பிழைப்புக்காக மேடையில் வேடமிடும் கலைஞர் அல்ல அவர், எம்ஜிஆரைத் தன் வாழ்வியல் நாயகனாகவே வரித்துக்கொண்டவர். எம்ஜிஆர் போலவே நடை, உடை, பாவனை, உடல்மொழி என எம்ஜிஆர் ரசிகராக அல்ல, எம்ஜிஆர் ஆகவே கொழும்பில் வாழ்ந்துவருகிறார் மாணிக்கம். அன்றாடம் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் இருந்தாலும்கூட தான் ஏற்றுக்கொண்ட தலைவரின் தலைசிறந்த பண்பான, எளியவருக்கும் வறியவருக்கும் தாராளமாக அள்ளிக்கொடுக்கும் கொள்கையை விடாப்பிடியாக இறுகப்பற்றி வருகிறார். சிறுவயதில் தன் அம்மா, எம்ஜிஆர் படத்தைக் காட்டி இவர்தான் எம்ஜிஆர் மாமா எனக்கூற, அப்பா ராமன் தேடிய சீதை படத்தில் ‘அந்த மாமாவை’ அறிமுகப்படுத்த, அன்று தலைவர் மீது கொண்ட காதல் ஐம்பதைத் தாண்டியும் தொடர்கிறது. தினந்தோறும் தலைவர் போல மேக்கப் போடுவதற்கு மட்டும் ஒரு மணித்தியாலம் செலவழிக்கும் மாணிக்கம், இதயக்கனி உடுப்பு, உலகம் சுற்றும் வாலிபன் உடுப்பு என ஒவ்வொரு படத்திலும் எம்ஜிஆர் அணிந்திருந்த உடுப்புகளைப் பிரதியெடுத்து தைத்து வைத்திருக்கிறார். தான் செத்துப் போனால், எம்ஜிஆர் போலவே தனக்கும் வெள்ளை குல்லா, வெள்ளை வேட்டி, சட்டை உடுத்தி அடக்கம் செய்ய வேண்டும் எனபதை ஒரே உறவாக இருக்கும் தனது அக்காவிடம் சொல்லி வைத்திருக்கிறாராம். ‘ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா… இதழோரம் சுவை தேட…’ பாடிக்கொண்டே, அந்த நெருக்கடியான மார்க்கெட்டில் மூட்டையைத் தூக்கிக்கொண்டு நகர்கிறார் அந்த ‘இலங்கை எம்ஜிஆர்’. எம்ஜிஆரைக் கட்சி பேனரின் மூலையிலும் அவரது கொள்கைகளைக் கூவம் ஆற்றிலும் கடாசிவிட்டு, எம்ஜிஆர் போட்ட விதையில் இன்று அறுவடை செய்துகொண்டிருக்கும் அவரது ‘ரத்தத்தின் ரத்தங்களுக்கு’ மத்தியில் உண்மையான ரத்தங்கள் இவர் போன்ற ‘மாணிக்க’ ரசிகர்களும் தொண்டர்களும்தாம்.
எம்ஜிஆர் என்ற பெயர் கேட்டதும் சிலிர்க்கிறார் ‘பட்டக்கண்ணு நகைமாளிகை’ அதிபர் எஸ்.ஏ தியாகராஜா. எம்ஜியாரின் குடும்ப நண்பர். “1966இல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ கொழும்பில் திரையிடப்பட்ட நேரத்தில் எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார் எம்ஜிஆர். அவருடன் சரோஜா தேவியும் வந்திருந்தார். ‘மரகதத்தீவில் மக்கள் திலகம்’ என்றே அன்று நாளிதழ்கள் கட்டுரை வெளியிட்டன. எனது வீட்டில்தான் அருக்குலா மீனை ருசித்து மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தார். அதற்குள் செய்தியறிந்து சிங்களரும் தமிழரும் சோனகரும் தொழிலாளிகளும் முதலாளிகளுமாக வீட்டின் முன்னே குவிந்துவிட்டனர்.
