வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம்.
சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில் சிறந்து விளங்கியிருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன எனப் பார்க்க வேண்டுமென்றால், இன்னமும் சிறிது பின்னோக்கிப் போகவேண்டும். வடக்கன்குளம் மிக்கேல் பாளையம் மக்கள், கிறிஸ்தவராக மாறுமுன்பிருந்தே மகுடம் வாசிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மக்கள் கத்தோலிக்கர்களாக மாறியதால், அவர்களின் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கௌசானல் அடிகளார், இம்மக்களுக்கு, மேற்கத்திய இசையைக் கற்றுக் கொடுத்து இருக்கிறார். தூத்துக்குடி பகுதிகளில் இவர்களைத்தான் விழாவிற்கு அழைக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்றைக் கௌசானல் அடிகளார் வைத்திருந்திருக்கிறார். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது.
இவ்வாறான மிக்கேல் பாளையத்தில் திரு. மரியதாசன், 1904 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஒன்பது வயதிலேயே (1913 காலகட்டம்) தனது இசைப்பயிற்சியை அவர் எடுத்திருக்கிறார். பெரும் புலமை பெற்ற கிளாரினட் கலைஞராக (வித்வான்) மாறியிருக்கிறார்; தனது குடும்பத்தினருக்கும் இசைப்பயிற்சி கொடுத்துள்ளார். ‘அண்ணன் தம்பிகள் சகோதரியின் கணவர் மற்றும் இருவர் என ஏழுபேர் சேர்ந்து ஒரு இசைக் குழு அமைத்திருக்கிறார்கள். அவர்கள் இணைந்து, பல இடங்களில் வாசித்திருக்கிறார்கள். அனைவரும் இணைந்து புத்தகங்கள் வைத்து, ராகம் பல்லவி, மெட்டு, கீர்த்தனை பழகுவார்கள். சரிகமபதநி பழகி அரங்கேற்றுவார்கள்’ என அவர்களின் அண்ணன் மகள் ஜெபமாலை அம்மா குறிப்பிடுகிறார்கள்.
நாயனம், ஒத்து, தவில் வைத்த ஒரு குழு (செட்) முதலில் தொடங்கியிருக்கிறார்கள் எனச் சொல்லும் அவர், சின்ன தமுறு, பெரிய தமுறு, சின்ன சாமான், பெரிய சாமான், கிளாந்து, கிளாரினெட், தவில் என அவர்கள் வாசித்த கருவிகளுக்கான பெயர்களைச் சொல்கிறார்கள். தப்பெட் -2, கிளாரினெட்-2,பெரிய தப்பட் ஒன்று, சின்ன தப்பு ஒன்று, தவில் ஒன்று என அந்த இசைக்குழுவின் வாத்தியங்களின் பெயரைச் சொல்கிறார்.
தாசன் மேளம் என்றால், இலங்கை, திருநெல்வேலி, மேலப்பாளையம், செல்லாம்புதூர் (இந்த ஊர் எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை), சாத்தான்குளம், மன்னார்புரம், கோவில்பட்டி, கள்ளிகுளம் எனப் பல ஊர்களிலும் புகழ் பெற்று விளங்கியது என்கிறார். மாடிப்படி ஏறி இறங்கும் அளவிற்கான வலுவுடன் இருந்த அவருக்கு, நான் பார்த்த போது 98 வயது. இன்று 101 வயதுடன் வலிமை குன்றாமல் இருக்கிறார்.
தாசன் அவர்கள் குறித்த மேலும் தகவல்களை அவரது மகள் சாந்தி மரியதாசன் சொல்கிறார்கள்.
மிகவும் இளம் வயதிலேயே இசைப்புலமை பெற்று இருந்ததால், அவரது தந்தையார் சென்னை, திருச்சிராப்பள்ளி எனப் பல ஊர்களிலும் சென்று வாசித்திருக்கிறார். திரைப்படங்களுக்கு வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. திரைத் துறை வரை போய்விட்டு, “நான் மாதா கோவிலுக்கு வாசிக்கிறவன் எனக்கு இது வேண்டாம்” என்று ஒதுங்கி வந்து விட்டார். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களுடன் இவருக்குச் சிறந்த நட்பு இருந்திருக்கிறது. NS கிருஷ்ணன் அவர்கள், வடக்கன்குளத்தில் வந்து மரியதாசன் அவர்களை அடிக்கடி சந்தித்துச் செல்வாராம். சில நேரம் தாசன் அவர்களின் கிளாரினட்டை சென்னைக்கு வாங்கிச் சென்று விட்டு மீண்டும் வந்து கொடுப்பாராம். அந்த அளவிற்கு நட்பு இருந்திருக்கிறது.
