“நார்மல் டெலிவரியா சிசேரியனா?”

“நார்மலுக்கு முயற்சி பண்ணாங்க. கடைசில ஆபரேஷன்தான் ஆச்சு” என்றார் அம்மா.

குழந்தை பிறந்த நாளில் இருந்து என்னைப் பார்க்க வருபவர்கள் குழந்தை எப்படிப் பிறந்தது என்கிற கேள்வியைத்தான் முதலில் எங்களை நோக்கி வைத்தார்கள்.

சுகப்பிரசவம் என்று கூறினால் விட்டுவிடுவார்களோ என்னவோ சிசேரியன் என்றதும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு விதமான பதில்கள் வந்தன.

“ஏன் நார்மலுக்கு முயற்சி பண்ணிருக்கலாம்ல.. கொஞ்ச நேரம் வலி பொறுத்திருந்தா ஆயிருக்கும்… வலி தாங்கிருக்க மாட்டா…”

“மாசமா இருக்கும்போது நல்லா கீரையும் காயும் சாப்பிட்டிருக்கணும். வெறும் வயித்துல நீச்ச தண்ணி குடிக்கணும். வெண்ணை முழுங்கணும். வேலைக்குப் போற டென்ஷன்ல இதெல்லாம் சரியா பண்ணிருக்க மாட்டா.”

“குனிஞ்சு நிமிர்ந்து வீட்டு வேலை செய்யணும். கீழ உக்கார்ந்து எழுந்திருக்கணும். இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு உடல் உழைப்பே இல்லாம போயிடுச்சி. எப்படி சுகப்பிரசவம் ஆகும்?”

“குழந்தை குட்டியாதான இருக்கா. அதுக்கே வெளிய வரலையா… ஆபரேஷனா… எப்படித்தான் இனி பெத்தவ உடம்ப தேத்துறதோ!”

இப்படி இவர்கள் எனக்கு முன்னாடியோ இல்லை பின்னாடியோ பேசுவதெல்லாம் என் காதுகளை எட்டும்போது வயிற்றில் உள்ள தையல் வலியோடு இதுவும் சேர்ந்து வலிக்கிறது.

சிலர் ஐயோ பாவம் ஆபரேஷனா என்றார்கள். அதில் எனக்கு ஏதோ அநீதி இழைக்கப்பட்டது போல் என் உடலை நினைத்துப் பயம் வந்தது.

இப்படியெல்லாம் இவர்கள் பேசிவிடக் கூடாது என்று பிரசவ நாளின் போதே நான் மிகவும் பயந்தேன்.

பிரசவ நேரத்தில் குழந்தைக்கு இதயத் துடிப்பு சீராக இல்லை, பனிக்குட நீர் உடைந்து வெகு நேரம் ஆகியும் தலை கீழே இறங்கவில்லை போன்ற காரணங்களால் அவசரமாக சிசேரியன் செய்து குழந்தையைப் பெற்று எடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது.

என்னிடம் வந்து ஒப்புதல் கேட்கும்போது நான் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்றேன். என்னாலும் வலி தாங்க முடியவில்லை ஆனாலும் சுகப்பிரசவம்தான் வேண்டும் என அடம்பிடித்தேன். பதற்றமும் படபடப்பும் அடைந்தேன். என் குழந்தையை இன்னும்தான் அது கஷ்டபடுத்தியது. 

நான் ஏன் கடைசி நேரத்தில் சிசேரியனுக்கு ஒத்துக்கொள்ள மறுத்தேன் என்றால், இப்படிப்பட்ட கேள்விகளைப் பின்னாளில் நான் சந்திக்கக்கூடும் என்கிற பயத்தாலதான்.

உண்மையில் வேலைகள் செய்யாதவர்களுக்குதான் சிசேரியன் நடக்கிறதா?

நானும் என் கணவரும் வேலை காரணமாக வெளியூரில்தான் தங்கியிருந்தோம். கர்ப்பமாக இருக்கும்போது வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்துதான் செய்தோம். என் கர்ப்ப காலத்திலும் என்னால் முடிந்த வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தேன். கீழே பாயில் படுத்து எழுந்துள்ளேன். சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்துள்ளேன். 

