தன் நேசிப்பு பற்றி திருக்குறளில் ‘தீவினை அச்சம்’ அதிகாரத்தில் ‘தன்னைத்தான் காதலன்’ என்று ஓர் அழகான வரி வருகிறது. ஒருவர் தன்மீது தான் வைக்கிற அன்பைத்தான் அப்படிச் சொல்கிறார் திருவள்ளுவர்.

‘தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.’

(குறள் 209)

தன்னைத்தான் நேசித்து வாழும் ஒருவர், எவ்வளவு சிறியதாயினும் தீயச் செயலைச் செய்யக் கூடாது. உங்களை நீங்கள் நேசிப்பது உண்மை என்றால் எப்போதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதீர்கள் என்பது இந்தக் குறளின் பொருள்.

தன் நேசிப்பு (Self Love) என்றால் என்ன?

சுய மரியாதை (Self Esteem), சுய அக்கறை (Self Care), சுய மதிப்பீடு (Self Value), சுய கட்டுப்பாடு (Self discipline), தன் நம்பிக்கை (Self Confidence), சுய முன்னேற்றம் (Self Development), தன் அதிகாரம் (Self Empower), தன்னை அறிதல் (Self realisation), தன் வெளிப்பாடு (Self Expression), தன்னை உள்ளபடியே ஏற்றல் (Self Acceptance) இவை அனைத்தையும் இன்னும் பிறவற்றையும் உள்ளடக்கியதே ‘தன் நேசிப்பு.’

நாம் பல நேரம், சுயமோகி (Selfish) ஆக இருப்பதையும் தன் நேசிப்பு (Self Love) என்பதையும் குழப்பிக்கொள்கிறோம். அதனால், தன் நேசிப்புடன் இருப்பதைத் தவறென்று கருதி, குற்றவுணர்வு கொள்கிறோம்.

சுய மோகத்திற்கும் தன் நேசிப்பிற்கும் மிகச் சிறிய வித்தியாசம்தான். சொல்லப் போனால், ஓரெழுத்தின் சுழிப்புதான் வித்தியாசம் – ‘மிதித்து வாழ்தல், மதித்து வாழ்தல்’ அவ்வளவுதான்.

அதே போல பல நேரத்தில், தன் நேசிப்பு இல்லாமல் இருப்பதைத்தான் விட்டுக்கொடுத்தல் என்றும், பிறருக்கு அக்கறையோடு உதவி செய்தல் என்றும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். சில உதாரணங்கள் வழியாக இவற்றைப் பார்ப்போம்.

சிலர் ‘சைனஸ்’ பிரச்னையால் கடுமையாக அவதியுறுவார்கள். ஆனால், தினமும் தனக்கென ஓர் அரை மணி ஒதுக்கி, நீராவி பிடிப்பது, ‘ஹாட் பேக்’ ஒத்தடம் கொடுப்பது, மூச்சுப் பயிற்சி செய்வது என்பதைச் செய்ய மாட்டார்கள்.

இன்னும் சிலர், ‘மைக்ரேன்’ தலைவலியால் பொறுக்க முடியாதளவு துன்பப்படுவார்கள். ஆனால், தலைவலியில் துடித்து வாந்தி எடுத்து, கொஞ்சம்கூட ஓய்வு எடுக்காமல், வீட்டினருக்கான மற்றும் அலுவலகத்திற்கான அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.

சிலர் நாற்பது வயதுகளில் மூட்டு வலிப் பிரச்னைகளால் சிரமப்படுவார்கள். ஆனால், அவ்வளவு வலியைப் பொறுத்துக் கொண்டு, மற்றவர்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஓடிஓடி வேலை செய்வார்கள்.

சிலருக்கோ தனது உடல் நலத் தேவைக்காக நடைப்பயிற்சி, யோகா, தியான வகுப்புகளுக்குப் போகக்கூட நேரம் இருக்காது. ஆனால், தனது குடும்பத்தினரின் – பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் சிறு சிறு தேவைகளையும் அவர்கள் ‘காலால் இட்டதைத் தலையால் மேற்கொண்டு’ செய்து முடிப்பார்கள்.

தன் மேல் அக்கறை கொள்வதை, எப்போதும் கடைசிபட்சமாக வைத்திருப்பார்கள். இதில் ஆண் பெண் பேதம் இல்லை.

தன் வலியை, தானே மதிக்கவில்லை என்றால், தான் வெளிப்படுத்தவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தாமாக எப்படிப் புரியும்? தெரிய வரும்? வலியுறும் நாம்தானே சொல்ல வேண்டும்?

தன் மேல்தான் அக்கறை காட்டாமல் இருப்பதைத்தான், பிறர்மேல் கொண்ட அக்கறையாக இவர்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு யார் பொறுப்பு?

