சாலைகளின் இருபுறமும் பச்சைப் பசேலென மரங்கள் ஓங்கி உயர்ந்து வானை மறைத்து பசுமை பரப்பிக் கொண்டிருந்தன. மலை ஏற ஏறச் சில்லென்ற காற்று உடலை வருடி குளிர்வித்தது.
நவம்பர் மாதக் குளிரில் நடுங்க நடுங்க மலை மேல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தோம். பனிமூட்டங்கள் சாலைகளை வெள்ளையடித்து மறைத்திருந்தன. மலை மீது இருந்த மக்கள் உற்சாகமாக இருந்தனர். இங்குள்ளவர்கள் ஊருக்குள் இருப்பது போல் இயல்பாக இல்லை.
சுற்றுலாப் பயணிகள், சிறுவர் முதல் பெரியவர் வரை நல்ல உடை அணிந்து ஒளிப்படங்களைப் பதிவு செய்யத் தேவையான அலங்காரங்களுடன் இருந்தனர்.
முகத்தில் மகிழ்ச்சியும் சுற்றுலாத் தலங்களில் அடுத்து எதைக் காணப் போகிறோம் என்கிற ஆர்வமும் ததும்பி வழிந்தன.
சுட்ட சோலை கருது, வெட்டி வைத்திருந்த மாங்காய், அண்ணாச்சி பழம், மிளகாய் பஜ்ஜி, தந்தூரி டீ என ஒவ்வொன்றாக ருசித்துக் கொண்டே சுற்றிப் பார்த்தோம்.
மலர் கண்காட்சியில் இருந்த வண்ண வண்ண மலர்களை ரசித்துப் பார்த்தேன்.
“அடுத்து நம்ம எங்க போகப் போறோம்?” என்று நான் கேட்பதற்கும் என் குழந்தை அழுவதற்கும் சரியாக இருந்தது.
அழுகை சத்தம் அதிகமாகக் கேட்க கண்களைத் திறந்து பார்த்தேன். என் அருகில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழுதது.
தூக்கி வைத்து தட்டிக் கொடுத்தும் அழுகை குறையவில்லை. தாய்ப்பால் கொடுக்க குழந்தை அழுகையை நிறுத்திவிட்டுப் பாலைக் குடிக்கத் தொடங்கியது. இத்தனை நேரம் நான் கண்டதெல்லாம் கனவு என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தேன்.
கடைசியாக இரண்டு வருடத்திற்கு முன்பு நானும் என் கணவரும் சென்ற மலைப் பிரதேச நினைவுகளைத்தான் கனவில் கண்டேன்.
நேற்று என் கணவர் அவருடைய நண்பர்களுடன் வெளியூர் சென்று வந்தார். நான் ஏக்கம் அடைந்ததில் கனவில் பிரதிபலித்துவிட்டதா!
எனக்கும் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் போலிருந்தது.
எதற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுப்பினால் எப்படி நான்கு சுவரையே பார்த்துக் கொண்டு வீட்டிலே அமர்வது!
இப்பொழுது நான் இருக்கும் மனநிலைக்கு எனக்கு வெளியில் செல்ல வேண்டும். என்னைச் சுற்றி நான்கு சுவர்கள்தான் தெரிந்தன.
புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். நம்மைக் கடந்து செல்லும் யாரோ ஒருவர் கூறும் ஏதோ ஒரு வார்த்தையில் நம் வாழ்வியலின் அர்த்தம் கிட்டும்.
புதிய உணவுகளை உண்ண வேண்டும். கடைசியாக எப்பொழுது அப்படி ருசித்து ரசித்து உண்டேன் என்றுகூட நினைவில் இல்லை.
கர்ப்பமாக இருக்கும் போது விருந்தில் ஏழு வகை சோற்றை ருசித்து உண்டதோடு சரி.
குழந்தை பிறந்து இந்த நாற்பது நாளில் ஒரு வேளைகூட நிம்மதியாகப் பிடித்த உணவை உண்ண முடியவில்லை.
வலி வந்தபோது மருத்துவமனையில் கூறினார்கள் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று. சில மணி நேரத்துக்குத் தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டேன்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பின் முதலில் தண்ணீர் மட்டும் குடித்துப் பார்க்கச் சொன்னார்கள்.
தண்ணீர் குடித்ததுமே குமட்டிக் கொண்டு வாந்தி வந்தது. சில மணி நேரம் கழித்துப் பால் குடித்தேன். ஒன்றும் நிகழவில்லை. என் விரதத்தை முடித்துக் கொண்டு சாப்பிடலாம் என ஆசைபட்ட போது இதைச் சாப்பிடக் கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது, குழந்தைக்கு இது நல்லதல்ல, உனக்கு அது நல்லதல்ல என அறிவுரைகள் குவியத் தொடங்கின. அதில் எனக்கு ஆசையே போய்விட்டது.
முதல் சில நாட்கள் என்னால் சுயமாகச் சாப்பிட முடியாமல் ஒருவர் ஊட்டிவிட உண்டேன். இந்த அளவு இட்லிக்கு இந்த அளவு குழம்பு தொட்டு, இந்த அளவு தான் வாயில் போட வேண்டும் என்று எனக்கொரு வசதி இருக்கும். ஆனால் இப்பொழுது யார் ஊட்டி விடுகிறார்களோ அவர்களிடம் எதுவும் சொல்லாமல் உண்ண வேண்டும்.
