தனக்குப் பாலியல் சீண்டலோ பாலியல் வன்புணர்வோ நடந்துவிட்டது என பாதிக்கப்பட்டப் பெண், பொதுவெளியில் சொன்னால், பலரும் அந்த குற்றவாளியின் மீது கோபம் கொள்வார்கள். உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் எனச் சொல்வார்கள்.

அந்தக் குற்றவாளிகள் தங்கள் வீட்டு ஆண்களாகவோ, தங்களுக்கு நெருக்கமானவர்களாகவோ இருந்தால், ‘என் வீட்டு ஆண்மகனா இப்படி நடந்து கொண்டான்? அய்யகோ!’ என வருத்தப்படுவார்கள் சிலர். சிலரோ என் வீட்டு ஆணை, நான் அப்படி வளர்க்கவில்லை என வக்காலத்து வாங்கவும் செய்வார்கள்.

பாதிக்கப்பட்டப் பெண் பொதுவெளியில் தனக்கு நடந்த அநீதியைச் சொன்னவுடன், வன்புணர்வுக்கு ஆளானப் பெண் யார் என்ற கேள்வி எழும். அவள் பொதுவெளியில் தைரியமாகப் பேசுபவளாக இருந்தாலோ, அதிலும் நவநாகரிக (Modern Dress) உடை உடுத்துபவளாக இருந்தாலோ, அங்கேயே அந்த ஆண் குற்றவாளியின் மீதானக் கோபம், வெறும் கண்டிப்போடு நின்றுவிடும்.

கூடுதலாக, ‘அந்த பெண் இப்படி உடை அணிந்தால், பொதுவெளியில் இப்படி வாயாடினால், யாராக இருந்தாலும் மனம் அலைபாயும்’ என பொத்தாம் பொதுவான தங்கள் முத்தான வார்த்தைகளையும் சேர்த்து உதிர்ப்பார்கள்.

மேலும் கூடுதலாக, அந்தப் பெண் மது அருந்தியிருக்கும் வேளையில் பாலியல் சீண்டலுக்கோ வன்புணர்வுக்கோ ஆளானால், அவ்வளவு தான். ஏதோ அந்தப் பெண்ணே, தன்னை பாலியல் சீண்டலுக்கு ஒப்புக்கொடுத்தது போல பேசுவார்கள்.

‘ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும், அவளது அனுமதியின்றி அவளைத் தொடுவதோ, வன்புணர்வதோ தவறு, அது மனிதமற்ற செயல்’ என மட்டும் சொல்ல மாட்டார்கள்.

இதற்கு நாம் காரணம் கேட்டால், அந்தப் பெண் இப்படி பொதுவெளியில் வாயாடாமல் இருந்திருந்தால், நவநாகரிக உடை உடுத்தாமல் இருந்திருந்தால், அவள் மது அருந்தாமல் இருந்திருந்தால், அவள் அந்த இரவு வெளியில் செல்லாமல் இருந்திருந்தால், என, இப்படிப் பல ‘இருந்திருந்தால்’களை அடுக்கி, அப்பெண் பாலியல் வன்புணர்வு/சீண்டல் செய்யப்பட்டதற்கு காரணம் கற்பித்து, அவளுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியை நீர்த்துப் போகச் செய்வார்கள். அல்லது அப்பெண்ணுக்கு அப்படி நடந்தது சரிதான் என நியாயம் கற்பிப்பார்கள்.

இத்தனையையும் தாண்டி, தனக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்க அப்பெண் புறப்பட்டால், குடும்ப கௌரவம், சமூக அந்தஸ்து ஆகியவைகள் உடைந்து விடும் எனச் சொல்லி, அப்பெண்ணை பொதுவெளியில் பேச அனுமதிக்க மாட்டார்கள். அதையும் மீறி அவள் சட்டத்தை நாடினால், அவளுக்கு நடந்த அநீதியை அவள் நிரூபித்து, அவளுக்கான நீதி கிடைப்பதற்கு முன் அவள் இந்த மண்ணை விட்டு மறைந்திருப்பாள்.

அப்படியே அவள் கண் முன்னே அந்தக் குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்தாலும், அவள் நிம்மதி பெருமூச்சு விட்டு கொஞ்சம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முன், தண்டனைக் காலம் முடிந்து, அந்தக் குற்றவாளி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவள் முன்னாலேயே நடமாடுவான். இன்னும் ஒரு படி மேலே சென்று, அவனது பெயரை மாற்றி அவனுக்கு சுயதொழில் செய்து சம்பாதிக்க தையல் மிஷினும் கொடுத்து அனுப்பும், ‘So Called மனிதாபிமானம்’ காக்கும் நீதித்துறை.

