ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, எங்கள் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் அம்மாதான் இன்றைய நாயகி; முள்ளுக்கட்டி வீடுவீடாகக் கொண்டு போட்ட அம்மா ’மரியம்மாள்.’
முதலில் இது என்ன தொழில் என்றே பலருக்கும் புரியாது. எழுபதுகள் காலக்கட்டத்தில் எங்கள் ஊரில் சீமைக்கருவேல மரங்கள் பெருமளவிலிருந்தது இல்லை. நாட்டு உடை எனச் சொல்லப்படும் மரங்கள்தாம் காடுகளில் நீக்கமற நிறைந்து காணப்படும். விறகாக அவைதான் பயன்பட்டன. ஒரு விளையில் ஐம்பது மரங்கள் என்றால் அவற்றை மொத்தமாக ஒருவருக்கு விற்று விடுவார்கள். அவர் கம்புகளை மட்டும் ஆங்காங்கே இருக்கும் முட்களைச் சீவி எடுத்துப் போவார். சுள்ளி எனப்படும் சிறு கம்புகள் அங்கேயே இருக்கும். அதைச் சிறு விலைக்கு வாங்கி, கட்டுக்கட்டாகக் கட்டி தேவைப்படுவோருக்குக் கொண்டு கொடுக்க வேண்டும்.
சொல்லும்போது எளிதாகத் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதான தொழில் அல்ல. முதலில் அந்தச் சுள்ளி கொஞ்சமாவது காய வேண்டும். அப்போதுதான் இலையும் பெருமளவு முள்ளும் உதிரும். அவ்வாறு முள் உதிரவில்லை என்றால், தலையில் தூக்கி வருவது என்பது இயலாத செயல். அப்படித் தூக்கி வந்தாலும் வாங்குபவர்கள் திட்டுவார்கள். ஏனென்றால் வாங்குபவர்கள் சுள்ளியை ஒரு, ஒன்றரை அடி நீளத்தில் தறித்துத்தான் அடுப்பில் வைப்பார்கள். அப்படித் தறிக்கும்போது முள் நிறைய இருந்தால் சிரமமாக இருக்கும். எப்படி என்றாலும் கொஞ்சம் முள் இருக்கத்தான் செய்யும். முள்ளுக்கட்டைத் தூக்கி வருவது என்றாலும், முள் தறிப்பது என்றாலும் அனுபவம் இல்லை என்றால், கிழித்துக் கொள்வோம்.
எனக்கு நல்ல அனுபவம் உண்டு. எங்கள் வீட்டில் பெரும்பாலும் இது தான் விறகு. பெரிய விறகு எல்லாம் கடைக்காரர்களும் வசதியானவர்களும்தாம் வாங்குவார்கள். தரையில்தான் பெரும்பாலும் அடுப்பு இருக்கும். அதன் அருகிலிருந்து சுள்ளிகளை ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். பாத்திரத்தில் கரி நிறையப் பிடிக்கும். உயரத்தில் அடுப்பு வைப்பதே அரிது. ‘மேசை அடுப்பு வைத்து இருக்கிறாள்’ என்பார்கள். அவ்வாறான வீடுகளில் மட்டுமே பெரிய விறகு வாங்குவார்கள்.
புல்லுக்கட்டு போன்றவை என்றால் யாரவது காட்டில் வருகிறவர் போகிறவர் தூக்கி விடுவதற்கு வருவார்கள். ஆனால் முள் குத்தும் என்பதால், முள்ளுக்கட்டைத் தானேதான் தூக்கியாக வேண்டும். அதனால் மரங்களின் அருகில் கொண்டுபோய் கட்ட வேண்டும். மரத்தில் சாய்வாக வைத்து தலையில் வைக்க வேண்டும். தலையில் இருக்கும் சும்மாடு சரிந்து விட்டால், தலையைப் பதம் பார்த்துவிடும். ஒவ்வொரு கட்டும் ஆளுயரம் இருக்கும்
“புல்லுக்கட்டு தூக்கிட்டு
துள்ளித் துள்ளி வரும்போது
மல்லுகட்டத் தோணுதடி மாமனுக்கு “
என்பது போன்று பாடும் நிலையிலான கட்டு அல்ல முள்ளுக்கட்டு.
இந்த வரலாற்றை அம்மாவின் சார்பாக மூத்த மகன் சேகரன்தான் சொல்கிறார் என்பதால், இருவரின் வாழ்க்கையும் இணைத்தேதான் சொல்கிறார்.