இப்படி இருக்கையில் என் கையில் என்ன இருக்கிறது?

நிச்சயம் அந்தக் காலத்துப் பெண்கள் அளவிற்கு எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. நானும் அலுவலக வேலை நேரத்தில் அமர்ந்தேதான் பணிபுரிந்தேன். அதுதான் இன்றைய சூழலின் யதார்த்தம். அதற்கேற்ப இன்றைய காலத்துப் பெண்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்கிறோம். உணவு முறைகளிலும் உலர் பழங்கள், பழங்கள் காய்கறிகளை அக்கறையோடு சேர்த்துக் கொள்கிறோம்.

எல்லாம் செய்தாலும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழும்.

எனக்குத் தெரிந்த தோழி ஒருத்திக்குக் கர்ப்பமாக இருக்கும்போது நஞ்சுக் கொடி கீழே இறங்கியுள்ளது மற்றும் உடல்நிலையில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் கூறி கர்ப்ப காலம் முழுவதும் ஓய்விலேயே இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். குனிந்து நிமிர்வதோ, படி, ஏறி இறங்குவதோ கண்டிப்பாகக் கூடாது என்றனர். அவளும் மூன்றாம் மாதம் முதல் ஒன்பதாம் மாதம் வரை ஓய்விலேயேதான் இருந்தாள். பின் ஒன்பதாவது மாதம் ஸ்கேனுக்குச் சென்றிருந்தபோது நஞ்சுக்கொடி மேலே ஏறிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடுத்த இரண்டு நாள்களில் வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவள் சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

ஒன்பது மாதமும் படுக்கையிலேயே ஓய்வில் இருந்தவள் நார்மல் டெலிவரியில் குழந்தை பெற்றுள்ளாள்.

வேலை செய்யும் பெண்களுக்குத்தான் சுகப் பிரசவம் ஆகும். வேலை செய்யாத உடல் உழைப்பு இல்லாத பெண்களுக்கு சிசேரியன் தான் ஆகும் என்று பலர் சொல்லிவரும் கோட்பாடு இங்கே சுக்கு நூறாக உடைந்து போனதே!

இன்றைய அறிவியல் ஆய்வுகள் பல இதைத்தான் கூறுகின்றன. நார்மல் டெலிவரி எனப்படும் யோனி வலி பிரசவத்தின் வாய்ப்பு ஒவ்வொருவர் உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடும். உடல்வாகு, மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், மனநிலை எனப் பல காரணிகள் இதில் அடங்கும். இப்படிச் செய்தால் நிச்சயம் சுகப்பிரசவம் ஆகும் என்று எதையுமே கூற முடியாது.

அதே போல் சுகப் பிரசவம் இன்றைய சூழலில் எளிதாக இல்லை. பிரசவத்திற்காக எபிடியூரல் கொடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தையல் போடும் தேவையும் யோனி வழி பிரசவத்திலும் ஏற்படலாம். 

ஒரு சிலருக்கு வலி வந்தவுடன் குழந்தை பிறக்கிறது. ஒரு சிலருக்கு இரண்டு மூன்று நாட்கள்கூட ஆகிறது தலை வெளியே தெரிய. மருத்துவச் சூழலும் எவ்வளவோ மாறியிருக்கிறது. ஒரு சில மருத்துவமனைகளில்தான் பொறுமையாக முயற்சிக்கிறார்கள். தாய்க்கோ குழந்தைக்கோ சிறு ஆபத்து என்றாலும் அதற்கு மேல் துணிய பெரும்பாலானோர் முயல்வதில்லை.

அந்தக் காலம் போல் நாங்கள் பத்துக் குழந்தைகளா பெற்றெடுக்கப் போகிறோம், ஒன்று போனால் பரவாயில்லை என்று விடுவதற்கு. 

என்னை நம்பி என் வயிற்றில் உருவாகி இருக்கும் எங்கள் உயிருக்கு ஏதாவது என்றால் தாங்கிக் கொள்ள முடியுமா? உடலைக் கிழித்தாவது எங்கள் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்கிறோம்.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சிசேரியன் வலியில் இருக்கும் பெண்களைக் காரணம் சொல்லி என்ன ஆகப் போகிறது? ஒரு பெண்ணின் சக்தியைப் பிரசவத்தின் முறையை வைத்து எப்படி எடை போடுகிறார்கள்?

