பகுதி 1
அப்பா வீட்டுக்கு எப்போ வருவார் என்று காத்திருந்த சுஜாதாவுக்கு அப்பாவின் வண்டிச் சத்தத்தை மட்டும் ஆயிரம் வண்டி சத்தத்திற்கு நடுவில் தனித்தறியும் லாவகம் குறித்து யோசிக்கலானாள். ஒரு வேளை இந்த வண்டியைத் தயாரிக்கும்போது மட்டும் வித்தியாசமாகச் சத்தம் எழுப்புவது போலவும், அதை நான் மட்டும் கண்டுபிடிப்பது போலவும் வைத்திருப்பார்களோ!
இப்படி ஓடின சிந்தனை குதிரையை அப்பாவின் வண்டி சத்தம் பிரேக் போட்டு நிறுத்திவிட்டது.
“அப்பாடா, அப்பா வந்துட்டார்மா.”
“அப்பா இன்னும் வண்டியே நிறுத்தல. எப்படித்தான் கண்டுபிடிக்கறியோ தெர்ல” என்று அம்மா சுகந்திக்குத் தன் மகளை நினைத்து ஆச்சரியம்.
அப்பா வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்வது வரை அப்பா மீதே கவனம் இருந்தது சுஜாதாவுக்கு. என்ன இவ்வளவு அக்கறை என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. அடுத்து நடக்கப்போகும் விஷயங்களைப் பார்த்தாலே ஏனென்று புரிந்துவிடும்.
அப்பாவின் வண்டியில் சத்தமே எழாதபடி ஸ்டாண்டை எடுத்தாள். மெல்ல வண்டியைச் சற்று வீட்டைவிட்டுத் தொலைவில் தள்ளிக் கொண்டு போனாள். வண்டியில் ஏறி அமர்ந்தாள். முதல் முறை வண்டியை ஓட்டும்போது வயலில் விழுந்தது நினைவுக்கு வராமல் இல்லை. மனதை அதட்டி, ஸ்டார்ட் செய்தாள். முதல் கியர் போட்டு கிளட்ஜைவிட, ஆக்சிலேட்டரைத் திருப்ப வண்டி எளிதாகவும் ஸ்டைலாகவும் பறந்தது.
ஒரு கிலோமீட்டர் காற்றோடு காற்றாகப் போனதில் எவ்வளவு தூரம் போனாள் என்றே தெரியவில்லை. வண்டி திடீர்ரென்று சற்றுக் குலுங்கி நின்றுவிட்டது.
‘ஐயோ… இடுகாட்ல போயா வண்டி நிக்கணும்? ஏ வண்டி உனக்கு வேற எடமே கிடைக்கலியா நிக்கறக்கு? போயும் போயும் நான் பார்த்து பயப்படற இடுகாடா உனக்குக் கிடைச்சது. மணியோ இரவு ஒன்பது. இந்த நேரம் பார்த்து என்னை இப்படிப் பழிவாங்கறியே’ என்று நினைத்தாள் சுஜாதா.
‘இனி அப்பாவுக்குத் தெரியாமல் வண்டி எடுத்து ஓட்டுவியா! அதும் வயசுக்கு வந்த பொம்பளப் பொண்ணு இப்படி நடுராத்திரில ஆம்பளப் பசங்க ஓட்ற கியர் வண்டியை எடுத்துக்கிட்டு வருவியா?’ என்று அம்மாவின் திட்டு காதில் விழுவதுபோலிருந்தது.
இவ்வளவு தொலைவு எப்படி வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்வது என்று நினைத்தாலே பயமாக இருந்தது. ஒரு வேலை வண்டி ஸ்டார்ட் ஆகாமல் தள்ளிக்கொண்டே போனால் அப்பாவுக்குத் தெரிந்துவிடும். உதை வாங்கப் போகிறோம். அப்பா இனி எதற்கும் அனுப்பமாட்டார். இதைச் சொல்லிச் சொல்லியே திட்டுவார். பேய் ஒருபுறம் பயமுறுத்து என்றால், அப்பாவை நினைத்து பயம் முற்றிப்போயிருந்தது.
தொலைவில் ஒரு மின்சார விளக்கு ஒளி தெரிந்தது. அங்கு வண்டியைத் தள்ளிச் சென்றாள். மின்னல் வேகத்தில் வண்டியை அந்த மின்சார விளக்கிற்குக் கீழே நிறுத்தியிருந்தாள். சற்றுத் தள்ளி ஒரு வீடு இருந்தது. அவர்கள் அப்பாவிடம் சொல்லிடு விடுவார்கள் என்று அவர்களிடம் உதவி கேட்கவில்லை. முடியாத பட்சத்தில் கேட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்து, வண்டியின் கீழே பெட்ரோல் வரும் குழாய் சரியா இருக்கிறதா என்று பார்த்தாள். இருந்தது. கிக்கரை உதைத்துப் பார்த்தால் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. மெயினில் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் அதை ரிசர்வ்க்கு மாற்ற வேண்டும் என்று தம்பி சொன்னது நினைவுக்கு வந்து, ரிசர்வுக்கு மாற்றினாள்.
திரும்பவும் வேகமாக கிக்கரை உதைக்க பக்கென்று தீ இன்ஜினில் பற்றிக் கொள்ள வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. ஓ பெட்ரோல் குறைந்து ரிவர்வ் ஆயிருக்கிறது. அது தெரியாமல் இப்படி அநியாயத்துக்குப் பயந்துவிட்டேனே என நொந்துகொண்டாள் சுஜாதா.
இப்போது காற்றோடு காற்றாக வீட்டுக்குப் பறந்தாள். வண்டியை வீட்டுக்குக் கொண்டு போயி விட்டுவிட வேண்டும். திடீரென்று மனம் மாற, வீட்டுக்குப் போகும் முன்னே ஊருக்குள் செல்லும் கிளைப் பாதையில் வண்டியை விடலானாள். யாரவது பார்த்து அப்பாவிடம் சொல்லிவிட்டால், இனி வண்டியே எடுக்க முடியாது என மனசாட்சி எவ்வளவோ எச்சரித்தது. அதையெல்லாம் துச்சமென நினைத்து வண்டியை ஊருக்குள் விட்டாள் சுஜாதா.
(தொடரும்)
படைப்பாளர்:
சாந்த சீலா
சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார். ஹெர் ஸ்டோரீஸில் இவர் எழுதிய குழந்தைகள் பற்றிய தொடர், ‘நாங்கள் வாயாடிகள்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.