பேசப்படாத ஆடை சுதந்திரம்
நாற்புறமும் நான்கு பெரும் ஊர்களை இணைக்கும் மையமாக, எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஊர் எங்களுடையது. ‘நால்ரோடு’ என்று செல்லமாக அழைக்கப்படும். ஏறத்தாழ 600 குடும்பங்கள் கொண்ட பகுதி அது. அரசுப் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான ஊர்தான். ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள் நால்ரோடுக்குத் தான் செல்ல வேண்டும். அங்கே பல வசதிகள் இருக்கும், நெருக்கிக்கொண்டு மளிகை வாங்கலாம். பால் பண்ணைகள் பல இருந்தாலும், ஆவின் கடைகளிலும் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கும். வீதிக்கு ஒரு ஐயங்கார் பேக்கரி இருக்கும் பெரியார் மண்தான் எங்கள் ஊர்.
நால்ரோடில் இரண்டு தள்ளுவண்டிகள் ஒரு ஓரமாக அமைந்திருக்கும். அவற்றில் ‘பீப் சில்லி’ என்று எழுதியிருக்கும். அந்தக் கடைகள் மட்டும் குறிப்பிட்ட இரவு நேரத்தில் திறந்திருக்கும். அதன் இயக்கத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. நம் ஊரில் தான் பெண்பிள்ளைகள் மாலைக்கண் நோயாளிகளைப் போல் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாதே! அதனால் அந்தக் கடை இயங்கி நான் பார்த்ததில்லை. ஆனால் ஒன்றுமட்டும் கேட்டதுண்டு; ஐயங்காருக்கு வரும் அதே கூட்டம், இரவுகளில் பீப் சில்லிக்கும் இருக்கவே செய்கிறதாம்.
அங்கே நால்ரோடிற்கு ஏதாவது வேலையாகச் சென்றால் தெரிந்தவர், உடன்படித்தவர், ஆசிரியர் என யாரையாவது கண்டிப்பாகப் பார்த்துவிடுவேன். என்ன பேசுவதென்று தெரியாமல் அசட்டுப் புன்னகையை மட்டும் உதிர்த்து நகர்ந்து விடுவேன். அதையும் மீறி ஏதாவது கேள்விகள் கேட்டால், கேட்ட கேள்விக்கு ஒற்றை வரி பதில் தந்துவிட்டு வந்துவிடுவேன். “உங்கள் மகள் யாரிடமோ வெகுநேரமாக பேசிக்கொண்டிருக்கிறாள்”என்பது போன்ற பல புறணிகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் இது போன்று பழக்கப்பட்டுவிட்டது மனது. தெரியாத நபர்களுடனும் பேச வேண்டும் என்ற கட்டாய சூழல் வேலை சேர்ந்த இடங்களில் வரும்போதெல்லாம், யார் என்ன பேசினால் என்ன, நமக்கு தோன்றும்பட்சத்தில் பேசிப்பழகி இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.
அப்படியாக, முழுவதும் வழுக்கையில்லாமல் காது ஓரங்கள், பின்புறத்தில் மட்டும் சிறிது வெள்ளை மயிர் கொண்டவரும், ஆடம்பரம் ஏதுமில்லா முழுக்கைச் சட்டையுடன், துவைத்து துவைத்து நிறம் மங்கிய ஒரு வெள்ளை வேட்டியணிந்து, முகத்தில் சிறு முடி கூட இல்லாது முழுவதுமாக மழித்து, ஒரு பரவசச் சிரிப்புடன், “எப்படி மா இருக்க?”, என்று பார்க்கும் போதெல்லாம் விசாரிப்பவர், அறுபது வயது மதிக்கத்தக்க அந்த அறிவியல் ஆசிரியர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இவர் எங்களுக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தார். அது அரசுப் பள்ளி என்பதால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளே அதிகம். காலையில் சீக்கிரமே பள்ளிக்குச் சென்று விடுவோம். வாரத்திற்கு ஒருநாள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆள்கள் பிரித்து பள்ளி முழுவதும் சுத்தம் செய்வோம். பின்பு சரியாக ஒன்பதரை மணிக்கு இறைவணக்கம். அது இடைநிலைப்பள்ளி என்பதால் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் தான் எல்லா நிகழ்வையும் தொகுத்து வழங்குவோம். திருக்குறள், அன்றைய செய்திகள் என எல்லாம் முன்னின்று சுறுசுறுப்பாக வாசிப்போம். அதன்பின் அன்றைய பாடங்களைக் கேட்க வகுப்பறையில் ஆர்வமாக உட்கார்வோம்.
