தெரஸ் லில்லி

பள்ளியின் வரலாறு 

தெற்கு கள்ளிகுளம் பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1911-ம் ஆண்டு கல்வி அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது அதன் பெயர் RC Elementry School. 1935-ம் ஆண்டு முதல், அரசின் அங்கீகாரம் பெற்று, புனித அலாய்சியுஸ் நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்படுகிறது.

தற்போது இருக்கும் கட்டிடம் 5-7-1956 அன்று பெருந்தலைவர் காமராஜரால் திறந்து வைக்கப் பட்டது.

தெரஸ் லில்லி – இவர் தேவதாசன் அமிர்தமிக்கேல் இவர்களின் மகளாக 1965-ம் ஆண்டு பிறந்தவர். மூன்று அண்ணன்கள் மற்றும் ஒரு அக்காவின் செல்லத் தங்கை. குழந்தை தெரசா நாளையொட்டி (செப்டம்பர் 30 இவரது பிறந்த நாள்; அக்டோபர் முதலாம் நாள் குழந்தை தெரசா திருவிழா) பிறந்ததால், அப்பெயரைப் பெற்றவர். 

அப்பா, ஊரில் சிறு அச்சகம் நடத்தியவர். அச்சுக் கலையைப் பலருக்கும் கொடுத்துச் சென்றவர். வருமானம் எனப் பெரிதாகச் சம்பாதிக்க இயலவில்லை என்றாலும், அச்சகம் நல்ல புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது. 1978-ம் ஆண்டு வரை பள்ளி அதாவது SSLC வரை உயர்நிலைப் பள்ளியில், பிறகு பன்னிரண்டாம் வகுப்பு கல்லூரியில் என இருந்தது. அதன்பிறகுதான் இன்றைய +2 முறை வந்தது. அதுவரை பள்ளியில் மாலை நேரத்தில் இந்தி வகுப்புகள் அப்பா எடுத்ததால், இந்தி பண்டிட் என அழைக்கப்பட்டார். இந்தி திணிப்பு எதிர்ப்பு தீவிரமாக இருந்தபோதும் வகுப்புகள் நடந்தவண்ணம்தான் இருந்தன. 

அம்மா, குடும்பத்தைக் கவனித்துக் கொண்டது மட்டுமல்லாமல், அச்சகத்தின் சிறு சிறு வேலைகளையும் வீட்டிலிருந்தே செய்து கொடுத்து வந்தார். இன்றும் பிள்ளைகளுக்கு அவர் ஒரு பக்கத் துணையாக இருக்கிறார்.  93 வயதாகும் அவர், இன்றும் செய்தித்தாள் வாசிப்பவர்; உள்ளூர், வெளியூர் உலக அரசியல் அனைத்தையும் இன்றும் சொல்பவர்.

லில்லி, பள்ளிப்படிப்பு, இளங்கலை கணிதம் என அனைத்தையும் உள்ளூரில் கற்றவர், ஆசிரியர் பயிற்சியைப் பாளையங்கோட்டை இக்னேஷியஸில் பெற்றார். பிறகு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களின் இடத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது ஓரிரு மாதங்கள் வேலை செய்து வந்தார். ஆனால் நிரந்தர ஆசிரியராக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அதற்கு அவரது பெற்றோர் உடன்பிறந்தோர் அனைவரும் துணை நின்றனர். 

ஊரில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை என்பது எழுதப்படாத விதிமுறை. பெண்ணுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், கணவரின் ஊரில்தான் அவருக்கு உரிமை. திருமணம் முடிந்தபின் அவர் தனது பெயரை அங்குப் பதிந்து வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பணி கிடைக்கும். இதனால் உள்ளூர் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்வது என்பதில் லில்லி உறுதியாக இருக்க, பெற்றோரும் வந்த மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுப்போம் என்று எண்ணாமல் உறுதுணையாக இருந்தனர்.

அவர் விரும்பியபடியே திரு எடிசன் அவர்களின் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தார். கணவரின் குடும்பமும் உறுதுணை செய்ய, நிரந்தர பணி கிடைத்தது. குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் இரு குடும்பமும் உதவிக் கரத்தை நீட்ட, பணியில் சோர்வில்லாமல் உழைக்க முடிகிறது.  