எந்த வழியில் குழந்தைப் பிறந்தாலும் வலியைத் தாங்கிக் கொள்ளப் போவது பெண்தான். அவள் விருப்பப்படி குழந்தையைப் பெற்றுக் கொள்ளட்டுமே!

அன்று என்னிடம் மீண்டும் வந்து மருத்துவர் என் விருப்பத்தைக் கேட்டார்.

“ஆபரேஷன் பண்ணிக்கிட்டா குழந்தைக்கோ எனக்கோ பின்னாடி எதும் பிரச்னை வராதா” என்று மருத்துவரிடம் கேட்டேன்.

’சுகப்பிரசவம் நடக்கும்போது பிறப்புறுப்பில் இருக்கும் குட் பாக்டீரியா எனச் சொல்லப்படும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும். பிரசவம் ஆனவுடனே தாயால் பால் கொடுக்க இயலும். சீக்கிரம் தாயின் உடல் பழைய நிலைக்குத் திரும்பும். இதெல்லாம் நன்மையே என்றாலும் வயிற்றில் இருக்கும் குழந்தை இப்பொழுது நிலையாக இல்லை, உங்களுக்கு வலி வந்தும் கர்ப்பப்பையின் வாய் திறக்கவில்லை. இந்த மாதிரி சூழலில் வெகு நேரம் காத்திருப்பது உங்கள் உடலுக்கும் குழந்தையின் ஆரோக்கியதிற்கும் நல்லதல்ல. ஆபரேஷன் செய்யும்போது போடப்படும் மயக்க ஊசியால் முதுகு வலி ஏற்படும் என்பதெல்லாம் உண்மையல்ல. குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது குனிந்து வளைந்து அமர்வது போன்ற காரணங்களால்தான் முதுகு வலி ஏற்படுகிறது. சுகப்பிரசவ பெண்களுக்கும் இப்போது முதுகு வலி ஏற்படுகிறது என்கின்றனர்.

’சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை அனைத்துமே ஆரோக்கியமாக இல்லை. சிசேரியன் செய்யப்படும் தாய்மார்கள் அனைவருக்குமே உடல் உபாதைகள் இருப்பதில்லை. ஒவ்வொருவருடைய உடல் நிலையும் வேறு. இங்கே மன உளைச்சலின்றி இருப்பதும் ஆரோக்கியதிற்கு முக்கியமே. என் பார்வையில் யாருக்கு எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுப்பதுதான் குழந்தைக்கும் தாய்க்கும் நார்மல் டெலிவரி.’

மருத்துவரின் வார்த்தைகளில் பல உண்மைகள் எனக்குப் புரிய வந்தன. இருந்தும் எதையோ நினைத்து என் மனம் பயந்தது.

“இப்போதான் அடி வயித்துல ஆபரேஷன் பண்றாங்க. அப்போல்லாம் வயித்துல நேரா கிழிப்பாங்க. முப்பது வருஷம் ஆச்சு ரெண்டுமே ஆபரேஷன். இப்போ எனக்கு என்ன ஆயிடுச்சு, நல்லாதான் இருக்கேன். வீட்டு வேலை எல்லாம் நான்தான் பண்ணிட்டு இருக்கேன். வலிலாம் எதும் இல்லை. தைரியம் வேணும். மனசுல தெம்பு இருந்தா போதும், காய்கறி, மீனு முட்டைனு சாப்ட்டு உடம்பைத் தேத்திக்கலாம்” என்றார் என் மாமியார்.

குடும்பத்தின் ஆதரவோடு சிசேரியன் மூலம் குழந்தைப் பெற்றேன். குழந்தையும் நானும் நலமோடு வீட்டிற்குத் திரும்பினோம்.

“ஏன் என்ன பிரச்னை? உங்க பொண்ணுக்குக் கடைசில சிசேரியன்தான் ஆச்சுன்னு சொன்னாங்க.”

இந்தக் கேள்வி மட்டும் என்னை விடவே இல்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.