மனிதகுல வரலாற்றின் நிகழ்வுகளும் கண்டுபிடிப்புகளும் அடிமைத்தனங்களும் போராட்டங்களும்… தொடர்கதைகளாக தொடர்ந்துவரும் எல்லையற்றவை. அன்றாட உலகில் நிகழ்பவை எல்லாமே வரலாறாகிவிடுவதில்லை. பிறந்த ஒவ்வொருவருமே போற்றப்படுவதுமில்லை.

இதுகாறும் நமக்குக் கிடைத்துள்ள தடயங்களிலும் தகவல்களிலும் வீரர்களாகவும் தீரர்களாகவும் வெற்றியாளர்களாகவும் ஒட்டுமொத்தமாக ஆண்களே இருந்து வந்திருப்பதையே படித்து வருகிறோம். ஏதோ பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களைப் பற்றிய அரிதான… குறைவான பதிவுகள். இந்த நிலை உண்மைதானா அல்லது பெண்களின் பெருமித வரலாற்றுப் பங்களிப்பு வரலாற்றை எழுதுபவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆய்வுகள் தேவையாக இருக்கின்றன.
நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு ஒவ்வொரு பொழுதுமே வெறும் பொழுதாகவே விடைபெற்றுவிடுகின்றன. ஒருவர்தன் ஆயுளில் நிகழும் அத்தனையும் மனதில் பதிந்து நினைவில் நின்று விடுவதில்லை.

ஆனாலும், இவற்றிற்கு மாறாக எங்கோ எப்போதோ கேட்ட ஒரு சொல், ஒரு சொலவடை, பால்யத்தில் நிகழந்த ஒரு சம்பவம், ஒரே ஒருமுறைப் பார்த்த ஒரு மனிதர், பாசி படர்ந்த படித்துறை, வாய்க்கால் தண்ணீரில் மிதந்து வந்த பனம்பழம், தூண்டிலில் சிக்கிய விரால்மீன் என நினைவிலிருந்து உயிருள்ளவரை அழியாத சித்திரங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்நிலைக்கேற்ப பற்பல. அவ்வாறு மழையாலும் கரைக்க முடியாத பாறைமேல் படிந்த தடங்களாக… நினைவில் என்றும் நிலைப்பவை தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.

‘நவீன தமிழ் நாடகங்களில் பெண் பாத்திரங்கள்’ என்ற எனது முனைவர் பட்ட ஆய்விற்காக நான் கடந்த மூன்றாண்டுகளாக நிறைய புத்தகங்களை தேடித்தேடி வாசித்தேன். அவற்றில் வ.கீதாவின் ‘காலக்கனவு’ என்ற பெண்ணிய வரலாற்று ஆவண நாடக நூலும் ஒன்று. காலக்கனவின் வரலாற்று நாயகிகள் அனைவரும் சென்ற இருபதாம் நூற்றாண்டு வாழ்ந்த என்பதைவிட… வாழ்வதற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடி சாதனை படைத்த பெண் மக்களாவார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

பத்து ரூபாய்க்கும் ஒரு பழைய புடவைக்கும் தன் தாயாரால் சிறுவயதில் விற்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்… பெரும் போராளியாகவே இறுதிவரை வாழ்வைச் சந்தித்திருக்கிறார். தேவதாசி குலத்தில் பிறந்தோர் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்கிற விதியை மீறி காதல் மணம் புரிந்து… அதற்காக பிறர் போட்ட பொய் கொலை வழக்குகளை எதிர்கொண்டு வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பது சிலிர்க்க வைக்கும் உண்மையாக. எழுச்சிகொள்ளச் செய்கிறது. தாசிகள் முறையை எதிர்க்கிறார் என்பதற்காக அவர் அமர்ந்திருந்த மேடையிலேயே அவரது கூந்தலை அறுத்துக் கேவலப்படுத்தியும்கூட தனது சமூகப் போராட்டத்தை அவர் நிறுத்திக் கொள்ளாது தொடர்ந்து நின்றிருக்கிறார். இதைவிட வரலாற்றில் பெரிதாக வேறென்ன வீரம் இருந்திருக்க முடியும்?
வாளெடுத்து போர்புரிவது மட்டுமல்ல வீரம், அவமானங்களைப் பொறுத்து எதிர்கொள்வதே பெரும் வீரம் என்பதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறே சான்றாக உள்ளது.

