‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரிய வால்விண்மீன் தோன்றியது. சோழ அரச குலத்தில் ஒருவரை அந்த விண்மீன் பலி வாங்கும் என்றனர் ஜோதிடர்கள்.’

“க்குவா க்குவா க்குவா…”

தியேட்டரே அமைதியாக அடுத்து என்ன என்று  திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்க, எங்கள் இருக்கைக்குப் பின் அமர்ந்திருந்த ஓர் அம்மா  குழந்தையின் அழுகையைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அழுகை அதிகரிக்கவே, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியில் சென்றார்.

பத்து நிமிடங்கள் கழித்து வந்தார். 

அரை மணி நேரத்தில் மீண்டும் குழந்தை வீறிட்டு அழுதது. தாய் மீண்டும் குழந்தையுடன் சென்றார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தார்.

இந்த முறை உள்ளே வந்து அமர்ந்ததும் குழந்தை அழ ஆரம்பித்தது. என்ன நினைத்தாரோ பையைத் தூக்கிக் கொண்டு அவரும் அவர் கணவரும் திரைப்படம் பார்க்காமல் கிளம்பி விட்டனர். திரைப்படத்துடன் ஒன்ற எனக்குச் சில நிமிடங்கள் ஆனது.

அவர் என்ன நினைத்து திரைப்படத்திற்கு வந்திருப்பார். வீட்டில் யாரும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள இருந்திருக்க மாட்டார்கள். மூன்று மணி நேரம் சமாளித்து திரைப்படம் பார்த்துவிட்டுச் செல்லலாம் என நினைத்து வந்திருப்பார். வந்ததில் இருந்தே குழந்தை அழுது கொண்டுதான் இருந்தது. அவராலும் நிம்மதியாகப் படம் பார்த்திருக்க முடியாது. பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

இதே போல் உணவகங்களிலும் சிறு பிள்ளைகளுடன் சாப்பிட வரும் பெண்கள் சாப்பிட முடியாமல் குழந்தைகள் செய்யும் சேட்டைகளில் அவர்களைப் பார்த்துக்கொள்வதிலேயே பரப்பரப்பாக இருப்பார்கள்.

இம்மாதிரியான பெண்களைக் கடக்கும்போது என்னை அறியாமலே அவர்கள் மேல் ஒரு தனி மரியாதை எழுவதுண்டு.

இப்படி நான் கடந்த சில மதிப்புக்குரிய அம்மாக்களைப் பற்றிய பதிவுதான் இது.

போன மாதம் குழந்தை பெற்ற என் தோழி ஒருத்தியைப் பார்ப்பதற்காக அவள் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

குழந்தை மட்டும் அவள் அறையில் தூங்கிக் கொண்டு இருந்தது. தோழியைக் காணவில்லை. சிறிது நேரம் கழித்து கையில் துணிகளுடன் வந்தாள்.

“வாடி, எப்போ வந்த? துணி காயப் போட்ருந்தேன்.. எடுக்கப் போயிருந்தேன்.”

“குழந்தை பொறந்து ஒரு மாசம்கூட ஆகல… படி ஏறி இறங்க ஆரம்பிச்சிட்டியா?”

“என்னடி பண்றது நான் என்ன அம்மா வீட்லயா இருக்கேன்… மாமியார் ஒரு வாரம் தினம் பையன் துணிய துவச்சாங்க… அப்புறம் ஒண்ணு விட்டு ஒரு நாள் துவச்சாங்க.. அப்புறம் ரெண்டு மூணு நாள் ஆகியும் அப்படியே இருந்துச்சு. பச்ச குழந்தை துணிய எப்படிச் சேர்த்து வெச்சு துவைக்கிறத பாத்துட்டு இருக்குறது. அதான் நானே துவைச்சு காயப்போட்டு எடுத்து மடிச்சு வெச்சிடுறேன்.”

“படி ஏறுனா வலி இல்லையாடி?”

