துபாய் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான கடைசி அறிவிப்பைக் கேட்டவுடன், அந்த 35 வயது மதிக்கத்தக்க மனிதன், தன் பக்கத்தில் நின்றிருந்த மனைவியைக் கட்டி அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டுக்கொண்டே இருக்க, மதுரை ஏர்போர்ட் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. ஏர்லைன்ஸ் பணியாளர்கள் அதிசயித்துப் பார்த்து, தங்களுக்குள் சமிக்ஞை காட்டிச் சிரித்துக்கொண்டனர். அது போன்ற ஒரு காட்சியை அந்த விமான நிலையம் இதுவரை கண்டதில்லை. நான் அவசரமாக வேறுபுறம் திரும்பினேன். அவர்களது 3 வயது குழந்தை அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. எஸ்கலேட்டரில் ஏறியவர் விடாது மனைவியைப் பார்த்து அழுதுகொண்டே கையாட்டி, கொஞ்சம் கொஞ்சமாகக் கண்களிலிருந்து மறைய, தேம்பிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கைகளைப் பற்றி மெதுவாக ஆசுவாசப்படுத்த, மூன்றாண்டுகளாகத் தொலைபேசியிலேயே குடும்பம் நடத்தியிருந்த அவர்களது பிரிவின் வலியைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த வாழ்க்கைதான் மனிதர்களை, உறவுகளை எப்படிப் பிய்த்து தூர வீசுகிறது. இடம்பெயர்தலொன்றும் மனிதனுக்குப் புதிதல்ல, ஆப்ரிக்காவிலிருந்து மனிதன் நடந்தே உலகம் முழுக்கப் பரவினான் என்கிறது மானுட வரலாறு. உயிர் பிழைத்தலுக்கும் பணம் ஈட்டலுக்குமாக மனிதனின் இடப்பெயர்வு, எல்லாக் காலத்திலும் நிகழ்ந்துகொண்டேயிருந்ததைப் பல்வேறு சங்க இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இன்றைக்கு பீகாரிலிருந்தும் உத்தரப் பிரதேசத்திலிருந்தும் இன்னபிற வட இந்திய மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியச் சகோதரர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனம் கனக்கத்தான் செய்கிறது.
விரும்பிச் செல்லும் புலம்பெயர்தலைவிட, மனிதர்கள் மீது வலியத் திணிக்கப்படும் புலம்பெயர்வு கொடூரமானது. 1947இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது வலுக்கட்டாயமாக ஏற்பட்ட மிகப் பெரிய இடப்பெயர்வும், ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி 1964இல் இலங்கையிலிருந்த மலையகத் தமிழர்கள் ஐந்து லட்சம் பேர் வலுக்கட்டாயமாக இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதும், உலகப் புலம்பெயர் வரலாற்றின் துயரமான சம்பவங்கள். உலகத் தமிழர் வரலாற்றின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் இலங்கைத் தமிழரின் புலம்பெயர்தலுக்கு அரசியலும் பொருளியலும் காரணிகளாக அமைந்தன. ஜனநாயகக் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நிலையில், போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாறியபின் ஏற்பட்ட கடினமான சூழலில் தமிழர்கள் பிற நாடுகளுக்கு இடம்பெயர வேண்டிய சூழல் உருவானது.
யுத்தம் கோர தாண்டவம் ஆடிய காலகட்டத்தில், தம் சொந்த மண்ணில் வாழ இயலாது உடமைகள், உறவுகளை இழந்து அலைந்து உழன்று, நிலம், மொழி, பண்பாடு எனப் பலவற்றாலும் அந்நியப்பட்டிருக்கும் இடத்தில் தஞ்சமடைதல் அப்படி ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை. அப்படியும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கானோரில் ஒருவரான தோழியின் துயரக்கதை இது. அந்த ஈழ தேசத்தின் வடக்கு மாகாணத்திலுள்ள சின்னஞ்சிறு கிராமத்தின் பெரிய குடும்பம் அது. நாடாண்ட சோழர் பரம்பரை வழிவந்தவர்கள் என்றும் அதன் நீட்சியாக முக்கிய நிகழ்வுகளில் யானையில் வீதி உலா வந்த கடைசி உடையார் பரம்பரை என்றும் வழிவழியாக வந்த கதைகளும் வீட்டில் பாதுகாக்கப்பட்டிருக்கும் அது தொடர்பான ஓலைச்சுவடிகளும் கூறுகின்றன. ஊரின் பெரிய வீட்டுக்காரர்கள் என்ற மரியாதைக்குப் பஞ்சமில்லை. அப்பா விவசாயத் துறையில் பணியாற்றினார். உரம் விநியோகம் துவங்கி, நில அளவை வரை பொறுப்பிலிருக்கக்கூடிய அந்தக் கிராமத்தின் முக்கிய அரசு அதிகாரி. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் நமது நாயகி (பெயர் குறிப்பிட அவர் விரும்பாததால் ரோஜா என்று வைத்துக்கொள்வோம்). நான்கு பாசக்கார அண்ணன்களுக்குப் பிறகும் ஒரு தங்கைக்கு முன்புமாக 1961இல் டிசம்பர் 24 இரவு கிறிஸ்து பிறப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு பிறந்து, பாசமலர்களுடன் வளர்ந்து, இன்றைக்கு லண்டனில் தனிமையில் தன் குடும்பத்துடன் வாழ்க்கை நடத்திவருகிறார். சொந்த நாட்டிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு, தனியொரு பெண்ணாகப் பல நாட்டு எல்லைகளை உயிரைப் பணயம் வைத்துக் கடந்து, புதிய மண்ணில் தனது வாழ்வைப் பதியம் போட்டுக்கொண்டதைக் கேட்கும் போதே சிலிர்க்கிறது.