அப்படியான ஒரு நாள். மாணவர்களின் காலைய முணுமுணுப்பு, முந்தைய நாள் அந்த நாடகத்தில் என்ன நடந்தது, வீட்டில் என்ன சமையல் என்பதெல்லாம் ஆசிரியரின் வருகை அறிந்து நிசப்தமானது. வ…ண….க்…..க….ம்……ஐ…..யா……!!!
அடடா! ராகத்தில் சிறந்த ராகமாக மாணவப் பருவத்தில் அங்கீகரிக்கப்பட்ட ராகம் அழகாய் ஒலித்தது.
” வணக்கம்! வணக்கம்! அனைவரும் நேற்றைய வீட்டுப்பாடம் முடித்தாயிற்றா?”, என்று கேட்டவாறே இருக்கையை ஒரு துணியை வைத்துத் துடைத்துவிட்டு அமர்ந்தார் அறிவியல் ஆசிரியர்.
அவர் அமர்ந்துகொண்டிருக்கும் போதே, “உள்ளே வரலாமா ஐயா!”என்று குரல் கேட்க….மொத்த வகுப்பறையின் கண்களும் வாசலை நோக்கியது. “காவியாவா? எப்போதும் போல் தாமதமா? என்ன காரணம்? “, என்றார் ஆசிரியர்.
“அம்மா அப்பா காட்டு வேலைக்கு விடியற்காலையிலையே போயிட்டாங்க. ஊருக்குள்ள இருந்து பேருந்து இல்லை. வீட்டுல சாமான் கழுவி வெச்சி, சமையலும் செஞ்சி வெச்சி, நடந்துவரணும். அதான் நேரமாகுது”, என்ற அவளது நீண்ட பதிலை எங்களிடம் மட்டும் சொல்லியிருக்கிறாள்.
ஆசிரியரிடம், “நடத்துவர நேரமாயிரிச்சி ஐயா”, என்று முடித்துக்கொண்டாள். ஆசிரியரும் எப்போதும் போல “நாளையிலிருந்து சீக்கிரம் வா மா”, என்று உள்ளே வரச்சொன்னார்.
அன்று அவர் பருவநிலை மாற்றங்களைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது” ஏன் குளிர் பிரதேசங்களில் அதிகமாக பெண்கள் லிப்ஸ்டிக் போடுறாங்க?” என்ற கேள்வி வந்தது தான் தாமதம், பசங்க பக்கம் ஒரே சிரிப்பு. பெண்கள் லிப்ஸ்டிக் என்றதும் அவர்கள் மத்தியில் ஒரு பரவசம் தென்பட்டது. “அது அவங்கள அழகாகிக்க போட்டுக்குறாங்க ஐயா”, என்றனர். இல்லை என்பது போல் தலையை ஆட்டினார் ஆசிரியர். நான் எழுந்து கையை கட்டிக்கொண்டு, ” குளிர் பிரதேசங்களில் குளிராக இருக்கும் என்பதாலா ஐயா?”, என்றதும், ” ஆமா உதடுகளில் பனி வெடிப்பு வர வாய்ப்பிருப்பதால் அப்படிப் பயன்படுத்துகிறார்கள். நம்ம நாட்டில் அது அலங்காரமாக மட்டும் உள்ளது”, என்பது போல் கூறினார். பாடம் நடத்தியதும் அனைவரும் அதைப்பற்றி கலந்து ஆலோசித்துக்கொண்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் மாணவிகளிடமிருந்து குரல், ” ஐயா காவியா வயிறு வலிக்குதுனு சொல்றா”. ” இங்க வா மா காவியா! மற்ற எல்லோரும் பாடத்தை படித்து பாருங்க”, என்று கூப்பிட்டு விசாரித்தார். நான் அவர் என்ன விசாரிக்கிறார் என்று கவனித்தேன்.
