• குழந்தைத் திருமண ஒழிப்பு சட்டங்கள், பெண் கல்வி பயன்கள்

(கல்யாணமே வைபோகமே – 3)

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கிய குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்றுவரையிலும் கூட முற்றுப்பெறவில்லை என்பதே கசப்பான உண்மை.

1889இல், 35க்கும் கூடுதலான வயதுள்ள கணவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி உயிர்துறந்த புல்மோனி தாசி என்ற 11 வயது சிறுமியின் மரணம், (பெண்களின்) பாலுறவு வயது ஒப்புதல் சட்டம் அதாவது  Age Of Consent Act 1981 / Act X of 1891, மற்றும் தொடர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகான Child Marriage Restraint Act, 1929, குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்துக்கும்  வழி வகுத்தது (இந்தச் சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும். நடைபெற்று முடிந்த திருமணங்களை ரத்து செய்வதற்கான வழிவகை எதுவும் இல்லை).

  • குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது
  • இந்தச் சட்டத்தின் படி, திருமணம் செய்வதற்குப் பெண்ணுக்குப் பதினான்கு வயதும், ஆணுக்குப் பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்
  • 12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது.
  • 1949ல், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பெண்களுக்கு 15 வயது என்றும், 1978ல் இது 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

தொடக்கத்தில் 12ஆக இருந்த பாலுறவு ஒப்புதல் வயது, பெண்கள் அமைப்புகளின் இடைவிடாத போராட்டங்களுக்குப் பிறகு, 1949இல் கொண்டுவந்த சட்டத் திருத்தம் மூலம் 16ஆக உயர்த்தப்பட்டது. எந்தவித மாற்றமும் இல்லாமல் அதுவே 2013வரைத் தொடர்ந்தது.

இதில் மீண்டும் மாற்றம் வர மற்றொரு பெண்ணின் கொடூர மரணமும் அதைத் தொடர்ந்த மக்கள் கிளர்ச்சியும்தான் காரணமாக அமைந்தது. நாம் எல்லோரும் அறிந்த நிர்பயாவின் பாலியல் வல்லுறவு மரணம்தான் அது.

Criminal Law (Amendment) Act, 2013, குற்றவியல் சட்டத்திருத்தம் 2013ன்படி பாலுறவு ஒப்புதல் வயது 18ஆக உயர்த்தப்பட்டது. 

இந்தச் சட்டத்தின்படி 18 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணின் விருப்பத்துடன் ஒருவர் அவளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாலும் கூட, அது பாலியல் வல்லுறவாகவே கருதப்படும் தண்டனைக்குரிய குற்றமாகும். 

இதுவே திருமண உறவில் ஓர் ஆண் தன் மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபடும் பொழுது அவள் 15 வயதுக்குக் குறைவான பெண்ணாக இருந்தால் மட்டுமே அது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும். இல்லையென்றால் அது தண்டனைக்குரிய குற்றமே இல்லை.

2023ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்கள் படி இந்தியாவில் நடக்கும் குழந்தை திருமணம் பற்றிய சில தகவல்கள் இங்கே:

  • இந்தியாவில் நிமிடத்திற்கு 3 சிறுமிகள் குழந்தை திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 
  • யுனிசெஃப் அறிக்கையின்படி, உலகில் உள்ள குழந்தை மணமகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார்கள். 
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான குழந்தை திருமண வழக்குகளில் 11% மட்டுமே தண்டனைக்கு உரியதாக இருந்தது. 
  • 2023-24ல் இந்தியாவில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் இன்றளவும் அதிக எண்ணிக்கையில் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய  திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குழந்தைத் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றாலும் முழுவதுமாக வழக்கொழிந்து போகவில்லை. 

மொத்தத்தில் பெண்களைப் பொருத்தமட்டும் திருமணம் குறித்து இங்கே போதுமான சட்ட நடைமுறைகளே இன்றுவரை இல்லை எனலாம். பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டால்தான் உண்டு. எதார்த்தத்தில் இது எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது?