இனவாத அடக்குமுறை மற்றும் மனித உரிமைகளை மறுதலிக்கின்ற சட்டங்களினால், எழுபதுகளிலிருந்தே இலங்கையின் நிலை சீராக இல்லையெனினும், தான் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை யுத்தம் தன்னை நேரிடையாகப் பாதித்ததில்லை என்கிறார் ரோஜா. ஏஎல் என்று சொல்லப்படும் ப்ளஸ் டூ படிப்பை முடித்தவுடன், மதத்தின் மீதிருந்த பற்றால், மறைக்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, தேவாலயத்தில் மறைக் கல்வி ஆசிரியராகப் பணி. படு சுறுசுறுப்பு, துறுதுறுப்பு. பாடல், நடனம், நாடகம், பேச்சுக்கலை, கர்நாடக இசை எனக் கலைத்துறையையே கைவசம் வைத்திருந்தார்.
நாட்டுக்குள் யுத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்துக்கொண்டிருந்தன. 1979இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் புலம்பெயர வைத்த சந்தர்ப்பத்தில், ஓர் அண்ணன் நெதர்லாந்தில் பணி கிடைத்துச் சென்றுவிட்டார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரமும் ராணுவத் தாக்குதல்களும் ஆயுதப் போராட்டங்களும்தாம் உலகின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பியது. போர்ச்சூழல் பொதுமக்களையும் பாதிக்கத் துவங்கி இருந்த காலகட்டம் அது.
படிக்கிற வயதுப் பிள்ளைகள் வீட்டிற்கு ஒன்றிரண்டு பேர் துவக்கு (துப்பாக்கி) தூக்கிப் பெருமையுடன் வலம்வரத் துவங்கியிருந்தனர். ரோஜாவின் அப்பாவுக்கு ஆயுதங்களின் மீது நம்பிக்கை இல்லை. மனிதகுலத்தை அழிக்கவல்ல யுத்தத்தை வெறுத்தவர். அஹிம்சையில் அதிக ஈடுபாடு உண்டு. ஊருக்குள் ஆயுதம் ஏந்தி அலைந்த பிள்ளைகளை உரிமையோடு கண்டிப்பதுண்டு. “மஹாத்மா காந்தி அவ்வளவு பெரிய தேசத்துக்கே அஹிம்சை முறையில் விடுதலை வாங்கிக் கொடுத்துட்டார். நீங்கள் என்னடா பொடிசுகளெல்லாம் துவக்கு தூக்கிக்கொண்டு அலையினம்?” என்று கடுமையாகவே சாடுவதால், அவர் மீது பரவலாக வெறுப்புப் படரத் துவங்கி இருந்தது. அரசுப் பணியில் இருப்பதால், அரசுக்கு சாதகமாகவும் தமிழ் இயக்கங்களுக்கு எதிராகவும் அவர் இருக்கிறார் என்று ஊருக்குள் பேச்சும் எழுந்தது.
“அப்படியான ஒருநாளில், ஏழு, எட்டுப் பேர் துவக்குகளுடன் வீட்டுக்குள் வந்தாங்க ரமா” என்ற போது, “துப்பாக்கியுடனா? ஏழு பேரா?” என்று அலைபேசி வழியாக என் பயந்த குரல் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். “துவக்குகள், குண்டுகள், பீரங்கி, ஷெல் எல்லாம் எங்களுக்கு பழகிவிட்டது ரமா, அது பற்றியெல்லாம் எங்களுக்கு பயமில்லை” என்கிறார் சிரித்துக்கொண்டே. வந்த பொடியன்கள் ரோஜாவின் அப்பாவிடம் குடும்பக் கதைகளைக் கேட்டு, பழைய ஓலைச் சுவடிகளை எடுத்துப் பார்த்துக் குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். ரொம்ப இயல்பாகவே பேசினர். எல்லாரும் உறவுப் பையன்கள் என்பதால், யாருக்கும் சந்தேகப்படத் தோன்றவில்லை. “அன்டைக்கு நாங்கள் அறியல ரமா, எங்கட அய்யாவை (அப்பாவை) நாங்கள் இழக்கப் போகிறோமெண்டு”. முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அவரது குரல் இன்னும் கசிகிறது.
1985 ஆம் ஆண்டு, புனித வெள்ளிக்கு இரண்டு நாட்களே இருந்ததால், வீடே பரபரப்பாக இருந்தது. ரோஜாவின் அம்மா சமையல் செய்துகொண்டிருக்க, ஈஸ்டருக்காகப் பலகாரங்கள் செய்து கொண்டிருக்கிறார் அண்ணி. கொய்யா மரத்திலிருந்து கரிக்குயில் கீச் கீச் என்று விடாமல் எதையோ குறிப்பால் உணர்த்துவது போல கத்திக்கொண்டே இருந்தது. அண்ணன்கள் யாரும் வீட்டில் இல்லை.