“என் தகப்பனாரும் நல்ல உழைப்பாளிதான் ஆனால் போதவில்லையே! அதனால் என் அம்மா பல வேலைகள் செய்தார். நாங்கள் மொத்தம் ஏழு பிள்ளைகள். எங்களை வளர்ப்பதற்காக அம்மா உடை மரங்களைக் காட்டில் வெட்டிய பின் மறுநாள் (காய்ந்த பிறகு) அடித்துக் கட்டுக் கட்டாகக் கட்டி தலையில் சுமந்து வீடு வீடாகக் கொண்டு கொடுப்பார்கள் ஒரு கட்டின் விலை அதிகபட்சமாக இரண்டு ரூபாய்தான். அந்த இரண்டு ரூபாயைக்கூட யாரும் உடனடியாக பணம் கொடுத்து வாங்க மாட்டார்கள் சில நாட்கள் கழித்துத்தான் கொடுப்பார்கள். பல வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக்கூட தருவார்கள். முள்ளுக்கட்டு வாங்குபவர்களும் பெரும்பாலும் ஏழைகள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிழா காலங்களில் வெளியூர் மக்கள் தெருவோரங்களில் வைத்துச் சமைத்துச் சாப்பிடுவது வழக்கம். முள்ளுக்கட்டைச் சிறிது சிறிதாகத் துண்டு துண்டாக வெட்டிச் சின்ன சின்ன கட்டுகளாகக் கட்டி நான் அவர்களுக்கு விற்பனை செய்திருக்கிறேன். இதைச் சொல்வதில் எந்த விதமான வெட்கமும் இல்லை. மேலும் சீனிக் கிழங்கு, மாம்பழக் காலத்தில் கோயிலுக்குப் பின் மாட்டுவண்டியில் மொத்தமாகப் போட்டு இருப்பார்கள் அதை வாங்கிக் கொண்டு பக்கத்து ஊர்களுக்கு எல்லாம் சென்று அம்மா வியாபாரம் செய்தார். விடுமுறை நாளில் நானும் உடன் செல்வேன். சில சமயம் வயல்வெளியில் களை பறிப்பதற்கும் அம்மா செல்வார். அந்தக் காலக்கட்டம் மிகவும் சோதனையான காலக்கட்டம். என்னால் படிக்க முடியவில்லை. படிப்பின் அருமையை நினைக்காத நாளே இல்லை” என்கிறார்.
நடுநிலைப் பள்ளியிலிருந்து, உயர்நிலைப் பள்ளியில் கால்வைத்த முதல் நாள், அப்பா பள்ளிக்கு வந்து, “இன்று, நீ சென்னைக்கு வேலைக்குப் போக வேண்டும்” எனச் சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறார். அத்துடன் அவரின் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். திறமையான மாணவராகவே இருந்து இருக்க வேண்டும் என்பதை அவரது எழுத்துச் சொல்கிறது. பிழையின்றித் தங்குதடையின்றி எழுதக் கூடியவர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து ஒரு பதிவு வந்த போது, அந்தக் காலத்தில் இப்படி எல்லாம் சட்டம் இருந்து இருந்தால், நானும் படித்து இருந்து இருப்பேன் எனத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
இவ்வாறு வேலை செய்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் இன்னோர் ஆண்டின் பள்ளி தொடங்கிய முதல் நாள் (1976 ஜூன் மூன்று) அவர் வாழ்வில் இன்னோர் இடி விழுந்தது. ஆனால் அந்த இடி விழுந்ததுகூட இவருக்குத் தெரியாது. ஆம் ஒரு தம்பி அன்று இறந்து விட்டான்.
அந்த நாள் எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறது. அவர்களின் வீடு எங்கள் வீட்டின் பின்பக்கம் இருந்தது. என் பிறந்த நாளை (ஜுன் 4) ஒட்டி வீட்டில் மிட்டாய் வாங்கி வைத்து இருந்தார்கள். அதை யாருக்காவது கொடுக்கும் ஆர்வம் எனக்கு இருந்து இருக்கிறது. அவரின் தம்பிக்கு , வகுப்பில் பாசான மகிழ்ச்சியை யாரிடமாவது சொல்லும் ஆர்வம் இருந்து இருக்கிறது. அங்கிருந்து அவன் சொன்னான். பார்க்கும் எல்லோரிடமும் சொல்லியிருப்பான் என நினைக்கிறேன். நான் இந்தப் பக்கம் இருந்து பிறந்த நாள் மிட்டாய் எனக் கொடுத்தேன். அவனது அக்கா அப்போது ஊரின் மேற்கில் இருக்கும் சர்வோதயத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அக்காவிடம் போய்ச் சொல்லப் போவதாகச் சொன்னான். பின் நடந்தது துயரம். அன்று பள்ளியின் முதல் நாள் என்பதால், காலையுடன் பள்ளி விட்டு விட்டது. பகல் நேரம். நல்ல வெய்யில். சாலையில் மாட்டுவண்டியில் சென்றவர், அந்தப் பையனைத் தன் மாட்டுவண்டியில் ஏற்றிச் சென்று இருக்கிறார். கீழே இறக்கி விடும்போது, மாடுகள், அவரது கட்டுப்பாட்டை மீறி சிறிது அசைந்து விட்டன. வண்டிச்சக்கரம் பையன் மேல் ஏறி, அந்த இடத்திலேயே அவன் உயிர் பிரிந்து விட்டது.
