கலந்துரையாடல் சமத்துவ வெளிக்கான திறவுகோல். மிக்க மகிழ்வாக இருந்தது உரையாடல்.
“பொட்டைன்னா பொண்ணு அப்படின்னு பெரும்பாலானோர் சரியா பொருள் சொல்லியிருந்தீங்க. நம் சமூகத்தில் இந்தச் சொல் படிச்சவங்க, படிக்காதவங்கன்னு வித்தியாசம் இல்லாம இழிவைச் சுட்டும்போது இது பயன்படுத்தப்படுதுதான். மாறணும்.
ஆதிகாலத்துல தாய்வழி பொதுவுடைமைச் சமூகத்தைக் கொண்டதாக இருந்தது. பொதுவுடைமைன்னா எல்லாமும் எல்லாருக்கும்னு சொல்ற சமூகம். அதுல பெண்தான் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தினாங்க.
பிறகு காலம் மாற மாற ஆண் மேலாதிக்கம் வந்து, தந்தை வழி தனியுடைமை சமூகமா சுயநலமா மாறிடுச்சு. அதுல பெண் என்ற சொல் இழிவா பயன்படுத்தப்படுது.
எப்படின்னா, ஆண் என்றாலே துணிச்சல், கம்பீரம், வீரம், பொதுவெளில செயல்படறது, ஆவேசம் அப்படினு பல விஷயங்கள் இருக்கணும்னு சமூகம் விதி அமைச்சு வைச்சிருக்கு.
வேலைகளைக்கூட உண்மையாகவே உயிரியல்பூர்வமா முடியுமா முடியாதான்னு பார்க்காமலேயே ஆண் செய்யும் வேலையைப் பெண் செய்ய முடியாதுன்னு கட்டமைச்சிருக்கு. ஆண், பெண் இருவரும் இந்த மாதிரி கருத்தியல் கொண்ட சமூகத்தில் இந்த உயிரியலுக்கு எதிரான கருத்துகளால் நிரப்பி வளர்க்கப்படறாங்க.
இப்படி வளர்க்கப்படறதால இதை அறிவியல் மனப்பான்மையோடு பரிணாம வளர்ச்சி, உயிரியல் போன்றவற்றின் படியெல்லாம் பார்க்காம ஆண்தான் வலிமையான உயிரி அப்படிங்கிற கருத்துல ஊறிடறாங்க. பெண்ணை வலிமை குறைவானவனு நினைக்க வைச்சிடறாங்க. இதெல்லாம் நம்மைச் சிந்திக்க விடாம செய்யுதுன்னுகூட சொல்லலாம்.
பத்தாத குறைக்கு ‘பொட்டை கோழி கூவி பொழுது விடியாது’ போன்ற பழமொழிகள் வேறு இந்தக் கருத்தியலுக்கு எல்லாம் தீனி போடுது.
அப்போ உண்மை என்னன்னு நீங்க மனசுக்குள்ள கேட்கறது புரியுது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில தனித்த உயிரியல் செயல்பாடுகள் இருக்கு. அதை ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது நியாயமில்லை.
ஆதி சமூகம் பெண்ணால் தலைமை தாங்கப்பட்டிருக்கு. இப்பவும்கூட உலக அளவில் பெண் தலைவர்கள், ஆளுமைகள், செயல்பாட்டாளர்கள் இருக்கறாங்க. கொரோனா காலகட்டத்திலும் சிறப்பான தலைமையாவும் செயல்படறாங்க. ஏன் நம் வீட்ல பெண்கள் சிறப்பா செயல்படறத பார்த்துக்கிட்டுதானே இருக்கோம்?
சரி இதெல்லாம் கூட விட்டுங்க. யார் வலிமை, வலிமை இல்லைங்கிறதே வேணாம். நமக்கு உருவம் கொடுத்து ஒவ்வோர் உயிரையும் வளர்த்தவள் பெண் – அதான் அம்மா. உங்களுக்கு ஆசிரியரா இருக்கற நான்கூட பெண் தான். இந்தச் சமூகமே அடுத்தடுத்த தலைமுறை தலைமுறையாக நீண்டு மனித இனம் அழியாம இருக்கக் காரணமே பெண்தான். நம்மைப் பெற்றவர், கூட வாழ்றவங்கன்னு சமூகத்துல சரிபாதியா பெண்கள் இருக்காங்க. அவங்கள பொட்டை போன்ற சொல்லால் இழிவான பொருள்படும்படி சுட்டுவது முறையா என அனைவரும் யோசிங்க.