ஈஸ்டர் பலகாரமான ‘துள்ளுமா’வை அக்காளும் தங்கையும் விளையாட்டும் சிரிப்புமாக, பிட்டுப் பிட்டுச் சாப்பிடுகிறார்கள். அப்பா குளித்துவிட்டு வந்து மாமரத்தடியில் ஈசி சேரில் அவர்களின் விளையாட்டை ரசித்துக்கொண்டே படுத்துக் கிடந்தார்.
ஏதோ சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தால், நான்கு நாட்களுக்கு முன் வந்த அதே ஆட்கள், இந்த முறை அய்யாவை உடன் அழைத்துச் செல்லவிருப்பதாகக் கூற, அவர் மறுத்துப் பேச, அவர்களோ இல்லை ஒரு நிலம் தொடர்பாக ஒரு சந்தேகம் என்றும் அவர் வந்து தான் விளக்கம் சொல்ல வேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்கள். “துவக்குகளுடன் வந்து நிண்ட ஆட்கள் அய்யாவிடம் கதைச்ச விதம் எனக்குச் சரியாகப்படவில்லை ரமா, அதில் ஒருவன் பெயர் சலீம்… எனக்கு அவனை நன்றாகத் தெரியும், அவனது சிவந்த கண்களும் சிவப்பு பரட்டை முடியும் அவன் பார்த்த பார்வையும் 35 வருஷம் கழிச்சும் மறக்க முடியல ரமா” என்று துயரத்தோடு கூறினார்.
“அய்யாவின் பயந்த முகத்தை என் வாழ்நாளில் அன்டைக்குத்தான் பார்த்தேன். வாயிலருகே நின்று திரும்பி என்னை ஒருமுறை பார்த்தார் ரமா, ஏதோ இறைஞ்சும் அவரது முகம் இன்னும் என் கண்களுக்குள் இருக்கிறது. புறப்பட்டுச் சென்ற இரண்டாவது நிமிடம், ‘ டப்‘ என்ற ஒலியும் “அய்யாவைச் சுட்டுட்டாங்க” என அலறித் துடிக்கும் அண்ணனின் குரலும் கேட்க ஓடினோம். கழுத்தில் குண்டு துளைக்க நான்கு ரோடு பிரியும் சந்தியில் கிடந்தார் அய்யா. அள்ளி என் மடியில் போட்டுக்கொண்டேன். பட்டாசு மணம் போல அந்தத் துப்பாக்கிச் சூட்டின் மணம் இன்னும் என் நாசியில் இருக்கிறது. இளஞ்சூடான ரத்தம் என் மடியில் ஆறாக ஓடுகிறது. ‘துவக்கு தூக்காதே’ என்று கூறிய ஒரே காரணத்துக்காக அய்யாவுக்குக் கிடைத்த பரிசு துப்பாக்கிக் குண்டு. அய்யாவைச் சுட்டவனும் உடன் வந்தவர்களும் எவனோ அல்ல, அப்பாவின் சொந்த தமக்கையின் மகனும் இன்னும் பிற உறவுப் பையன்களும் தாம். யுத்த தர்மத்தின் முன் உறவைப் பார்க்கக் கூடாதெண்டு மகாபாரதமே சொல்கிறது தானே?” என்று விரக்தியோடு பேசுவது புரிந்தது.
அதன்பின் சில நாள்களில் அவர்களில் ஒருவனே ரோஜாவை மணமுடிக்க கேட்டு வர, மறுத்திருக்கிறார். “என் அய்யாவைக் கொன்றவனை நான் எப்படி ரமா திருமணம் செய்துகொள்ள முடியும்?” எவ்வளவு கடினமான கேள்வி இது. பல தமிழ் சினிமாக்களில் இது போன்ற காட்சிகளைப் பார்த்துக் கடந்திருந்தாலும், அனுபவித்தவர் கேட்கும் போது தான் அந்தச் சூழலின் வீரியம் புரிகிறது. திருமணத்திற்கு மறுத்ததும் இயக்கத்தில் சேரச் சொல்லி தொடர் அழைப்புகள். அப்போது பெண்களும் இயக்கத்தில் தீவிரமாகத் தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர்.
நாளுக்கு நாள் போர்ச் சூழல் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் ஊருக்குள் பழக்கமாகத் தொடங்கி இருந்தன. வீட்டிற்குப் பின்னால் மிகப் பெரிய பதுங்கு குழி தயாராகி, குண்டுமழை பொழியும் போதெல்லாம் உள்ளே போய் தங்குவதும், வெளியே வருவதுமாக வாழ்க்கை மாறியிருந்தது. வெளியே ஓயாத துப்பாக்கிச் சத்தம், பதுங்குக் குழிக்குள் மொத்தக் குடும்பமும் குட்டிகுளுவான்களுடன் ஒடுங்கிக்கிடக்க, ஒரு பெரிய பாம்பு பதுங்குக்குழி சுவற்றுக்குள் அவர்களை நோக்கி ஊர்ந்து வந்த அந்த நாளில்தான் உயிரின் மீதான பயத்தை நெருக்கமாக உணர்ந்திருக்கிறார்கள். மற்றொரு நாள் அனைவரும் பதுங்கு குழிக்குள் இருக்க, வெளியிலிருந்த ரோஜாவுக்கு மிக அருகில் சரிந்து பறந்த ஒரு ஹெலிகாப்டரிலிருந்து குண்டுகள் சரமாறிப் பொழிய ஒரு நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.
