நயாகராவைப் பற்றி எழுவேண்டும் என்று நினைத்தபோது சொல்லில் அடங்காத அந்த அனுபவத்தை எந்தளவு எழுத்தில் கொடுக்க முடியும் என்று மலைப்பாக இருந்தது.

கனடா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நயாகரா தான். உலகின் இரண்டாவது மிகப் பெரிய அருவி, வட அமெரிக்காவின் மிகப் பெரிய புகழ்பெற்ற அருவி. இதை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்துகொள்கின்றன. நாங்கள் வசிக்கும் அதே ஒண்டாரியோ மாகாணத்தில்தான் நயாகராவும் இருக்கிறது.

ஒரே நாளில் நயாகரா உட்பட முடிந்த இடங்களைப் பார்க்க நினைத்தோம். உள்ளூர் விடுமுறை என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அமெரிக்க விடுமுறை தினத்தில் சென்றோம்.

எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் ஒரு நாள் பாஸ் போன்ற சலுகை டிக்கெட்டுகள் இருக்கும். ஆன்லைனில் பெற்றுகொள்ளலாம். முதல் நாளிரவு வேலை முடித்து தூங்குவதற்கு நேரமாகிவிட்டது. காலையில் சீக்கிரம் எழுந்து ட்ரெயின் பிடிக்க வேண்டும், விட்டுவிட்டால் அடுத்த வண்டி பிடித்து, பஸ் மாறிச் செல்வதில் காலதாமதம் ஏற்படும். நாங்கள் வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டிய பஸ்ஸை ஒருவழியாகப் பிடித்துவிட்ட போதும், ட்ரெயினை பிடிப்போமா என்று ஒரே டென்ஷன் தான். 8 மணிக்கு ட்ரெயின் பிடித்துவிட்டோம். ஆனால், அதில் பாதி தூரம் சென்றபின் இறங்கி வேறொரு பஸ் மாற வேண்டும். எல்லா இடங்களிலும் தேடல்தான். ட்ரெயினிலிருந்து இறங்கி எந்தப் பக்க வாயிலில் வெளியே வர வேண்டும், எந்த கேட்டில் பஸ் பிடிக்க வேண்டும், எந்த பஸ், எத்தனை மணிக்கு வரும் என்றெல்லாம் கண்டுபிடித்து ஒரு பஸ்ஸில் அமர்ந்தோம். இப்போதுதான் சுற்றிப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.

பிரம்மாண்டமான ஹைவேயில் அணிவகுத்து செல்லும் கார்களும் பச்சைப் பசேலென்று பரந்த புல்வெளிகளும் கண்ணைக் கவர்ந்தன. எப்படிப் பராமரிக்கிறார்கள் என்று ஆச்சரியமாகப் பார்த்துகொண்டிருந்த போதே, கடலா இது என்று வியக்கும் அளவு பெரிய ஏரியின் காட்சி பிரமிக்க வைத்தது. உலகிலேயே இரண்டாவது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு என்பதால்தானோ என்னவோ எல்லாமே பெரிதாக இருக்கிறது.

இதெல்லாம் இன்னும் சில நிமிடங்களில் பார்க்கப்போகும் பிரம்மாண்டத்தின் முன்னோட்டம் மட்டுமே என்பது பிறகு புரிந்தது. நயாகராவை அடைந்தபோது, நகரத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது, விண்ணை முட்டும் கட்டிடங்கள் இல்லை, சாலை முழுவதும் பூந்தொட்டிகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள், குழந்தைகள் அழகான வண்ண வண்ண உடைகளில் உற்சாகமாக இன்னும் அந்தச் சூழலை அழகூட்டினார்கள்.

அங்கிருந்து அருவி இருக்கும் இடம் செல்ல இன்னுமொரு பஸ் பிடித்தோம். அந்த பஸ் முழுவதும் மக்களால் நிரம்பி இருந்தது, நம்மைப் போல உள்ளூர் விடுமுறையைத் தவிர்த்து வந்த புத்திசாலிகள் தவிர, அமெரிக்காவிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளும் உண்டு என்பது அப்போதுதான் புரிந்தது. அமெரிக்காவிலிருந்து பார்ப்போருக்குக் கிடைக்கும் வியூவும் கனடாவிலிருந்து கிடைக்கும் வியூவும் தனித்தனிச் சிறப்புகொண்டது. அதிலும் கனடாவின் ஹார்ஸ்-ஷூ ஃபால்ஸ் வியூ மிகவும் பிரசித்திப் பெற்றது. வரவேற்பு நிலையத்திற்குச் சென்று ஆன்லைன் டிக்கெட்டுக்கான ரசீது கொடுத்து பாஸ் பெற வேண்டும். அங்கு கணிசமான கூட்டம் வரிசையில் நின்றிருந்தது.