அவர் காவியாவின் மேல் வயிற்றுப்பகுதியில் தொட்டு, ” இங்கே வலிக்குதா?”, என்று கேட்டார். அவள் இல்லை என்றாள். பின் கையை அவள் நடுவயிற்றில் வைத்து, ” இங்கே வலிக்குதா?”, என்று கேட்டார். அவள், ” இல்லை ஐயா!”, என்றாள் சற்று சங்கடமான குரலில். பின்பு அவர் அவள் அடிவயிற்றில் கைவைத்து, ” இங்கே வலிக்கிறதா?”, என்றார். அவள் சற்று பின்னே நகர்ந்து, ” ஆமாம் ஐயா”, என்றாள். அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது.
வகுப்பறை முழுவதும் பார்வையை வீசி எதையோ தேடிய ஆசிரியர், ” வகுப்பில் வயதிற்கு வந்த பொண்ணுங்க மட்டும் இங்க வாங்க”, என்று அழைத்தார்.
நானும் என்னுடன் இன்னும் 5 பேர், காவியாவுடன் சேர்த்து 7 பேர் மட்டுமே அப்போது வயது வந்தவர்கள். முதலில் அவர் அப்படி அழைத்ததும் 40 பேர் கொண்ட ஆண்/பெண் இருபாலர் வகுப்பில் எழுவதற்கே எங்களுக்கு சங்கட நிலைதான். பின்பு குனிந்தபடி சென்றோம். ஏதோ நாங்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் போல் அனைவரின் பார்வையும் இருந்தது. அவர் எல்லோரிடமும் மாதமாதம் ஏற்படும் மாதவிடாய் பற்றியும் வயிற்றுவலி பற்றியும் கூறினார். அதில் ஒன்றும் தவறாக எனக்கு தோன்றவில்லை. ” உங்களில் எத்தனை பேர் துணி உபயோகிக்கிறீர்கள்?”, என்று கேட்டார். காவியா உள்பட 3 பேர் கையைத் தூக்கினார்கள். “அது தவறு. Pad பயன்படுத்துங்க. துணியை சுத்தமாகத் துவைக்கவில்லை என்றால் நோய்த்தொற்று ஏற்படும்”, என்றார்.
பின்பு அவர் என்னை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு, அனைவரையும் அவரவர் இடத்தில் அமர சொன்னார். ” பாரதி, உன் வீடு பக்கத்தில் தானே? நீ காவியாவை அழைத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போய் அவளுக்கு pad கொடுத்து, பாவாடையை சுத்தம் செய்ய வைத்து, அழைத்து வா!”, என்றார்.
அப்போதெல்லாம் அரசிடம் இருந்து இலவசமாக pad கிடைக்காத சமயம். இலவசங்களை குறை கூறுபவர்களுக்கு எங்களின் ஏழ்மையை உணர வாய்ப்பில்லை. வெள்ளைச் சட்டையும், நீல குட்டைப் பாவாடையும் தான் எங்கள் பள்ளி சீருடை. ஆசிரியர் சொன்ன பின்புதான் காவியாவின் ஆடையில் கறை இருந்ததை கவனித்தேன். அவர் எப்போது கவனித்தார் என தெரியவில்லை. பள்ளியில் பொது வெளி போன்ற கழிப்பிடம் தான். அங்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அனைவரும் மறைப்பு ஏதும் இல்லாமல் பயன்படுத்துவோம். ஆசிரியர்களுக்கு என்று தனியாக கழிப்பிடம் இருந்தது; ஆனால் அதில் மாணவிகளுக்கு அனுமதியில்லை.
நான் காவியாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். என்னிடம் உள்ள pad கொடுத்தேன். ” உள்ளே ஏதேனும் பாவாடை அணிந்து அதற்கு மேல் சீருடை அணியலாம் காவியா”, என்றேன். அவள் அவ்வாறு அணிய துணிகள் இல்லை என்று கூறிவிட்டாள். ” அம்மாவும் அப்பாவும் தினக்கூலிகள். உணவுகளுக்கு, வீட்டுத் தேவைகளுக்கே சரியாக இருக்கும். என்னோடு இரு தங்கைகள் இருக்கிறார்கள். அதனால் பார்த்துப் பார்த்துதான் செலவு செய்வோம்”, என்றாள் வருத்தமாக.