“இப்படித்தான் எங்களது ஒவ்வொரு நாளும் பிழைத்தலுக்கும் சாதலுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தது” என்பது எவ்வளவு காத்திரமான வார்த்தைகள்! சிங்கள அரசு, இந்திய ஆர்மியால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை எனப் பொய்யான நோட்டிஸ் கொடுத்து, வாழ்விடத்தை விட்டு வெளியேற்றியது. வாழ்ந்த வீட்டை விட்டு, உயிருக்கும் மானத்துக்கும் பயந்து மது மாதா கோயில், அங்கிருந்து அடுத்த ஊர், அடுத்த ஊர் என்று நகர்ந்து கொண்டேயிருந்தனர். இந்த உயிர் பிழைத்தலுக்கான ஓட்டத்தில் ஒன்றாயிருந்த குடும்பம் சிதறிப் போயிருந்தது. அவரவருக்குப் பாதுகாப்பான இடம் தேடிப் பரவினார்கள். ஓர் அண்ணன் இந்தியா போய்விட்டார். எந்தப் பக்கமும் வழியில்லாமல் வாழ்க்கை அவர்களை அலைக்கழித்தது. காசிருந்த சனங்கள் ஐரோப்பாவிற்கும் வாழவழியற்ற சனங்கள் இந்தியாவுக்கும் அகதிகளாகப் போய்க் கொண்டிருந்தனர். திருமணம் அல்லது இயக்கம் என்று ரோஜா முன்னால் வைக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளும் அவருக்கு பிடித்தமில்லை. அண்ணன் நெதர்லாந்து போய் பத்து வருஷம் ஆகியிருந்தது. எப்படியாவது தப்பிப்போய் விட்டால் அகதியாகப் பதிந்துகொள்ளலாம். இங்கிருப்பதற்கான எல்லாப் பாதைகளும் அடைபட்டுப்போக, குறிப்பாக இவரது உயிர் கேள்விக்குறியாக, இவரை நெதர்லாந்து அனுப்புவது என்ற முடிவை குடும்பத்தார் எடுத்தனர். இல்லையில்லை, அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டனர்.
ஏஜென்சி மூலம் ரோஜாவை நெதெர்லாந்து அனுப்ப ஏற்பாடு செய்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கொழும்பு போவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒரு நாட்டிற்குள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல அவர்கள் பட்ட கஷ்டம் நம் கற்பனைக்கும் எட்டாததாக இருக்கிறது. ஆர்மி கையகப்படுத்தியிருந்த பகுதியும் புலிகள் வசம் இருந்த பகுதியும் மாறி மாறி வரும். இருவரிடமும் விசாரணை, கேள்விகள், சரி பார்த்தல் எனக் கொளுத்தும் வெயிலில் வரிசை நாள்கணக்காக நீண்டுகொண்டே இருக்கும். “பக்கத்திலிருக்கும் யாழ்ப்பாணத்திற்குப் படிக்கப் போகும் பொடியன்களும் பெட்டைகளும் ஆற்று வழியாகக் கடந்து போக இரண்டு மூன்று நாள் பிடிக்கும். அப்படியானால் கொழும்பு போக எவ்வளவு நாள் ஆகும் யோசிங்க.” யோசிக்கவே அயர்ச்சியாக இருக்கிறது. ஒருவழியாகப் பல நாட்கள் நடந்தும் ஆற்று வழியாகவும் வாகனத்திலுமாக மாறிமாறி கொழும்பு வந்து சேர்ந்தார்கள்.
கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கொழும்பில் ஏஜென்ஸிகாரர்களின் அழைப்பிற்காகக் காத்திருந்திருந்த பின் ஒருநாள் போன் வந்தது தயாராக இருக்கச் சொல்லி. நன்றாக அலங்காரம் செய்து கொண்டார். கொழும்புவில் தங்கியிருந்த நாள்களில் ஆங்கில வகுப்புக்குப் போய் சரளமாக ஆங்கிலம் பேசும் திறமையை வளர்த்திருந்தார். அழகான ஜீன்ஸும் மாடர்ன் சட்டையும் அரையடி குதிகால் செருப்பும் பொட்டில்லாத நெற்றியும் நுனிநாக்கு ஆங்கிலமுமாக ஏறக்குறைய ஐரோப்பியன் போலவே மாறி இருந்தார். இப்படியெல்லாம் இருக்கும்படி அவருக்குச் சொல்லப்பட்டிருந்தது.
கொழும்பு ஏர்போர்ட்டில் சனம் குவிந்திருக்கிறது. போர்க் கொடூரம் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறத் துடிக்க வைக்கிறது. தாய் ஒரு பக்கம், தகப்பன் ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கம் என யுத்தம் குடும்பத்தைப் பிய்த்துக் கடாசியிருக்கிறது. எங்கும் அவலக் குரல். “எப்படியாவது தப்பித்தால் போதும் எனக் கிடைத்த விசாவில் உலகின் எந்த மூலைக்கும் போக சனம் துடிப்பதைக் கண்முன்னால் கண்டேன் ரமா, குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு எதோ ஒரு நாட்டுக்கு விசா கிடைத்தால், அவர் மட்டுமாவது தப்பிக்கட்டும் என்று மொத்தக் குடும்பமும் வழியனுப்ப, இனி குடும்பத்தைக் காண்போமா, வாழ்க்கையில் ஒன்று சேர்வோமா என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல், கதறித் துடிக்கிறார்கள்” குரல் கம்ம அவர் பேசுவதைக் கேட்கும்போது, சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விமான நிலையக் காட்சிகள் நினைவுக்கு வந்தன.