ஒரு பெண்ணுக்கு அரசியல் காரணங்களாலோ, மதக் கலவரத்தை காரணம் காட்டியோ பாலியல் வன்புணர்வு நடந்திருந்தால், அதுவும் அப்பெண் விளிம்புநிலை/சிறுபான்மை மக்களின் ஒருவராக இருந்து, குற்றவாளிகள் சமூகத்தின் அதிகார(சாதி, மதம், அரசியல்) பலத்தோடு இருந்தால், அந்தக் குற்றவாளி, குறிப்பிட்ட சாதியப் பின்புலத்தில் உள்ளவர் எனச் சொல்லி, நன்னடத்தைக் காரணமாக தண்டனைக் காலத்திற்கு முன்பே நீதிமன்றம் விடுவிக்கும். அந்தக் குற்றவாளிகளை ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்கும் ஒரு கும்பல்.

இதைப் படிக்கும் போது சலிப்பு ஏற்படலாம். ‘பெண்ணாய் பிறந்ததே பாவம்’ எனக்கூட பல பெண்கள் வருத்தப் படலாம். தனக்கு எதிராக அத்தனையையும் இந்த சமூகத்தில் கட்டமைத்து வைத்துள்ள ஆண்கள் மீது பெண்கள் கோபப்படலாம்.

தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு, அப்பெண் வருத்தப்படும் போதும், அங்கலாய்க்கும் போதும், தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்பவர்கள், அவள் கோபம் கொள்ளும் போது, ‘நீ எப்படி கோபம் கொள்ளலாம்?’, ‘எல்லா ஆண்களையும் நீ எப்படி குற்றம் சொல்லலாம்?’, ‘நான் என்ன அப்படியா?’, ‘அவன் தான் அப்படி செய்தான். நீ அவனை மட்டும் திட்டாமல், ஆண்கள் எனப் பொதுமைப் படுத்துவது ஏன்?’ என, அவளது கோபத்தைக் கூட, சல்லடை கொண்டு சலித்து, வெளிப்படுத்தச் சொல்லி அவளை கட்டாயப் படுத்தும். கேட்டால், ஒரு ஆணின் தவறுக்கு மற்ற ஆண்கள் எப்படி பொறுப்பாக முடியும் எனக் கேட்பார்கள்.

நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பெண்களும், ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு பாலியல் சீண்டலைக் கடந்துதான் வந்திருப்பார்கள். இங்கு எல்லாப் பெண்களும் பாதிக்கப்படும் போது, எல்லா ஆண்களையும்தான் பொது வெளியில் கேள்வி கேட்க வேண்டியுள்ளது.

காரணம், பாலியல் சீண்டல்/வல்லுறவு செய்யும் ஆண், ஏதோ ஒரு பெண்ணின் மகனோ சகோதரனோ அல்லது கணவனோதான். அவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள பெண்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால், அனைத்துப் பெண்களுக்கும் அவர்கள் நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்பதற்கு, என்ன உத்தரவாதம் உள்ளது? அப்படியே உத்தரவாதம் உண்டு எனச் சொன்னால், இத்தனை வன்புணர்வுகளும் பாலியல் சீண்டல்களும் எப்படி நடக்கின்றன?

Version 1.0.0

பாலியல் வன்புணர்வு செய்யும் ஆண்களின் மனநிலை என்ன என்பதை அறியும் வகையில் தாரா கௌஷல் (Tara Kaushal) எனும் எழுத்தாளர், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒன்பது ஆண்களை சந்தித்து, அவர்களிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டார். அவற்றைத் தொகுத்து, ‘Why Men Rape’ எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தாரா கௌஷல் அவர்கள் அந்த பாலியல் குற்றவாளிகளிடம் பல கேள்விகளைக் கேட்டார். அக்கேள்விகளுக்கு அந்த குற்றவாளிகள் பதிலளிக்கையில் அவர்களது ஆணுறுப்பு விரைப்படைந்ததையும், தாரா அவர்கள் இருக்கும் போதே அந்த ஆண்கள் அவர்களது ஆணுறுப்பை தொட்டதையும், அவர் பார்த்ததாக பதிவு செய்துள்ளார். (Chapter: Our Savior is born, பக்கம்: 6)

அப்படியானால் இடம் பொருள் ஏவல் என்பதோ, யார் தன் எதிரில் இருப்பவர் என்பதோ, ஆண்களின் வன்புணர்வு செயலுக்கு ஒரு பொருட்டல்ல என்பது தெளிவாகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டப் பெண்களையே குற்றம் சொல்வதும், குற்றவுணர்வுக்கு உள்ளாக்குவதும் எவ்வகையில் நியாயம்?

