“அம்மா நம்ம வீட்ல எங்க பிடிக்குதோ எப்படி உட்காரணுமோ அப்படி உட்காறோம். பெரும்பாலும் நானும் தம்பியும் சேர்ல உட்காறோம். அப்பாவோ நீயோ வந்தாலும் சேர்லதான் இருப்போம். ஏன் அப்பா வரும்போது கால் மேல கால் போட்டுகூட உட்கார்ந்திருப்போம், சில முறை காலை மேலக்கூடத் தூக்கி வைச்சிருப்போம். அப்பா இப்படி உட்கார்ந்து கீழ விழுந்துடாதீங்கன்னு அக்கறையா சொல்லிட்டு போவாரு.”

“ஏன் கண்ணு, அது நம்ம அப்பா. ஏன்னு அப்படிச் சொன்னன்னு கேட்டது ஒரு தப்பா? இந்த இழு இழுக்கற… என்னாத்துக்கு அப்படிச் சொன்னன்னு சொல்லேன் சீக்கிரம்” என்றார் அம்மா.

“ இல்லம்மா… அக்கா வீட்ல நான் சேர், ஷோஃபான்னு உயரமான எடத்துல உட்கார்ந்திருந்தா பெரிய மாமா வரும்போது, கீழ எறங்கி தரைலதான் உட்காரணும். ஆனா, தம்பிய அப்படிச் சொல்றதில்ல. அவன் எங்க வேணா உட்காரலாம். அட கொஞ்சம் உயரமான திண்ணைலகூட உட்காரக் கூடாது.”

“இப்படியா சொல்றாங்க… சின்ன வயசுல இருந்து போற அத்தை வீடாச்சே! இப்பதான் இப்படிச் சொல்ற, போகமாட்டிங்கிற, அப்போல்லாம் போனியே ஒன்னும் இப்படிச் சொல்லலியே! திண்ணைலகூட உட்காரக் கூடாதா? அங்க பெரிய பொண்ணுங்க அப்படித்தான் உட்காரணும்ன்னு சொல்வாங்க. குழந்தைங்களுக்குக் கூடவா அப்படிச் சட்டதிட்டம் போடறாங்க… அங்க மனுசங்க இன்னும் வளராம பழமைவாதத்தைப் பின்பற்றாங்க. என்ன பண்றது?”

“அதாம்மா பெரிய பொண்ணாயிட்டா அவங்க வீட்ல இப்படித்தான் கீழ உட்காரணுமாம். அங்க சேலத்துல வீட்ல விஷேசத்துல பொண்ணுங்களுக்கு மட்டும் பாய் போட்டாங்க. ஆண்களுக்கெல்லாம் சேர் போட்டாங்கன்னு மொறைச்சனே… இங்கயும் அப்படித்தான் பொண்ணுங்களுக்கு ஒரே கெடுபிடி. அதுதான் பெரியவங்களுக்குக் கொடுக்கற மரியாதையாம். அதான் குழி வெட்டி வைங்க உயரம் கொறைஞ்சா மரியாதை இன்னும் அதிகமா தந்தா மாதிரி இருக்கும்ன்னு சொன்னேன்.”

“ஆனாலும் உனக்குக் குசும்பு ஜாஸ்தி. சரி, உனக்குப் பிடிக்கலன்னா போகாத விடு. போய்ப் படிக்கற வேலையைப் பாரு. நாளைக்குப் பள்ளிக்கூடம் போகணும்.”

“ சரிம்மா.”

“ ஏன்தான் இப்படிப் பொண்ணுங்களுக்கு மட்டும் இப்படிக் கட்டுப்பாடோ நம்ம மிஸ்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்” என்று நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றாள் செந்தாமரை.

“ கடைசி பாடவேளை இது. நாம ஏதாவது பேசுவோம். என்ன பேசலாம்?” என்று கேட்டார் ஆசிரியர் திவ்யா.

ஆனந்தியோ இதுதான் தருணம் என, “மிஸ் எனக்கொரு டவுட்” என்று எழுந்து நின்றாள்.

“சொல்லுமா. என்ன டவுட்?”