ரோஜாவின் கையில் ஹாங்காங், யுகோஸ்லோவியா வரை செல்வதற்கான டூரிஸ்ட் விசா மட்டும் இருந்தது. எந்தத் தமிழ் மக்களைப் பார்த்தாலும் பேசக் கூடாது என அவருக்கு உத்தரவு இருந்தது. அவர் ஏறிய விமானத்தில் முகம் நிறைய சோகத்துடன் கிட்டத்தட்ட 100 தமிழ் ஆள்கள்தாம். மேலெழும்பிய விமானத்திலிருந்து பிறந்த மண்ணை எட்டிப்பார்த்தார்.
“வாழ்ந்த அழகின் அடையாளங்கள் அறவே தெருவில் விரட்டப் பெயர்ந்தன. சாரி சாரியாகக் கால்கள் வெளியேறின.
பிள்ளைகளால் பிடுங்கி எறியப்பட்ட பொம்மைகளுக்காக அழ முடிந்தது. பெரியவர்கள் பெயர்த்தெறியப்பட்ட வாழ்வுக்காக” என்ற றஷ்மியின் கவிதை நினைவுக்குவந்தது. “உடன் பிறந்த சகோதரர்களைவிட்டு, என் சொந்த மண்ணைவிட்டு நிரந்தரமாகக் கிளம்பியாச்சு. இனி என் வாழ்வில் திரும்பி வருவேனா இல்லையோ தெரியவில்லை. மனதிற்குள் ஏதேதோ தோன்றியது. அந்த நேரத்து உணர்வுகளை என்னால் உங்களுக்கு உணர வைக்க முடியல ரமா” என்று அவர் கூறினாலும் அந்தச் சூழலை என்னால் உணர முடிந்தது.
ஹாங்காங் அங்கிருந்து யுகோஸ்லோவியாவின் தலைநகர் பெல்க்ரேட் ஏர்போர்ட்டில் தமிழ் ஆள்கள் ஒவ்வொருவராக ஒன்று சேர்கிறார்கள். அத்துடன் இங்கிருந்து அழைத்துச் சென்றவனின் வேலை முடிந்தது. இவர்கள் நூறு பேருக்கான ஒரு குட்டி விமானத்தில் குரோஷியா என்ற நாட்டின் ஸ்ப்லிட் என்ற இடத்துக்குக் கூட்டிச் செல்ல வந்த அந்த ஆங்கிலேயர், சாகிராப் என்ற ஹோட்டலில் விட்டுவிட்டு மறைந்துவிட, இப்போது ஊர் பேர் தெரியாத, விசா இல்லாத ஒரு நாட்டில் உறவும் நட்புமற்ற தனிமையில் ரோஜா. பக்கத்து வீட்டுக்குக்கூட அண்ணன்மார்கள் துணைக்கு வந்தது நினைவுக்கு வருகிறது. இரவு ஊரே உறங்கியபின் அவர்கள் இந்த நாட்டின் எல்லையைக் கடக்க வேண்டும். எல்லையைக் கடப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல, மலையிலிருந்து குதிக்க வேண்டியிருக்கும், நாய் துரத்தலாம், போலீஸ் வரலாம், தப்பித்து ஓட வேண்டியிருக்கும். அதனால் முதுகுப் பையை மட்டும் எடுத்துக்கொள்ளச் சொல்லி மீண்டும் உத்தரவு. பார்த்துப் பார்த்து வாங்கிய ஆடம்பர உடுப்புகள் ரோஜாவைப் பார்த்துச் சிரித்தன.
இரவு வர, இவர்களை அழைத்துச் செல்ல ஒரு லாரியும் வந்தது. நடுநிசி நேரம். ஒரு லாரிக்குள் 100 பேர் பயணம். எப்படியோ தப்பித்து எல்லையைக் கடந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் எல்லார் மனதிலும் இருந்தது. சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு மலையடிவாரத்தில் போய் லாரி நிற்க, “காட்டுக்குள் சிறிது தூரம் நடந்து மலையேறி, மலை உச்சியில் நில்லுங்கள். கீழிருந்து டார்ச் வெளிச்சம் உங்களை நோக்கி அடிக்கும்போது அங்கிருந்து பள்ளத்திற்குள் குதித்துவிட வேண்டும். சிறிது தூரம் ஓடி, அங்கு தயாராக இருக்கும் ஜீப்பில் ஏற வேண்டும் என்பதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளை. சரியான இருட்டு. எவ்வளவு ஆழமான பள்ளம் என்பது தெரியவில்லை. உயிர் பிழைப்போமா என்று சந்தேகமாக இருந்தது. அரையடி ஹீல்ஸைத் தூக்கி வீசினார். எங்கிருந்தோ சில வண்டிகள் வரும் சத்தம் கேட்டது. உடல் நடுங்கியது. ‘ஊரில் போர்ச் சூழலிலேயே அண்ணன்மார்கள் கண்முன்னால், அம்மாவின் மடியில் தங்கச்சியைப் பார்த்துக் கொண்டே செத்துப் போய் இருக்கலாமோ எனத் தோன்றியது. இங்கு செத்தால் செத்த செய்திகூட வீட்டுக்குக் கிடைக்குமா’ என்று மனம் குழம்பியது. அந்த மடு மாதாவை நினைத்துக்கொண்டு குதித்தார். பஞ்சு போல புல்வெளி மெத்தென்று அவரை உளவாங்கிக்கொண்டது. வேகமாக ஓடி அங்கு நின்றிருந்த ஒரு ஜீப்பில் அமர்ந்துகொண்டார். அதே ஊரிலிருந்த ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு அந்த வாகனம் மறைந்தது. முதுகிலிருந்த பையில் அவரது முக்கியமான ஆவணங்களும் அண்ணன் கொடுத்திருந்த 1500 அமெரிக்கன் டாலர்களும் மட்டுமே இருந்தன.
