கவிஞர் எழுத்தாளர் சுகந்தி சுப்பிரமணியன் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இலக்கியத் தடயங்கள் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

கோயமுத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஆலந்துறை என்ற ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனை மணந்து சுகந்தி சுப்பிரமணியன் ஆனார். சுகந்தி, சிறு வயதில் தந்தையை  இழந்து, தம் தாயாரால் புறக்கணிக்கப்பட்டு, பாட்டியால்  வளர்க்கப்பட்டார். அவரது பாட்டி லட்சுமி மிகவும் கண்டிப்பானவர். அதனால் சிறுமி சுகந்தி, பாட்டியிடம் அன்பை விடக், கட்டுப்பாட்டை அனுபவித்துள்ளார் .  அவர், பெற்றோர் அரவணைப்பு இல்லாததால், உயர்நிலைப்பள்ளி படிப்பை முழுமையாக முடிப்பதற்கு முன், அவரது பாட்டியால் திருமணம் செய்விக்கப்பட்டார் . அந்த இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் நிலை சுகந்திக்கு ஏற்பட்டது. அவர், திருமணத்திற்குப் பின் கணவர் வேலை பார்க்கும் செகந்திராபாத்தில் குடியேறினார். மொழி புரியாத ஒரு இடம், அருகில் உறவுகளும் நட்புகளும் இல்லாத சூழலில் அவர் தனிமையை எதிர் கொள்ள நேர்ந்தது.

புறக்கணிக்கப்பட்ட குடும்ப சூழலில் வளர்ந்த சுகந்திக்கு இளம்
வயதிலேயே உளப் பிரச்சினை இருந்திருக்கிறது. தாயின் புறக்கணிப்பும், சமூகத்தின் கேலி கிண்டல்களும் அவரிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி மெல்ல மெல்ல அது வளர்ந்து உளவியல் பிரச்சினையாக உருவாகிவிட்டது. திருமணத்துக்குப் பின்னர் தனிமை அவரை ஆட்கொண்டு, அவரது உளவியல் பிரச்சினையை அதிகமாகி இருக்கிறது.

சுப்ரபாரதிமணியன் அவர்களின் தோழரும் எழுத்தாளருமாகிய ஜெயமோகன் அவர்கள்,  ‌”சுகந்தியை நான் சந்தித்தபோது முதலில் போதிய ஆளுமை வளராத ஒரு பெண் என்று மதிப்பிட்டேன். 15, 16 வயதான கிராமத்துப் பெண்களுக்கே உரிய அப்பாவித்தனமும் படபடப்பும் அவரிடம் இருந்தது” என்று   குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரபாரதிமணியன் சுகந்தியின் தனிமையைப்  போக்குவதற்கு அவரை எழுத ஊக்குவித்தார். தன் மனைவியின் உளநோயைப் புரிந்து கொண்ட பின்பு அதிலிருந்து விடுபடும் முயற்சியாகத் தொடர்ந்து அவரை எழுத ஊக்குவித்து வந்துள்ளார்.

இதற்கிடையே  சுகந்தி இரு பெண் குழந்தைகளுக்குத் தாயானார். ஆனாலும் அவரால் உளவியல் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலவில்லை. “அவளாலே ஒரு இடத்திலே இருக்க முடியல… ஒரு ரூமுக்குள்ள இருக்கிறப்ப டென்ஷன் ஆயிடுவா… கதவு சாத்தினா பதற்றம் ஆயிடும்… சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கு…” என்று கூறும் சுப்ரபாரதிமணியன், “சுகந்திக்குப் பலவிதமான மனப்பிரமைகள் இருக்கு. டிரக்ஸ் கொடுக்கிறோம். ‌ அதை ஒழுங்காகச் சாப்பிட்டால் ஓரளவு கண்ட்ரோல்ல இருக்கும்”  என்றும்   குறிப்பிட்டுள்ளார்.