***

//செல்லம் கூறுகிறாள்…

“பவானிக்கு பன்னிரண்டு வயசு நிறைந்துவிட்டது. இன்னும் கல்யாணம் செய்யாமல் வைத்திருக்கலாமா? பெரியவளாகிவிட்டால் என்ன செய்கிறது? ஊர் சிரிக்குமே… அப்புறம் சாதிக் கட்டுப்பாடு வந்துவிடாதா?”

நடேசய்யருக்கு ஆத்திரம் பொங்கியது. “என்னடி சாதி? என்னைச் சாதியைவிட்டுத் தள்ளட்டும். இந்தச் சாதிக்கட்டு இல்லாவிட்டால், நான் கொத்தனார் வேலை, தச்சு வேலை செய்தாவது மானமாய் வாழ்வேனே!”//

1940களில் ‘கல்யாணப் பெண்’ என்கிற சிறுகதையில் திரு தி.ஜ.ரங்கநாதன் இப்படி எழுதியிருக்கிறார். 

உண்மையில் பெற்ற மகள்களின்மீது இவ்வளவு கரிசனம் கொண்ட அப்பாக்களும் இருந்திருக்கிறார்கள். எனவே எல்லோரையும் ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது.

ஆனாலும் இந்தக் கதையில் நடேசய்யர் சொல்லுவது போல, இந்த பலமான சனாதன தர்மக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வரும் துணிச்சல் வெகு சிலரைத் தவிர எவருக்குமே இருந்ததில்லை. புரட்சிக் கவி பாரதியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மனைவிக்கே மொட்டை அடித்து வேடிக்கை பார்த்த கூட்டம்தான் இது. 

சுயமாகச் சிந்திக்கக் கூட, பெரியார் போன்று ஒருவர் தோன்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டியதாக இருக்கிறது.

ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கிளறிவிட்டு ஒரு சிறு மாற்றம் கூட ஏற்பட்டுவிடாமல் பலம் படைத்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பெரும்பான்மையான கூட்டம் இதுபோன்ற கோட்பாடுகளைப் பத்திரமாக பாதுகாக்கிறது. இதை உடைத்துக்கொண்டு வெளியேறத் துடிக்கும் சிலரையும் அது சுலபமாகக் கட்டுப்படுத்துகிறது.

இதற்கு எதிராகப் பலரும் போராடிக் கொண்டே இருந்தாலும், கலகம் செய்துகொண்டிருக்கும் கூட்டம், மேலும் மேலும் கலகம் செய்து, இந்தச் சமூகத்தை, அமைதியுடன் ஒற்றுமையாக இயங்கவிடாமல் தடுக்கிறது. குறிப்பாக நம் சமூகம் பெண்களுக்குத்தான் அதீத அநீதியை இழைக்கிறது.

சமீப ஆண்டுகளாக நம் சமூகம் இயங்கும் விதத்தைப் பார்த்தாலே இந்தச் சூட்சுமம் புரியும். நிம்மதியாக இயங்க முடியாத அளவுக்குப் பெண்கள் பாதுகாப்பு இங்கே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறதல்லவா? 

***

குழந்தைப் பருவத்திலேயே திருமண உறவுக்குள் நுழைந்து கூட்டுக்குடும்பகளில் வசித்த நம் மூத்த தலைமுறைப் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுகென்று ஒரு ‘வீடு’ என்பதே கிடையாது. கழுத்தில் தாலி ஏறிய அடுத்த நொடி, அவள் தான் பிறந்த வீட்டிலிருந்து அந்நியப்பட்டுப் போகிறாள். பிறந்த வீடினரைப் பொறுத்தவரை, ‘உன் வீடு’ என்றால் அது அவளுடைய புகுந்த வீடுதான்.

ஆனால் புகுந்த வீடோ, கடைசி வரை அவள் ‘வாழ’ வந்த வீடு மட்டுமே. எல்லா காலத்திலுமே, ‘இது என்ன உன்னோட அம்மா வீடுன்னு நினைச்சியா?’ என்கிற வார்த்தையை சொல்லாத மாமியார்கள் அரிதினும் அரிதாகவே இருந்திருப்பார்கள். 