மே 16, 1939 இல் நிறுவப்பட்ட திருச்சி வானொலி நிலைய தொடக்க இசையாகத் தாசன் அவர்கள் தான் வாசித்து இருக்கிறார்.
துரை பங்களாவுக்குப் போய் வெள்ளைக்காரர்களின் வேண்டுதலின் பேரில் வாசித்து இருக்கிறார் (அப்போது வடக்கன்குளத்தில் ஐரோப்பியர்கள் இருந்திருக்கிறார்கள்). அவர்கள், இவருக்கு மேலை நாட்டு இசையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மூடு பல்லக்கில் மரியாதையாகக் கூட்டிச் செல்வார்களாம்.
கன்னியாகுமரி கோவில் மேல் இருக்கும் சிலுவையை இலங்கையிலிருந்து திரு மரியதாசன் தான் வாங்கி வந்திருக்கிறார் (அதற்கான பணத்தைக் கொடுத்தவர் யார் எனத் தெரியவில்லை). அது வடக்கன்குளத்திலிருந்து தான் போயிருக்கிறது என இணையத்தில் பார்த்ததாக மகள் சொல்கிறார்.
“கன்னியாகுமரி தேவாலயத்தை வடிவமைத்து கட்டியவர் என் அப்பாவின் தாத்தா. (அவரது அம்மாவின் அப்பா). அவர் ஒரு கட்டிடக் கலைஞர்; வடக்கன்குளத்தில் கான்கார்டியா பள்ளி மற்றும் பங்களாக்களைக் கட்டினார். அவரது பெயர் தாளம் பாக்கியம் (Thalam Packiam)” என வடக்கன்குளம் தெரசாள் மேல்நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கன்னியாகுமரி உபகார அன்னையின் ஆலய பெரிய கோபுர வேலை 1954இல் தொடரப்பட்டது. 1955 ல் தங்கச்சிலுவை நிறுவப்பட்டது என்கிறது ஆலயம் அறிவோம் தளம். ஆனால் அதற்கு முன்னரே கொண்டு வந்திருக்க வேண்டும் என்கிறார் சாந்தி. கோபுர வேலை செய்யத் தீர்மானம் செய்த போதே வரவழைத்திருக்கலாம்.
மரியதாசன் அவர்களின் மகன் தனது இருபத்தெட்டு வயதில் இறந்த பின் குழுவே ஆட்டம் கண்டுவிட்டது. பின் நான்கு வயது மகனையும் இழந்த அவர், முற்றிலும் ஒடிந்து போய்விட்டார். மகன் இறந்த பிறகு இலங்கை போனாரா எனத் தெரியவில்லை என்கிறார் அவர்.
சமீபத்தில், கன்னியாகுமரியில் வயது முதிர்ந்த ஒருவர், இறப்பதற்கு முன் தாசனின் வாரிசைப் பார்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருக்க, தாசன் அவர்களின் அண்ணன் பேரன் ஜெசியை அவர் முன் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர் பிரபலமாக இருந்திருக்கிறார்.
“நாங்கள் பிளஸ் டூ படிக்கும் போது குடியரசு நாளன்று ஊரைச் சுற்றி வரும் போது அப்பா தான் வாசித்து வந்தார்கள். அப்போது அப்பாவிற்கு வயது எண்பது” எனத் தனது நினைவலைகளைப் பின்னோக்கி தட்டி விடுகிறார் மகள். இது நடந்த ஆண்டு 1983.
கோட் சூட் என் கம்பீரமாக நின்று புகைப்படம் எடுத்துள்ள அவர் எப்போதுமே நன்கு அயர்ன் பண்ணிய கதர் வேட்டி சட்டை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்து இருக்கிறார். இந்த புகைப்படம் அவரது 94 வயதில் எடுத்தது.