சுகந்தி தொடக்கத்தில் கவிதைகளை எழுத தொடங்கினார். பெரும்பாலான இவருடைய கவிதைகள் முடிவடையாதவைகளாக இருக்கும். கணவரின் முயற்சியினால், அவருடைய முதல் கவிதைத் தொகுதி வெளிவந்தது. ‘புதையுண்ட வாழ்க்கை’ என்ற தலைப்பில், 1986இல், அன்னம் வெளியீடாக வந்த அந்தக் கவிதை தொகுதி அனைவரின் கவனத்தையும் பெற்றது.

“சுகந்தி எழுதுவதைக் கவனித்து இருக்கின்றேன். தன் வீட்டுப் படியில் அமர்ந்து கொண்டு, பேனாவைச் செங்குத்தாக எழுத்தாணி போல பற்றியபடி, முகத்தில் அதி உக்கரமான பாவனையுடன் வேகமாக எழுதித் தள்ளுவார். முற்றுப் புள்ளிகளை ஓங்கி குத்தி வைப்பார். பல சமயம் காகிதங்கள் கிழியும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவார்” என்று அவர் எழுதும் மனநிலையை ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். சுகந்தி தன்னுடைய  அனுபவங்களை டைரியில் எழுதும் பழக்கமும் உடையவர் என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “சுகந்தியின் கவிதைகளில், உணர்வுகள் மற்றும் சில அழகிய மொழிகளின் வெளிப்பாடுகள் அவருடையவை என்றால், கவிதை வடிவம், வரி அமைப்பு எல்லாம் சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் செம்மைப் படுத்தப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள இயலுகிறது.

சுகந்தி அடிக்கடி உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூர் வேலூர் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். அவர், அந்தக் கால கட்டங்களிலும், தன்னுடைய எழுத்தை  நிறுத்தவில்லை. அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதி, தமிழினி பதிப்பகத்தின் மூலமாக ‘மீண்டெழுதலின் ரகசியம்’ என்ற பெயரில், 2003இல், வெளியானது.

11/02/2009 இல், சுகந்தி இறந்த பின்பு, சுப்ரபாரதிமணியன் அவருடைய படைப்புகளை எல்லாம் தொகுத்து, செம்மைப்படுத்தி, ‘சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்ற பெயரில், 2016 இல், வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய கவிதைகளுடன், சில சிறுகதைகளும், டைரி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகளுக்குப் பெரும்பாலும் தலைப்புகள் இல்லை.
     “எங்களூர் நதி
      எங்கே போய்க்
       கொண்டிருக்கிறது
      தெரியாது.
      ….
    எங்களூர் நொய்யல்
            நதி தெரியும்
    இன்னும் எனக்கு
           கங்கை தெரியாது. 
    …‌…….
     இப்படி எனக்கு
     தெரியாதவை உணராதவை
     இன்னும்….
      …….
      எல்லாவற்றிலும் பாதுகாப்பில்லா
     பயமும், சந்தோஷமும்”

இது,  ‘சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்ற நூலில்  முதல் கவிதையாக
இடம் பெற்றுள்ளது.  தான் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைபட்டு இருப்பதால் ஏற்பட்ட அறியாமையையும் பயத்தையும் இந்தக் கவிதை எடுத்துரைக்கின்றது.

‘உயிர்ப்பு’ என்ற தலைப்பிட்ட கவிதையின் கடைசி வரிகள் மிக அற்புதமானது. “ஒவ்வொரு கணமும் அழுது கொண்டிருந்தேன்/ஜன்னல்களும் கதவுகளும் மூடிக் கிடந்தன/ அறைகள் இருட்டியிருந்தன /எல்லாம் மௌனமாய் /கதவு மெல்ல அழைத்தது /அழாதே சாப்பிடு என்றது/ எழுந்து போய் திறந்தேன்/ பேரிரைச்சலுடன் நகரத்தை அதிகாலை தந்தது /புன்னகையுடன் தரையிறங்கினேன்/ என்னைக் கழுவு என்றது வாசல் /கோலம் போடு என்று அழைத்தது மண்/ தண்ணீர் வீடு என்று அழைத்தன செடிகள்.”