பெண்கள் உயிரியல்ரீதியாகவே வலிமை உள்ளவர்கள். அவங்களுக்கு மனவலிமை, நோய் எதிர்ப்புத் திறன், தப்பிப் பிழைக்கும் ஆற்றல் அதிகம்னு அறிவியலே சொல்லுது.
தாய் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது சுமார் 20 மேற்பட்ட எலும்புகள் உடையும் வலியைத் தாங்கிட்டுத்தான் குழந்தையைப் பெற்றெடுக்கறாங்க. இவ்ளோ வலியைத் தாங்கினவங்க… ஏதாவது சின்னத் துன்பம் வந்தா கோழை மாதிரி அழறாங்கன்னும், அழறதே கோழை, அதனால ‘ஆண் வீரமானவன் கோழை மாதிரி அழக் கூடாது’ன்னும் சொல்லி வளர்க்கப்படறாங்க. ஆனா, சோகம் வரும்போது மனிதர்களுக்கு அழுகை இயற்கைதான் பாஷா. இயல்பாவே இருப்போம் பாஷா.
தொடர்ந்து நிறைய வாசிங்க. அது நம்மைப் பண்படுத்தும். மீண்டும் வேறொரு தலைப்புல அடுத்த வகுப்புல உரையாடலாம்” என்று நீண்ட உரையை முடித்தார் ஆசிரியர் தனலட்சுமி.
“ரொம்ப நன்றிங்க டீச்சர். நிறைய தெரிந்து கொண்டோம்” என்றாள் புஜ்ஜி மனநிறைவோடு…
பெண்கள் உயிரியல் ரீதியாகவே வலிமையானவர்கள். இனி இழிவா பொருள்படும்படி அந்த வார்த்தையை உபயோகிக்கமாட்டேன் டீச்சர்” என்று ஜீவா தீர்மானமாகச் சொன்னான்.
“டீச்சர், பொட்டைங்கிற சொல்லை எப்படி நம்மை அறியாம இழிவா, அவமானம் தரும்படி பயன்படுத்த வைச்சுட்டாங்கன்னு புரிய வைச்சிட்டிங்க. நன்றி டீச்சர். இனி அந்தப் பொருள்படும்படி சொல்லமாட்டேன். நாம் வலிமையானவர்கள். பொட்டைன்னு சொன்னா இழிவா நினைக்கத் தேவையில்லை. உயிரியல்படியே வலிமையாகவே நினைப்போம் பெண்கள் அனைவரும்” – சிந்துவும் தக்க தருணத்தில் உணர்ச்சி ததும்பக் கூறினாள்.
”மிக்க மகிழ்ச்சி, பொட்டை ஓர் உயிரியல் வலிமை, இழிவு அல்ல, அவமானமும் அல்ல… அனைவருக்கும் நன்றி.மீண்டும் நாளைச் சந்திப்போம்” என மன நிறைவோடு தனலட்சுமி கூற வகுப்பு நிறைவடைந்தது.
கட்டுரையாளர்:
சாந்த சீலா
சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.
கோவிட் காலத்தில் ஊராட்சி மன்றத்துடன் இணைந்து மக்களுக்குத் தேவையான விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு ஏற்பாடு செய்து விநியோகம் செய்திருக்கிறார். அத்துடன் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளியுடன் இணைந்து ‘இளந்தளிர் திட்டம்’ மூலம் குழந்தைகளுக்கான விலையில்லா ‘ஹெல்த் கிட்’ ஒன்றும் வழங்கியிருக்கிறார். நண்பர்கள் உதவியுடன் இந்தத் திட்டம்மூலம் சிற்றுண்டி, டியூஷன் போன்றவையும் பள்ளியுடன் சேர்ந்து ஏற்பாடு செய்கிறார். தன்னிடம் பயிலும் குழந்தைகளைக் களப்பயணங்கள் அழைத்துச் செல்வதன் மூலமும், போட்டிகள், கற்றல் நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலமும் தரமான வாழ்க்கைக் கல்வியைத் தரத் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார். தமிழினி வழங்கும் டாக்டர் அம்பேத்கர் விருதுப் பெற்றவர்.