அவரின் குழுவின் நீட்சியாக இப்போது ஒரு சிறு குழு மட்டும் வடக்கன்குளத்தில் இருக்கிறது. அவரது அண்ணன் பேரன் ரிச்சர்ட் தவில் வாசிக்கும் குழு அது. கன்னியாகுமரி போன்ற கடற்கரை ஊர்க்காரர்கள் இன்றும் ‘தாசன் செட்’ எனச் சொல்லித் தான் ‘திருவிழா சோலி’ அவருக்குக் கொடுக்கிறார்கள் என்கிறார். முன்பு இருந்த இசைக்கலைஞர்களின் வழித்தோன்றல்களில் பெரும்பாலானோர் படித்துப் பெரிய பெரிய அரசு/ தனியார்த் துறைகளில் பணிகளில் இருக்கின்றனர் என்பது சிறப்பு.
இவ்வாறான குடும்பத்தில் இளைய மகளாக சாந்தி பிறந்திருக்கிறார். இவருக்கும், இவரது அக்காக்களுக்கும் வயது வேறுபாடு மிகக்கூடுதல். அதனால் அக்காக்கள் செல்லமாக சாந்தி வாழ்ந்திருக்கிறார். ஆனால் அண்ணன்கள் இறந்ததற்கு, இவர் பிறந்தது தான் காரணம் என எதோ ஒரு சோதிடர் சொல்ல, அம்மா வெறுத்து அடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அண்ணன்கள் இவர்கள் பிறக்குமுன்னரே இறந்திருக்கிறார்கள். அன்றைய ஒரு நாள் வருமானத்திற்காக ஒருவர் சொன்ன சொல், இன்னொருவரின் வாழ்வையே அசைத்து விட்டது.
இதனால் அப்பாவின், அக்காக்களின் பராமரிப்பில், அரவணைப்பிலிருந்திருக்கிறார். அனைவரும் செல்லம் என்ற பெயரில் பணத்தை வாரி வழங்கியிருக்கிறார்கள். உணவு, உடை என எதற்கும் குறைவில்லாத வாழ்க்கை. புதுநன்மை எடுக்கும்போது, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலில் ‘அம்மா’ போட்டிருக்கும் அதே வடிவில் ஆடை சிறு சிறு பிரில் வைத்ததாக வேண்டும் என தையல்கடையில் போய்க் கேட்டு வாங்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அக்காக்கள் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வது, வெளியூரிலிருந்தாலும் பணம் அனுப்புவது எனச் செல்லமோ செல்லம்.
இவ்வாறான அவர்களின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது திருமணம். கணவர், இவரது அக்கா கணவரின் உறவினர். அவர் நல்லவராக இருப்பார் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போதே அம்பாசிடர் கார் வாங்கிக் கொடுத்தார்களாம். ஆனால் அவரோ, திரைப்படங்கள் காட்டுவது போன்ற அடியாள். மனைவியையும் அடிப்பார். அதன் தாக்கம் இன்றும் அவரது உடலில் வலியாக உள்ளது. அவ்வப்போது பிரிவதும் இணைவதுமாக இருந்திருக்கிறார்கள். விளைவு, மூன்று குழந்தைகள்.
சென்னையில்தான் இப்படி என்றால், ஊரில் சென்று வாழலாம் என குடும்பம் சென்றிருக்கிறது. அங்கும் கணவர் வேலை செய்ததில்லை. அடி உதைதான். பசி, பட்டினி. ஒரு நாள் கணவனின் கொடுமை தாங்காது, உறவினர்கள், கொடிமரத்தில் அவரைக் கட்டி வைத்து விட்டார்கள். சாந்தி பித்துப் பிடித்தவர் போல் மாதக்கணக்கிலிருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பள்ளித் தோழி ஒருவர் தன் மகனிடம் பெரிய பெரிய பைகளில் அரிசி/ பருப்பு எனக் கொடுத்தனுப்புவார்களாம். அந்தப் பையன் உள்ளே போய் எதுவுமே சொல்லாமல் வைத்து விட்டுச் செல்வான் என நன்றியுடன் அடிக்கடி நினைவு கூறுகிறார். அவர் இருந்த நிலையைப் பார்த்துக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலர் வந்து கண்ணீர் விட்டிருக்கிறார்கள். ஒரு நாள் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து, ‘நான் வாழ்வேன் கவலைப்படாதீர்கள்’ எனச் சொல்லிச் சென்னை வந்திருக்கிறார்கள்.