மனிதர்களோடு இல்லாது, ஒவ்வொரு நிமிடமும் ஜன்னல்களுடனும் கதவுடனும் பேசிக் கொண்டிருக்கும் அவரின் மனவுளைச்சல் இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது.  அத்துடன் இயல்புக்கு வரும் முயற்சியும் மனமும் அவரிடம் இருந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள இயலுகிறது. இதனை,

“எனக்குள் நான் சிதைந்து போகிறேன்
என்றாலும்
என்னை மீட்டுக் கொள்ளத் தான் வேண்டும்.”
என்ற கவிதை வரிகளும் உறுதி செய்கின்றன.
” எனது தனிமையை போக்க
எவ்வழியும் கிடைக்கவில்லை..
நான் அறிந்த சுற்றமும்
தோழிகளுடனான இருப்பும்
விலகளைக் கற்றுக் கொடுத்தது
மீண்டும் தனிமையில்…
………..     ….
வீட்டில் இருக்கும் ஜட பொருளுக்கு போட்டியாய் கிடந்து தவிக்கின்றேன்.. எதுவாகவும் நான் இல்லை..
எனது நான்
வீட்டின் இருண்ட மூலையில்
பதுங்கி கிடக்கிறேன் எலிகளோடு”

இப்படியாகப் பல கவிதைகளில் தன் தனிமையையும் மன உளைச்சலையும் பிறரின் விலகல்களையும் பதிவு செய்துள்ளார். இவ்வாறான வாழ்க்கையிலிலும், சுகந்தி தன்னைத் தன்  கவிதைகளின் மூலமாக வாழ்வாங்கு வாழ வைத்துச் சென்றுள்ளார்.

கல்விச்சாலை பற்றிய அவருடைய கவிதையை மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகின்றேன். நாம் சொல்லத் தயங்கும் விடயத்தை, அவர் மிக யதார்த்தமாகச் சொல்லிச் சென்றுள்ளார் சுகந்தி.
   “வருடங்களைத் தின்றபடி
     கல்வி சாலை,
    நேரத்தை தின்றபடி
                            வகுப்பறைகள்
    எங்களின் மூளையில் பழையது
                             திணிக்கப்படுகிறது
     என்னவோ நாங்களும் படித்தோம்
     சலிப்புடனே சொல்ல
     எங்களின் புத்தகங்கள் எங்களை
     அழைத்துச் செல்லவில்லை
     ஒரு புதிய பாதையையும்
                           ‌‌ காட்டவில்லை
      அவற்றை நாங்கள்
       வேகவேகமாக மனப்பாடம்
    செய்தோம்
       அர்த்தங்களை உணர   
  முயற்சிக்காத
        மூளையுடன் ..
        மேலும் படிப்பு முடிந்தது நாங்கள்
        மிகவும் சோர்வடைந்துள்ளோம்
        எதிர்கால மாணவர்களின்
         குரல்களைக் கேட்டபடி…”
இன்றைய கல்வி சாலைகளின் கற்பித்தல் முறையின் குறைபாடுகளை, பாடத்திட்டத்தின் தெளிவின்மையை, குழந்தைகளின் காலங்கள் விரயமாக்கப்படுவதை நுட்பமான அரசியல் தளத்தில் கவனப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘என் அன்பு கணவருக்கு’ என்ற கவிதையின் வழி, தன் மண வாழ்வின்  மறக்க முடியாத தருணங்களைப் பதிவு செய்துள்ளார்.
     “எத்தனை முறை தான் இறப்பாய்
      எத்தனை முறை தான் தோற்பாய்
      கண்களின் பார்வையில்
      உன்னை எதிர்நோக்கும்
                               நிமிடங்களில் 
      என் மனதினுடே பரவும் சந்தோசம்
      என்றாலும்
       நாம் சந்திக்கும் போது
      சினம் சிரிக்கிறது”