“தலைவா… தலைவா… வாத்தியாரே… வெளியே வாங்க” என்ற குரல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது தீவிர ரசிகர்கள், வீட்டு நுழைவாயிலைச் சேதப்படுத்தி உள்ளே நுழைய எத்தனிக்க, அசம்பாவிதத்தைத் தடுப்பதற்காக யாருக்கும் தெரியாமல், போலீஸாரால் ஹோட்டல் கோல்ஃபேஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் இரவும் பகலும் கூட்டம் தவம் கிடந்திருக்கிறது. கொழும்பு, கண்டி, மடு நகர், மாத்தளை, யாழ்ப்பாணம், நுவரெலியா என அவர் போகும் இடமெங்கும் சரித்திரம் கண்டறியாத சனத்திரள் கூடியது” என்று நினைவுகளில் மூழ்கிக் கரைகிறார் தியாகராஜா.
இலங்கையின் கண்டிக்கு அருகிலுள்ள நாவலப்பிட்டியில் பிறந்த மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனை, தமிழக சினிமாத்துறை மட்டுமல்ல மொத்தத் தமிழகமே அள்ளி அரவணைத்துக்கொண்டது. அந்த எளிய மனிதரிடம் அரசியல் அதிகாரம் வந்துசேர்ந்தது, பண பலம் பெருகியது, அத்துடன் வாரி வழங்கும் மனவளமும் எளிய மக்களைக் கவர்ந்து இழுக்கும் சக்தியும் அவரிடம் இயல்பாகவே இருந்தன. இலங்கையில் பிறந்த எம்ஜியாருக்கு அந்த மண்ணின்மீது பற்றும் பாசமும் அதிகமிருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. பின்னாட்களில் எம்ஜியாருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் மத்தியில் பிறந்த உறவு வரலாற்று உறவாக மலர்ந்தது. அவர் புலிகள் அமைப்பிற்குச் செய்த உதவிகளையும் அள்ளிக் கொடுத்ததையும் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள். எந்த சினிமா நாயகர்களையும் பூஜிக்கும் வழக்கமில்லாத இலங்கையர்கள், 1988இல் எம்ஜிஆருக்குச் சிலை எடுத்தது அவரது நடிப்புக்காக மட்டுமல்ல என்பதை சின்னக் குழந்தையும் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான், புத்தபூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையைத் திறந்து வைக்கவும் சென்ற பிரதமர் மோடி, “புரட்சித் தலைவர் எம்ஜியார் பிறந்த ஊர் இது” என்று தன் உரையில் குறிப்பிட்டதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, தீவே ஆட்டம்கண்ட கரவொலியில் மகிழ்ந்திருக்கிறார்.
இலங்கைத் தமிழ் சினிமா என்றுமே அதிக அளவில் திரைப்படங்களைத் தயாரித்ததில்லை. பெரும்பாலும் இங்குள்ள திரைப்படங்கள்தாம் அவர்களுக்குப் பார்க்கக் கிடைக்கின்றன. எம்ஜிஆர், சிவாஜி காலத்து திரைப்படங்கள் இலங்கையில் வெளியாக ஓராண்டு ஆகும். அப்போது இந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பில் சில படங்கள் எடுக்கப்பட்டன. இலங்கையின் பிரபல நடிகர் நடிகைகள் இந்தியத் தமிழ்ப் படங்களில் நடித்தனர். மாலினி பொன்சேகா – நடிகர் திலகத்துடன் பைலட் பிரேம்நாத் படத்திலும், காமினி பொன்சேகா – ஸ்ரீபிரியாவுடன் நீலக்கடலின் ஓரத்திலே என்ற படத்திலும், கீதா குமாரசிங் – சிவாஜியுடன் மோகனப் புன்னகையிலும், விஜய குமாரதுங்க லட்சுமி – முத்துராமனுடன் நங்கூரம் திரைப்படத்திலும் ரத்தத்தின் ரத்தமே படத்தில் கீதா குமாரசிங்க – ஜெய்சங்கருடனும் நடித்துப் புகழ்பெற்றனர்.