கே.பி.சுந்தராம்பாள்

இதுவரையிலும் யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத, ஈடாக முடியாத கம்பீரமான குரலுக்குச் சொந்தமான கே.பி.சுந்தராம்பாள் வாழ்வும் கலைக்கான போராட்டமும் சாதாரணமானதல்ல… பிரசித்தமான நடிகர் கிட்டப்பாவை காதல் மணம் புரிந்த அவருடைய வாழ்விலும் அடிக்கடி புயல் வீசியிருக்கிறது. சுந்தராம்பாள் தன் கணவர் கிட்டப்பாவிற்கு ஏதோ மன வருத்தத்தில் எழுதிய தேதி இல்லாத கடிதம் ஒன்றும் ‘காலக்கனவு’ நாடக நூலில் இடம் பெற்றிருக்கிறது. அந்தக் கடிதம்…

”தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். ‘கிருஷ்ணலீலா’ பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப்பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும்… எத்தனையோ வித்தியாசத்தில் இது ஒன்று… என்னைப் பற்றிய கவலையே தங்களுக்கு வேண்டாம். பதில் போட இஷ்டமிருந்தால் எழுதவும். இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி, இதுதான் கடைசி.
இப்படிக்கு
சுந்தரி”

இப்படி முடிகிற கடிதம் இந்தக் கடிதம். சொல்லும் செய்தி ஒன்றிரண்டே என்றாலும் சொல்லாத செய்திகள் நெஞ்சைக் கனக்க வைக்கின்றன. சற்றே விடுதலையும் விஞ்ஞான வளர்ச்சியும் சரிநிகர் புரிதலும் ஏற்படத் தொடங்கியிருக்கும் இக்காலப் பெண்களே குடும்ப வாழ்வில் பல குழப்பங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக வேண்டிய நிலை இருக்கும்போது கலைப்பசிக்காக தன் வாழ்வையே அர்ப்பணிப்பு செய்து கொண்ட சென்ற நூற்றாண்டின் பெண்கள் எவ்வளவு ஏச்சுப்பேச்சுக்கள் இடர்மொழிகள் இன்னல்களை சந்திருத்திருப்பார்கள் என எண்ணிப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது.

மணலூர் மணியம்மை

பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட மணலூர் மணியம்மை என்னை வெகுவாக பிரமிக்க வைத்த சென்ற நூற்றாண்டுப் போராளிப் பெண்ணாக ஒளிர்கிறார். பால்ய விதவையான மணியம்மா சிலம்பம் பயின்று, சைக்கிள் ஓட்டக் கற்று, தன் முடியை ‘கிராப்’ வெட்டிக்கொண்டதோடு நில்லாமல், வேட்டி, அரைக்கை வைத்த கதர் சட்டை, சிவப்புத் துண்டோடு வலம் வந்திருக்கிறார் மக்களுக்காக. மணியம்மையின் வரலாறு அவ்வளவு ஊக்கம் தரும் என்பதால் அவர் கதையை யாராவது திரைப்படம் எடுத்தால் சிறப்பாக இருக்குமே என பலமுறை நினைத்திருக்கிறேன். கடைசியாக ஒரு பண்ணையாரின் வளர்ப்பு மான் குத்தி இறந்து போனதாக முடித்து வைக்கப்பட்ட மணியம்மையின் வாழ்வு இன்றைய இளம் தலைமுறை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதாகும்.

இந்நூலில் இவர்களைப் போல இன்னும் சிலரும் இவ்வாறு பூரிக்கும் பசுமையினை தாங்கி நிற்கும் வெளியில் தெரியாத வேர்கள் பற்றித் தொடர்ந்து பேசுவோம்…
கட்டுரையாளர்:

ப.இளம்பிறை

நாகப்பட்டினம் மாவட்டம், சாட்டியக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ப.இளம்பிறை, 2000ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசித்து வருகிறார். முதுகலை தமிழ் இலக்கியமும், இளங்கலை கல்வியியலும் பயின்றுள்ள இவர், அரசுப் பள்ளியொன்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இளம்பருவத்திலிருந்தே தொடர்ந்து எழுதிவரும் இளம்பிறை, தனது கவிதைகளுக்காக தமிழக அரசின் முதல் பரிசு, காலச்சுவடு பெண் படைப்பாளிகள் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, களம் இலக்கிய விருது, யாளி அறக்கட்டளை விருது, கவிஞர்கள் தின விருது, சேலம் தமிழ்ச்சங்க விருது, பாவலர் விருது, சிற்பி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவரது கவிதைகள் சென்னைப் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களிலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. தவிர, தமிழக அரசின் தொடக்கக்கல்வி தமிழ் பாடப்பொருள் உருவாக்கப் பணியிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்துவருகிறார். கிராமியக் கவிதை மொழியுடன் நவீனக் கவிதை மொழியும் கைவரப்பெற்றவை இளம்பிறையின் கவிதைகள்.