குழந்தைத் திருமண காலகட்டைதில், பெரும்பாலும் மாமியார் மருமகளுக்குள்  வயது வித்தியாசமே மிகவும் குறைவாக இருக்கும். மாமியார், மருமகள் / அம்மா, மகள் என ஒரே சமயத்தில் கருவுற்றிருந்த கதைகளெல்லாம் அந்த காலகட்டத்தில் வெகு சகஜம்.

எனவே, மாமியாரின் காலத்துக்குப் பிறகு, தன் சொந்தக் குடும்பத்துக்குள் செல்வாக்கான ஒரு இடத்தைப் பெறுவதற்குள், அதாவது தனக்கென உரிமையான ஒரு வீட்டை அடைவதற்குள்  மருமகள்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்திருப்பர்.

அப்படி ஒரு செல்வாக்கான நிலை அவர்களுக்குக் கிடைக்க, குடும்பத்தின் ஆளுமையான நிலையில் இருக்கும் மகன்களின் துணை முக்கியத் தேவையாக இருக்கும். இல்லாமல் போனால், அந்த இடம் நேரடியாக மருமகளுக்குப் போய்விடும் ஆபத்து இருக்கிறதல்லவா? 

தன் ஆயுளில் பெரும்பகுதியைச் செலவு செய்து தான் பெற்றிருக்கும் உயரிய இடத்தைச் சுலபத்தில் மருமகளுக்கு விட்டுக்கொடுக்க யாரும் துணிவதில்லை. எனவே தங்கள் தாய்ப் பாசத்தையே கூறிய ஆயுதமாக்கி, பெண்கள் தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய  அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதனால் மகன்களிடம் அதிக பரிவுடன் நடந்துகொள்வர். அவர்கள் செய்யும் தவறுகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், ‘ஆம்பளன்னா இப்படித்தான் இருப்பான்’ என மருமகள்களுக்கு உபதேசம் செய்வர். மொத்தத்தில் பெண்கள் வீட்டில் வாழ வந்திருக்கும் மருமகள்களிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்துகொண்டனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாழ வந்த பெண்கள் மட்டும், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கடைபிடித்து,  திவசம் திங்கள், பண்டிகை, நாள் கிழமைகளில் மேலும் அதிக உழைப்பைக் கொட்டி, செக்கு மாடு போல இந்த கட்டமைப்புக்குள் உழன்று கொண்டே இருக்கவேண்டும்.

குறிப்பாக, ஒரு பெண்ணின் மூத்த மகனுக்கு அவள் குடும்பத்தில் பட்ட துன்பங்கள் எல்லாமே தெரிந்திருக்கும். ஒரு வயதுக்கு மேல் மன முதிர்ச்சி ஏற்பட ஏற்பட, அம்மாவின் மீது அதீதப் பரிவு உண்டாகும்.

தான் அவளை அடக்கிவைத்தாலும் கூட, மற்றவர்கள், குறிப்பாக வீட்டு மருமகள்கள் அம்மாவிடம் அடங்கி நடக்க அவர்கள் தங்கள் அதிகாரத்தை நன்றாகப் பயன்படுத்துவர்.

அம்மாக்கள் மகன்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்ள, கணவன் மனைவிக்கு எதிராகப் பிரச்சனைகளை உண்டாகுவர். 

மகன் மருமகளுக்கு இடையில் எந்தவிதமான அன்னியோன்னியமும் ஏற்பட்டுவிடாமல் இருக்க, இரவில் மருமகளைத் தன்னுடனே படுக்கவைத்துக்கொண்ட மாமியார்களெல்லாம் இங்கே இருந்திருக்கின்றனர். பெரும்பாலும் ஒரே பிள்ளையைப் பெற்ற அம்மாக்கள் இப்படி இருந்ததுண்டு. 

அத்துடன் இல்லாமல், தனக்குக் கிடைத்த அதிகாரத்தை, மனமுவந்து அம்மாக்கள் தங்கள் மகள்களுடன் பகிர்ந்துகொள்வதால்தான் நாத்தனார்களும் வாழ வந்த பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்திப் பிறந்த வீட்டில் தங்கள் அதிகாரத்தைக் கடைசிவரை நிரூபிக்கப் போராடிக்கொண்டே இருந்தனர்.