தமிழ் சமூகத்தின் சக்தி வாய்ந்த ஊடகமாக நாம் கொண்டாடும் அளவிற்கு, திரைப்படங்களை அவர்கள் ஆராதிப்பதில்லை, அது ஒரு பொழுதுபோக்கு விடயம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் தமிழர்களும் சிங்களர்களும் இணைந்தே தமிழ் மற்றும் சிங்கள திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கின்றனர். காத்திரமான திரைப்படங்களும் வந்திருக்கின்றன. யுத்தகாலம் அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. அந்தப் புயலுக்குத் திரைப்படத்துறையும் தப்பவில்லை. இரு இனங்களும் எதிரிகளாகப் பார்க்கப்பட்டதும் தொடர்பு அறுந்து போனது. யுத்த காலங்களில் டென்ட் கொட்டாய்களில் தமிழகத்திலிருந்து வரும் தமிழ் சினிமாக்களைப் பார்த்திருப்பதை நினைவுகூர்கிறார் தோழி லதா கந்தையா. ஆனால், தமிழகத்திலிருந்து செல்லும் திரைப்படங்கள் அங்கு மீண்டும் புலிகள் இயக்கத்தினரால் மறுதணிக்கை செய்யப்பட்டே திரையிடப்படும் என்ற தகவல் வியப்பானதாக இருக்கிறது. “எங்கட தேவை கதையின் மூலக்கருதான், ஆபாச நடனங்களும் பலாத்காரம் பண்ணுவதுமான காட்சிகளால் நிரம்பிக்கிடந்த எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் முற்றிலும் இயக்கத்தினரால் மறுதணிக்கை செய்யப்பட்டே திரையிடப்படும். அவ்வளவு கட்டுக்கோப்பாகவும் சமூக அக்கறையுடனும்தான் நாங்கள் வளர்க்கப்பட்டோம்” – அவரது குரலில் பெருமை தெரிகிறது. தமிழ் – சிங்கள இனக்கலவரத்தின்போது தமிழ்த் திரைப்படச் சுருள்கள் எரிந்து நாசமாக்கப்பட்டன. வன்னிப்பரப்பிலிருந்து போரியல், வாழ்வியல் கதைகளைப் பேசும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், இயக்கத்தினரால் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படங்கள் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டன.
நீண்டகாலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி எனச் சிக்கித் தவிக்கிறது இலங்கை திரைப்படத்துறை. அதனால், இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களே இலங்கைத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. “இலங்கையில் தமிழ்த் திரைத்துறை பூஜ்ஜியம்தான்” என்கிறார் நடிகரும் இயக்குநருமான கிங் ரத்தின. ஆனால், மிகக்குறைவான அளவில் சிங்களப் படங்களும் தயாரிக்கப்படுகின்றன. “எண்ணிக்கையில் நாங்கள் சிறியவர்கள்தாம். ஆனால், சினிமா திறன் அடிப்படையில் பிற அண்டை நாடுகளைவிடச் சிறப்பான நிலையில் இருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் நான்கைந்து படங்கள் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெறுகின்றன” என்கிறார் இயக்குநர் சோமரத்ன திஸநாயக பெருமையாக. கொழும்புவில் குடிசை வீட்டில் வசித்துவரும் நடிகை ஜெயகௌரி இலங்கை திரைத்துறையில் பெரும் பொருள் ஈட்ட முடியாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். யுத்தத்திற்குப் பின் புலம்பெயர் ஈழத்தமிழர்களால், தமிழகத் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது. சர்வதேச வணிகம் கொழித்தது. தமிழ்த் திரைப்படங்கள் உலகமெங்கும் கல்லா கட்டின. ஆனால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகர்களும் புலம்பெயர் தமிழர்களுக்கு, (அவர்களின் வெளிநாட்டு டாலர்களுக்கு) காட்டும் கரிசனத்தில் சிறிதளவேனும் இலங்கையில் வாழும் தமிழர்களிடத்தில் காட்டுவதில்லை என்ற வருத்தம் இருக்கிறது லதா கந்தையாவிடம். அதனால்தான் பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்குக்கூடப் புலம்பெயர் தமிழர்கள் கொண்டுவரப்படுகின்றனர் என்ற ஆதாரத்தையும் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறார்.