“அப்பப்ப உடம்பே ஒருமாதிரிதான் இருக்கு. என்ன பண்றது செஞ்சிதான ஆகணும். பிரசவம் முடிஞ்சி அடுத்த நாள் என்னை எழுப்பி உக்கார வெச்சிட்டு தட்டுல சாப்பாடு போட்டுக் குடுத்தாங்க. எனக்கே உடம்பெல்லாம் வலி. தட்டு பிடிக்கக்கூடத் தெம்பு இல்லை. யாராவது ஊட்டிவிட்டா பரவால்லன்னு தோணுச்சு. அவரும் மருந்து வாங்கறேன், குழந்தைக்கு துணி வாங்கறேன்னு அலைஞ்சிட்டு இருந்தாரு. வேற யாரைக் கேக்கறது, நானேதான் சாப்பிட்டுக்கிட்டேன். சூழ்நிலைதான் முடிவு செய்து நம்ம எத்தனை நாள் ஓய்வு எடுக்கணும்னு, என்னென்ன வேலை செய்யணும்னு” என்றவளை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அம்மா இல்லாத பெண்களுக்கு அம்மாவின் உதவி பெற இயலாத சூழலில் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறந்த ஆரம்ப காலக் கட்டத்தை கடப்பது உண்மையில் எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும்.

ஏற்கனவே உடலில் வலி இருக்கும், மன அழுத்தம் இருக்கும். இதில் தன் வேலைகளைத் தானேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் நேரிடும் போது அவர்களுக்கு இன்னும் அது மன உளைச்சலைத்தானே கொடுக்கும். சாப்பிட, தூங்க நேரம் கிடைக்காது அப்படியே கிடைக்கும் நேரத்தில் சுதந்திரமாகத் தூங்க முடியாது. வேலைகள் இன்னும் முடியவில்லையே என்கிற அழுத்தம் இருக்கும்.

இப்படிப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க, அடுத்த நாள் திருமண விசேஷம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே அழகுக் கலை நிபுணரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு மணப்பெண் அலங்காரத்திற்காக வந்திருந்தார்.

“உங்களுக்கு ட்ராவெல்லிங் கஷ்டமா இல்லையா.. வீட்ல எல்லாம் ஓகேயா?”

“மூணாவது படிக்கிறான் பையன், பொண்ணுக்கு மூணு வயசு. மாமியார் பாத்துக்கிறாங்க. பாப்பாக்கு ரெண்டு வயசு வரைக்கும் வீட்லதான் இருந்தேன். இப்போதான் ஒரு வருஷமா ஆக்ட்டிவ்வா இருக்கேன். பரவால்ல நல்லாதான் போகுது” என்றார்.

அவரைப் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. இதற்காக வீட்டிலும் வேலையிலும் எவ்வளவு உழைப்பு போட்டிருப்பார். அவர் மாமியாரும் வீட்டில் உள்ளவர்களும் அவர் வேலைக்காக எவ்வளவு உதவியாக இருக்கின்றனர்.

ஒரு நாள் பேருந்தில் கிளம்பி வரும்போது அங்கே ஒரு பெண் தனியாகத் தன் இரு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். தோளில் இருக்கும் குழந்தைக்கு ஏழு, எட்டு மாதங்கள் இருக்கலாம். கையில் பிடித்திருக்கும் குழந்தைக்கு மூன்று வயது இருக்கலாம். இருவரையும் ஆளுக்கொரு கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அழுது கொண்டிருக்கும் குழந்தையையும் சமாளித்தார். அடம்பிடிக்கும் குழந்தையையும் சமாளித்தார். தான் இறங்குமிடம் வந்ததும் இருவரையும் பிடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி நடந்தார். இத்தனை மாதக் குழந்தையை இத்தனைப் பேருடன் இப்படித்தான் கூட்டிச் செல்ல வேண்டும் என்கிற விதிகள் அற்று மிக இயல்பாக நடந்து சென்றார் அந்தத் தாய்.

ஒரு மாத, இரண்டு மாத குழந்தையைக்கூடப் பேருந்தில் பொது வெளியில் கூட்டத்தில் அழைத்துச் செல்கின்றனர். ஒரு வயது குழந்தையைக்கூடப் பொது வெளியில் அழைத்துச் செல்ல பயந்து வீட்டிலேயே பாதுகாக்கின்றனர்.