1996-ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற லில்லி, 2017-ம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பதவி ஏற்கிறார். பள்ளியில் பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளிக்குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகள் செய்வது; தேவையான பொருள்கள் வாங்கிக் கொடுப்பது, இன்முகத்துடன் அவர்களின் கதைகளைக் கேட்பது என ஒரு அன்னை போன்றே அனைத்துப் பணிகளையும் செய்கிறார். அலுவல் நேரம் தாண்டியும் பள்ளிக்காக உழைக்கிறார். அரசின் ஆணைகள், நலத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வழி செய்கிறார். 

ஞானப்பிரகாசியார் (புனித அலோசியஸ் கொன்சாகா) பிளேக் நோயாளிகளுக்கு உதவி செய்து, தானும் அந்நோயால் பாதிக்கப்பட்டு தனது இருபத்தி மூன்றாவது வயதில் இறந்தவர். அவரின் இறந்த நாளான ஜூன் இருபத்தியொன்று அவரின் விழாவாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.  அன்று பள்ளியில் விழா நடைபெறும்; சுண்டல், கருப்பட்டி காபி அனைவருக்கும் உண்டு. அதற்குத் தேங்காய் உடைத்து, அதனுள், திரி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கு வைப்பார்கள். அந்தத் தேங்காயின் சுவை மிக மிக என எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். அவ்வளவு அபாரமாக இருக்கும். மாணவர்களின் விருப்பமான நாள்களில் அதுவும் ஒன்று.

இப்படிப் பள்ளியின் ஆண்டு தொடங்கும் காலம் முதல், விளையாட்டு விழா, ஆண்டுவிழா, அறிவியல் கண்காட்சி, சுற்றுலா எனப் பள்ளியிறுதி வரைப் பலவற்றையும் திறம்பட நடத்திக் கொடுத்திருக்கிறார். 

கல்வியிலும் மாணவர்கள் சிறப்பாக உள்ளனர். பள்ளியில் இருக்கும் கேடயங்களும் பதக்கங்களும் இதற்குச் சான்று. இளம் விஞ்ஞானி, NMMS தேர்வு போன்றவற்றில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றனர் என்றால் லில்லியின் உழைப்பு அதில் இருக்கிறது. கணித ஆசிரியராக இருக்கும் இவர், அடிப்படையைக் கற்றுக் கொடுப்பதால், மேற்படிப்பில் இவரின் மாணவர்கள் தலைசிறந்து உள்ளனர். மேல்நிலைப்பள்ளிகளில், அலோய்சியஸ் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் என்றால் கணக்கில் சிறப்பாக இருப்பார்கள் என்ற அளவிற்கு அவர்களை வளர்த்து விடுகிறார்.  

லில்லி, சுற்றுலாக்களை மிகவும் சிறப்பாக வடிவமைக்கிறார். சில மாணவர்களைத் தனது செலவில் அழைத்துப் போவதும் உண்டு. இந்த ஆண்டு, தமிழ் நாட்டின் தென் கோடியிலிருந்து மாணவர்களைச் சென்னை அழைத்து வந்திருக்கிறார். சென்னையில் வாழும் மற்றும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து உதவிகள் பெற்றிருக்கிறார். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, குழந்தைகளுக்கு உணவு, பண்டம், தண்ணீர் என அவர்களும் இடையறாது அவர்கள் வாங்கிக் கொடுத்தார்கள். மெட்ரோ ரயில் அனுபவம் போன்றவற்றைக் கொடுத்தார்கள். மீண்டும் ஊர் திரும்பும்போதும், வழியில் சாப்பிட என உணவுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தார்கள். திரும்பி வரும்போது, மாணவர்கள் உள்ளம் நிறைந்த அனுபவங்களும், பை நிறையத் தின்பண்டங்களுமாக வந்தார்கள் என அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

பள்ளியின் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து, பள்ளிக்குத் தேவையான கணினி, பிரிண்டர், நீர் சுத்திகரிப்பான் (water purifier) போன்ற வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

பள்ளிக் கட்டடங்கள் பழுது பார்த்தால், தரையைச் செப்பனிடுதல், கழிவறைப் பழுது பார்த்தல், போன்ற பெரிய வேலைகளுக்கும் புரவலர்களை ஒருங்கிணைத்துப் பெற்றிருக்கிறார். 

அவரை இந்த அளவிற்கு உயர்த்தியது அவரது கல்வியும் உழைப்பும் என்றால் அது மிகையாகாது. அவரது எண்ணங்கள் நிறைவேற வாழ்வு சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.