“பொண்ணுங்கள மட்டும் கீழ உட்கார வைக்கறாங்க. ஆனா, ஆண்கள சேர் மாதிரி உயரமான எடத்துல உட்கார வைக்கறாங்க. அது எனக்குப் பிடிக்கல. ஆனா, ஏன் இப்படின்னு தெரியல. நீங்கதான் சொல்லணும் மிஸ்.”

“ஓ… ஏன் அப்படிக் குடும்ப நிகழ்வுகளில் உட்கார வைக்கப்படறாங்கன்னா நாம ஆணுக்குக் கீழதான்னு சிறு வயதிலிருந்தே நமக்குப் பல செயல்கள் மூலம் பழக்கறாங்க. எங்க வீட்டு விஷேசங்களில் இது போன்று கடைபிடிக்க மாட்டோம். அனைவரும் சமமாவே உட்காருவோம் மிஸ் “ என்றாள் அனன்யா.

“ஓ… சூப்பர்மா. நம் சமூகத்தைப் பத்தி நல்லா புரிஞ்சி தெளிவாயிருக்க. வேறெங்க இது போல நீங்க அனுபவிச்சிருக்கீங்க, பார்த்திருக்கீங்க? யார் வேணா சொல்லலாம்.”

“மிஸ் நம்ம வகுப்புல சேர்ல நாங்க உட்கார்ந்தா மரியாதை இல்லையாம். அதுல உட்காரக் கூடாதாம். அது டீச்சரோட சேராம். அதான் எனக்குப் புரியல. அதுல உட்கார்ந்தா எப்படி உங்க மேல மரியாதை இல்லாம போய்டும்?” என்றான் தமிழ்ச்செல்வன்.

“அதாவது உயர்ச்சி, தாழ்ச்சின்னு பொதுவா சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுது. இது போன்ற செயல்கள் மூலமா நம்மை அறியாமலே மண்டைக்குள்ள ஆழமா பதியவைக்கப்படுது. அந்தப் பாகுபாடுகளைத் தெரிஞ்சோ தெரியாமலோ கடைபிடிக்கறாங்க. அதைப் பின்பற்றுவர் தவறுன்னு சொல்ல முடியாது. அவரும் அறியாமைலயே அந்த முறைல சிக்க வைக்கப்படறார், கடைப்பிடிக்கறார்.”

“மிஸ் இது ஒரு நாற்காலி. இதுல ஏன் மரியாதைய வைக்கணும். அப்போ மரியாதைங்கிறது அதுதானா? “ என்றாள் ஆனந்தி.

“சரி இங்க இருக்க ஒவ்வொரு படிநிலை அமைப்பை எப்படி நம்மை அறியாமல் நம் மண்டைக்குள்ள திணிக்கறாங்கன்னு ஒரு சான்று சொல்றேன் பாருங்களேன். கல்வி செயலாளர் சேர்ல ஒரு இயக்குநர் உட்கார முடியாது. இயக்குநர் சேர்ல மாவட்டக் கல்வி அலுவலர் உட்கார முடியாது. மாவட்ட கல்வி அலுவலர் சேர்ல வட்டார கல்வி அலுவலர் உட்கார முடியாது. வட்டார கல்வி அலுவலர் சேர்ல தலைமை ஆசிரியர் உட்கார முடியாது. தலைமை ஆசிரியர் சேர்ல ஒரு ஆசிரியர் உட்கார முடியாது. ஆசிரியர் சேர்ல குழந்தைங்க உட்கார முடியாது. அப்போ பதவி ரீதியாலான படிநிலையை அப்படியே நம் மூளைல பதியவைக்கறாங்க நம்மை அறியாமலே. ஒவ்வொருத்தருக்குக் கீழ் ஒருத்தர்ன்னு நாம் நம்பவைக்கப்படறோம் இதன் மூலமா. அவங்கவங்க அலுவல்ல குறுக்கிட்டா தவறுன்னு சொல்லலாம். அது நாற்காலிதான. இது போல வேலை செய்யும் வர்க்கப் பாகுபாடு மாதிரி நிறைய இடங்கள்ல சாதியப் படிநிலைகளின் மூலமெல்லாம் உட்காருதலில் பாகுபாடு பின்பற்றப்படுது.”

