‘நாங்கள் வாயாடிளே’ நூலை எழுதிய சாந்த சீலா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். முதல் அத்தியாயத்தில், பெண் குழந்தைகள் தங்கள் ஆடையில் ஏன் பாக்கெட் இல்லை என்கிற கேள்விக்கு ஆசிரியரின் விளக்கம் மிகவும் சுவாரசியமாக உள்ளது. நான் 60களில் என்னுடைய தொடக்கப் பள்ளி காலத்தில் இருந்த சீருடைகளிலும் ஃப்ராக்குகளிலும் பாவாடையின் மேல் சட்டையிலும் பாக்கெட் வைத்து தைத்துப் போட்ட அனுபவத்தை நினைவு கூர்ந்தேன். காலப்போக்கில் அது ஃபேஷன் இல்லை என்று படிப்படியாக குறைத்துவிட்டார்கள். என் பாட்டியின் சேலைக்குப் போடும் சட்டையிலும் பாக்கெட் இருந்தது. இதுகூட ஓர் அரசியல்தான், வணிகம்தான். எனக்குத் தெரிந்து சாமானியப் பெண்கள் கைப்பை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். ஃபேஷனை ஆட்டுமந்தை போல் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பொழுது நாம் நமக்குத் தெரியாமல் ஒரு வலையில் சிக்கிவிடுகிறோம் என்பதை இங்கு பதிவிட விரும்புகிறேன். இது ஒரு சிறிய உதாரணம்தான்.

உணவில் சமத்துவத்தைக் கொண்டுவர ஆசிரியரே தீர்வு கூறியுள்ளார். பெண்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதில் இருக்கும் பிரச்னைகளையும் மனச்சிக்கல்களையும் அலசி உள்ளார் ஆசிரியர். சிறுநீரை அடக்குவதில் உள்ள சிக்கல்கள் தெரிந்தும் இயற்கைக்கு மாறாக இருப்பினும் அதை இயல்பாக கடந்து வந்தவர்களை என்னவென்று கூறுவது! இந்த மாதிரி நெருக்கடிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பெண்களை இந்தச் சமூகம் நன்றாகப் பயிற்றுவிக்கிறது. இனி வரும் தலைமுறைகள் இத்தகைய சூழ்நிலைகளை விழிப்புணர்வோடு மனச்சிக்கல்களையும் களைந்து சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கோலிட வேண்டும்.          நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது a sound mind in a sound body என்று ஏட்டில் சொல்லிக் கொடுத்தார்களே ஒழிய பண்பாடு என்கிற போர்வையால் பெண்கள் விளையாடாமல் வீட்டில் அடங்கி இருக்கப் பழக்கி விட்டார்கள். 50 வருடங்களுக்குப் பின்பும் குழந்தைகள் விளையாடுவதற்கு சூழ்நிலைகளாலோ பெருநகரங்களின் இடப்பற்றாக்குறைகளாலோ, பள்ளிப் பாடங்களின் வேலை பளுவினாலோ ஏதோ ஒரு காரணம் இடம் தரவில்லை. இதற்கும் மேலாக எப்படிப் பெண்கள் உலகத்தரமான விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றிவாகை சூட முடியும்?

பெண்களின் கூந்தல் பராமரிப்பு பற்றியும் அவர்கள் ஏன் குட்டையாகக் கூந்தலை வெட்ட முடிவதில்லை என்கிற விளக்கமும் நீண்ட கூந்தல் மட்டுமே பெண்களின் அடையாளம் இல்லை என்று நிலைப்படுத்தியுள்ள விதமும் முதல் தரம்.

பொதுவாகவே நம் சமூகத்தில் அரசியல் அறிவு குறைவு. மேலும் பெண்களுக்கு அரசியல் அறிவு தேவை என்கிற விழிப்புணர்வே குறைவாக இருக்கின்றது. ஆகையால், அரசியல் பள்ளிப் பாடங்களில் இருக்க வேண்டும். வீட்டிலும் அரசியல் பேசப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர். மேலும் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி குழந்தைகளிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதால் அவர்களின் திறன் அதிகரிக்கும் என்கிறார். குழந்தைகளை ஒப்பிடுவது கூடாது என்று வலியுறுத்தி அதற்கு ஆசிரியர் அளித்துள்ள விளக்கம் அருமை. பெண்களைப் படிக்க வைப்பது பொருளாதார இழப்பில்லை என்று தெளிவுபடுத்துள்ளார். கடைசியாகப் பெண்கள் ஏன் தங்கள் உடலை நேசிக்க வேண்டும் என்று விளக்கி உள்ளார்.

அட்டைப்படம் தொடங்கி இறுதி வரை உள்ள குழந்தைளுடன் அனைத்துக் கலந்துரையாடல்களும் வாசகர்களுக்கு ஓர் ஆவணப் படத்தைப் பார்த்த உணர்வைத் தருகின்றது. ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய புத்தகம். சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். இப்புத்தகம் படிப்பவர்களின் வாழ்க்கை கண்ணோட்டத்தை மாற்றும். இதன் மூலமாகச் சமுதாயம் மேம்படுவது உறுதி

படைப்பாளர்:

எஸ். பானுலஷ்மி, பி.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்.சி. சைகோதெரபி & கவுன்சிலிங் படித்தவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சென்னையில் சிறிது காலம் சைகோதெரபிஸ்டாகவும் கவுன்சிலிங் கொடுப்பவராகவும் செயல்பட்டிருக்கிறார்.