‘பகலோடு விண்மீன்கள் 

பார்க்கின்ற கண்கள் வேண்டும் 

கனவோடு கார்காலம்

நனைக்கின்ற சுகம் வேண்டும் 

செஸ்போர்டில் ராணி நானே 

கிரீடம் அந்த வானம் 

செல்போனில் ரிங்டோன் எல்லாம் 

எந்தன் சிரிப்பில் ஆகும்’

பதின்ம வயதில் இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்கும்போது தன் மேல் எவ்வளவு சுய காதல் பொங்கும். தானே ராணியாகக் கற்பனை எழும். இயற்கையின் மேல் பெரும் நேசம் வரும்.

‘பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்

வாழ்க்கையின் ஒரு பாதி

நான் என்று வசிப்பேன்

வாழ்க்கையின் மறு பாதி

நான் என்று ரசிப்பேன்.

காற்றில் வரும் மேகம் போலே

நான் என்றும் மிதப்பேன்’

ஒரு பெண்ணின் வாழ்வு சுவையானதாகத் தோன்றும்.

இந்த உலகை ரசித்து வாழவே நாம் படைக்கப்பட்டோமென உணர்வு பொங்கும்.

பசுமைகளின் மேல் காதல் வரும். மற்ற உயிரனங்கள் மேல் காதல் வரும். இசையின் மேல் காதல் வரும்.

‘நான் சொல்லும் வேளையில் 

மழை நின்று போகட்டும் 

வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்’

இயற்கையின் அசைவில் நம்மை இணைத்துக் கொள்ளும் ஒரு சக்தி உள்ளிருந்து எழும்.

பதின்ம வயதில் இருக்கும் இவ்வளவு உணர்வுகளும் இவ்வளவு சக்திகளும் அடுத்தடுத்த கட்டங்களில் ஏன் குறைகின்றன?

குறிப்பாகக் குழந்தை பிறந்த பின்பு!

எதன் மேலும் நாட்டம் இல்லாமல், எதன் மேலும் ஈர்ப்பு இல்லாமல் போகின்றதே.

ஹார்மோனல் மாற்றங்கள் இவ்வளவு செய்கின்றனவா?

பூவாகப் பேணிக் காக்கும் உடலின் அமைப்பு கர்ப்ப காலத்தில் எவ்வளவு மாற்றங்களைச் சந்திக்கிறது!

பிரசவத்தின் போது பல கைகள் நம் மேல் வைக்கப்படுகின்றன. உடல் உறுப்புகள் கிழித்து தைக்கப் படுகின்றன.

நாம் வெறும் ரத்தமும் சதையும் தானா!

உயிரின் மதிப்பு அவ்வளவுதானா!

இறப்பைப் பற்றிய ஏதோ ஒரு புரிதல் சொல்லத் தெரியாத பாதிப்பு உள்ளுக்குள் பரவுகிறது.

அந்தப் பாதிப்பின் காரணமாகச் சில நாள்களுக்கு மனதிற்கு எதுவும் பிடிக்காமல் போகிறதா?

மனக்குழப்பங்களும் இதோடு சேர்ந்துவிடுகின்றன.

பிடித்த நேரத்தில் பிடித்த உடைகளை உடுத்திக் கொண்டு சுய நேசத்தோடு கல்லூரியில் வலம் வந்த நாட்களை நினைத்து நினைத்துப் பார்த்து மனம் ஏங்கியது.

இதில் உடல் வலிகள் வேறு…

ஏன் இங்கே வலிக்கிறது, ஏன் அங்கே வலிக்கிறது உடலில் எதாவது பிரச்னையா என்கிற பயம்.

நான் நன்றாகத்தான் உள்ளேனா, மீண்டும் பழைய மாதிரி வலியின்றி ஆரோக்கியமாக உணர்வேனா என்கிற ஏக்கம்.