“உயர்ந்த சாதின்னு சொல்லப்படறவங்க மேலயும் தாழ்ந்தவங்கன்னு சொல்லப்படறவங்க கீழயும் உட்கார வழக்கம் இருக்குது மிஸ், நான் பார்த்திருக்கேன். கீழா நினைக்கப்படற சாதி உசரமா உட்காரவே கூடாது. இதெல்லாம் ரொம்பக் கொடுமை மிஸ்.”

“மிஸ் எங்க ஊர்ல இறந்த வீடுகளில் இறந்தவர் வீட்டுகாரங்ககிட்ட நிகழ்வுக்கு வர்றவங்க துயர் பகிர்வதற்குக் கை கொடுப்பாங்க. ஆனா, குறிப்பிட்ட அந்த இன மக்கள் மட்டும் கால்ல விழணும். இதப் பார்த்ததும் என்ன கொடுமைன்னு தோணுச்சு மிஸ்.”

“நிறைய இருக்கு நீங்க தேடிப் படிங்க, இல்ல சமூகத்தை உற்றுநோக்குங்க. நான் படிச்ச ஒரு உண்மை நிகழ்வை உங்களுக்குச் சொல்றேன். இப்போ நமக்கே மரியாதை எதுன்னு டவுட் வந்துடுச்சு. டோட்டா சான் அப்படிங்கிற பொண்ணு முதல் ரெண்டு பள்ளில இருந்து பள்ளிக்குக் கட்டுப்படலன்னு வெளியேத்தப்படறாங்க! மூணாவதா ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் தன் அறைல தனக்கு இணையா உட்கார வைச்சு பேச வைக்கறார். இதுக்கு முன்னாடி ரெண்டு பள்ளிலயும் டோட்டா சான் ஒரு வார்த்தைகூட தலைமை ஆசிரியரிடம் பேசினதில்ல. ஆனா, சமமா உட்கார வைச்சதும் அந்த தலைமை ஆசிரியர் கிட்ட நாலு மணிநேரம் இடைவிடாது பேசியிருக்காங்க. அவர் கொடுத்த அந்தச் சம மரியாதை அவங்க அனைத்து மனிதர்களைச் சமமா மதிக்கக் கத்துக் கொடுத்திருக்கு. அவங்களுக்குள்ள தன்னம்பிக்கை வளர்ந்து ஜப்பான்ல மிகப்பெரும் ஆளுமையா வளர்ந்திருக்கான்னு பிற்காலத்துல சொல்றாங்க! இப்போ சொல்லுங்க எது மரியாதை?”

“எங்களுக்கும் மதிப்பு கொடுத்தா நாங்க திரும்பப் பல மடங்கு மதிக்கணும்னு தோணும் மிஸ். மாறா உதாசீனப்படுத்தினா அட போங்கன்னுதான் நினைக்கத் தோணுது.”

“மதிப்பு, மரியாதைங்கிறது அவங்கவங்க நடந்துக்கற செயல்பாடுகளில் இருந்து வருவது. நாம மரியாதை கொடுக்கும் போது நம்மகிட்ட இருந்து எப்படி மரியாதை பிறருக்குக் கொடுக்கணும்னு நம்மைப் பார்த்துக் கத்துக்குறாங்க குழந்தைகள். டோட்டா சான் சொன்ன மாதிரி நம் சமூகமும் மாறும், நாம் மாற்றத்தின் முன்னோடிகளா இருப்போம். அனைவரையும் சமமா மதிப்போம். பெரும்பாலான முன்னேறிய நாடுகள் கல்விமுறையில் பாகுபாடு இல்லாம சமத்துவமான வகுப்பறையா மாறிடுச்சு. சமத்துவ சமூகத்தை நோக்கி நாமும் மாறணும்.”

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார். ஹெர் ஸ்டோரீஸில் இவர் எழுதிய குழந்தைகள் பற்றிய தொடர், ‘நாங்கள் வாயாடிகள்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.