சமீபத்தில் மலக்குழி மரணங்களைக் கண்டித்து கவிதை எழுதியவர் மீது குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளையும் கடவுளர்களையும் புண்படுத்தி விட்டதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்ட நிகழ்வுக்கு வக்காலத்து அல்ல இந்தக் கட்டுரை. மனிதர் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அதை அள்ள வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத சட்டமாக இருப்பதை எண்ணி மனம் வெதும்பியதன் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.

குக்கிராமங்களில்கூட இன்று அலைபேசிப் பயன்பாடு வந்துவிட்டது. இணையத்தின் தயவால் உலகமே உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் அடிப்படையான அத்தியாவசியத் தேவைகள் இங்கு நிறைவேறியிருக்கின்றனவா என்று பார்த்தால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய நதிக்கரை, ஆற்றங்கரை நாகரிகங்களான சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல் போன்ற ஆதி காலங்களில்கூட முறையான அதிநவீனமான கழிப்பறைகள், குளியலறைகள் புழக்கத்தில் இருந்து, அவற்றின் கழிவுநீர் முறையாக ஊருக்கு வெளியே‌ சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று நாகரீகத்தில் மேம்பட்டதாகப் பெருமை கொள்ளும் இந்த நவீன யுகத்தில் மலம் அள்ள ஓர் இயந்திரத்தைக் கண்டறியாமல் மனிதர்களை அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே அந்த வேலைக்கு நியமிக்கும் வகையில் மூளை குறுகிப் போய்க் கிடக்கிறோம். நினைக்கவே நெஞ்சம் குமுறுகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை கழிவறைகளுக்கான தேவை குறைவாகத்தான் இருந்தது. இந்தியா வெப்பநாடு என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வயல்கள் கழிவுகளை வெளியேற்ற உதவின. வெப்பம் காரணமாக அவை வெகு சீக்கிரத்தில் மண்ணோடு மக்கி உரமாகப் பயன்பட்டன. அப்போது மக்கள் தொகை குறைவாகவே இருந்தது. பெரும்பாலும் இயற்கை உணவுகளை உண்டனர். அதனால் அன்றைய கழிவுகள் உரமாகின. மக்கள் தொகை கட்டற்றுப் பெருகி, மசாலாப் பொருள்களை அதிகளவு உபயோகப்படுத்தும் இன்று கழிவுகளில் நோய்க் கிருமிகள் பெருகி புது விதமான நோய்களுக்கு வழி வகுக்கின்றன.

கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த  5 ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 2016 முதல் 2022 வரை கழிவுநீர் மற்றும் மலக்குழியில் சுத்தம் செய்ய இறங்கியவர்கள் 55 பேர் இறந்துள்ளனர். அதுவும் 2022 ஆம் வருடம் மட்டும் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். இந்த கழிவகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் 95% தலித் என்று சொல்லப்படும் அருந்ததியர் சாதியினர் மட்டுமே. மேலும் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் போது, அவர்களுக்கு முறையான கருவிகள், பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படுவதில்லை. துர்நாற்றத்தை மறைக்க அவர்கள் மதுவருந்திவிட்டு இறங்குகிறார்கள். இப்படி எல்லா வகையிலும் அவர்கள் சமுதாயத்தால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. இத்தகைய மரணங்களைத்‌ தடுக்கவும்‌, நாகரிக சமூகத்தில்‌ மனித மலத்தை மனிதர்கள்‌ கையால்‌ அள்ளுவதைத் தடைசெய்யவும்‌, `மனிதக்‌ கழிவுகளை அகற்ற பணியமர்த்தல்‌ தடை மற்றும்‌ மறுவாழ்வுக்கான சட்டம்‌ 2013′ கொண்டுவரப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த வேண்டிய ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்தச் சட்டத்தை அலட்சியப்படுத்துவதாலும், இந்தப் பணியில் ஈடுபடும் தலித் மக்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருப்பதைத் தெரியப்படுத்தாததாலும் இத்தகைய மரணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சில கிராமப்புறப் பள்ளிகளில் குறிப்பிட்ட சாதி மாணவ, மாணவிகளை மட்டும் அழைத்து கரும்பலகைக்கு கரி பூசவும், பள்ளி மைதானத்தைச் சுத்தப்படுத்தவும் ஈடுபடுத்துவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுகூட இந்தச் சாதிப்பாகுபாட்டின் அப்பட்டமான மனநிலை நீடிக்கத்தான் செய்கிறது. சமீபத்தில்கூட ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த சிறுவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய ஈடுபடுத்திய விவகாரம் வெளிவந்தது. குலக்கல்வி முறை இந்தக் கழிவகற்றும் விஷயத்தில் மட்டும் விடாப்பிடியாகப் பின்பற்றப்படுகிறது. அவர்களது பொருளாதாரத் தேவைகளை உயர்சாதியினர் என்று கூறப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களது உயிருக்கு மதிப்பில்லாமல் போகிறது. இந்த அவலத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மரியாதையே கிடையாது. சிறுகுழந்தைகூட வயது முதிர்ந்த தலித் பெரியவரையோ அல்லது மூதாட்டியையோ பெயர் சொல்லி அழைக்கும் முறை தானே இருக்கிறது?