மற்றுமொரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் மதியம் நடைபெறவிருந்த அறிவியல் தேர்விற்காக காலையில் அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து ஆசிரியர் முன்பாக படித்துக்கொண்டிருந்தோம். அப்போது என்னை ஆசிரியர் அழைத்தார். ஏதோ வேலை சொல்ல போகிறார் என்று எண்ணியவாறு நானும் அருகே சென்றேன். அவர் காதினை அவர் முகத்துக்கு அருகே கொண்டுவருமாறு கையசைத்தார். வழக்குத்துக்கு மாறாக சங்கடமாக இருந்தது. சற்று பின்னோக்கி நகர்ந்து, காதினை கேட்பதற்காக அவர்பக்கம் திருப்பினேன். “சட்டைக்குள்ள சட்டை போட்டிருக்கிறாயா?”, என்று மிக மெதுவாகக் கேட்டார்.
ஆச்சரியத்துடனும், தயக்கத்துடனும், “ஆமாம் ஐயா! அது வந்து சட்டைக்குள் போடும் துணி துவைக்கவில்லை. அதனால் சின்ன சட்டை ஒன்றைப்போட்டு மேல் சட்டை போட்டிருக்கிறேன்”, என்றேன். “சரிதான் நீ அப்படியாவது உள்ளே போட்டிருக்கிறாய். சிலர் உள்ளே எதுவுமே போடாமல் வருகின்றனர்”, என்று ஒரு நக்கல் சிரிப்புடன் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு என்ன சொல்வதென்று அறியாமல் மௌனமாக நின்றேன். இந்த அருவருக்கத்தக்க கேலிக்கு நானும் சிரிப்பேன் என்று நினைத்து ஏமாந்தவர் போல் முகம் சற்று சுருங்கி, “சரி நீ போய் படி மா”, என்றார்.
வகுப்பு முடிந்து உணவு இடைவேளையில் ஆசிரியர் சொன்னது நினைவுக்குவர, பெண்களின் மேல் சட்டையை கவனித்தேன். வெள்ளைக் கதர் சட்டைதான். சிலர் உள்ளே போடும் பாவாடையோடு, கையில்லாத மேல் துணி வைத்து தைத்து அதை கௌவுன் போல் அணிந்திருந்தனர். அதுவும் வெள்ளைச் சட்டையில் கலர் கலராக சிலருக்கு அந்த உள்ளாடை தெரிந்தது. அப்படி அல்லாமல் சட்டை தனியாக பாவாடை தனியாக என தைத்து வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் உள்ளே ஏதும் அணியாமல் இருந்தனர். சற்று பருத்த உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு அந்த வெள்ளைச் சட்டை எந்த பயனும் கொடுக்கவில்லை.
அந்தப் பெண்கள் எளிய பின்னணியிலிருந்து வருபவர்கள். சிலர் விளையாடும் போதும், ஓடும் போதும், போட்டிகளின் போதும் அந்தப் பாவாடை முட்டிக்கு மேலே செல்லும். சிலர் அந்த வருடத்தொடக்கத்தில் இருந்ததை விட வளர்ந்திருந்ததால், அவர்களுக்கு பாவாடை சிறியதாயிருக்கும்.
ஆடைகளையும் மீறி சிலர் தன் உடலைப் பொருட்படுத்தாமல் ஓட்டப்பந்தைய ஆர்வத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுண்டு. உண்மையில் அவர்கள் தான், ‘ என் உடல், என் உடை, என் உரிமை’ என்ற பெண்ணியப் போராளிகள் என்பேன்.
பெண்ணின் ‘திறமை’ என்னும் விதை, பெண் உடல் மீதான உங்கள் கலாச்சார, பொருளாதார, பெண் வக்கிர எண்ணங்களை, பாரபட்சங்களைத் தகர்த்து, செடியாகும் மரமாகும். அப்போது அதன் உதவியை நாடி, கையேந்தி நிற்பீர்கள்.
