பழுவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரி. இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன. மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள்.
படகில் செல்லும்போது கணவன் மனைவி இருவரும் ஜோடியாகக் கையால் இறால்களைப் பிடிப்பதைப் பார்த்தோம். நீருக்குள் பல மணி நேரம் நின்று இறால்களைப் பிடிக்கிறார்கள். சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான படகுகள் நின்றன. அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஊருக்குள் சென்றோம்.
மகளிர் சுய உதவிக் குழு தலைவி ராஜலட்சுமி. மீனவர் சங்க உறுப்பினர். பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்து தேவையானவற்றைச் செய்து தருகிறார்.
பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்தால் வெளியே செல்லக் கூடாது என்கிற கட்டுப்பாடு உள்ள ஊர். எனவே ராஜலட்சுமியால் 7ஆம் வகுப்பைத் தாண்ட முடியவில்லை. சிறு வயதிலேயே திருமணம் முடித்துவிட்டனர். 43 வயதில் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்து பாட்டி ஆகி இருந்தார்.
சுனாமி பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. ராஜலட்சுமியின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது. சென்னை சமூக சேவை நிறுவனம் என்கிற தொண்டு நிறுவனம் ஊருக்குள் வந்தது. அதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவை உருவாக்கும் பொறுப்பை ராஜலட்சுமியிடம் கொடுத்தனர்.
சமையலுக்குத் தேவையான பொருள்கள் வாங்கக்கூட வெளியே செல்லாதவர். பிள்ளைகளின் காய்ச்சலுக்காகக்கூட மருத்துவமனை செல்லாதவர் ராஜலட்சுமி. இருந்தும் செயலில் இறங்கினார். ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி குழுவை உருவாக்கினார்.
வங்கிக்குச் சென்றார். புடிப்பு வாசமே மறந்து போனவருக்கு வங்கி விண்ணப்பம் பயமுறுத்தியது. முட்டி மோதி நிரப்பக் கற்றுக் கொண்டார். வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு வருவார் ராஜலட்சுமி.
தொழில் முனைவர் பயிற்சி எடுத்தார். சுய உதவிக்குழு அவர் வாழ்வில் மெல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதே நேரம் ஊரிலும் வீட்டிலும் ராஜலட்சுமியைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
ராஜலட்சுமியின் பிரச்னையைப் புரிந்துகொண்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள், ராஜலட்சுமியின் கணவரிடம் பேசிப் புரிய வைத்தனர். ’உங்கள் சமுதாயத்திலிருந்து இதுவரை யாரும் வெளியே வராததால் இப்படியான பேச்சு வரத்தான் செய்யும். போகப்போக ராஜலட்சுமியைப்போல் வருமா என்பார்கள். அந்த அளவிற்கு ராஜலட்சுமி திறமையானவர். இன்று பேசும் ஊர் நாளை மெச்சும். அதற்கு நாங்கள் பொறுப்பு’ என்று சமாதானம் செய்தனர்.
நாள்கள் செல்லச் செல்ல ஊர் மக்களுக்காக ரேஷன் கார்டு எழுத, திருமண உதவித் தொகை வாங்க என்று எதற்கெடுத்தாலும் ராஜலட்சுமியின் உதவியைத் தேடி வர ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு வேலையாகச் செய்து, மக்களின் அன்பைப் பெற்றார் ராஜலட்சுமி. பின்னர் மீனவர் சங்கத் தலைவியாகவும் 8 ஆண்டுகள் செயல்பட்டார்.
ஊர் பொதுப் பிரச்னையைத் தீர்க்கவும் ராஜலட்சுமியைத் தேடுகிறார்கள். இதுதான் பிரச்சினை. ஆட்சியரைப் பார்த்து மனு கொடுக்க வேண்டும். பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும். இன்னும் சில பெண்களைச் சேர்த்து அழைத்துவர முடியுமா என்று கேட்கும் அளவிற்கு ராஜலட்சுமி வளர்ந்துள்ளார்.
வலைக்குச் செல்பவர்களுக்கு அடிபடும். அவசரத்திற்கு மருத்துவமனை அழைத்துச் சென்றால் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இருக்கும் நர்ஸும் சரியாக கவனிப்பதில்லை. மருத்துவமனையின் நிலைமையை விளக்கி மாவட்ட ஆட்சியருக்கு எழுதினார். மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தார் ராஜலட்சுமி.
வருடத்திற்கு ஒருமுறை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்திடம் இரண்டு விருதுகளை வாங்கியுள்ளார். 24 வயதிற்குப் பிறகு வெளியே வந்தவர்தான் இவ்வளவையும் சாதித்திருக்கிறார்.
மீனவ சமுதாயத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடு இருக்கும் அளவிற்கு ஊர்க்கட்டுப்பாடும் இருக்கிறது. எந்தப் பிரச்னை என்றாலும் போலீஸ் வரை செல்ல மாட்டார்கள். அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வார்கள்.
ஆண்கள் பஞ்சாயத்துப் பேசும் இடத்தில் பெண்களுக்கு வேலை இல்லை. அந்தப் பக்கம் பெண்கள் செல்லக் கூடாது. இப்படியான கட்டுப்பாடுகள் மெல்ல உடைந்து பெண்களைத் தேடி, கருத்துக் கேட்க ஊருக்குள் வருகிறார்கள்.
பெண்கள் இறால் கம்பெனி, வலை கம்பெனி, நபார்டி பிஸ்கட் கம்பெனி போன்ற இடங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இப்போது பெண்களும் வேலைக்கு வெளியே செல்வதால் ஆண்களும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ராஜலட்சுமி இட்லி மாவு வியாபாரம் செய்கிறார். அவரின் கணவர் அரிசி கழுவுவதில் ஆரம்பித்து மாவரைத்துக் கொடுப்பது வரை எல்லா வேலைகளையும் செய்கிறார். கூடவே சமையலும் செய்கிறார். இந்த மாற்றம் பல வீடுகளிலும் உருவாகி இருக்கிறது.
பெரும்பாலான குடும்பத்தில் பெண்கள்தான் பணத்தைக் கையாள்கிறார்கள். ஆண்கள் சம்பாதிப்பதை மனைவியிடம் கொடுத்துவிடுகின்றனர். அவர்கள் கையில் பணம் இருந்தால் குடித்துவிடுவர். மனைவி கையில் கொடுத்தால் குடும்பத்திற்கு ஆகும் என்று அவர்களாக இப்படி முடிவெடுத்திருக்கிறார்கள்.
இந்தத் தலைமுறை படிக்கிறது. மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தியுள்ளார் ராஜலட்சுமி.
மீன்பிடி தொழிலில் இருந்து இந்தத் தலைமுறை மாறுகிறது. இன்று தொழிலுக்குச் சென்றால் இவ்வளவு வருமானம் வரும் என்கிற உத்திரவாதம் இல்லை. எனவே படித்து வேலைக்குச் செல்கின்றனர்.
படைப்பாளர்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர்.