“இங்கிருந்து ரயில் மூலம் இத்தாலியின் ‘மிலன்’ போக வேண்டும். சனங்கள் ஆளாய் பறக்குதுகள். ஒருவக்கும் ஆங்கிலம் கதைக்கத் தெரியல. நான் இயன்றவரை உதவி செய்து டிக்கட் எடுத்துக் கொடுத்தேன், ஒருவருக்கு ஒருவர் தெரியாதது போலத் தனித் தனியாகவே அமர்ந்துகொண்டோம். 4, 5 மணி பயணத்திற்குப் பிறகு மிலன் என்ற இடத்தில் இறங்கிவிட்டோம். “இறங்கியவுடன் ஆரஞ்ச் உடுப்போடு ஒருவர் புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். உங்களைப் பார்த்ததும் அவர் நடக்கத் துவங்குவார். நீங்களும் அவர் பின்னால் போய் விடுங்கள்” என்பது அடுத்த அறிவிப்பு. ஏதோ ஆங்கில திகில் படம் பார்ப்பது போலவே இருந்தது. ஒரு செல்போன் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வரை மிகத் துல்லியமாகத் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்! ஆச்சரியமாக இருந்தது. அதே போல ஆரஞ்சு உடுப்பில் ஒருவர் நிற்க, ஜெர்மனியின் ஹேம்லின் நகரத்தில் பைப்பருக்குப் பின்னால் போன எலிகளைப் போல நாங்கள் அவர் பின்னால் போனோம். போனால் வெகு நேரம் நடந்து ஊருக்கு ஒதுக்குப் புறமாய் ஒரு குட்டி ஹால் போல் இருந்த ஓர் இடத்துக்குக் கூட்டிப் போனார். அந்த ஹாலில் ஒரு 150 பேர் இடித்துப் பிடித்து உட்கார்ந்து இருக்கினம் ரமா, எங்களுக்கு உட்காரக்கூட இடமில்லை. எங்களைச் சேர்த்து கிட்டத்தட்ட இப்போது 250 பேர் அந்தக் குட்டி ஹாலில். கலயம் போன்ற ஒன்றில் கொடுத்த கூழை ஆர்வமாக விழுங்கினேன். என் வாழ்வில் உணவின் அருமையை நான் உணர்ந்த நாள் அது.” அவரது மௌனம், தனது நினைவுகளில் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தியது.
“நீங்க எப்போ வந்தீங்க?” சாதாரணமாகத்தான் தன் பக்கத்தில் இருந்த அக்காவிடம் கேட்டிருக்கிறார். அவர் கூறிய பதிலில் உயிர் நழுவியது போல் இருந்தது. “நாங்க இங்கட வந்து ஆறு மாசமாச்சு தங்கச்சி, இனி எப்போ போகப் போறோமெண்டும் தெரியல, ஊரில், மனுச மக்களோட சேர்ந்தே செத்திருக்கலாம் போலத் தோணுது, இந்தக் கையளவு இடத்தில சரிஞ்சு, எப்பவாவது நித்திரை கொண்டு, கிடைத்ததைச் சாப்பிட்டு, செத்து செத்துப் பிழைச்சிட்டு இருக்கினம்.”