பன்னிரண்டு வரைப் படித்தவருக்குக் கையில் அதற்கான சான்றிதழ் எதுவுமில்லை. எல்லாம் கணவரின் கைங்கரியம்தான். கிழித்து வீசிவிட்டார். அந்தச் சான்றிதழுக்கு நகலெடுத்து ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். நல்ல பொறுப்பான வேலை. திறம்பட நடத்தியிருக்கிறார்.
பின் வெளிநாட்டில் வேலை கிடைத்திருக்கிறது. பிள்ளைகளை உறவினர் வீடு, விடுதி என விட்டு விட்டு வேலை செய்திருக்கிறார். இன்றும் அது அவருக்குக் குற்ற உணர்வாக இருக்கிறது. வறுமைதான் தன்னையும் குழந்தைகளையும் பிரித்தது என்பது உண்மை என்றாலும், அதை ஏற்றுக் கொள்ள அவரது உள்ளம் மறுக்கிறது. இப்படி ஒரு படத்தை வைத்திருக்கிறார். இறுதியாகப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அம்மாவிடமிருந்து மகள் ஆரோக்கியத்தைப் பிரித்து எடுத்துக் கொண்டுபோனதை இவ்வாறு வைத்திருக்கிறார்.
ஆரோக்கியம் நினைவு பொக்கிஷம் என சாந்தி சொல்கிறார். இது அவரது தனிப்பட்ட விருப்பம். எல்லோருக்கும் காயங்கள் உண்டு. அந்த காயத்தை வடுவாக மாற்றாமல், இப்படிக் காயமாக வைப்பதில் என்ன பலன்? என்பது என் எண்ணம். சாந்தி, மகள் ஆரோக்கியம் இருவரும் இந்த உளநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும்; இந்தப் புகைப்படத்தைத் தூர வைக்கவேண்டும். இது இருவரின் தவறுமல்ல; காலம் செய்த கோலம். காலம், பலரின் வாழ்வினில் இவ்வாறான கோலம் போட்டிருக்கிறது.
திருமணத்திற்குப் பின் கல்விக்கென, பதவி உயர்விற்கென வெளிநாடு, வெளியூர் சென்ற பல பெண்கள் உண்டு. அங்கு அம்மா பால் கட்டி அழுவார். இங்கு பிள்ளை பாலுக்கு அழும். உள்ளூரில் வேலை செய்தாலும், பையைத் தோளில் போட்டுக்கொண்டு, செருப்பைக் காலினுள் திணித்துக் கொண்டே, சட்டையின் பட்டனைப் போடும் தாய்மார் பலர் உண்டு. பலரும் இதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். ஒரு இளம் தாய் மருத்துவர், மருத்துவமனையில் ஏதாவது குழந்தை அழுதால், தனக்குப் பால் சுரந்து நனைந்துவிடும் எனக் குறிப்பிட்டார். ‘தாய்ப்பால் துயரம்’ என பலரின் வாழ்வில் ‘தாய்ப்பால்’ விளையாடியிருக்கிறது. இதையே தனி கட்டுரையாக எழுதலாம். அவ்வளவு அனுபவங்கள் பெண்களிடம் கொட்டிக் கிடக்கின்றன.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் போது சில இந்திய ஆண்கள் சாந்தியை அணுகுவது உண்டாம். “உன் மனைவி ஊரில் தனியாகத் தானே இருக்கிறாள் அவளுக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்து விட்டு வா” எனச் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அடித்தால் திருப்பி அடி என்று சொல்லுவது அவர்கள் வழக்கம். சரிதானே!
பல பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த அநீதிகளைத் தொடர்ந்து தட்டிக்கேட்டவாறே இருந்திருக்கிறார். மேலிடம், மேலதிகாரி என்று கூட அவர் பார்க்காமல் துணிவாகப் பலவற்றைச் செய்திருக்கிறார். இந்தக் கட்டுரையின் நாயகியாக அவர்களைத் தேர்வு செய்ததே இதற்காகத்தான். தன் பெண் குழந்தைகள் என்றே அவர்களை எண்ணி அவர்களை இக்கட்டுகளிலிருந்து விடுத்திருக்கிறார். தகுந்த ஆதாரங்களுடன் அவர் செய்த செயல்கள் மலைப்பாக இருக்கிறது. அவர்களின் நலன் கருதி அவற்றை அவர் பொது இடங்களில் பகிர வேண்டாம் என சொல்கிறார்.