https://www.katemanne.net/

மேலும் பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்ததை மட்டும் சேர்ந்தவர்களாகவோ, அல்லது குறிப்பிட்ட குணாதிசயம் கொண்டவர்களாகவோ மட்டுமில்லை. அனைத்து சமூக நிலைகளிலும் பாலியல் குற்றவாளிகள் இருக்கிறார்கள். இதைத் தான், பெண்ணியவாதியும் தத்துவவியலாளருமான கேட் மன்னே (Kate Manne) அவர்கள், “பாலியல் வன்கொடுமை செய்யும் ஆண்களை ‘அசுரர்கள்’ என்று அழைப்பது தீங்கு விளைவிக்கும். அசுரர்கள் புரிந்துகொள்ள முடியாதவர்கள், விசித்திரமானவர்கள், மேலும் அவர்கள் வெளிப்படையாக பயமுறுத்துகிறவர்கள். பாலியல் வன்கொடுமை செய்பவர்களைப் பற்றி பயமுறுத்துவது என்னவென்றால், அவர்கள் ஆண்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதைத் தாண்டி, அவர்களை அடையாளம் காணும் பிரத்யேக குறிப்புகள் மற்றும் தனித்த அம்சங்கள் இல்லாததுதான். பாலியல் வன்கொடுமை செய்யும் அனைவரும் மனிதர்கள். அவர்கள் நம்மிடையே அதிகம்”, என்று குறிப்பிடுகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் பெண்கள், குறிப்பிட்ட வயதை உடையவர்களாகவோ, குறிப்பிட்ட ஆடை அணிந்தவர்களாகவோ, குறிப்பிட்ட சமூக நிலையில் உள்ளவர்களாகவோ மட்டுமல்ல; எல்லா சமூக நிலைகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அத்தனை பாதிக்கப்பட்டப் பெண்களும் தங்களுக்கு நடந்த அநீதியை, பொதுவெளிக்கு கொண்டு வருவதோ, வழக்கு பதிவு செய்வதோ இல்லை. இந்தியாவில் 70 முதல் 80 சதவிகித பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை என கணக்கெடுப்பில் தெரியவருகிறது.  

ஒரு ஆண் பாலியல் குற்றவாளியாக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் வாழ எந்த விதமான தடையும் இருப்பதில்லை. அதற்கு முக்கியக் காரணம், அந்த ஆணை யாரும் குற்றவுணர்வுக்குள் தள்ளுவதில்லை. ஆனால், பாதிக்கப்பட்டப் பெண் தனக்கு இப்படியொரு அநீதி நடந்துள்ளது என வெளியில் சொன்னாலே, அவளை வார்த்தைகளால் இச்சமூகம் மீண்டும் மீண்டும் வன்புணர்வு செய்கிறது.

தன்மீது எந்தக் குற்றமும் இல்லாத போதும்கூட, பல பெண்களும் தனக்கு நடந்த அநீதியை, பாலியல் சீண்டலை வெளியே சொல்லத் தயங்குவது, இச்சமூகம் பாதிக்கப்பட்டப் பெண்களின் மீது வெளிப்படுத்தும், அவமானப்படுத்தும் வகையிலான அணுகுமுறையால் (Victim Shaming) தான்.

ஒரு சமூகமாக குரலற்றவர்களின் குரலாக நிற்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதும்தான் சரி. அதை விடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சொல்வது, பாலியல் வன்புணர்வாளர்களுக்கு நாம் ஒரு சமூகமாக ஆதரவு கொடுப்பதற்கு சமம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நம் சமூகம் இயங்க ஆரம்பிக்கும்போதுதான், தனக்கு நடந்த/நடக்கும் அநீதிகளை, வெளியே சொல்லும் தைரியம், பாதிப்படைந்த பெண்களுக்கு ஏற்படும். இதனால் பெரிய அளவிலான மாற்றங்கள் நடக்கவில்லையென்றால் கூட, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியைப் பெரும் போராட்டத்தில், ஒரு தடங்கலாக இருக்கும் Victim Shaming எனும் கல்லைக் கொஞ்சம் நகர்த்தி ஓரம் கட்ட முடியும். அதன் விளைவாக அவர்கள் நீதி பெறும் பாதை கொஞ்சம் இலகுவாகும்.

படைப்பாளர்

மரு. நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். இறை மறுப்பாளர். பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.