அதைக் கேட்டு அதிர்ந்து போனவர், நெதர்லாந்திலிருக்கும் அண்ணாவிடம் போனில் கதற, அண்ணன் இத்தாலியிலுள்ள டேர்முலோ என்ற இடத்துக்குத் தனது நண்பர் வீட்டுக்கு வந்துவிடுமாறு கூறினார். தனியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என அனைவரும் பயமுறுத்தினாலும் இந்த முகாமில் இருப்பதைவிட முயற்சி செய்து செத்தால்கூடப் பரவாயில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தார். இருட்டுக்குள் போவது தான் நல்லது என்பதால் அதிகாலை 5 மணி ரயிலைத் தேர்ந்தெடுத்தார். முன்பின் தெரியாத இடம், தனிமையான பயணம். மனமெங்கும் பயம், யாரிடமும் பேசாமல், தலை குனிந்து அமர்ந்திருந்தார். எங்கு இறங்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. தூங்குவது போல படுத்து, கண்களை இறுக மூடிக்கொள்ள கண்ணுக்குள் செத்துப்போன அப்பா தெரிந்தார். ஊரில் தங்கச்சி என்ன செய்துகொண்டிருப்பாள்? வீட்டாள்கள் எப்படி இருக்கிறார்களோ கவலையாக இருந்தது. அவரது பதற்றம் பக்கத்திலிருந்த சக பயணிக்குப் புரிந்திருக்க வேண்டும். அவரது உதவியுடன் குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்கினார். தூரத்தில் அண்ணாவின் டாக்டர் நண்பரும் அவரது மனைவியும் நின்றுகொண்டிருந்தனர். பின்னால் ஒரு போலிஸ் வேகமாக வர, பயத்தில் உடல் நடுங்கியது. ஆனால், அந்த டாக்டர், “முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் கதைச்சிக்கொண்டே வா” எனக் கூற, நடந்தே வீட்டிற்குப் போய்விட்டார்கள். ஒரு வழியாக அண்ணன் சொன்ன இத்தாலி நண்பர் வீட்டுக்கு வந்தாச்சு. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது ரோஜாவுக்கு. அண்ணன் எப்படியும் வந்து அழைத்துப் போய் விடுவார் என்ற நம்பிக்கை பிறந்தது. கைகளில் எந்த உடுப்பும் இல்லாததால் மறுநாள் கடைகளில் ஷாப்பிங் செய்து கொஞ்சம் உடுப்புகள் சேகரித்துக்கொண்டார்.
அதிகாலை 5 மணிக்கு கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திடுக்கிட்டு, கதவைத் திறக்க ரோஜாவின் அண்ணா நின்றார். நெதர்லாந்திலிருந்து தங்கையைக் காப்பாற்றுவதற்காக இத்தாலி வந்த அவரது திகில்கதை சில்லிட வைத்தது. ஆல்ப்ஸ் மலை வரை காரில் வந்து, அந்த மலையை நடந்தே தாண்டி விட்டால், இத்தாலி போய்விடலாம் என்ற திட்டத்தில் மலை ஏற ஆரம்பித்தார். மோசமான வானிலை, இறுகிப் போன பனி, மலையேறும் பயிற்சி இல்லை, பாதையும் தெரியவில்லை. பசியும் பட்டினியுமாக மனிதரில்லா அந்த மலைச் சிகரத்தில் தனியாகத் தவித்து நின்றவரின் மனதிற்குள் தங்கையின் முகம் தெரிய மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள், இவரைக் காப்பாற்றி திருப்பி அனுப்ப, பல நாடுகளின் எல்லைகளை உயிரைப் பணயம் வைத்து வந்திருக்கிறார் அந்தப் பாசக்கார அண்ணன். வீட்டில் நடந்த பத்து வருடக் கதையை ஒரே இரவில் அழுது, கதைச்சி முடித்தார்கள் அண்ணனும் தங்கையும்.
மறுநாள் இவர்களது சாகசப் பயணம் துவங்கியது. இத்தாலியில் இருந்து ரோமுக்குள் நுழையும் எல்லைப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள், ரோஜா காரின் டிக்கிக்குள் உடலைக் குறுக்கி ஒளிந்துகொண்டார். எல்லை ஆர்மியிலிருந்து ஒருவர் மட்டும் காரை நோக்கி வர, “ஐயோ ரமா, அந்தக் கணத்தை இப்போ நினைச்சாலும் பதட்டமா இருக்கு, காலடிச் சத்தம் மிக அருகில் கேட்க… ஐயோ… துவக்கு வைத்திருப்பாங்களோ, அப்பாவைப் போல நானும் குண்டுக்கு இரையாகப் போகிறேனோ… நினைத்துக் கொண்டிருக்கும் போதே படாரென டிக்கி கதவு திறந்தது. நான் திருதிருவென முழிக்க அந்த வடிவான பொடியன் சிரித்துக் கொண்டே நின்றான். பதட்டத்துடன் எனது நிலையை விளக்க, அந்தப் பொடியன் புரிந்துகொண்டான். ஆனால், தன்னால் உதவி செய்ய முடியாது என்றும் வேறு பாதை வழியே சென்றால் எல்லையைக் கடப்பது எளிது என்றும் கூறி பாதையும் சொல்லி விட்டான். நன்றி சொல்லிவிட்டு, அவன் சொன்னபடியே ரோமுக்குள் நுழைந்துவிட்டோம். அங்கிருந்து பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து என எங்கள் பயணம் தொடர்ந்தது. ஒவ்வொரு எல்லையைக் கடக்கும் போதும் உயிர் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் கடந்தோம். இரவுகளில் காருக்குள்ளேயே உறங்கினோம். கிடைத்ததைச் சாப்பிட்டோம். ஒரு வழியாக வீட்டை அடைந்த மறுநாள், முறைப்படி காவல் நிலையம் சென்று அகதியாகப் பதிந்து, அகதிகள் முகாமில் 15 நாட்கள் இருந்தபின், அண்ணா வீட்டுக்குப் போய் விட்டேன்” தன் நெடும் பயணத்தை பகிர்ந்துகொண்ட களைப்புத் தெரிந்தது குரலில்.