அவர்கள் அம்மா அவன் இறந்து சில நாட்களுக்குள் வேலைக்கு என வெளியில் போனார். அதைக் கேலி பேசியவர்களை என் அம்மா, “நீ சாப்பாடு கொடு; அவர்கள் போகமாட்டார்கள்” எனச் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவின் துயரை என் அம்மா அடிக்கடி சொல்வார். ‘துக்கம் கடைப்பிடிக்கக் கூடப் பணம் வேண்டும்’ என்று!
இவ்வளவும் நடந்தது சேகரனுக்குத் தெரியாது. அவர், “அந்தத் துயரம் நடந்தது ஜூன் மாதம் மூன்றாம் நாள். அப்பொழுது நான் சென்னையில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன், ஒரு வாரம் கழித்து செய்தித்தாளில் செய்தி வந்திருந்தது. நெல்லை மாவட்டச் செய்தியில் கள்ளி குளத்தில் மாட்டு வண்டியில் அடிபட்டு சிறுவன் இறந்தான் என. செய்தியைப் படித்த பின்புதான் எனக்குத் தெரியும். அந்தக் காலக்கட்டத்தில் தொலைத் தொடர்பு வசதிகள் கிடையாது உடனடியாக நான் ஊருக்குச் செல்லவும் இல்லை. ஊருக்குச் செல்லும் அளவுக்கு வசதியும் இல்லை. நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துயரம்.”
இவ்வாறாக எட்டு ஆண்டுகள் கடந்தன. சேகரன் பின் அந்தக் கடையிலிருந்து வெளியில் வந்து, சிறு பெட்டிக்கடை ஒன்றை வைத்தார். குளிப்பதற்கும் துவைப்பதற்கும் அருகில் உள்ள இஸ்லாமியக் கல்லறைத் தோட்டம் கை கொடுத்தது. காசிமேடு, கடற்கரையில் மீன் உணவு மலிவாக இருந்து இருக்கிறது. அதனால் அவற்றை வாங்கி உண்பாராம். இரட்டை வாழைப்பழங்களைப் பலரும் விரும்புவதில்லை. அதனால் குறைந்த விலையில் கிடைக்குமாம். இப்படித் தேடித் தேடிக் குறைந்த விலையிலான உணவு வகைகளை உண்டு இருக்கிறார். வாடகைக்கு வீடு பார்த்துக் குடியேறி, காசி மேட்டின் தந்திச் செய்தித்தாள் முகவராகியிருக்கிறார்.
உடன்பிறந்தவர்கள் பலர். அதனால் பொறுப்பு மிகவும் கூடுதல். அதனால் பலரும் திருமணம் செய்து கொடுக்கத் தயங்கிய நேரத்தில் அவரது மாமியார், ‘நல்ல பையன் உழைப்பாளி’ என நம்பித் தன் பெண்ணைக் கொடுத்தார். திருமணம் முடித்த பின் மனைவி ஜெகாவுடன் (என் பள்ளித் தோழி), இணைந்து உழைத்து குடும்பம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. சேகரன் ஈகிள் டைரி மற்றும் காலண்டகளுக்கு முகவராகி இருக்கிறார். தன் நிலையை உயர்த்தியுள்ளார். பிள்ளைகளைச் சிறந்த முறையில் படிக்க வைத்து இருக்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியைப் பிள்ளைகளுக்கு அபரிதமாக வழங்கி இருக்கிறார்.
இத்தனைக்கும் அடித்தளமிட்டது முள்ளுக்கட்டுதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. இளம்வயதில் பட்ட சிரமத்திற்கு இப்போது அம்மா நல்ல வீடு, உணவு என நிறைவாகத் தன் முதுமையைக் கழிக்கிறார். இவை அனைத்தும் அவர் இளம் வயதில் ஏங்க வைத்தவை. முன்னேற்றம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த அம்மாவும் மகனும் திகழ்கிறார்கள். தன்னம்பிக்கையுடன் இணைந்த உழைப்பு என்றாவது பலன் தரும் என எண்ணி உழைப்போம் முன்னேறுவோம்.
(தொடரும்)
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.
ரத்தம் வடிந்த உண்மை, என் பாட்டியும் இதே போல முள் கட்டு சுமந்த கதையை சொல்ல கேட்டு உள்ளேன்..