இப்படித் தன் அனைத்து அனுபவங்களையும்  கவிதையில் பொதிந்து தந்தவர் சுகந்தி. சுகந்தியை நேரில் காணாத என்னைப் போன்றோர், கவிதையின் வழியாக அவரிடம் சினேகிக்க முடிகிறது; உரையாட முடிகிறது; அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சுகந்தியைப் பெண்ணிய நோக்கோடும் அணுக முடியும்.
“வாழ்க்கை” என்றொரு கவிதையில், 
‌”வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?
நான் கேட்டேன் அந்தப் பெண்களை இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வாழ்கிறேன் என்றாள் மற்றவள்… ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி
வெள்ளிக்கிழமையும் வியாழனும் விரதம் இருந்தேன் அம்மனுக்கு;
தீரும் தன் கவலைகள் என்றாள் மற்றொருத்தி.
இவர்களின் அனுபவங்கள் என்னுள் அடங்க மறுத்து அதிர மௌனமானேன்
வாழ்வின் தாக்குதல்கள் புரியாமலும் வலுவுடன் எதிர்க்க முடியாமலும் ஓய்ந்து போன கால்கள் நடக்கின்றன மெதுவாய்
தலைகள் நிலத்தைப் பார்த்தபடி
நிமிர முடியாமல்”.  

சகப் பெண்களின் அறியாமையை,  அடிமைத்தனத்தை, சடங்குகளில் தன்னை மறைத்துக் கொண்டும், கரைத்துக் கொண்டும் வாழும் போலி வாழ்க்கையை உணர்ந்தும், எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து நிற்கும்  அவளத்தை மிகத் தெளிவாக இக்கவிதையின் வழியாக எடுத்துக் காட்டியுள்ளார் சுகந்தி.

‘தூக்கம்’ பற்றிய அவருடைய கவிதை மேலும் அவரின் கவித்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
   “விழிகள் மறந்து வைத்துவிட்டது
    என் தூக்கத்தை
    வீடு முழுவதும் தேடுகிறேன்
    எங்கும் கிடைக்கவில்லை
       …….
       எப்படி தொலைத்தேன் என்
       தூக்கத்தை
       மறந்து போனது
        ………
       நான்
       இன்னும்
       விழித்திருக்கிறேன்
       என் துறக்கத்திற்காக.”

இக்கவிதையில் காணப்படும் தத்துவார்த்த பதிவுகள் மிக வியப்பைத் தருகின்றது.

அவர் கவிதைகளின் மூலமாக மட்டுமன்றி, சிறு  கதைகளின் ஊடாகவும் மிக திறமான பதிவுகளைத் தந்து சென்றுள்ளார். அவருடைய ‘வீடு’ என்று சிறுகதையை இங்கு குறித்து தான் ஆக வேண்டும். சுகந்தியின் சிறுகதைகள் மேலும் அவரைப் புரிந்து கொள்ளவும், அவர் படைப்பாற்றலை விளங்கிக் கொள்ளவும் துணை நிற்கின்றன.

‘ வீடு’ என்ற சிறுகதையில்,  “ஊருக்கு போகும் போதெல்லாம் வீடு பற்றிய கனவுகளோடு நான் செல்கிறேன். என்றாவது ஒருநாள் நாமும் வீடு கட்ட தான் போகிறோம் என்று என்னை நானே திருப்தி படுத்திக் கொள்வேன். அனாதையாய் என்னை நான் உணரும் நேரங்களில் வீடு பற்றிய கனவு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். போதாக்குறைக்கு அத்தை வேறு, வீடு எப்ப கட்ட போற என கேட்டுச் சென்றாள். என் வாழ்க்கை கழிந்து போக எனக்கான சமையலறை ஒன்றும், அவருக்கான புத்தக அறையும், குழந்தைகளுக்கான சிறு விளையாட்டு மைதானமும் என் வீடு எனக்குள் உருவாகி வளர்கின்றது. ஆனால் செயல்படுத்த இன்னும் காலமாகலாம். ஒவ்வொரு முறையும் வாடகை வீட்டில் அவமானப்பட நேர்ந்த போது எனக்குள் நான் கதறி இருக்கிறேன்”, என்ற சொற்களின் உண்மை, வாசகர்களின் செவிப்பறையில் ஓங்கி ஒலிக்கும்.