இத்தகைய வேலையில் ஏன் பிற சாதியினரும் ஈடுபடக் கூடாது? படித்துவிட்டு, படிப்பு ஏறாமல் எத்தனையோ பிற சாதியினர் வேலையின்றித் தவித்து வருகின்றனர். ஒரு மாற்றாக அவர்களை இந்த வேலையில் ஈடுபடச் சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஆண்டாண்டு காலமாக மலத்தை வெறும் கைகளால் அள்ளி சுத்தம் செய்துவிட்டு, அதே கைகளால் அவர்கள் எவ்வாறு உணவை உண்ணுகிறார்கள் என்று ஒருமுறையாவது எண்ணிப் பார்த்திருக்கிறதா இந்தச் சமுதாயம்? ஒருவகையில் புரையோடி நாற்றம் எடுக்கும் இந்தச் சமூகத்தைச் சுத்தம் செய்யும் அவர்களை நாம் எப்படிக் கொண்டாடியிருக்க வேண்டும்? ஆனால், பின்வாசல் வழியாக வருவதற்குத் தானே அனுமதித்திருக்கிறோம்? விருந்து, விழாக்களில் அவர்களுக்கு இலை போட்டுப் பரிமாறியிருக்கிறோமா? மீந்து போனதை அவர்கள் சேலை முந்தானையில்தானே கொட்டியிருக்கிறோம். அரசியல்வாதிகள் அவர்களோடு சரிசமமாக அமர்ந்து உண்ணுவதும், அவர்களது பாதங்களைக் கழுவி பூஜை செய்வதுமாகப் புகைப்படங்கள் எடுத்துத் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். அதைவிட இந்தக் கழிவகற்றும் வேலைக்கு ஓர் இயந்திரத்தைக் கண்டறியலாமே. எத்தனையோ இளம் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அரசு ஓர் அறிவிப்பு மட்டும் செய்தால் இளைய தலைமுறையினர் இதற்கு இயந்திரம் மூலமாக வழிகாட்டுவார்கள். ஆனால், அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள். காரணம் அவர்கள் இந்த வேலையை விட்டுவிட்டு படித்து முன்னேறினால் தங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். தங்களுக்கு சேவகம் செய்ய வரமாட்டார்கள். தங்கள் வேலையைத் தாங்களே செய்ய வேண்டும் என்பதால் அவர்களை முன்னேறவேவிட மாட்டார்கள். இதுதான் நிஜம்.

மனிதப் பிறப்பு அரிதான ஒன்று. தங்கள் வாழ்க்கையை அவர்கள் நறுமணம் கமழ வாழ இயலாவிட்டாலும் பரவாயில்லை. துர்நாற்றமடிக்காமல் வாழ உரிமை உண்டல்லவா? அந்த உரிமையை அவர்களுக்குக் கொடுக்க அனைவரும் குரல் கொடுப்போம். இனியாவது அந்தச் சமுதாயத்தை முன்னேற்ற நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்களது பாதையை மறிக்காமல் இருந்தாலே போதும். அவர்களே முன்னேறுவார்கள்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.