இப்படியெல்லாம் இருக்க எங்கிருந்து இயற்கையின் மேல் காதல் வரும்… பாடல்களின் மேல் விருப்பம் வரும்…

கொஞ்சமாவது சூழ்நிலை ஒத்துப் போனால்தானே பாடல்களை ரசிப்பது, வாழ்வை ரசிப்பது… சூழல் வேறு விதமாக இருந்தால் எங்கே மனம் ஒன்றும்.

பிரசவம் முடிந்து சில நாட்கள் எதன் மேலும் விருப்பம் இல்லாமல் இருந்தது. 

பிடித்த பொழுதுபோக்கு என்று எதுவும் இல்லாமல் தூங்க, சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் போனது.

அப்படி இருப்பது வெறுமையைத் தந்தது. சில மாதங்கள்கூட அப்படியே கழிந்தது. 

பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட மனம் துடித்தது.

‘உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே…

பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினிச் சிறகே… 

எழுந்து வா…

உலகை அசைப்போம் உயர்ந்து வா…’

பிரசவத்தின் வலியா… ஒரு பக்கம் இந்த வரிகளில் விரக்தி வந்தாலும் இன்னொரு பக்கம் வலிமை தோன்றியது.

அதைத்தான் தாண்டி வந்துவிட்டோமே… அதையே தாண்டி வந்துவிட்டோம்…

மீண்டும் பிடித்த பொழுது போக்குகளைச் செய்ய முடிவெடுத்தேன்.

புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து படிக்கத் தொடங்கினேன்.

ஐந்தாறு பக்கங்கள் படித்து முடித்தேன். ஆனால் ஒரு வரிகூட மூளைக்குள் செல்லவில்லை. 

பாடல்கள் கேட்டேன். பாடல் எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்றே தெரியவில்லை.

நான் தனியே, என் மனம் தனியே இருப்பதுபோல் இருந்தது.

ஒன்றிரண்டு நாள்கள் கழித்து திரும்பவும் படிக்க ஆரம்பித்தேன். கவனமாகப் படிக்க முயலும்போது தலைவலி ஏற்பட்டது. சில நிமிடங்களில் படிப்பதை நிறுத்தினேன்.

திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தினேன். பெரிதாக ஒன்ற முடியவில்லை.

தனக்கென சுய நேரம் இல்லாமல் நாட்கள் செல்வதில் வெறுப்பாக இருந்தது.

வீட்டில் வண்ணம் தீட்டும் புத்தகம் இருந்தது. விரும்பி வண்ணம் தீட்டினேன்.

சிறிது இடைவெளி விட்டுப் படிக்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல ஒவ்வொரு வரியாகப் படித்தேன். அர்த்தங்கள் புரிய புரிய கதையோடு கலந்தேன்.

“ம்ம்மாஆ.. ம்ம்ம்ம்ம்மா..”

குழந்தை அழும் சத்தம் கேட்டது.

குழந்தையைச் சமாதானம் செய்ய சற்று நேரம் ஆனது. அதில் படிக்க வேண்டும் என்கிற ஆசையே போனது.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, உறங்கச் செல்லும்போது உறக்கம் வரவில்லை. ஏங்கி ஏங்கி காத்திருந்த உறக்கம்கூட வரவில்லையே என யோசித்தால் தனக்கான நேரம் வேண்டும் என மனம் கேட்டது.

பிடித்த வீடியோக்களைப் பார்த்தேன். எனக்குள் நானே சிரித்தேன், மகிழ்ந்தேன், சிந்தித்தேன். அப்புறம் என்னை மீறி தூக்கம் தானாக வந்தது.

ஒன்று மட்டும் புரிந்தது பிறந்த குழந்தையை வைத்துக் கொண்டு, தனக்கான ஒரு நேரத்தைக் கண்டுபிடித்து, தனக்குப் பிடித்த வேலையைச் செய்வது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நம்மை பழைய மாதிரியே உணர மனம் போராடியது.   

சாவல்களைத் தாண்டிவந்து வாழ்வை  ரசித்துத் தானே ஆக வேண்டும்!

‘மேகத்தின் தாரைகளில் பாய்ந்தோடப் போகிறேன்!’

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.