இக்கதையில் மற்றொரு இடத்தில் புத்தகங்களுக்கும் தனக்குமான உறவை, “புத்தகங்கள் எனக்கு ஆறுதலான தோழமையுள்ள நண்பர்கள். என்னிடம் அவை எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவை எனக்கும் நான் உருவாக காரணமாய், இன்னும் என் சுக துக்கங்களில் பங்கேற்கின்றன. இன்றளவும் நான் விரும்பியபடி எல்லாம் என் மனதை ஒன்றுபடுத்திய புத்தகங்களுக்கு என் வீட்டில் கண்டிப்பாக இடம் தர வேண்டும்”  என்று கூறி நம்மை நெகிழ்த்தியுள்ளார்.

“‘வருஷத்துல ஒரு தடவை பொங்கல் வருது . அன்னைக்கு பூசி வழிச்சு வீட்டை சுத்தம் பண்ணாமல், மயிரே போச்சுன்னு பூட்டிட்டு கிளம்பி ஊருக்கு போயிடுவீங்க. இப்படி போட்டு வெச்சுகிறதுக்கா நானும் வீடு கட்டி வச்சிருக்கேன்’ என்று ஏக வசனத்தில் திட்டினார் வீட்டின் சொந்தக்காரர் சேச்சி. எனக்கு மனசு சுத்தம் அதனால் கவலைப்படாதீங்க என்று கத்த வேண்டும் போல் தோன்றியது எனக்கு”, என்று வாடகை வீட்டில் அனுபவித்த அவஸ்தையை கதையின் ஊடாக ப் பதிவு செய்துள்ள சுகந்தி, கதையின் இறுதியில், “எப்பொழுதும் எழுதும் கடிதங்களுக்கு எனது என ஏதாவது முகவரி தேவைப்படுகிறது . இனி முகவரியில் மாற்றம் இருக்காது என அனைவருக்கும் கடிதம் எழுத ஆசை”, என்று முடித்துள்ளார். 

இந்தச் சிறுகதையில் கதை அம்சம் இல்லை என்றாலும் பாத்திரத்தின் மன ஓட்டம் மிக சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதை பின்னல் மிக அற்புதமாக அமைந்துள்ளது. அந்த விதத்தில் சிறுகதை படைப்பதிலும் ஒரு தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார் சுகந்தி சுப்பிரமணியன். 

படைப்பாளர்

இரா. பிரேமா

தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது வென்ற இரா.பிரேமா, தமிழ்ப் பேராசிரியர்; பெண்ணிய ஆர்வலர்; எழுத்தாளர்; ஆய்வாளர். இவர் 27 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியர் பணியிலும் நான்கு ஆண்டுகள் கல்லூரி முதல்வர் பணியிலும் 30 ஆண்டுகள் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டவர். இவர் 23 நூல்களையும் 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பதிப்பித்த நூல்கள் 3. இவர் எழுதிய ‘பெண்ணியம்’ என்ற நூல் 12 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரது பெண்ணிய நூல்கள் தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாகவும் நோக்கு நூலாகவும் எடுத்தாளப்படுகின்றன. இவரின் இரண்டு நூல்களை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இலக்கிய வட்டத்தில் ‘பெண்ணியம் பிரேமா’ என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.