அந்த ஆசிரியரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த இரு நிகழ்வுகள் நினைவைத் தொட்டு, என் சிந்தனையைக் கேள்வி எழுப்பும். ஆம் அந்த வயதில் எனக்கு புரியாதது, இப்போது ஒரு ஆசிரியராகப் புரிகிறது. ஆணின் இயல்பு அந்த ஆசிரியரிடம் அவர் ஒரு ஆசிரியர் என்பதையும் மறக்கடித்து வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு குழந்தைக்கு காய்ச்சல் என்றாலும் சரி, தலைவலி என்றாலும் சரி, நீங்கள் ஆண் ஆசிரியரோ, வேறு எந்த உறவானாலோ, மூன்று வயது குழந்தையானாலும்…. தவிர்க்க முடியாத சூழல் தவிர, தொட்டுப் பார்க்கும் உரிமை உங்களுக்கு இல்லை. பெற்றோரிடமோ, மருத்துவரிடமோ தெரிவியுங்கள். அந்தப் பெண்ணின் வயிற்று வலிக்கு ஆசிரியர் தொட்டுப்பேசும், கேட்கும் செயல் தவறானதுதான்.
நான் உள்ளே என்ன சட்டை அணிந்துள்ளேன் என்பதை குனியும் போதும், நிமிரும் போதும் கவனித்தாலன்றி வெளித்தெரிய வாய்ப்பில்லை என்னும் போது, அந்த ஆசிரியரின் வக்கிரமான பார்வைக் கோளாறைத் தெரிந்து கொள்ளமுடிகிறது. அதைப்போல எத்தனை மாணவிகளை வக்கிரமாக பார்த்திருப்பான்? இப்படிப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைத்தால், பாலியல் குற்றங்களையும் அமைதியாக செய்யக்கூடியவர்கள் தான்.
பெண் உடல் சார்ந்த ஆணின் ஆர்வம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. அதை உணர்ந்த வியாபார உலகம் இன்னும் பெண் உடலை வியாபார ரீதியாக ஆணிற்கு போதை பொருளாக பயன்படுத்தி லாபம் பார்க்கிறது. அதற்கு நாம் துணை போகக் கூடாது.
45 வயதான ஒரு அறிவியல் ஆசிரியருக்கு உடல் உறுப்புகளைப் பற்றித் தெரியாதா? கை, கால்களை போல்தான் எல்லா உறுப்புகளும் என்று புரியாதா? அப்படி இருந்தும், மாணவிகளை எதற்காக அப்படிப்பார்க்க வேண்டும்? சக மாணவியிடம் பகிர்ந்து வெற்று இன்பம் கொள்ள வேண்டும்?
சமீபத்தில் பாலியல் குற்றங்களுக்காக சில தனியார் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் கைது செய்யப்பட்டனர். இதைப் போன்ற பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பற்றி படிக்கும் போதெல்லாம் மனம் பதைபதைக்கிறது. ஆடைகள் ஒரு போதும் பாலியல் குற்றங்களுக்குத் தீர்வல்ல. ஆண்கள் தங்களை கட்டுப்பாட்டோடு நெறிப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கானத் தீர்வு.
பெரும்பான்மை CBSE பள்ளிகளில் இப்போதும் எட்டாம் வகுப்பு வரை குட்டைப் பாவாடை முறைதான். ஆனால் மேல்நிலையில் ஆண்களும் பெண்களும் கோர்ட், பேண்ட், டை, என சரிசமமாக உலாவுவதைப் பார்க்கும் போது மனதில் அவ்வளவு ஆனந்தம் வருகிறது. இதை ஏன் எல்லா வகுப்புக்கும் பயன்படுத்தக்கூடாது என்று ஆசை ததும்புகிறது.
இப்போது அரசுப் பள்ளிகளில் சீருடை மாற்றப்பட்டுள்ளது. மாதவிலக்கின் போது வெளியில் கரை தெரியும் என்ற பதட்டம் இல்லாமல் உள்ளே பேண்ட், வெள்ளைச் சட்டைக்குள் ஏதேனும் உறுப்பை தேடும் கண்களிலிருந்து மறைக்க மேல் துப்பட்டா. நான் வளர்ந்துவிட்டால் பாவாடை குட்டையாகிவிடுமே என்ற கவலை இல்லை. இன்று சுடிதார் பள்ளி சீருடையானதைப் பார்க்க தற்காலிகமான மகிழ்ச்சி இருக்கிறது.
- துப்பட்டா அணிவது பிற்போக்குத்தனமா?