மாமியாருக்குப் பிறகு அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி வீட்டு மருமகள்களுக்குள்ளேயும் இருந்துகொண்டே இருந்ததால், அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் வன்மத்துடன் கலகம் செய்துகொண்டே இருந்தனர்.

வெளியிலிருந்து பார்க்க எல்லாமே சுமுகமாக இருபது போன்ற பிம்பம் இருந்தாலும், உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாகப் பகைமை உணர்ச்சி கன்று கொண்டே இருக்கும். இதெல்லாம் நிதானமாக உட்கார்ந்து, தீவிரமாக யோசித்து, திட்டமிட்டு பெண்கள் செய்தார்களா என்றால், அதுவும் கிடையாது. எல்லாமே அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடே!

கொஞ்சம் சுயமாக யோசிக்கத் தெரிந்த பெண்ணாக இருப்பின், இதை உடைத்துக்கொண்டு வெளியேறத் துடிப்பர். தனிக்குடித்தனம் போக ஆசைப்படும் பெண்களை, கதைகளும் சரி, காட்சி ஊடகங்களும் சரி, இன்றுவரையிலும் கூட வில்லிகளாகத்தானே சித்தரிக்கின்றன? கணவனின் குடும்பத்துக்காக தன இளமை முழுவதையும் தொலைத்து, குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கும் பெண்கள்தான் புனிதர்கள் இல்லையா?

மூர்க்கமாக, இந்தக் கட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தால் சமூகத்தின் பார்வையில் பொல்லாதவர்களாக வேண்டும். இல்லையேல் பொறுமையில் பூமாதேவி எனப் புனிதர் பட்டம் வாங்கிக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டும்.

இளைமையைத் தொலைத்த ஒரு நாளில் அந்தப் பெண், தான் வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், வெறும் சூனியமாகத்தானே இருக்கும்? 

எது எப்படியோ, ஆக மொத்தத்தில் தங்கள் சுயமரியாதையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பெண்கள் தங்களைக் குறித்தே குற்றவுணர்ச்சி கொள்பவர்களாக வாழவேண்டியதுதான்.

//மோசமான மாமியார்கள் ஏன் உருவாகிறார்கள்? அது எப்படி இந்திய ஆண்களுக்கு மட்டும் தன் அம்மாவின் குறைகள் எதுவும் கண்ணில் தெரிவதே இல்லை? என்று பலர் கேட்கிறார்கள். ஆண்களை விடுங்கள், பெண்களுக்கே கூடத் தெரியாத ரகசியம் என்ன தெரியுமா? ஆண்களை விட பெண்களுக்குதான் பவர் வேட்கை அதிகம்! The female of the species is deadlier than a male. (உயிர்மொழி – பக்கம் 24)

மனநல மருத்துவர் ஷாலினி அவர்களின் ‘உயிர்மொழி’ கட்டுரைத் தொகுப்பை வாசித்தால், இதுபற்றிய அதிகத் தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

***

என் பாட்டியின் மாமியார், அதாவது என் கொள்ளுப்பாட்டி, பிரிட்டிஷ் காலத்திலேயே, தாசில்தாருக்கு மகளாகப் பிறந்து மிக மிகச் செல்வாக்காக வாழ்ந்த பெண்மணி. அவர் எவ்வளவு பிள்ளைகளைப் பெற்றார் என்கிற கணக்குகூட எங்கள் குடும்பத்து இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது.

ஒரே ஒரு மகள் தவிர, குறைந்தது 16 ஆண் பிள்ளைகளாவது பெற்றிருப்பார் என நினைக்கிறன். என் பாட்டி அந்தக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுப் போனபோது அவர் தன் வயோதிகத்தை எட்டியிருந்தார்.