நாம் இதைச் செய்கிறோமா? அடிப்படை வேலை செய்யும் சித்தாள் போன்ற பெண்கள், இளம் பெண்களை வேறு யாரும் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதை அறிந்தால், ‘இந்த வேலையைச் செய்’ என அதிகாரம் செய்வது போலக் காட்டித் தங்கள் அருகில் வைத்துக் கொள்ள ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதை நாம் எல்லோரும் செய்கிறோமா? அப்படிச் செய்தால், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு தடுக்கப்படும்?
சாந்தி, வெளிநாட்டில் வெகுகாலம் ஒரே வீட்டில் பணிபுரிந்திருக்கிறார். குடும்பத்தில் ஒருவராகவே இருந்திருக்கிறார். மகன் போன்றே அவரின் குழந்தை இவரிடம் அன்பு காட்டியிருக்கிறது. அவர்களுடன் இவரும் பல இடங்கள் சுற்றியிருக்கிறார். எகிப்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு நாள், அந்த கணவன் மனைவி பிரிந்து விட, இவர் ஊர் வந்திருக்கிறார்.
ஒரு இக்கட்டான நிலையில் கையிலிருந்த பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. தற்போது, வயதான ஒரு அம்மையாரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். முன்பு பணத்தால் அனைவருக்கும் உதவி செய்து கொண்டிருந்தவர், இப்போது அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு அன்பால் உதவுகிறார்கள். ‘ஏமாளி’ என யார் திட்டினாலும் காதில் வாங்காமல் செய்கிறார். இது அவரின் இயல்பு. வெற்றி என்பது பணத்தால் அளக்கப்படுவது அல்ல; நிறைவால் அளக்கப்படுவது. இவர் நிறைவாகவே அனைத்தையும் செய்கிறார்.‘எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்’ என வேண்டுவது போன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்.
இந்தக் கட்டுரைக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தலைப்பு ஏன் என நீங்கள் நினைக்கலாம். இதைச் சொன்னவர் கணியன் பூங்குன்றனார் என அனைவரும் அறிவோம். அவரின் இந்தச் சொற்றொடர், ஐக்கிய நாட்டுச் சபை வரை போயிருக்கிறது என நாம் பெருமை பேசலாம். ஆனால் அவரின் பெயரின் முதலொட்டை வசைச் சொல்லாகவே ஊரில் சொல்கிறார்கள். சிறுவயது முதல் காதில் ஒலித்த/வலித்த சொல் என்கிறார் சாந்தி. பெரும்பாலானோர் அன்புடன், மிகுந்த நட்புடன் பழகுகிறார்கள். மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒருசிலர் கொடுத்த வலியின் வடு அவரின் சொற்களில் தெரிகிறது.
அவர்கள் வாழ்விடம் *****குடி என்ற பெயரிலிருந்து மிக்கேல் பாளையம் என மாறிவிட்டது. ஆனால், ‘என்னை யார் கோபாலகிருஷ்ணன் என கூப்பிடுகிறார்? சப்பாணி என்றே கூப்பிடுகிறார்கள்’ என்ற 16 வயதினிலே வரும் சொல்லாடல் போன்றே இங்கும் அழைக்கிறார்கள். தன்னை, தான் வாழுமிடத்தை இவ்வாறு தான் கூப்பிட வேண்டும் என்று சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. பிரபலங்கள் புனைப்பெயர் வைக்கிறார்கள். நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம். அரசு, ஊரின் பெயரை மாற்றுகிறது. நாம் மாற முயல்கிறோம்.
1939ஆம் ஆண்டே மாறிய பெயரை இன்றும் நம்மால் ஏன் உள்வாங்க இயலவில்லை? சாமானியர் என்றால் மட்டும் நம்மால் ஏன் ஏற்றுக் கொள்ள இயலவில்லை? சிந்திப்போம்! செயல்படுவோம்!
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.