பாலினம் மட்டுமே பெண்குழந்தைகளின்/ஆண்குழந்தைகளின்/திருநர் குழந்தைகளின்/மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒன்றல்ல. அனைத்துக்கும் இங்கே அடிப்படை ‘ஆணாதிக்கச் சிந்தனை’. ஆண் என்ற வார்த்தையைத் தாங்கி நிற்பதால் அந்த ஆதிக்கச்சிந்தனை ஆண்பாலுக்குரியது என்று அர்த்தமல்ல. ஆணாதிக்கச் சிந்தனையைத் தீர்க்கமாக உள்வாங்கிய பாலினத்தார்கள் இங்கு அதிகம். அந்த அடிப்படையில்தான் இன்னமும், ‘பெண்களே பெண்களுக்கு எதிரி’ போன்ற கூற்றுகள் நீடிக்கின்றன.

Photo Courtesy: New Indian Express

மதத்தைச் சொல்லிப் பெண்குழந்தைகளைப் பாகுபடுத்தும் பெண் ஆசிரியர்கள் இங்கு ஏராளம். ஜாதியின் அடிப்படையில் பெண்குழந்தைகளைக் கேவலமாகப் பேசும் பெண் ஆசிரியர்கள் இங்கு ஏராளம்.

தன்னைவிட ஒரு பெண் குழந்தை நிறம் கூடுதலாக, முடி நீளமாக, வசீகரமாக இருந்தால், கூடுதலான திறமைகளுடன் இருந்தால், பகுத்தாய்ந்து கேள்விகளைத் தன்முன் எழுப்பினால், எந்தவித உயர்ந்த பொருளாதாரப் பின்னணியும் இல்லாத ஒரு குழந்தை எல்லோராலும் பாராட்டப்பெற்றால், அந்தக் குழந்தையை ஏதோ ஒருவகையில் அங்கிருக்கும் ஏதோ ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.

மாதாமாதம் ஆகும் பிரீயட் டைமில் ஒரு பெண்குழந்தை ஓரிரு நாள் விடுமுறை எடுத்தாலோ, வகுப்பறையிலிருக்கும்போது பாத்ரூம்போக அரைமணிக்கொருமுறை அனுமதி கேட்டாலோ… ரத்தக்கசிவு பேண்ட்டைத் தாண்டி வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறை அமரும்போதும் டாப்பைத் தூக்கிவிட்டு அமர்ந்தாலோ… துணியையோ, வைத்திருக்கும் நாப்கின் தாண்டியோ ரத்தம் கசிந்து வெளிவந்து துணியில் பட்டுவிட்டாலோ, அந்தக் கறையை பின்னாடி தொங்கிக்கொண்டிருக்கும் துப்பட்டா மூலமோ, அந்தக் கறைபட்ட இடத்தை மட்டும் சுருட்டி ஒரு கையால் பிடித்துக்கொண்டு இருந்தாலோ… அங்கிருக்கும் பெண் ஆசிரியர்கள், “என்னமோ நீ மட்டும்தான் இந்த உலகத்துலே மாசாமாசம் பீரியட் ஆகுற மாதிரி ஓவரா சீன் போட்டுட்டு இருக்க? ஒழுங்கா நாப்கின்கூட வாங்கி வச்சிக்க முடியாதா?’ என்றும் அதைவிடக் கேவலமாகவும் பேசும் பெண் ஆசிரியர்கள் ஏராளம்.

“எவனை மயக்க இப்டி பூ வச்சிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு வரீங்க டி?”

“இவளுங்கலாம் படிக்க வராளுங்களா இல்ல ஷோ காமிக்க வராளுங்களானு தெரியல. இந்த அளவுக்கு சிங்காரிச்சிக்கட்டு வராளுக.”

“எவனையாவது இழுத்துட்டுப் போகவேண்டியதுதான? இங்க வந்து ஏன்டி எங்க உசுர வாங்கறீங்க?” என்று பெண்குழந்தைகளைப் பார்த்துப் பேசும் பெண் ஆசிரியர்கள் ஏராளம். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆகவே, ஆண் ஆசிரியரா பெண் ஆசிரியரா என்பது முக்கியமல்ல.

பள்ளியிலிருக்கும் குழந்தைகளைத் தம் குழந்தைகளாக மதிக்கும் குழந்தைநேயமிக்க, மனித உரிமைக் கல்வி பயின்ற, மனித உரிமையைப் பண்பாடாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களே தேவை.

பாலினம், பாலியல் சார்ந்த புரிதல் மனித உரிமைக் கல்வியால் மட்டுமே முழுமையாகக் கொடுக்க முடியும் என்று மனித உரிமைக் கல்வி பயிற்சி எடுத்துக்கொண்ட நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆணாதிக்கச் சிந்தனையோ, குழந்தை நேயமோ எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரே நாளில் வந்தும்விடாது; வளர்ந்தும் விடாது. ஆனால், குழந்தைகளின் உரிமையைப் பறித்தாலோ, குழந்தை உரிமை மீறலை மேற்கொண்டாலோ என்ன தண்டனை கிடைக்குமென்று எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரே நாளில் ஓரே அரசாணையின் மூலம் புரியவைத்திட முடியும். அல்லது இரண்டு மூன்று நாட்கள் கொடுக்கும் பயிற்சியின் மூலம் அதை விளக்கிப் புரிய வைத்திட முடியும்.

School photo created by freepic.diller – www.freepik.com

பாலினத்தில் தீர்வைத் தேடாமல், குழந்தைகள் உரிமை சார்ந்து, மனித உரிமை சார்ந்து யோசித்தால் தீர்வு நிச்சயம் கிட்டும்.

Let’s look for the solution from the depths of the problem without looking at gender.

படைப்பாளர்

மகாலட்சுமி

ஆசிரியர் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளி, அரசு வெளி, ஜவ்வாது மலை, திருவண்ணாமலை மாவட்டம்