இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனது ‘காதல்’ திரைப்படம் பற்றி பேசும்பொழுது, ‘காதல் தோல்வி அடைந்த ஆண்களின் கதைகளை படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் காதல் தோல்வி அடைந்த பெண்ணை பற்றி இங்கே பேசுவதேயில்லை’ என்றார்.
‘தேவதாஸ்’ காலம் தொடங்கி வந்த அனைத்து திரைப்படங்களிலும், காதல் தோல்வி அடைந்த பெண் ஒன்று வேறு ஒருவரை மணந்து கொள்வார், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வார். காதல் தோல்வி அடைந்த பெண்கள் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும், அவை எல்லாம் கதாநாயகியாக சித்தரிக்கப்படுவதில்லை.
காதல் தோல்வியின் துயரத்தைத் தாண்டி, அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். காதல் விஷயம் வீட்டில் தெரிந்தால், எந்த ஆணையாவது வீட்டில் வைத்து பூட்டி பார்த்திருக்கிறீர்களா? அடித்து?
இதுவே பெண்கள் என்றால், வீட்டை விட்டு எல்லாம் இல்லை, ஒரு கழிவறைக்குக்கூட தனியாகப் போக முடியாது. காதல் தோல்வியினால் விரக்தியில் இருக்கும் ஆண், தன் நண்பர்களை சந்திக்கலாம். மன வேதனையை தீர்த்துக் கொள்ள குடிக்கலாம். இரவு நெடு நேரம் கழித்து வீட்டிற்கு வரலாம். பெண்கள் , தங்கள் நண்பர்களை வீட்டில் பார்ப்பதற்குக்கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
காதல் தோல்விக்குப் பிறகான திருமணத்தில்கூட ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை. காதல் தோல்வி அடைந்த எத்தனை ஆண்களை இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணிற்கு கட்டி வைத்திருக்கிறார்கள்? குறைந்த பட்சம் அந்த ஆண் அந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான அவகாசமாவது கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு?
ஆணவப் படுகொலை செய்து கொல்லப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கின் மேல்முறையீட்டுத் தீர்ப்பு வந்த சமயத்தில், அதுவரை, பொது சமூகத்தால் அறியப்பட்ட, அனைத்து ஆணவப் படுகொலைகளும் பேசுபொருள் ஆகின. அதில் ஒன்று கண்ணகி முருகேசன் படுகொலை. அதை பற்றிப் பேசிய பலரும் ‘அந்த பய சும்மா தான் இருந்தான். இந்த புள்ளதான் அவனை முதல்ல காதலிச்சுது’ என்று கூறியதைக் காண முடிந்தது. ‘சும்மா’ இருந்த பையனைக் காதலித்து, அவனையே திருமணம் செய்து, அவனுடனே உயிர் துறந்த கண்ணகிக்கு அந்த மரியாதைதான் கிடைத்தது. காதலில் ஆண் என்ன பெண் என்ன! யாருக்கு அந்த உணர்வு முதலில் வருகிறதோ, அவர் தானே முதலில் வெளியிடுவார்?
இதில் ஆடைகள் களைந்து, சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட முருகேசன் என்னவெல்லாம் அனுபவித்தாரோ, அதையும் தாண்டி கண்ணகி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். அதைப் பற்றி எத்தனை ஆண்கள் பேசி இருக்கிறார்கள்?அது ஏன் ஆண்களுக்கு ஏற்படும் துயர் எப்போதும் பெண்களின் துயரை, அவள் அவனைவிட அதிக துயரை அனுபவித்திருந்தால்கூட, அதிமாக சித்தரிக்கப்படுகிறது? இது ஒரு ஆணாதிக்க சமூகம் என்பதைத் தாண்டி அதில் வேறு என்ன இருந்துவிடப் போகிறது?
ஆணவப் படுகொலையால் உயிரை இழக்கும் ஆண்களின் வலியை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விட முடியாதுதான். ஆனால் அவனின் மரணத்திற்குப்பின் அந்த பெண்ணின் நிலையை பற்றி யார் அக்கறை கொள்கிறார்கள். கொலைக்கு முன்னாலும் கொலைக்கு பிறகும் அந்த பெண்களுக்கு வீட்டில் கொடுக்கப்படும் நெருக்கடியை பற்றி யார் பேசப்போவது? வேறு ஜாதி எல்லாம் இல்லை, தன் சொந்த ஜாதியிலேயே காதலிக்கும் பெண்களுக்கு எவ்வளவு நெருக்கடிகள் இருக்கின்றன? இவை எல்லாமே அவள் பெண் என்பதினால்தான்.
