புத்தகத்தின் தலைப்பே கொண்டாட்டத்தில் தொடங்குவதால் குதூகலமாக வாசிக்க மனம் ஈடுபட்டது. அட்டைப் படமும் மனதைக் கவர்ந்தது. நேர்மறையான எண்ணங்களே நம்மை எப்போதும் மகிழ்வுடன் வைக்கும் என்பது பெரும்பாலோர் அறிந்ததே. வாழ்க்கையின் பல சூழல்கள் பெரும்பாலும் நம்மை நேர்மறையாகச் சிந்திக்க வைப்பதில்லை. பேரிடர் காலத்திலும் நோய் தாக்கத்திலும் இத்தகைய சூழல் அனைவரையும் இவ்வாறு சிந்திக்க வைப்பதில்லை.
ஆனால், இந்தப் புத்தகத்தில் ஆரம்பக் கட்டுரையின் தலைப்பே ‘இழப்பதற்கு என்ன இருக்கிறது?’ என்று தொடங்குகிறது. இயல்பாக மனம் சோர்வடைந்து விரக்தி அடையும் நேரத்தில் கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடி தீர்ப்பது எவ்வளவு மன நிறைவு தரும் என்று விளக்கியுள்ளது. ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால், வெற்றி கொள்ள ஒரு முழு வாழ்க்கையே இருக்கிறது கொண்டாடலாம் வாங்க’ என்று ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் அடுத்த கட்டுரையை வாசிக்க குதூகலத்துடனே அழைத்துச் செல்கிறார் ஜான் ஷஹி.
இந்தப் புத்தகத்தில் உள்ள 23 கட்டுரைகளுமே நம்மை நாம் நேசிக்க, நம் வாழ்வை நாம் கொண்டாட, மனதில் மகிழ்ச்சியைத் தரக்கூடிய அளவில் இயல்பாக அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளக்கூடிய மனக்கலக்கத்தைத் தெளிவுபடுத்தி, வாழ்வை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள், பெண்கள், உறவுகள், அலுவலக நண்பர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் அவரவர் கோணத்தில் பிரச்னைகளைக் கையாள்வது, நம்மை நாம் நேசிப்பது, வாழ்க்கையைக் கொண்டாடுவது என மிக அருமையான எடுத்துக்காட்டுகள் மூலமும் அனுபவத்தின் மூலமும் விளக்கியுள்ளது மிகச் சிறப்பு.
வாழ்க்கையே போராட்டம் என்று நினைத்து, தினம் தினம் துன்பங்களையும் துயரங்களையும் நினைத்து, தன் வாழ்க்கையை வாழாமல் இருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் நல்ல தெளிவைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
குறைபாடு அற்றது என்ற ஒன்று கிடையாது. கோடை இருப்பதாலேயே வசந்தத்தின் மகத்துவம் புரிகிறது. சவால்களில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டு உங்கள் எதிர்கால சவால்களுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம் போன்ற பல வார்த்தைகள் சிந்திக்கவும் வாழ்வைக் கொண்டாடவும் தோன்றுகிறது.
‘கற்பதும் மறப்பதும் அவசியம்’ என்ற கட்டுரையில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவை எப்போது நம் வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்து விடவும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு என்றென்றும் வாழ்வை கொண்டாடலாம் என்று சொன்ன விதம் எளிமையாகவும் புதுமையாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது.
‘எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும்’ என்கிற கட்டுரையில் பல எடுத்துக்காட்டுகள் மூலம் பாசிட்டிவ் எண்ணங்களை விதைத்துள்ளார்.
நல்ல பண்பட்ட நிலத்தில் செடிகள் செழிப்பாக வளரும். அதுபோல நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் கொண்டாலே வாழ்வைக் கொண்டாடலாம் என்று நிறைவு செய்கிறார்.
கட்டுரை முழுக்க நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளார்! அன்பும் குதூகலமும் நிறைந்த வாழ்த்துகள் ஜான்சி ஷஹி!
நான் எனும் பேரதிசயம் – வாழ்வைக் கொண்டாடலாம்!
ஜான்சி சஹி
ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு
பக்கம் : 127
விலை : 160
படைப்பாளர்:
வலண்டினா. காநாயக்கன்பட்டியில் பிறந்து தூத்துக்குடியில் புகுந்தவர். இளம் வயது முதலே பெண்ணுரிமையில் அதிக ஈடுபாடு கொண்டவர். தற்போது குழந்தைகளுக்கான மாலை நேர வகுப்பு நடத்தி வருகிறார். சக தோழிகளுடன் இணைந்து வாசிப்பு இயக்கம் மூலம் வாசிப்பைத் தீவிரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.