பள்ளிப் பக்கங்களில் முந்தைய பகுதிகள்
சிறப்பான கட்டுரை. எந்த விதமான சங்கடமான தலைப்பையும் மாணவர்களோடு கலந்தரையாடி அந்த தலைப்பை ஆக்கப் பூர்வமான முறையில் புரிந்து கொள்ளச் செய்வது ஆசிரியர்களின் கையில் உள்ளது.
பொட்டை என்பதை திருநங்கையரையும் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப் படுகிறது.
ஆம் தோழர். ஆண் பெண் தன்மையை உணர்வதால் அந்தப் பெயரில் அழைக்கப்படுகிறார்கள். . .
அப்போதும் இழிவாகவே பயன்படுத்தப்படுகிறதம்மா சொல் அதையும் குறிப்பிடுங்கள் பெண் தன்மையை உணருதல் தவறல்லவே
ஆம். திருநங்கை குறித்து தனித்த கட்டுரை எழுத உள்ளேன். அதில் விரிவாக பேசலாம் என இருக்கிறேன். ஒரு வரியில் இந்தக் கட்டுரையிலும் தொட்டுச் சென்றிருக்கலாம். பால் புதுமையினர் பற்றியும் கருத்து பரவலாக்கப்படணும். இணைந்து செய்வோம் அண்ணா
நீ ஒரு பொட்டச்சி என்று பெண்ணை சொல்லுவதும்
நீ ஒரு பொட்டையன் என்று ஆணை சொல்லுவதும் ஆண் வர்க்கத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம்.
பெண்கள் உயிரியல் ரீதியாக வலிமை உள்ளவர்கள் என்பது நிஜம்.
மனித மனங்களில் படிந்துள்ள அழுக்கு நீக்கியாக இந்தக் கட்டுரை.
என் நேச மிகு தோழருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழர். இழிவான பொருளில் பயன்படுத்த மாட்டோம் என சமூகத்தில் மாற்றமே தேவை. .
அருமை.
உரையாடலே உண்மையை உணர்த்தும், நல் உறவை வளர்க்கும்.
நன்றி அண்ணா. உரையாடல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கும்.
கட்டுரையின் தலைப்பே கட்டுரைக்கு வலிமை தான். அந்த விதத்தில் சீலா தேர்ந்தெடுத்த தலைப்பு அருமை. குழந்தைகளுக்குள் நடைபெறும் உரையாடல் தான் என்றாலும் இது சமூகத்தில் பலராலும் பயன்படுத்தும் சொல்லாகவே உள்ளது.இந்த சொல்லைக் கேட்கும்போது எனக்குள் ஒரு கோபம் வரும், ஆனால் சீலாவின்கட்டுரையை வாசித்த பிறகு அதற்கான விளக்கத்தை சொல்லி புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது…ஆசிரியையாக நானும் மாற்றத்தை விதைக்கும் நிலமாக எங்கள் குழந்தைகளின் மனங்களையே தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்..வளரட்டும் சீலா உங்கள் கட்டுரைத் தொடர்…வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி டீச்சர். உங்கள் போன்றோர் வார்த்தை நம்பிக்கை விதைக்கிறது. பேரன்பு
உரையாடல்கள் அவசியமானவை தங்காய் அதே போது சுற்று முறையில் என்றில்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட உரையாடலாக இருந்தால் தானே தனிப்பட்ட ஐயங்களைக் கேட்கவும் அவற்றினையொட்டி உரையாடவும் முடியும் அவரவர் கருத்து இறுதியில் தொகுப்பது என்பதில் அனைவரும் புரிதலுக்குள்ளாக முடியுமா என்று ஐயம் ஏற்படுகிறது மேலும் இத்தகு விசயங்களைத் தயங்காமல் பேசுவதும் கைவரப் பெற்றிருக்க வேண்டும் அதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் பேரன்பும்
உரையாடல் ஆரம்பக்கட்டத்தில் பழகும்பொருட்டு இந்த முறை யோசித்தேன். உரையாடலின் பல விதமான முறைகளை அறிமுகம் செய்வோம். கருத்துரைக்கு நன்றி அண்ணா
உரையாடலை ஆரம்ப கட்டத்தில் பழகும் பொருட்டு இந்த முறையை யோசித்தேன்.