முறைப் போட்டு, மருமகள்கள் அவருக்குப் பங்கா போட வேண்டுமாம், கால் அமுக்கிவிட வேண்டுமாம். சற்று கண் அயர்ந்தாலும் அப்படியே காலால் எட்டி உதைப்பாராம். ‘சரியா அமுக்குடி’ என அதிகாரம் தூள் பறக்குமாம்.

என் பாட்டிக்குக் கொடுத்த சீர்வரிசையில், மாதாமாதம் மாதவிடாய் சமயத்தில் தனியாகப் புழங்க, அவருக்கு வெள்ளியில் பாத்திரங்கள் கொடுக்காமல் விட்டுப்போயிருக்க, கொட்டாங்குச்சியில் உணவு கொடுத்ததாக என் பாட்டி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மாமியாரிடம் இப்படியெல்லாம் இடிபட்ட என் பாட்டிதான், எங்களைப் பொறுத்தவரை மிகவும் பேரன்பை பொழிந்த அதே பாட்டிதான், குழந்தை இல்லை என்கிற காரணத்தினால் என் பெரியம்மாவை உணர்வு ரீதியாக துயரப் படுத்தினார். 

என் மாமனாரின் சித்தப்பாவுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாளாம். அவரை திருமணம் செய்துகொடுத்த இடத்தில், அவருக்குத் தோசை வார்க்க வரவில்லை என்று, கையை சூடான தோசைக்கல்லில் வைத்துத் தேய்த்துத் தீய்த்துவிட்டார்கள். அதில் ஜன்னி கண்டு அவர் இறந்தே போய்விட்டாராம். அதே வேதனையில் அந்தப் பெண்ணின் அம்மாவும் இறந்துபோனாராம்.

தாத்தா, தன் இறுதி நாட்களில் என் மாமனாரின் குடும்பத்துடந்தான் வாழ்த்து மரித்தார். தன் மகளுக்குப் பிடித்த வேர்க்கடலை மற்றும் மாம்பழம் இரண்டையும் அந்தத் தத்தா தான் உயிருடன் இருக்கும்வரை சாப்பிட்டதில்லை என என் மாமனார் அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறேன். இது போல, ஏட்டில் எழுதப்படாத, அவரவர் குல மூதாதைப் பெண்களின் வலிகளைச் சொல்லும் செவிவழிக் கதைகள் பல, ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் இருக்கும். 

சமையல் செய்யும்போது, உரலில் மாவரைக்கும்போது, கீரை ஆய்ந்துகொண்டே பேச்சு வாக்கில் வெகு சகஜமாகப் பாட்டியும், அம்மாவும் அடுத்த சந்ததிக்குக் கடத்தும் இந்தக் கதைகள், மிகவும் வலி மிகுந்தவையாகவும், குடும்ப அமைப்பைக் குறித்து பயமூட்டுவதாகவும், தங்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற  வைராக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள்ளே விதைப்பதாகவும் மருவிப் போகின்றன.

ஆதியில், வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்த பெண்களுக்கு, கால மாற்றத்தால் ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டங்களும், திரைப்படங்கள், வானொலி, அச்சுப் புத்தகங்கள் முதலிய கைக்கெட்டிய ஊடகங்களும், கல்வியும், அதில் பெண்களுக்கு உண்டான அதீத ஆர்வமும், வீடு கடந்து  அவர்களுடைய எல்லையை விரிவடையச் செய்தது.

வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் எனப் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்த பெண்கள், தங்கள் எதிர்காலம் குறித்து அதிகக் கனவுகள் காண ஆரம்பித்தனர். ஆனால்,  அத்தகைய கனவுகள் நிராசையில் போய் முடிந்து, ஓர் அதிருப்தியுடனேயே வாழ்கை முழுவதையும் வாழ்த்து தொலைக்க வேண்டிய கட்டாயம் நம் பெண்கள் பலருக்கு இருந்துகொண்டே இருக்கிறதே!

அக்கிரகார வாழ்க்கையிலிருந்து புலம்பெயர்ந்து, கூட்டம் கூட்டமாகப் பட்டினத்தில் வசிக்க வந்த பிறகு, பார்ப்பன பெண்களின் வாழ்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்…

  • உள்ளிருந்து ஒரு குரல்