“தமிழகத்தின் அத்தனை நடிகர்களுக்கும் இங்கும் ரசிகர்கள் இருக்கினம். ஆனால், வெறியர்கள் இல்லையெண்டதால, தமிழ்நாட்டைப் போல கட் அவுட், பாலாபிஷேக வகையறா கலாச்சாரங்களுக்கு எங்கட நாட்டில் இடமில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்போது சினிமா உணர்வு கூடுதலாகப் பார்க்கக் கிடைக்குது. ஆனால், இதுவும் பிழையான ஒண்டுதான், தமிழ் சினிமாக்கள் ஒரு கற்பனை உலகத்தையே காட்டுகிறது. துளியேனும் இயல்பாக இல்லை, சிறு பொடியன்கள்கூட அதைப் பார்த்து சிரிக்கினம், அதிலிருந்து வாழ்க்கைக்கு எண்டு எடுத்துக்கொள்வதற்கு ஒண்டுமேயில்லை, அப்போதைக்கு ரசித்துவிட்டு எங்கட வேலையைப் பார்க்க வெளிக்கிட்டுவிடுவோம். எங்கட ஆட்கள் சினிமாவை கலையாகத்தான் பார்க்கின படியால, கதாநாயகர்களை ஆராதனை செய்வதில்லை. நிழலுக்கும் நிஜத்துக்குமான வேறுபாடுகளை எங்கட சனம் புரிஞ்சி வைச்சிருக்கினம். இன்னுமொண்டு, நாங்கள் ஒருபோதும் எங்களுக்கான தலைவர்களை சினிமாவில் தேடுவதில்லை” எனக் கிண்டலாகச் சிரிக்கிறார் நடிகை லதா கந்தையா. இவர் யுத்தகாலப் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘நெருஞ்சி முள்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தனது இயல்பான நடிப்பால் அனைவராலும் பாராட்டப்பட்டவர். “நான் நடிக்கலை, யுத்தத்திற்குள்ளே நாங்கள் பட்ட அடிகளும் இடிபாடுகளும் அலைக்கழிப்புகளுமான வாழ்க்கையைத்தான் மீண்டுமொருமுறை வாழ்ந்து பார்த்தேன், எங்கட வாழ்க்கையே நெருஞ்சி முட்களுக்குள் தானே?” என்கிறார் அமைதியாக.
இலங்கையில் நடிகர் விஜய் படத்திற்கெனத் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 90 சதவீதமான இளைஞர்கள் விஜய் பக்கம்தான். விஜயின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழ்நாட்டைப் போலவே அங்கும் காலை 4 மணிக்காட்சிகள் உண்டு. பிகில் படத்தின் முதல் காட்சிப் பார்க்கவந்த ரசிகர்களால் யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி லதா சொன்ன கருத்தை உறுதிப்படுத்துகிறது. இலங்கை சிங்கள மக்களில் கொழும்பு, கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தித் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள்.
2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரை நிறுத்துமாறு கோரி தென்னிந்திய நடிகர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தினர். இலங்கை அரசு அவர்களை ‘கோமாளிகள்’ என வர்ணித்து வன்மத்தைக் காட்ட, கோபம் அதிகரித்தது. அதிலிருந்து தமிழ்த்திரைத்துறையினருக்கும் இலங்கைக்குமான எதிர்ப்பு பலவகையிலும் வெளிப்பட்டது. போருக்குப்பின் இந்தித் திரைப்பட உலகின் ஐஃபா சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா இலங்கையில் நடைபெற்ற போது, அதை பகிஷ்கரிக்குமாறு தமிழக நடிகர்கள் சார்பில் கோரிக்கை விடுக்க அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பச்சன் குடும்பம் ஏற்றுக்கொண்டது. மைத்திரி – ரணில் அரச காலத்தில் ரஜினிகாந்த் வடக்கு, கிழக்கில் வீடமைப்புத் திட்டம் ஒன்றைத் திறந்து வைக்க, இலங்கை வருகை தரத் தயாரானார். கடும் எதிர்ப்பு கிளம்ப அவரும் அதைக் கைவிட்டார். மிக அண்மையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சி நடந்தது. விஜய் சேதுபதியும் நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், முத்தையா முரளிதரன் ராஜபக்ச ஆதரவாளர் என்பதால் தமிழகமே சேர்ந்து கொந்தளிக்க, விஜய் சேதுபதி திரைப்படத்தில் இருந்து விலகினார். முடிவில் படமே கைவிடப்பட்டது. இப்படியாகத் தமிழகத் திரைத்துறைக்கும் இலங்கை அரசுக்குமிடையே பனிப்போர் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பகையும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தப் பகையைத் தீர்க்கும் சமாதானத் தூதுவன் எங்கிருந்து, எப்போது வருவான்?
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.