மலையாளத்தில் வெளியான ‘உள்ளொழுக்கு’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘திருமணம் ஆன பெண்ணிற்கு திருமணம் ஆகாத வேறு ஒரு ஆணுடன் தொடர்பு’ – ஒருவேளை அந்தத் திரைப்படம் உண்மை சம்பவமாக இருந்திருத்தால், இப்படித்தான் செய்தி வெளியாகி இருக்கும். திரைப்படம் முழுவதிலும் அந்த பெண் எப்படி வஞ்சிக்கப்படுகிறாள் என்பதே கதை.
ஒருவனை காதலிக்கிறாள். மத வேறுபாடு காரணமாக அந்தத் திருமணத்திற்கு அவளின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. வேறு ஒருவனுக்கு மணம் முடிக்கிறார்கள். அவளின் விருப்பத்தை தெரிந்து கொள்ளாமலே அவளுடன் உறவு கொள்கிறான் கணவன். எங்காவது முதலிரவில் கணவனுக்குப் பிடிக்காமல் மனைவி உறவு கொண்டதைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
திருமணம் ஆகி சில நாட்களில் கணவனுக்கு உடை நிலை சரி இல்லாமல் போகிறது. அவனது இயல்பு வாழ்க்கைக்குக்கூட அந்தப் பெண்ணையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம். வீட்டில் இருந்தபடியே அவனுக்குத் தேவையான அனைத்தையும் செய்கிறாள். பின்னோரு நாளில்தான் தெரிகிறது, திருமணத்திற்கு முன்பே அவனுக்கு நோய் இருந்திருக்கிறது என்று.
இதில் அந்த ஆணுக்கு பதில் அந்தப் பெண்ணுக்கு நோய் இருந்திருந்தால், அந்தக் கணவன், தான் காதலித்த பெண்ணை மறந்து, முதல் இரவில் வலுக்கட்டாயமாக உறவு வைத்து கொண்ட, தனக்கு விருப்பமில்லாத மனைவியை வேலை எதற்கும் செல்லாமல், அவளுக்கு வேண்டியதை கவனித்துக் கொள்வானா? நிச்சயமாக கவனித்து கொள்வான். அவள் பெரும் பணக்காரியாக இருக்கும் பட்சத்தில்! தங்கள் மகளுக்கு ஒரு நோய் இருக்கிறது என்பதை மறைத்துத் திருமணம் செய்து வைத்து, அது பின்னொரு நாளில் தெரிய வந்தால், அந்த ஆணின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும்? ஒருவேளை திருமணத்திற்கு முன்பே அந்த நோய் சரி ஆகி இருந்தாலும்கூட அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் வாழ்ந்திருப்பானா என்பதே கேள்விக்குறி.
வீட்டில் நோய்வாய்ப்பட்டிருக்கும் மனைவியை கவனித்துக் கொண்டே, தன் மனதிற்கு பிடித்தவளுடன் தொடர்பில் இருக்கும் ஒரு ஆணை இந்த சமூகம் என்ன சொல்லும்? ‘மனைவி நோய்வாய் பட்டிருக்கிறாள். அவளை மிக நன்றாக கவனித்து கொள்கிறான். ஆனால் அவனுக்கும் தேவை என்று ஒன்று இருக்கும்தானே? அந்த இன்னொரு பெண் விருப்பப்பட்டுத்தானே அவனுடன் இருக்கிறாள்’ என்பார்கள். இதையே ஒரு பெண் செய்தால், அவளுக்கு பல பெயர்கள்.
ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகு, தன் கணவனை இழந்த அந்த பெண், தன் காதலனுடன் சேரும் தருணம், அந்த காதலனின் எண்ணம் வேறு விதமாக மாறி இருக்கும். ஒருவேளை அந்தப் பெண் தன் காதலனை மணம் முடித்திருந்தால்கூட, திருமணத்திற்கு பிறகு, இரண்டாம் தார மனைவியைப் போல, ஒரு இரண்டாம் தார கணவன் இருப்பதில்லை. ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டவனைப்போலதான் நடவடிக்கைகள் இருக்கும்.
இங்கு ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி, சமத்துவம் பேசும் முற்போக்காளர்களுக்குகூட.
தொடரும்…
படைப்பாளர்

சுமதி விஜயகுமார்
பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா





Super thozhar