துணி இல்லாத போது என்னை இயல்பாக்க, தொந்தரவுகள், சங்கடங்கள் இல்லாமல் இருக்க நான் துப்பட்டா அணியும் போது, அதை எதிர்ப்பதும் பிற்போக்குத்தனம்தான். எந்த ஒரு இடத்திற்கும் நாம் அணியும் உடையை அந்த இடம், பொருள், ஏவல் சார்ந்த சிந்தனையோடு தேர்ந்தெடுப்பதுதான் நம் இயல்பு. நான் முற்போக்கு ஆசிரியர் என்பதற்காக என்னால் ஒரு ஜீன் பேன்ட் போட்டு கொண்டு பள்ளிக்குச் செல்ல முடியாது. பொருளாதாரத்தை நான் கருத்தில் கொண்டு, அந்த இடத்திற்கு ஏற்ற ஆடை அணிய வேண்டும். அப்படியானால் என் உடையை எங்கே, எப்போது நான் தேர்ந்தெடுக்கலாம்? படித்து அதிகாரத்தைக் கைப்பற்றி தேர்ந்தெடுக்கலாம். ஆம் பெண்கள் அதிகாரத்தை அடைந்தால், மாற்றம் வரும்.
அனைவரும் இருக்கும் அரங்கில் நான் ஒரு தலைப்பில் மேடையில் பேசபோகிறேன் என்றால், அந்த இடத்தில் நான் சேலையை சரிசெய்து கொண்டிருக்க முடியாது. அதற்கு ஏற்ற ஒரு சட்டை பேன்ட் அணியலாம்.
பள்ளிகளில் எதற்கு சீருடை அணிகிறோம்? பொருளாதார, சாதி, மத பேதங்கள் ஏதும் இல்லாத பொதுவான இடமான பள்ளியில் பொதுவான உடை தேவை என்பதால்! அங்கே ஆண் பெண் பேதம் மட்டும் எதற்கு? ஆண்களும் பெண்களும் சமமாக கோட், சர்ட், பேண்ட் என்று சீருடை அணிவது தான் சிறந்ததாக இருக்கும்.
காந்தி சட்டையைக் கழற்றியதற்கும், அம்பேத்கர் கோட் போட்டதற்கும் இருக்கும் அரசியல் தான், பெண்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப ஆடை அணிய வேண்டும் என்று நான் எதிர்ப்பார்ப்பதற்கு பின்னால் உள்ள அரசியலும்.
படைப்பாளரின் மற்ற கட்டுரை:
படைப்பு:
ஜெயபாரதி
ஆசிரியர். குரலற்றவரின் குரலாக என்றும் பயணிக்க விரும்பும் சமூக செயல்பாட்டாளர்.
சமூகத்தில் இன்றைய முக்கியமான பிரச்சனையை தங்களின் அழுத்தமான கருத்துக்கள் மூலமும் முற்போக்கு சிந்தனைகள் மூலமும் எங்கும் தொய்வு ஏற்படாத வண்ணம் நடந்த சம்பவங்களை கதை வடிவில் ஒருங்கிணைத்து கருத்துச் செறிவை மிக நேர்த்தியான முறையில் பதிவு செய்த எம் என் தோழமைக்குரிய ஆசிரியர் ஜெயபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்!
சமூகத்தின் இன்றைய முக்கிய பிரச்சனையை தங்களில் அழுத்தமான கருத்துக்கள் மூலமும் முற்போக்கு சிந்தனைகளின் மூலமும் படிப்பவர்களுக்கு எங்குமே தொய்வு ஏற்படாத வண்ணம் நடந்த சம்பவங்களை மிக நேர்த்தியான முறையில் பதிவுச் செய்த விதமும் ஆசிரியர்களிடம் எஞ்சி நிற்கும் மாணவர்கள் மீதான பாலியல் சீண்டல்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய விதமும் எனது அருமை தோழர் “ஜெயபாரதி”யின் தனித்துவம் என்றே கருதத் தோன்றுகிறது!
சமூகம் மீதான தங்களின் படைப்புகள் வற்றாமல் வெளிவந்து கொண்டே இருக்கட்டும்!
– முனைவர் ச.பிரவின்குமார்
உதவிப்பேராசிரியர்.