இங்கே எல்லார் சூழலும் வெவ்வேறானது. ஒவ்வோர் அம்மாவுக்கும் தனித்தனிக் கதை உண்டு. ஒவ்வொரு குழந்தை வளர்ப்பும் வித்தியாசமானது என்பதை உணர்ந்தேன்.

சரி, இதில் மனிதரின் குணங்களும் இயல்புகளும் மாறுபடுவதைக் காண நேரிட்டால்…

“எதுக்கு அழற.. வாய மூடு.. ஒரு இடத்துல உக்கார மாட்ட.. ஏதாவது ஒண்ணு கேட்டுட்டேதான் இருப்பியா?” என் அக்கா தன் மகனிடம் உரக்கக் கத்தினாள்.

எனக்குத் தெரிந்து என் அக்கா அதிகம் கோபம் கொள்ள மாட்டாள். அவள் குணத்தையே மாற்றி விட்டதா குழந்தை வளர்ப்பு?

“ரொம்ப அடம் பண்றான்டி.. என்னால கத்தாம இருக்க முடில… உங்க மாமா எதையுமே கண்டுக்கிறதே இல்லை.”

“ஏன் அப்படிச் சொல்ற? அவரும் தம்பிய பாத்துக்கிறாருதான அப்புறம் என்ன?”

“அவர் ஒரு மணி நேரம் பாத்துக்கிறதே பெருசா சொல்வாரு.. எல்லா வேலையும் முடிச்சிட்டு பிரீயா இருக்கும்போது பாத்துப்பாரு. நான் என் தூக்கத்தை விட்டுச் சாப்பிட, குளிக்க நேரம் இல்லாம ராத்திரி பகல் தெரியாம பாத்துக்கிறேன். அப்படி அவரும் அவரோட கம்ஃபர்ட் விட்டு வெளிய வந்து எப்போ பாத்துக்கிறாரோ அப்போ ஒத்துகிறேன்” என்றாள்.

கணவர் பெரிதாக உதவியாக இருப்பதில்லை என்று ஆதங்கப்படும் அக்காவைப் பார்க்கும்போது இன்னொன்று தோன்றியது. குழந்தைப் பிறந்த பின் கணவரைப் பிரிந்து வாழும் பெண்களின் நிலை எப்படி இருக்கும். தானே எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். அது இன்னும் எவ்வளவு பெரிய கஷ்டம்.

ஏன் எல்லாருக்கும் அது கஷ்டமாக இருக்க வேண்டும். ஒருவேளை யார் உதவியும் இன்றி தனியாகக் குழந்தை வளர்க்கும் பெண்கள் அதைச் சந்தோஷமாகச் செய்தால் என்கிற இன்னொரு பார்வையைத் தந்தது. ஆண்பால் பெண்பால் அன்பால் என்கிற தலைப்பில் விகடனில் வெளிவந்த தொடரில் ஸர்மிளா செய்யித் அவர்கள் கூறியிருந்தது…

’28 வயதிலேயே கைக்குழந்தையோடு தனித்து விடப்பட்டபோதும் சரி, கணவனே பகைவனாக மாறிப் பழியெடுக்கத் துரத்தியபோதும் சரி, ஆண்களிடம் எனக்கு வெறுப்பு உண்டாகியதில்லை. கையில் அப்போது பனையின் இளம் நுங்குபோல குளிர்வித்துக் கொண்டிருந்தான் என் குழந்தை. துயரங்கள் ஒன்றாகக்கூடி நெஞ்சை இறுக்கிப் பிடித்தபோதெல்லாம் அவன் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டும், அவன் பிஞ்சுக் கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டும்தான் ஒவ்வொரு நாளையும் பொழுதையும் கடந்து வந்தேன். இப்போது அவன் தரும் அன்பு, நேசம், உறவு அத்தனையும் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும் பிரபஞ்சத்தின் அச்சாணியாக இருப்பது ஆண்-பெண் உறவுதான்.’

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.