இன்னும் சிலர் இருப்பார்கள். ஓய்வெடுப்பதை ஏதோ கொலைக் குற்றம் போல பாவிப்பார்கள். எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது என்பது யாராலும் முடியாது; உண்மையில், ஓடுதலும் இளைப்பாறலும் சம விகிதத்தில் இருந்தால்தான் நெடுந்தூரம் பயணிக்க முடியும். ஓய்வெடுக்காமல் ஓடிக்கொண்டே இருந்தால், பட்டென்று ஒருநாள் எல்லாமே மொத்தமாக நின்றுபோய்விடும்.

நாம் நமது வேலைகளுக்கு எந்தளவு மதிப்பளிக்கிறோமோ அதே அளவு, ஓய்விற்கும் மதிப்பளிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை ஆரோக்கியமாகச் செல்லும்.

மேலும் சிலர் இருப்பார்கள். விட்டுக்கொடுத்தல் என்பதைத் தனக்கே இல்லாமல் தந்துவிடுதல் என்பதாகப் புரிந்து இருப்பார்கள். இவர்கள், ‘யானைக்கு அர்ரம்’ என்றால் ‘குதிரைக்குக் குர்ரம்’ என்று வாழ்வைப் புரிந்தவர்கள். தனக்கே இல்லாமல் தருவது என்பது ஏமாளித்தனம். ஏமாந்துவிட்ட தனது செயலுக்கு, தான் பொறுப்பேற்காமல், மற்றவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறுவது சரியா, என்ன?

சிலரோ தான் எவ்வளவு நல்லவர் என்பதை மற்றவர்களிடம் நிரூபிக்க எந்த எல்லைவரையும் செல்வார்கள். தான் நல்லவர், தன்னைச் சுற்றி உள்ள எல்லாரும் தன்னை ஏமாற்றும் நன்றி கெட்டவர்களாக இருப்பதாகப் புலம்புவார்கள்.

காந்தியடிகளின் பொன்மொழி ஒன்று உண்டு.

‘மற்றவர்களைக் குற்றப்படுத்துவதால், ஒருபோதும் நாம் நல்லவர்களாகிவிட முடியாது.’ – காந்தியடிகள்

‘நாலு பேர் என்ன சொல்வார்களோ’ என்று பயந்து வாழ்வார்கள் சிலர். இவர்கள், தன்னை ஒரு நூறு பேர் எப்போதும் கண்காணிப்பதான நினைவோடு, இயல்பற்று வாழ்வார்கள். இவர்களுக்குத் தனக்கு என்ன வேண்டும்; தான் யார் என்பதைக் கண்டறிவது சிரமமாக இருக்கும்.

இன்னும் சிலரோ பார்க்கிறவர்களிடம் எல்லாம், போகிற – வருகிறவர்களிடம் எல்லாம் தனது வாழ்வை ஆதியோடு அந்தமாய், தான் குழந்தையாக இருந்தது முதல், இப்போது பிள்ளைகள் பேரன் பேத்தி வரை தனது குடும்பத்தின் அத்தனை அந்தரங்கத்தையும் உளறிக் கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.

நமக்குதான் அது வாழ்க்கை. ஆனால், மற்றவர்களுக்கு அது ஒரு கதைதான். இது புரிந்தால், மற்றவர்களுக்கு நமது வலி, வேதனைகளைப் புரிய வைக்க முயன்றுகொண்டிருக்க மாட்டோம்; மற்றவர்கள் நம் அளவே நம் வலி, வேதனைகளைப் புரிய வேண்டும் எனப் போராட மாட்டோம்; நமது வலி இப்படியாப்பட்டது, அப்படியாப்பட்டது என நிரூபிக்கப் படாதபாடுகள் பட மாட்டோம்.

உங்களை, உங்களது அன்றாட செயல்களைச் சிறிதும் விருப்பு – வெறுப்பற்றுக் கவனியுங்கள். ஏன் இவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறோம்? ஏன் எப்போதும் இவ்வளவு பதட்டமாக இருக்கிறோம்? இந்தப் பதட்டம் தேவைதானா? இந்தளவுப் பதட்டமாகச் செய்தால் மட்டும்தான் இந்த வேலை சிறப்பாக நடக்குமா? நிதானமாகச் செய்தால் நடக்காதா? நாம் ஏன் எப்போதும் போர்க்களத்தில், எதிரியின் துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பிப்பது போல் ஓடிக்கொண்டிருக்கிறோம்?

தன் நேசிப்பின் முழு முதல் படியை, ‘நமக்காக நேரம் ஒதுக்குதல்’ என்பதில் தொடங்குங்கள். அது அரை மணியோ ஒரு மணியோ உங்களுக்காக ஒதுக்குங்கள். அதில் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

ஒரே ஒருநாள் அன்றாட ஓட்டம் கடமைகள் எதுவுமே செய்யாமல், அமைதியாக நிதானமாக இருந்து பாருங்கள்; தேநீர் அருந்துதலை, சாப்பிடுவதை, குளியலை நிதானமாக அனுபவித்து ரசித்து செய்து பாருங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்Example Ad #2 (only visible for logged-in visitors)

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.