அந்தப் பயணத்தில் பெண் என்ற காரணத்தால் அவர் சந்தித்த வேறு பல இன்னல்களும் இருக்கத்தான் செய்தன. ஆனால், இயல்பில் ரோஜா தன் பெயருக்கேற்றபடி மென்மையானவராக இருந்தாலும் தன்னைச் சுற்றிலும் முட்களைப் பொருத்திக்கொண்டார், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள.
மாதம் 200 யூரோ அரசாங்கம் கொடுத்தாலும் சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க விரும்பினார். டச்சு மொழி படித்தார். மூன்று படிகள் முடித்து நிர்வாகவியலில் டிப்ளமோ முடித்து, பணிபுரியத் துவங்கினார். இதற்கிடையில் அங்கிருந்த சமூக நல அலுவலகத்தில் அகதிகளாக வரும் தமிழ் ஆட்களுக்கு மொழி பெயர்ப்பாளராகவும் தன்னார்வலராகவும் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் குடியுரிமை கிடைத்தது. திருமணம், குழந்தைகள். குழந்தைகளின் படிப்பிற்காக 2006 இல் மீண்டும் நாடு விட்டு நாடு, இப்போது இங்கிலாந்துக்கு நகர்ந்தார்கள். இங்கு வந்து மீண்டும் கல்லூரிக்குப் போய் 3 வருடங்கள் படித்தார். இளம் குழந்தைகளுக்குக் கற்பிக்க விருப்பம் இருந்ததால் young people work face என்ற டிப்ளமா பயிற்சி எடுத்தவர், தற்போது அரசுப் பணியில் இருக்கிறார். கணவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மேலாளர். இரண்டு குழந்தைகள். சொந்த நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, புதிய மண்ணில் தன்னைப் பதியம் போட்டுக்கொண்டாலும், எந்த இடத்திலும் சோர்ந்து நின்றுவிடவில்லை. தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு தொடர்ந்து உழைத்தார். இவரது வாழ்வை முழுமையாக உள் வாங்கியபோது, “பெண்ணின் வலிமைபோல் இப்பாரின் மிசை இல்லையடா” என்ற பாரதியின் வரிகளுக்கான உதாரணமாகத் தெரிந்தார்.
“இந்த வாழ்க்கை உங்களுக்குப் பிடிச்சிருக்கு தானே?” என்று கேட்டிருக்கக் கூடாதோ என்று வருந்தினேன், அவரது பதிலைக்கேட்டு. “இல்லை ரமா, என் காயங்கள் புரையோடி வடுக்களாய் இன்னும் எனக்குள் உறைந்து கிடக்கிறது. என்னைப் போல் ஆயிரமாயிரம் பிள்ளைகள் தங்கள் உறவுகளைப் பிரிந்து உலகம் முழுவதும் விரவிக் கிடந்தாலும், எங்கள் மனம், எங்கள் தாய் நிலத்தின் பால்தான் கிடக்கிறது. புதிய மண்ணில் எங்களை நாங்கள் பதித்துக்கொண்டாலும் நாடற்ற, வீதியற்ற, வீடற்ற ஒரு அலைவுத் தன்மையுடன், எங்களுக்கான தேசியம் எது என்ற குழப்பத்தில்தான் இருக்கிறோம். அப்பாவைக் காட்டி கொடுத்த அந்த உறவுப் பையன்கள் சரியாக ஆறு மாத்தில் ஒரு தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டு செத்துப் போனாங்கள். ஆனால், அவர்களால் நான், எனது மண்ணைவிட்டு, சகோதரர்களைவிட்டு, சட்டியிலிருந்து தப்பி, நெருப்பில் விழுந்த மீனாக என் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறேன். பாசமும் நேசமும் உறவுகளின் அருகாமையும் இல்லாமல் பணம் மட்டும் போதுமா இந்த உயிர்த்திருத்தலுக்கு?” என்ன பதில் சொல்ல முடியும் நம்மால்?
“நாங்கள் ஏன் அகதிகளானோம்? என் தாய்நாடு எங்கே? என் தாய் மொழி எங்கே?” என்று தொடரும் புலம்பெயர் கவிஞர் நிரூபமாவின் கவிதைகள் உள்நாட்டுப் போரில் உறவுகளைத் தொலைத்து, நீங்க மறுக்கும் நினைவுகளுடன் உலகின் ஏதொ ஒரு மூலையில் வாழ்க்கையைக் கடத்தும் ஒவ்வொருவரின் மனக் குமுறலாகவே இருக்கிறது. ஆனால், தக்கன பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டின்படி, தன் மனவலிமையால், வன்முறை எழுப்பிய கொடூரங்களுக்குத் தன் வாழ்வைப் பலியிட்டு விடாமல், தன்னைக்காத்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மைல்கள் தன்னந்தனியாகப் பயணித்து, புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களான ஏதிலி முகாம்கள், தாயக ஏக்கம், உணவுப் பழக்கங்கள், மொழி, காலநிலை, நிறவாதம், தனிமை, பண்பாட்டுச் சிக்கல், சுரண்டல்கள் அத்தனையும் கடந்து தனது புலம்பெயர்ந்த வாழ்வைத் தனது முயற்சியினாலும் உழைப்பினாலும் சீர்படுத்திக் கொண்டுள்ள ரோஜா, ‘பெண் விதைக்கும் பெருவிதை’ யாகத்தான் தெரிகிறார்.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.