இரண்டு மூன்று நாட்களில் நானே சாப்பிட ஆரம்பித்தேன். ஆனால் என்னால் எனக்குச் சாப்பாடு போட்டுக் கொள்ள முடியாது. வேறு யாராவது பரிமாற வேண்டும்.
முதலில் மூன்று இட்லி குழம்பு, சட்னி வைத்துக் கொடுத்தால் அதோடு சாப்பிட்டு முடித்துவிடுவேன். எப்படியும் அம்மா அந்த நேரத்தில் குழந்தையை வைத்துக் கொண்டிருப்பார். அப்பா அல்லது கணவர் அல்லது அத்தை பரிமாறுவார். உரிமையோடு கேட்கலாம்தான். ஆனால் பெரிதாகக் கேட்கும் மனநிலை இருக்காது. முடிந்த அளவிற்குச் சாப்பிட்டு விட்டு, கையைக்கூடப் பிறர் தண்ணீர் கொண்டு வர கழுவிக் கொள்வேன்.
ஒரு வாரத்தில் நானே எழுந்து எனக்கு வேண்டியதைப் போட்டுக் கொள்ளலாம் எனப் பார்த்தால் என் மகள் உணவு நேரத்தில் அழ ஆரம்பித்தாள்.
சரி, அவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது சாப்பிடலாம் என அமர்ந்தால் உறவினர்கள் யாராவது குழந்தையைப் பார்க்க வந்திருப்பார்கள் அவர்கள் முன் வேண்டியதை வேண்டிய விதம் உண்ண முடியாது. அப்படி எதாவது ஒரு காரணத்தால் விருப்பமான சூழல் அமைவதே கடினமானது.
நாட்கள் செல்லச் செல்ல சரியாகும் என நம்பினால் நாற்பது நாட்கள் கடந்தும் நினைத்ததை உண்ண முடியவில்லை.
வீட்டிலேயே இருப்பதும் பிடித்ததைப் பொறுமையாக ரசித்து உண்ண முடியாததும் கோபமாக மாறியது.
நேற்று வெளியூர் சென்று வந்த என் கணவர் இன்று என்னை வெளியில் சென்று உணவு உண்டுவிட்டு வரலாம் என அழைத்தார்.
அவர் மட்டும் வெளியில் சென்று வந்ததால் அவரிடம் நான் கோபித்துக் கொள்வேன் என நினைத்தாரோ என்னவோ.
நான் கோபித்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. என்னால் ஒரு நாளில் ஒரு வேளைகூட நிம்மதியாகப் பொறுமையாகச் சாப்பிட முடியவில்லை ஆனால் அவரால் நிம்மதியாக வெளியூர் செல்ல முடிகிறதே என்கிற ஆதங்கம் இருக்காதா என்ன!
அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரியென்றார்.
“பாப்பாவ தூங்க வெச்சிட்டுப் போ, நான் பாத்துக்குறேன். சீக்கிரம் வந்துடு” என்றார்.
வேறு யாருக்கும் சொல்லாமல் சீக்கிரம் சென்றுவிட்டு வர நினைத்தேன். ஒரு மணி நேரம்கூட எனக்கெனச் செலவழிக்க முடியவில்லையே.
அவளைத் தூங்க வைத்துவிட்டு, குளித்து முடித்து தயாராக முடிவெடுத்தேன்.
என்ன உடை உடுத்துவது என்று தேடி எடுத்து வைத்துவிட்டு, குளிக்க சுடு தண்ணீர் வைத்துவிட்டு வந்து அமர்ந்தேன்.
குழந்தை தூரியில் இருந்து ஆடிக் கொண்டிருந்தாள். ஆட்டி விடலாம் என அருகில் சென்றேன்.
சிறுநீர் கழித்திருந்தாள். துணி மாற்றத் தூக்கினேன். சிறிது மலமும் கழித்திருந்தாள்.
துணியை மாற்றிவிட்டு, மீண்டும் உறங்க வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்தேன்.
பாப்பாவை அம்மா கையில் வைத்திருந்தார்.
“பாத்ரூம் போய் எழுந்திரிச்சிட்டா…”
“இப்போதான் நான் மாத்திவிட்டுட்டு போனேன்.”
“மறுபடியும் போய்ட்டா.. இவ்ளோ தண்ணீ மாதிரி பச்சையா போயிருக்கா ஏதாவது சேரலையா” என்று அம்மா என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே மீண்டும் அதே போல் மலம் கழித்தாள்.
நான் கவலையடைந்தேன். வெளியில் சென்று சாப்பிட வேண்டும் என்கிற ஆசையைக் கைவிட்டேன்.
குழந்தையைத் தூக்கி வைத்து தட்டிக் கொடுத்தேன், கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டாள். இரண்டு மணி நேரம் நன்கு தூங்கினாள். அன்று அதற்குப் பின் அந்த மாதிரி மலமும் கழிக்கவில்லை. அதில் ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும் நாற்பது நாட்களுக்குப் பின் வெளியில் செல்ல வேண்டும், பிடித்த மாதிரி சாப்பிட வேண்டும் என நான் ஆசைப்பட்டது இன்று கனவாகப் போனதென்ற வருத்தமும் இருந்தது.
மறுபடியும் எப்படி எப்போது வெளியில் கிளம்புவதெனச் சிந்தித்தேன். அப்போது என்னைப் பார்த்து எங்கள் வீட்டின் நான்கு சுவர்களும் சிரிப்பது போல் தோன்றின.
(தொடரும்)
படைப்பாளர்:
ரேவதி பாலாஜி
சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.