உரையாடலின் பல்வேறு வடிவங்கள் பற்றி முன்வைப்போம் அடுத்தடுத்த கட்டுரைகளில். தங்கள் கருத்துரைக்குப் பேரன்பும் மகிழ்வும் அண்ணா.
அருமையான விளக்கம். பள்ளி மாணவர்களுக்கான எளிய மொழி நடை.
அனைவரும் வாசிக்கத்தக்க மொழிநடையே யோசித்தேன். குழந்தைகளுக்கெனில் இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். குழந்தைகளுக்கும் எழுதணும் இது போன்ற தலைப்புகளில்.
கருத்துரைக்கு மகிழ்வும் அன்பும். . .
அருமை தோழரே. பள்ளி மாணவர்களுக்கான எளிய ம்மொழி நடை.
Good
மாணவர்கள் மாணவிகள் தெளிவு பெற வேண்டிய கருத்து. வகுப்பறை உரையாடல் வடிவத்தில் அளிப்பது மிக சாதுர்யமான உத்தி. தொடருங்கள் தோழர்,
கூடுதல் தகவல நான் பணியாற்றிய அண்டை நாடான பூடானில் தாய் வழி சொத்து மகளுக்கு தான் அளிக்கப்படுகிறது. மகன்களுக்கு கிடையாது. அதனால் அஙகுள்ள கிராமப்புறங்களில் ஆண்களுக்கு சரியான மரியாதை கிடையாது. அதுவும் தவறு
ஆண் ஒரு பாலினம் பெண் பாலினம் இருவருக்கும் பலமும் உண்டு பலவீனமும் என்ற கருத்தையும் கொண்டு சேர்க்கவேண்டியது நம் கடமை.
சிறப்பு வாழ்த்துகள்
சிலா அருமையான கட்டுரை இந்த வார்த்தையை நானும் பல இடத்துல கேட்டு இருக்கேன் கேட்கும்போது மனசு வலிக்கும் .அது ஒரு வருத்தத்தை தரக்கூடிய சொல்லா ,கேட்கும் நபருக்கு வருத்தத்தை தரக்கூடிய சொல். இந்த கட்டுரை பெரும்பாலும் நிறைய பேர் படித்த பிறகு இனி அந்த சொல்ல வைத்து யாராவது கோபத்தில் பேசினால் அந்த சொல் ஒரு இழிவான சொல் கிடையாது அந்த சொல்லுக்கு பின்னாடி எவ்ளோ பெரிய பலமான ஒரு மனநிலை இருக்கு. அந்த சொல்லின் பொருள் ஒரு பெண்ணாய் இருந்தால் அந்த பெண்ணினுடைய துணிவு, வீரம் , எதிர்க்கும் தைரியம், அவளுடைய மனோபலம் அவளுடைய பலம் , இதெல்லாம் நமக்கு வந்து அவமானத்தை தராது அதுக்கு பதிலா நமக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கைதான் தரும் என புரியும் சிறப்பான கட்டுரையை இருந்தது…வாழ்த்துகள் 💐
அருமையான கட்டுரை. ஒரு சின்ன வேண்டுகோள். குழந்தைகளிடம் உள்ள கற்றல் குறைபாடுகள் (dyslexia) பற்றி ஒரு கட்டுரை போடுங்க.உங்கள் அணுகுமுறை பற்றி அறிய ஆவலாக உள்ளது.