வரிசையில் நின்றிருக்கும்போது தென்பட்ட அருவியின் ஒருபுறத் தோற்றமே கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பாஸ் பெற்றுக்கொண்ட இடத்தில் மேப், முக்கியமான காட்சிகள், நேரங்கள் எல்லாம் குறித்த தகவல்கள் கொடுத்தார்கள். எங்கு முதலில் செல்வது, எவ்வளவு கூட்டம் இருக்கிறது, காத்திருக்கும் நேரம் எவ்வளவு, அடுத்தடுத்த காட்சி நேரங்கள், பார்த்து முடிக்க வேண்டிய இடங்கள் எல்லாம் ஆலோசித்து முடிவு செய்தோம். முதலில் நயாகரா உருவான விதம் பற்றி விளக்கும் 360 டிகிரி தியேட்டருக்குச் செல்ல நினைத்தோம். அடுத்த காட்சிக்கு இன்னும் நேரம் இருந்த காரணத்தினால் வரவேற்பு நிலையத்தின் பின்புறம் அருவியைப் பார்க்கச் சென்றோம்.

நல்ல சூரிய ஒளியில், லேசான தூறலுடன், அருவியின் சாரல் புகைபோல மேலெழுந்து உருவாக்கிய ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டோம். சற்று முன்னோக்கி நகர்ந்தேன். அவ்வளவுதான்! ஸ்தம்பித்து நின்றது என் கால்கள் மட்டுமல்ல என் இதயமும்தான். கண்கொள்ளா காட்சி! ஹார்ஸ்-ஷூ எனும் மிகப் பிரபலமான அருவியின் வியூ பார்க்கும்போது ஏற்படும் உணர்வை வார்த்தைகளில் சொல்ல முடியாது!

பிரம்மாண்டம் என்று கனடா வந்ததிலிருந்து பலமுறை நினைக்க வைத்த காட்சிகள் எல்லாம் இப்போது காணாமல் போய், எல்லையே இல்லாது விரிந்து பரந்த வானத்தைக் காணும்போது அதற்குக் கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிரவாகமாகத் தண்ணீர்! உலகம் முழுவதிலும் இருக்கும் தண்ணீர் மொத்தமாக ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கட்டவிழ்த்து விட்டதைப்போல விழும் வேகம்! நின்ற இதயம் மீண்டும் அதிவேகத்தில் துடிக்க ஆரம்பிக்கும்போது, அதன் ஒலி காதில் விழுந்தது.

எவ்வளவு அற்புதங்களை மனிதன் படைத்தாலும் இந்த ஒரு காட்சியில், இயற்கை நம்மை வென்றுவிடுகிறது. நம் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளம். அங்கெல்லாம் இளமை ததும்பும் பெண்ணின் வெட்கத்தைப் போல காட்சிதரும் இயற்கை, இங்கே விஸ்வரூபம் எடுத்து மிரட்டலாகக் காட்சி தந்து நம்மைச் சிலையாக மாற்றிவிடுகிறது.

நயாகராவைச் சுற்றி மின்சார உற்பத்தி, வர்த்தகம், இயற்கையை ரசிக்க ஏற்றார்போல அருமையாக அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள், 360 டிகிரி தியேட்டரில் அருவி உருவான வரலாற்றை அந்தந்த காலகட்டதிற்குச் சென்று காட்டி அத்துடன் அருவியில் சவாரி செல்லும் அனுபவத்தைக் கொடுப்பது, அருவியின் பின்னால் மலையைக் குடைந்து 130 வருட பழமையான குகைகளின் வழியே 13 தளத்திற்குக் கீழே சென்று உலகிலிருக்கும் ஐந்தில் ஒரு பங்கு நன்னீர் நம் கண்முன்னே கொட்டுவதை காட்டுவது, சினம் கொண்ட சிங்கத்தை எதிர்க்கும் சிறு எலியின் வீரத்தைப் போல கப்பலில் அருவிக்கு எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகில் கொண்டு காட்டுவது, காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்லும் இடங்களில் அதை அருகில், உயரத்தில் மலைகளுக்கிடையில் பயணித்து நடுங்கும் உள்ளத்துடன் பார்க்க வைப்பது போன்றவை கொடுக்கும் பணத்துக்கு மட்டுமல்லாமல், அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தைக் காட்ட நியாயம் செய்தவிதத்தில் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகிறார்கள்.

(தொடரும்)

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக இரண்டரை வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாகத் தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.