இந்த உலகை ஆள்வது பெண் என்கிற ஒற்றைச் சொல். ஆனால், அவளின் சக்தி ஆண் என்கிற அதிகாரக் கைகளினால் அடக்கப்படுகிறது. குடும்பம் என்கிற அமைப்பு அவளின் திறமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. கணவன், குழந்தைகள், சுற்றம் என்று அவளின் வாழ்வு திசை மாறுகிறது. திருமணம் என்கிற ஒரே நிகழ்வு அவளின் வாழ்கை முழுவதையும் மாற்றி விடுகிறது.  அவள் பெற்ற படிப்பு, அவள் கற்ற கலைகள், அவள் உற்ற திறமைகள் அனைத்தும் மறக்க, மறுக்கப் படுகின்றன.

“பெண்ணாகப் பிறந்த நான், நான் மட்டுமே என் ஒட்டு மொத்தக் குடும்பத்திற்க்கும் பொறுப்பு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என் கடமை, அவர்களே என் உலகம்” என்கிற எண்ணம் பெண்களின் ஒவ்வொரு செல்லிலும் மாற்ற முடியாத, ஒவ்வொரு துளி ரத்தத்திலும் இருந்து பிரிக்க முடியாத அணுக்களாக மாறிவிட்டன. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், ஆண்களால் மாற்றி அமைக்கப்பட்டது. அது எப்படி மாற்றி அமைக்க முடியும்?  ஒரு பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’  புத்தகத்தைப் பார்த்த போது, ’ஒரு பெண் தான் அடிமையாக எண்ணுவாளா? எப்படி?’ என்கிற எண்ணம் எழுந்தது. புத்தகத்தைப் படித்த பொழுது, ’பெண் அடிமையானாள்’ என்பது புரிந்தது. ஒருவன் தான் அடிமையாக வாழ வேண்டும் என்று எண்ணுவானா? அடிமை வாழ்க்கையை விரும்புவானா? நான் அடிமை என்று பெருமையாகக் கூறுவானா? அப்படி இருக்க ஒரு பெண் மட்டும் எப்படி அடிமையானாள்? அதுவும்,  தான் அடிமை என்பதே தெரியாமல் அடிமையானாள். தெரிந்த பிறகு, அதனைப் பெருமையாக மாற்றிக்கொண்டாள். நான் குடும்பத்தலைவி என்பதே அவள் கொண்ட பெருமை.

இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள், காப்பியங்கள், நாடகங்கள் என்று தொடங்கி, இன்றைய திரைப்படங்கள் வரை பெண்களைக் குடும்பப்பாங்கான, ஆண்கள் சொல்லுக்கும் கட்டளைக்கும்  கட்டுப்படும் பதுமைகளாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் மாற்றி சிந்தித்த ஒரே மனிதர், பெண்களின் மனதின் குரலாக மாறி, பெண்களுக்காகக் கொடிப் பிடித்த பெரும் தலைவர் பெரியார் மட்டுமே.  

தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பது புரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் ’பெண் ஏன் அடிமையானாள்?’ இன்று வரை அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம், அந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பினர் எப்படி அன்று எதிர்தார்களோ அப்படியே இன்றும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்றுவரை, அந்தப் புத்தகத்தில் உள்ளதை நாம் புரிந்துகொண்டோமா? பெண்களுக்குச் சுதந்திரம் உள்ளதா? பெண் தன் வாழ்வில் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறாளா? இத்தனை ஆண்டுகளைக் கடந்த பிறகும், இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துகளை இந்தச் சமூகம் ஏற்றுக் கொண்டதா? அவர் சொன்ன வார்த்தைகளில் பாதியையாவது பெண்கள் உணர்ந்துகொண்டனரா என்கிற எண்ணங்கள் இந்தப் புத்தகதை வாசித்த பிறகு என்னுள் எழுந்ததுஆனால், எந்த மாற்றமும்இல்லைஎன்கிற ஒற்றைப் பதில் மட்டுமே நிலையாக நின்றது.

பெண் என்பவள் அழகானவள், அன்பானவள், அமைதியானவள், பொருமையானவள் என்றும், பெண் என்பவள் பிறந்ததும் மகளாகிறாள், மணந்ததும் மனைவியாகிறாள், பெற்றதும் தாயாகிறாள், இறந்ததும் தெய்வமாகிறாள் என்றும், பெண்களை உயர்வான இடத்தில் வைத்துப் போற்றியே அவர்களை அடிமைகளாக இந்தச் சமூகம் மாற்றிவிட்டது என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்து உணர்ந்தேன்.

ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அவர்களின் வாரிசுகளைச் சுமந்து, அவர்களை வளர்ப்பது மட்டுமே பெண்களின் கடமை என்றும், கணவனின் கட்டளைகளைச் செவ்வனே செய்வது, அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பெண்மை என்றும், புராணக் கதைகளைச் சொல்லி, சொல்லியே நம்மை அடிமைகளாக மாற்றிவிட்டனர் என்று புரிந்து கொண்டேன். எத்தனை தலைமுறைகளைக் கடந்தும்,  இன்றும் இந்தப் புத்தகம் பேசும் பொருளாக இருக்கிறது என்றாள், எத்தனை ஆழமாகப் பழமை நம்முள் வேர் ஊன்றி நிற்கிறது. எந்த அளவிற்கு நம்மிடையே பழமை ஒவ்வொரு பெண்கள் மனதிலும் விதைக்கப்பட்டு உள்ளது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.

வாரிசுகளைச் சுமந்து, பெற்று வளர்பது மட்டுமே ஒரு பெண்ணின் வேலை. அதுவும் உணவு சமைப்பது, துணிமணியைத் துவைத்துப் பேணி பராமரிப்பது மட்டுமே அவளின் வேலை. குழந்தைக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி, பள்ளியில் சேர்த்து, திருமணம் வரை ஓர் ஆணின் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது. அன்று முதல் இன்று வரை அதே நிலைதான். வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும், பெண்களின் ஊதியத்தில் குடும்பம் பிழைத்தாலும், பெண்ணின் பிறந்த வீட்டை அண்டி பிழைக்கும் மாப்பிள்ளையாக இருந்தாலும், எல்லா நிலையிலும் ஆண்களே முடிவுகளை எடுக்கும் நபராக இருக்கும் நிலை, இன்றைக்கும் இந்தச் சமுதாயத்தில்  உள்ளது.

காதல், திருமணம், விவாகரத்து, மறுமணம் என்கிற வார்த்தைகளில் உள்ள உண்மைத் தன்மையைப் பற்றி இந்தப் புத்தகம் என்னைச் சிந்திக்க வைத்தது. இதில் எதுவுமே பெண்களின் விருப்பப்படி நடப்பது இல்லை, ஆண்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது என்பதை ஆழமாக உணர்த்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது எனக்கான சுயமரியாதை என்ன என்பதை உணர்ந்தேன். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே, அதுவே வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்தேன். பெண்களுக்கான சுதந்திரம் என்பது பெண்களின் உரிமை, அதனை ஆண்கள் மறுக்க முடியாது, அவர்களின் சுதந்திரத்தை ஆண்கள் பறிக்க முடியாது, பெண்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதற்க்கு ஆண்கள் யார்? பெண்களின் சுதந்திரம் அவர்களிடம்தாம் உள்ளது. ஆனால், பெண்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை, புரிந்துகொள்ள இந்தச் சமுதாயமும் அனுமதிக்கவில்லை என்பதை இந்தப் புத்தகத்தை படிக்கும் போது புரிந்துக் கொள்ள என்னால் முடிந்தது.

1921 ஆம் ஆண்டு வாழ்ந்த விதவை பெண்களின் பட்டியலில் அவர் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில், ஒரு வயதுள்ள விதவை குழந்தைகளின் எண்ணிக்கை 597  என்பதைப் படிக்கும் பொழுது, எத்தனை வன்மம் நிறைந்த சமூகம் என்று நெஞ்சம் பதைத்தது. ஆனால், இன்று வரை குழந்தைத் திருமணங்களுக்கு முழுமையான முற்றுப்புள்ளி இல்லை என்பதைப் பார்க்கும்போது இதயம் வெடிக்கிறது.

“ஆண்களுக்கு அடிமையாகவே இருக்கக் ‘கடவுளாலேயே’ சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்ப்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதும் இந்தியாவில் இருக்கவிடாமல் ஒழித்தாக வேண்டும்” என்கிற தந்தை பெரியாரின் வேண்டுகோள் இன்று வரை நிறைவேறாமலே இருப்பது இந்தச் சமுதாயத்தின் அவல நிலையின் உச்சம்.

பெரியாரின் பார்வையில் பெண்களின் வாழ்க்கை புரிந்தது. பெண் அடிமையை ஒழிக்கப் பெண்களிடம் மாற்றம் தேவை என்பதைத் தவிர்த்து, ஆண்மை ஒழிய வேண்டும் என்று தோன்றியது. பெண்களின் முன்னேற்றத்துக்கு இன்றே செயலில் இறங்குவோம்!

படைப்பாளர்:

எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார். ஹெர் ஸ்டோரி எழுத்தாளர்.